Monday 7 July 2014

Story 52: காரிச்சாமியும், செவலக்காளையும்



காரிச்சாமியும், செவலக்காளையும்
                                
தா பாரு, சும்மா சொன்னதையே சொல்லிகிட்டு இருக்காதே காரிச்சாமி, உனக்கே தெரியும், இந்த காலத்துல இந்த ஏரையும் மாட்டையும் நம்பி பொழைக்கறது சுளுவில்ல…!’ சொல்லிக்கொண்டே பாக்கை மென்றுகொண்டு, வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவினான் மாட்டு வியாபாரி.

மாட்டுவியாபாரி சொல்வதை மறுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறிக்கொண்டிருந்தான் காரிச்சாமி. நடுத்தர வயதில் ஒடிசலான தேகம், பட்டன் போடாத சட்டையில் திறந்த மார்புடன் நின்றிருந்தான். ஒரு அழுக்குத்துண்டு தோளில் படர்ந்து, தலை தாழ்ந்திருந்தது. இடுப்பில் கட்டியிருந்த அழுக்கு லுங்கியின் ஒரு முனையைக்கையில் பிடித்திருந்தான்.

எல்லவனும் காட்டையும் மாட்டையும் வித்து போட்டு, டவுனுக்கு பொழப்ப தேடி போக ஆரம்பிச்சுட்டாங்க, ஊருக்குள்ள இன்னும் உன்ன மேறி ரெண்டு, மூணு பயலுக தான் இன்னும் வண்டியையும், மாட்டையும் புடிச்சு தொங்கீட்டு இருக்கானுங்க, சொன்னா கேளு, இங்க இருந்துகிட்டு வண்டி மாட்டை நம்பி பொண்டாட்டி புள்ளைகள பட்டினி போட்டுக் கொன்னுபோடாத…! நம்ம நாச்சிமுத்து கதைதான் உனக்கே தெரியுமே…!
சொல்லிக்கொண்டே மடித்த வெற்றிலையை கடைவாயினுள் ஒதுக்கிக்கொண்டே தொடர்ந்தான்,
பொழைக்க வழி தெரியாம பொண்டாட்டி புள்ளைகளக்கொன்னுட்டு செத்துப்போனான், அதெல்லாம் விடு, உன் எருது ரெண்டுக்கும் நல்ல வெல வெச்சு தாரேன், வித்துபோட்டு நீயும் டவுனு பக்கம் போயிரு, உன்ன பலத்த பயலுக எல்லாம் அங்க கை நெறைய சம்பாறிக்கறானுக…, டவுனு வேலை ஒண்ணும் இந்த காடு கரை வேல மாதிரி கடுசு கெடயாதுப்பாசரி, சொல்றதை சொல்லிப்போட்டேன், பொறவு உன் இஷ்டம், ஆனா மாடு கன்ன விக்கனும்னா என்ன வந்து பாரு, இன்னும் ரெண்டு நா தே இங்க இருப்பேன், அதுக்குள்ள மனசு மாறுச்சுன்னா வந்து பாரு, ஆக வேண்டியத பாப்போம்’, என்று சொல்லிக்கொண்டே துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான் மாட்டு வியாபாரி.

எதுவும் பேசாமல், அவன் போவதையே வெறித்துக்கொண்டிருந்தான் காரிச்சாமி, மாட்டை விற்க வேண்டும் என நினைத்த போதே வயிற்றுக்குள் ஒரு தீப்பந்து உருண்டது. கடந்த ஒரு வாரமாக அவனை இந்தக்கேள்வி ஈரக்கொலையைப்பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. ஆனால் வேறு என்ன செய்ய? இது நாள் வரை வாழ்வாதாரமாக இருந்த வண்டி மாட்டை விற்க வேண்டுமா என்ற யோசனை தொண்டை அடைக்க, வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஊர் வெறிச்சோடிப்போயிருந்தது.

மாட்டு வியாபாரி சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. மாடு கன்னு காடு கரை வைத்திருந்தவன்  ஊர் மெச்ச வாழ்ந்தது ஒரு காலம், ஆனால் இப்போது….? அப்போதெல்லாம் விவசாய நிலங்களில் பாயும் நீர் வரப்பைத்தாண்டி மண்ரோட்டில் வழிந்தோடும்.  பூசாரியிடம் குறிகேட்டு, மாரியாத்தாவுக்கு பொங்க வெச்சு, பூவோடு எடுத்து அறுவடைக்காலங்களில் ஊரே கொண்டாட்டமாக இருக்கும் . ஆனால் கடந்த ரெண்டு, மூன்று வருடங்களில் நிலைமை தலைகீழானது. பருவமழை பொய்த்து, வயல்வெளிகள் பாளம்,பாளமாக வெடித்து வறண்டு போயிருந்தன. தென்னைமரங்கள் காய்ந்து, ஓலைகள் தொங்கிப்போய், பட்ட மரமாகப் பரிதாபமாக நிற்கின்றன. கால்நடைகளுக்கு குடிக்கக்கூட நீர் இல்லாத நிலை. எந்த கிணற்றிலும் முழங்காலளவு தண்ணீர்கூட இல்லை. நல்ல உச்சி வெய்யில் காலத்திலும் கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் செட்டியார் தென்னந்தோப்புக்கிணறு கூட வறண்டு விட்டது. விவசாயக்கூலிகள் விவசாயத்தை தூக்கி எறிந்து விட்டு, ஆளாளுக்கு தோதான வேலையைத்தேடி டவுனுக்கு போய் விட்டனர். சாமி கும்பிட ஆளுமில்லை, குறி சொல்ல பூசாரியும் இல்லை.  இன்று கிராமத்தில் எஞ்சி இருப்பவர்கள் பாடு, படு திண்டாட்டமாகி விட்டிருந்தது. நினைவு தெரிந்து பச்சைபசேல் என வயலும், தென்னைமரமுமாயிருந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்று வறண்ட நிலங்களாகி விட்டிருந்தன. ஏறக்குறைய விவசாயம் பார்க்கும் இறுதி தலைமுறையில் வாழ்பவனாகி விட்டிருந்தான் காரிச்சாமி.

வண்டி மாட்டுடன் சந்தோஷமாக வாழ்ந்தது ஒரு காலம். யோசனையுடன் நடந்த காரிச்சாமி இலைகளை உதிர்த்து மொட்டையாக நின்றிருந்த ஆலமர கோவிலின் இடத்தில் ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய கட்டை வண்டியைப்பார்த்தான். நிசப்தமாக நின்றுகொண்டிருந்தது. மெதுவாக அதன் அருகில் சென்றான். நீண்ட நாள் ஒரே இடத்தில் நின்றதால், சக்கரங்கள் மண்ணில் புதைந்து, கரையான் கூடு கட்ட ஆரம்பித்திருந்தது, ஒரு காலத்தில் நெல் மூட்டைகளையும், உர மூட்டைகளையும் சுமந்து கொண்டு, மாலை நேரங்களில் காட்டு வேலை முடித்து வரும் பெண்களை சுமந்து கொண்டும், சிறுவர்கள் தொங்கியபடி, ஆடி, ஆடி வலம் வந்த அந்த வண்டி , இன்று கேட்பாரற்று ஒரு மூலையில் பரிதாபமாக, தாலி அறுத்த மூளி போல அனாதையாக நின்று கொண்டிருந்தது. சக்கரங்களை தடவிக்கொடுத்தவன் கண்களில் நீர் முட்டியது. முதன்முதலில் அந்த வண்டியை வாங்கியபோது அடைந்த சந்தோசத்தை நினைத்து மனம் ஏங்கியது. வண்டியின் நுகத்தண்டிலிருந்த ஆழமான வடு எதையோ ஞாபகப்படுத்த, கை விரலைப்பார்த்தான். நகம் பெயர்ந்த ஆட்காட்டி விரலிலும், அதே போன்ற வடு. மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தான். பல்வேறு நினைவுகள் மனதை பிசைந்தன.

நான்கைந்து குடிசைகளைக்கடந்து, ஊருக்கு வெளியே, காய்ந்து வறண்டு போயிருந்த அந்த பொட்டல் காடுகளினூடே நீண்ட அந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தான். ஐந்து நிமிட நடையில் மண்ரோட்டை தாண்டி, வாய்க்கா மேட்டிற்கு வந்தான் காரிச்சாமி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் பொட்டல் காட்டின் நடுவே, தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த வெள்ளைக்காளையும், செவலக்காளையும் வயிறு ஒட்டி, துருத்திக்கொண்டிருந்த எலும்புடன் காரிச்சாமியை தலையைத்தூக்கிப் பார்த்தன. அதில் அந்த கொம்புகள் அகண்ட அந்த செவலக்காளை, காரிச்சாமியை தூரத்திலேயே அடையாளம் கண்டு, ’ம்ம்மா…’ என கத்தியது. மாடுகளை நோக்கி நடந்தான் காரிச்சாமி.

மாடுகள்…!

அது பார்ப்பவர்களுக்குத்தான் வெறும் மாடுகள், ஆனால் உரிமைப்பட்டவனுக்கோ, அது குடும்பத்தில் உள்ள ஒரு ஜீவன், சோறு போடும் தெய்வம், குழந்தை, எல்லாம்

காரிச்சாமிக்கு இந்த மாடுகள் இரண்டும் எட்டு வருட குழந்தை. இவை இவனிடம் வந்து சேர்ந்து, வரும் கார்த்திகையுடன் எட்டு வருடம் ஆகின்றது. பழைய நினைவுகளை அசைபோட்டபடி, மாடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்தப்பொட்டல் காட்டில் புழுதிக்காற்று என காதுகளை அடைத்தது.

ஆரம்பத்தில் மாடுகளை வெறும் வண்டி இழுக்கும் மிருகங்களாகத்தான் பார்த்தான் காரிச்சாமி. ஆனால் அவன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், அவன் எண்ணத்தைத் தலைகீழாக மாற்றியது. ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம் கண்முன்னே விரிந்தது.

மாடு வாங்கி, வண்டி ஓட்டிய புதிதில் ஒருநாள், நெல் மூட்டைகளை ஏற்றி வர களத்துமேட்டிற்கு வண்டியை ஓட்டி வந்தான் காரிச்சாமி. அப்போதே ஏறக்குறைய சூரியன் மறையத்தொடங்கி இருந்தது. நெற்களத்தில் மாடுகளை அவிழ்த்து மேய விட்டு, நெல் மூட்டைகளை தனியொருவனாகவே சுமந்து வந்து வண்டியில் அடுக்கி முடித்த போது, ஏறக்குறைய இருட்டி விட்டிருந்தது. மாடுகளின் மீதுள்ள நம்பிக்கையில், நெல் மூட்டைகளை வண்டியில் கொஞ்சம் நிறையவே அடுக்கி இருந்தான் காரிச்சாமி. மாடுகளை வண்டியில் பூட்டும் போதே, அந்த குரங்குத்தோப்பு மேடு நினைவுக்கு வந்தது.

குரங்குத்தோப்பு மேடு...!

ஏன் அந்தப்பெயர் வந்தது என யாருக்கும் தெரியாது, ஆனால், சுற்றுவட்டாரத்தில் குரங்குத்தோப்பு மேடு என்றால், அது வெகு பிரசித்தம். மேடு என்றால் அது சாதாரணமான மேடு அல்ல, சுமார் ஒரு பதினைந்து, இருபது அடி நெட்டுக்குத்தலான மேடு. மேட்டின் இரண்டுபுறமும் நல்ல பள்ளம் வேறு, வண்டி கடப்பதற்கு கொஞ்சம் சிரமம் தான். ஆனால் வண்டி அந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். பலமில்லாத மாடுகளை, பாரத்துடன் அந்த வழியாக ஓட்டிச்செல்வதென்பது தற்கொலைக்குச்சமம். ஏற்கனவே அந்த வழியில் சென்ற பல வண்டிகள் காரிச்சாமிக்குத்தெரிந்தே நிறையதடவை குடைசாய்ந்துள்ளன. இரண்டொருமுறை கவிழ்ந்த வண்டிக்கடியில் எக்குத்தப்பாக மாட்டி, உயிரை விட்டு சரித்திரமானவர்களும் உண்டு. பாரத்தை அந்த மேட்டில் இழுக்க முடியாமல், நெஞ்சு வெடித்து, ரத்தம் கக்கி, அங்கேயே இறந்த மாடுகளும் உண்டு. அந்த மேட்டை தவிர்த்து வேறு வழியில் சென்றால், எப்படியும் ஒரு ஆறு,ஏழு பர்லாங் சுற்றித்தான் வர வேண்டும். ஆனால், அந்த ஒரு பெரிய மேட்டைக்கடந்தால், நிம்மதியாக நெல் மூட்டையுடன் போய் சேர்ந்து விடலாம். ஏதோ ஒரு நம்பிக்கையில், கடவுளின் மீது பாரத்தை போட்டு விட்டு, வண்டியை அந்த பாதையில் ஓட்டத்தொடங்கினான் காரிச்சாமி. மாடுகள் திணறியபடி வண்டியை இழுத்துக்கொண்டு சக்கரங்கள் மண்ணில் பதிய, மெதுவாக நடை போட ஆரம்பித்தன. மாடுகளின் பெருமூச்சுடன், வண்டியில் சத்தமும் இணைந்து கொண்டது.

நிலா வெளிச்சத்தில், இரவுப்பூச்சிகளின் ரீங்காரத்துடன், குளிர் காற்று முகத்தில் மோத, பழைய பாட்டை முணுமுணுத்துக்கொண்டே வந்தான் காரிச்சாமி. ஏறக்குறைய பாதி தூரம் கடந்தாயிற்று. பீடியைப்பல்லில் கடித்துக்கொண்டு, புகையை விட்டபடியே, மாடுகளை விரட்டிக்கொண்டிருந்தான். சிறிது தூரத்தில் அந்த குரங்குத்தோப்பு மேடு, மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது.

அந்த மேட்டிற்கு சுமார் இருபது அடிக்கு முன்னரே வண்டியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கினான் காரிச்சாமி. சுற்றும் பார்த்தான், துணைக்கு வேறு எவருமில்லை. அவிழ்ந்த லுங்கியைக்கட்டிக்கொண்டே, பீடியைத்துப்பிவிட்டு, மேட்டை நோக்கி நடந்தான். இரவில் அந்த மேடு இன்னும் கொஞ்சம் உயரமாகவே தெரிந்தது. மேட்டின் மீது ஏறி, கீழே வண்டியைப்பார்த்தான். வண்டி பள்ளத்தில் தெரிந்தது. மாடுகள் இருட்டிலும் கண்கள் பளபளக்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு நிமிடம் யோசித்தான்.  கொஞ்சம் தயக்கம் இருந்த போதும் வேறு வழியில்லை. பாதையில் கிடந்த ஒரிரு சிறிய கற்களைத்தூக்கி தூர எறிந்தான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக, திரும்பி வந்தவன், வண்டியில் ஏறி, நெல்மூட்டையின்மீது சௌகர்யமாக சாய்ந்து நின்றுகொண்டு, எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டே, மாடுகளை மிரட்டியபடி, வண்டியை மேட்டை நோக்கி விரட்டினான். மாடுகளும் தங்களது முழுபலத்துடன், அந்த மேட்டில் வேகமாக வண்டியை இழுக்க ஆரம்பித்தன. பாதிமேட்டைக்கடந்த மாடுகள், மீதி மேட்டைக்கடக்கத்திணற, வண்டி பாதிமேட்டிலேயே, மெதுவாக சாலையை விட்டு விலகிச்சென்றது. காரிச்சாமி கையிலிருந்த சாட்டைக்குச்சியால் மாடுகளை வீறிக்கொண்டே வாலைப்பிடித்து முறுக்கினான். காரிச்சாமியின் வெறித்தனமான அடியில், மாடுகள் வலியினால் துடித்தபடி, வண்டியை மேலே இழுக்கப் போராடின.

சாலையின் ஓரத்தில் சென்ற வண்டியை இழுக்க மாடுகள் பகீரதப்பிரயத்னம் செய்தன. செவலக்காளை மண்டியிட்டு வண்டியை இழுக்க, மாடுகளின் வாயில் நுரைதள்ளி, கொல்லன் உலை போல மூச்சு வாங்கின. பயத்தினால்  சாணியைப்பீய்ச்சி அடித்தது செவலக்காளை. காரிச்சாமி, மாடுகளை முன்னே விரட்டசெய்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நின்ற வண்டி, மாடுகளை இழுத்துக்கொண்டு, பின்னால் செல்லத்தொடங்கியது.

மாடுகளின் கால்கள் தரையில் கோடாகப்பதிய தரதரவென மாடுகளைப்பின்னே வேகமாக இழுத்துச்சென்றது வண்டி. மண்டியிட்டு இழுத்த செவலக்காளையை அதே நிலையில் இழுத்துச்சென்றதால் செவலக்காளையின் முன்னங்கால்கள் தேய்ந்து, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. வெகுவேகமாகப் பின்னால் சென்ற வண்டி ஏதோ ஒரு கல்லில் டங்ங்கென முட்டியது. முட்டி நின்ற வேகத்தில், நெல்மூட்டைகளைக்கட்டியிருந்த கயிறு அறுந்து, நெல்மூட்டைகள் பின்னே சரிய, பின்பாரம் தாங்காமல், வண்டி முன்னே அலேக்காகத்தூக்கிய வேகத்தில், காரிச்சாமி, நெல்மூட்டைகளின் மீது உருண்டு, வண்டியின் பின்புறம் மண்ணில் விழுந்தான். வெள்ளைக்காளையின் கழுத்துத்தும்புக்கயிறு அறுந்து, மிரண்டு வண்டியை விட்டு விலகி ஓடியது, ஆனால், செவலக்காளையின் கழுத்துக்கயிறு, வண்டியுடன் காளையை மேலே தூக்க, செவலக்காளையின் கழுத்து இறுகி, முன்கால்கள் இரண்டும் தரையில் படாமல் தொங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தில், செவலக்காளை, தனது இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தது. மண்ணில் உருண்ட காரிச்சாமி, அதே வேகத்தில் எழுந்து, வண்டிக்கு முன்னே ஓடி வந்து , செவலக்காளையைப்பார்த்து வெலவெலத்துப்போனான்.

செவலக்காளை, கழுத்து இறுகி, கண்கள் வெளித்தள்ள கர், கர்ர்ர்ரென, வாயில் நுரையுடன் இறைந்துகொண்டிருந்தது. காரிச்சாமிக்கு ஒரு நொடி என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவனது வாய், அவனையும் அறியாமல் ஏதேதோ உளற, வண்டியை சுற்றி சுற்றி ஓடிவந்தான். உதவிக்காக பலங்கொண்ட மட்டும் கத்திப்பார்த்தான். இருட்டில் அவனுடைய குரல் அகோரமாக எதிரொலித்தது. ஆனால், அந்தப்பகுதியில் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. வண்டியைக்கீழே இழுக்க, வண்டியின் மூக்காணியைப்பிடித்துத்தொங்கிப்பார்த்தான். வண்டி அசையவே இல்லை, அதற்குள் செவலக்காளை ஏறக்குறைய பாதி செத்துவிட்டிருந்தது.

இதயம் துடிக்க, கைகால்கள் நடுங்க, காரிச்சாமி, வண்டியில் வைத்திருந்த அரிவாளைத்தேடினான். இருட்டில், நெல்மூட்டைகளுக்கு நடுவே அரிவாள் காணாமல் போயிருந்தது. மண்டிபோட்டுக்கொண்டு, பரபரக்கும் கைகளோடு கண்களால் தேடினான். அங்கே இருந்த ஒரு பெரிய கல்லில் அவன் கண்கள் நிலைத்தது, மண்டிபோட்ட நிலையிலேயே, தவழ்ந்து வந்து அந்த கல்லை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு வண்டிக்கு முன்னே ஓடினான். அந்த நிலையிலும் செவலக்காளை விரித்து வெளித்தள்ளிய கண்களுடன், வாயைப்பிளந்தபடி, கத்தக்கூட முடியாமல், காரிச்சாமியைப் பரிதாபமாகப்பார்த்தது. முன்னங்கால்கள் அந்தரத்தில் துடித்துக்கொண்டிருந்தது.

பதட்டத்துடன் ஓடி வந்த காரிச்சாமி, கையிலிருந்த கல்லை நெஞ்சுயரம் தூக்கிப்பிடித்துக்கொண்டு, மாட்டை வண்டியுடன் பிணைத்திருந்த கடைமொளைக்குச்சியில் (மாட்டையும் வண்டியையும் பிணைத்திருக்கும் கயிறு கோர்க்கப்பட்டிருக்கும் குச்சி) வேகமாக அடித்தான், இருட்டில் குறி தவறி, அடி, நுகத்தடியில் விழுந்தது. அடித்த அடியில் ஆட்காட்டிவிரல் நசுங்கி, நகம் பெயர்ந்தது, உடனடியாக சூடான ரத்தம் கையையும், கையிலிருந்த கல்லையும் நனைத்தது. காரிச்சாமி அதைப்பொருட்படுத்தாமல், நடுங்கிய கைகளில், நழுவிய கல்லை கெட்டியாகப்பிடித்துக்கொண்டு, படபடக்கும் இதயத்துடன் மீண்டும் ஓங்கி கடைமொளைக்குச்சியில் அடித்தான்,
படார்
கையிலிருந்த கல்லும் கடைமொளைக்குச்சியும் திசைக்கொன்றாகத்தெறித்த வேகத்தில் மாட்டின் கழுத்திலிருந்த கயிறு விடுபட்டு, வண்டி சரேலென மேலே உயர, ஈரத்துணியைப்போல, செவலக்காளை தரையில் மண்டி போட்டு விழுந்து.

காரிச்சாமி வேகமாக ஓடிச்சென்று, மாட்டைப்பார்த்தான், கால்களைப் பரப்பிக்கொண்டு, சலனமில்லாமல் மண்ணில் கிடந்தது செவலக்காளை. மெதுவாக, நெருங்கி வந்து சற்று பயத்துடனே, மாட்டின் முகத்தின் முன்பு குனிந்து மாட்டைத்தொட்டான். திடீரென செவலக்காளையின் புஸ்ஸென்ற மூச்சுக்காற்றில், மண் புழுதியாகப்பறந்து, முகத்திலடிக்க, நிம்மதியடைந்து, தரையில் சரிந்தான் காரிச்சாமி.

                   *      *      *      *

பொட்டல் காட்டில் சுழன்று வந்த புழுதிக்காற்று மண்ணை வாரி முகத்திலடிக்க, நிகழ்காலத்திற்கு வந்தான் காரிச்சாமி. சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்தது, இன்னும் கண்ணுக்குள்ளேயே இருந்தது. எனக்காக உயிரைக்கொடுத்து உழைத்த வாயில்லா ஜீவன்கள். அன்றிலிருந்து மாடுகளின் மீது பரிதாபம் கலந்த அன்புடன் இருந்தான். அதிலும் இந்த செவலக்காளையிடம் தனி அன்பு. ஒற்றையடிப்பாதையிலேயே நடந்து மாட்டை நெருங்கியிருந்தான் காரிச்சாமி.

செவலக்காளை காரிச்சாமியைப்பார்த்துக்கொண்டிருந்தது. கட்டியிருந்த கயிறை அவிழ்க்கும் போது, கையை நக்கியது செவலக்காளை.  மாட்டைத்தடவிக்கொடுத்தவன், கனத்த இதயத்துடன் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவந்தான்.

காரிச்சாமியின் வீடு,

காலை நேரம்,
அந்த குடிசை வீட்டுத்திண்ணையில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான் காரிச்சாமி. இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கண்கள் சிவந்திருந்தன. கைவிரலிலிருந்த அந்த பழைய தழும்பை தடவிக்கொண்டிருந்தான். பக்கத்தில் அவன் நான்கு வயது மகன் மலையப்பன் கையிலிருந்த பனங்காயைக்கடித்துக்கொண்டிருந்தான். ஆறு வயது மகள் தேவி, அவள் தட்டிலிருந்த சோறை பிஞ்சு விரல்களில் எடுத்து மாடுகளிடம் நீட்டிக்கொண்டிருக்க, செவலக்காளை தலையை நீட்டி, நாக்கால் அவள் விரல்களை நக்கிக்கொண்டிருந்து. உள்ளே பாத்திரங்கள் உருளும் சத்தத்தைத்தொடர்ந்து, பொண்டாட்டி பேச்சியம்மாளின் குரல் கேட்டது.
அவனவன் டவுனுக்கு போயி சம்பாரிச்சு பொண்டாட்டிய ராணி மாதிரி பாத்துக்குறான், இங்க கட்டிக்க ஒரு நல்ல துணிக்கு வக்கில்ல, உன்ன என்ன, கொண்டுவந்து சம்பாரிச்சு கொட்டுன்னா சொல்லறேன். நல்ல சோத்துக்கு வழி இருக்கா? நா வயித்த நெரப்ப பூச்சி புழுவுக்குள்ள , காடுமேடல்லாம் அலைஞ்சு திரியறேன், ஆனா, நீ இன்னும் இந்த வண்டி மாட்டைக்கட்டீட்டு அழுதுகிட்டு இருக்கே…! என்றபடி வெளியே வந்தவள் திண்ணையில் உட்கார்ந்திருந்த காரிச்சாமியை எரித்துவிடுவது போல பார்த்தாள்.
காரிச்சாமி சர்வநாடியும் அடங்கிப்போய் உட்கார்ந்திருந்தான். யதேச்சையாக தேவியைப்பார்த்தவள்,
யேய்…!’
மாடுகளுக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தவளின் முதுகில் ஒரு போடு போட்டாள் பேச்சியம்மாள். தேவி அழுவதற்குத்தயாராகி வாயைத்திறக்க, மலையப்பன் கையிலிருந்த பனங்காயைப்பிடுங்கி எறிந்து விட்டு, வீட்டு வாசலில் ஒரு ஓரத்தில் அடுக்கி வைத்திருந்த விறகுக்குவியலில் இரண்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு, வீட்டுக்குள் வந்தாள். அடுப்பைப்பற்ற வைத்துக்கொண்டே மீண்டும் ஆரம்பித்தாள், ’மருவாதியா மாடு ரெண்டயும் வித்துப்போட்டு, டவுனுக்குப்போயி, பொழப்பப்பாரு, இல்லியா, உன் மாட்டை கூட்டிக்கிட்டு எங்கியாவது கண்காணாத எடத்துக்கு ஓடிப்போயிடு, கையாலாகாதவன கட்டி, வீட்டுல வெச்சிருக்கறத விட பொழப்புக்கு வழியில்லாமே பொண்டாட்டிய விட்டுப்போட்டு ஓடிபோயிட்டான்னு சொல்றதொன்னும் அவ்ளோ கேவலமில்ல…!’

தொடர்ந்து பேச்சியம்மாள் வார்த்தைகளால் வறுத்தெடுத்துக்கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில், வேலிமரத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளைப்பார்த்தான் காரிச்சாமி. இரண்டு மாடுகளும் தரையில் எதையோ தேடிக்கொண்டு இருந்தன. ஏதோ முடிவுக்கு வந்தவனாக, எழுந்து சென்று, மாடுகளை அவிழ்த்து, ஓட்டிக்கொண்டு நடந்தான் காரிச்சாமி. தேவியும், மலையப்பனும் அழுது கொண்டே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மாட்டுவியாபாரி வீடு.

வீட்டிற்கு முன்னே இருந்த களத்தில், ஏற்கனவே ஒரு ஐந்து ஜோடி மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாட்டுவியாபாரி நீட்டிய பணத்தை வாங்கிக்கொண்டே பேச ஆரம்பித்தான் காரிச்சாமி.
வேற வழியில்லாம தான் மாட்டைக்கொடுக்கறேனுங்க…! கடைசியா வண்டி மாடு வேலைக்குப்போயி மூணு மாசத்துக்கு மேலாச்சு, மாசத்துக்கு ஒரு வேல கெடைக்கறதே குதிரக்கொம்பா இருக்குங்க, காடுமேடெல்லாம் காஞ்சுபோச்சு, மாடுகளுக்கு முன்னே மாதிரி தீவனமும் இல்ல. எல்லாம் உங்களுக்கே தெரியும்..!’

மாடு வியாபாரி கையமர்த்தினான், ’எல்லாம் எனக்கும் தெரியுமேப்பா, பொண்டாட்டியும் நீயும் பட்டினி கெடக்கறது உங்க தலையெழுத்து, ஆனா அந்த வாயில்லா ஜீவனையும் போட்டு ஏன் சிரமப்படுத்துறீங்க, தா பாரு காரிச்சாமி, அடுத்த வாரம், பக்கத்தூரு பண்ணையாருக்கு அஞ்சு ஜோடி காளைமாடு அனுப்புறேன், அதுல ஒரு ஜோடி உன்னோடதும் தான், நீ மாட்டை விட்டுட்டு, டவுனுக்கு போயி சம்பாதிக்கிற வழியப்பாரு மிச்சத்த நான் பாத்துக்குறேன்.’

அதுக்கில்லீங்க….. இவ்வளவு நாள் மாட்டை வெச்சிருந்துட்டு, இப்போ திடீர்னு விட முடியல, அதான்…. வேற ஒண்ணுமில்ல, ஒரு விண்ணப்பம்…..’

ம்ம்.. சொல்லு…!

யாருக்கு கொடுத்தாலும், இந்த மாடுக ரெண்டயும் சோடியாவே கொடுங்க, பிரிச்சுடாதீங்க…’

அட என்னப்பா நீயி, இந்த காலத்துல பெத்த அப்பனையும், ஆத்தாளயுமே பிரிச்சு, தெருவுல பிச்சையெடுக்க விட்டறானுக, நீ இந்த மாட்ட விடுறதுக்கு இப்படி சலிச்சுக்குறே..? அதெல்லாம் பாத்தா, பொழைக்க முடியாது காரிச்சாமி, இதே கையில தான் இதுவரைக்கும் ஒரு எழுநூறு, எட்டுநூறு ஜோடிய புடிச்சு கொடுத்திருக்கேன். நீ கவலைப்படாம மாட்டை விட்டுட்டு போ, எல்லாம் நல்லபடியா நடக்கும், போயிட்டு வா!’ என்றபடி காரிச்சாமியின் பதிலுக்குக்காத்திராமல் வீட்டுக்குள் சென்றான் வியாபாரி.
கையிலுள்ள பணத்தை மடித்து டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, கடைசியாக மாடுகளைப்பக்கத்தில் சென்று பார்க்க தெம்பில்லாமல் திரும்பிப்பார்த்துக்கொண்டே இருள் கவ்விய முகத்துடன் நடந்தான் காரிச்சாமி. களத்தில் கட்டியிருந்த மாடுகளிரண்டும், அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

சுமார் ஒரு வாரத்திற்குப்பிறகு,

மாடுகளின் நினைவிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருந்தான் காரிச்சாமி. தற்போது டவுனில், சுங்கச்சாவடியில் செக்யூரிட்டி வேலை. தொள தொளவென உடலுக்குப்பொருந்தாத உடுப்பைப் போட்டுக்கொண்டு, காவலாளியாகப்பணிபுரிந்தான். எங்கேயாவது தற்செயலாக வேறு ஏதாவது மாடுகளைக்காணும்போது, அவன் செவலக்காளையின் நினைவு வரும், துக்கம் தொண்டையை அடைக்க, கைவிரலில், இல்லாத நகத்தையும், தழும்பையும் பார்த்தபடி மௌனமாகி விடுவான்.

அன்று ஒருநாள், சுங்கச்சாவடியில், வாயில் விசிலுடனும், கையில் குச்சியுடனும், வரும் வண்டிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான் காரிச்சாமி, லோடுவண்டிகளைப்பிரித்து ஒரு பகுதியில் அனுப்பிக்கொண்டிருந்தான். எல்லா விதமான சரக்கு வண்டிகளும் அவன் கைகாட்டிய திசையில் சென்றுகொண்டிருந்த போது, வரிசையில் அந்த லாரி வந்தது. லாரியின் ஓரத்தில் வரிசையாக மாடுகளின் தலைகள் தெரிய, ஏனோ செவலக்காளையின் நினைவு வந்தது. லாரி அருகில் வர வர காரிச்சாமி கவனித்துப்பார்த்தான் அதில் நெருக்கி நின்றிருந்த தலைகளில் காரிச்சாமியின் செவலக்காளையின் தலையும் தெரிவது போன்ற பிரமை.

மனதைத்தேற்றிக்கொண்டு, கைவிரலிலுள்ள தழும்பைப் பார்த்தான். அந்த லாரி அருகில் வந்த போது, காரிச்சாமியின் கால்கள் பூமியை விட்டு கீழே வேகமாக செல்வது போன்று அடி வயிறு கலங்கியது. லாரிக்குள் நெருக்கியடித்து  நின்றிருந்த மாடுகளுள், மூக்கணாங்கயிறு அறுக்கப்பட்டு, வெய்யிலில், வாயில் நுரை தள்ளி, விரிந்து, வெறித்த கண்களுடன் கண்களில் மொய்க்க, கூட்டத்தில் நின்றிருந்தது, அவன் செவலக்காளையே தான்.

லாரி காரிச்சாமியின் அருகில் நிற்க, காரிச்சாமி ஒருகணம் எதுவும் புரியாமல், நடுங்கும் குரலில், லாரி ட்ரைவரிடம் கேட்டான்,

வண்டி ...எங்கீங்க போகுது..?? நா குழறியது.

வேற எங்க? கேரளாவுக்குத்தான், எல்லாம் அடி மாடுக…’

காரிச்சாமி அடிவயிறு பிசைய, கண்கள் இருள, செவலக்காளையை நிமிர்ந்து பார்த்தான், செவலக்காளையின் கண்கள் அகலமாக விரிந்து காரிச்சாமியை வெறித்துக்கொண்டிருந்தன. ஏழு வருடங்களுக்கு முன்பு, அந்த குரங்குத்தோப்பு மேட்டில், வண்டியில் தொங்கும் போது பார்த்த அதே பார்வையில், அவனைப்பார்த்துக்கொண்டிருந்தது. காரிச்சாமி குறுகிப்போனான், லாரி அவனைக்கடந்து தூரத்தில் செல்ல, செவலக்காளை தலையை சிலுப்பிக்கொண்டு, காரிச்சாமியைப்பார்த்துக்கத்தியது.

ம்ம்மா….!!!”
*************************************************************************************************************************--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment: