Saturday 26 July 2014

Story 87: கண்டதும்...



கண்டதும்...
மால் வாசலில் நண்பனுக்காகக் காத்திருந்தபோதுதான் அவளைப் பார்த்தேன். வீதியில் ஹூவர்காரில் வந்து இறங்கினாள். அத்தனை அற்புதமாக இருந்தாள். நிச்சயம் ரோபோ இல்லை. மனிதத் தயாரிப்பு எதுவும் இத்தனை அழகாக இருந்து நான் பார்த்ததில்லை. இது நிச்சயமாக பிரம்மத் தயாரிப்பு தான்.
இந்த யுகத்திலுமா பிரம்மன் விஷ்ணு என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?” எனது சிந்தனையை கப்சர் பண்ணிய எனது கடிகாரம் கேட்டது.
காதல் என்று வந்துவிட்டால் அப்புறம் இந்த மூளை என்னவெல்லாம் சிந்திக்கும் என்று உனக்குத் தெரியாது. நீயும் காதலித்துப் பார், அப்போது தெரியும்.”
நாங்கள் காதலிக்கத் தொடங்கி, அதனால் நடந்த களேபரத்தால் முப்பது வருடங்களுக்கு முதலே மிஷின்களுக்கு காதல் உணர்ச்சி தருவதைத்தான் நிறுத்தி விட்டீர்களே?”
அவளிடம் போய் புறப்போஸ் பண்ணவா? எங்கேயோ முன்னமே பழகிய மாதிரியே இருக்கிறது மனதிலே. அவள்தான் எனக்கானவள் என்று இதயம் சொல்லுகிறது
உங்களுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று மூளை சொல்லவில்லையா?” காதலை பிடுங்கிய விஞ்ஞானிகள் லொள்ளை பிடுங்கவில்லை ரோபோக்களிடமிருந்து.
அதெல்லாம் எனக்கும் தெரியும், சும்மா இரு, மனிதப் பெண்களைப் பார்ப்பதே அரிது, பூராகவும் மிஷின் பெண்கள், இருக்கும் மனிதப் பெண்களும் பிரதி வெள்ளிக்கிழமை ஆடை மாற்றுவது மாதிரி முகத்தை சர்ஜரி செய்து கொள்கிறார்கள், இந்த லட்சணத்தில் ஒரு தேவதை கிடைத்தால் விட்டு வைக்கவா சொல்லுகிறாய்? ஒரு அப்பிளிகேஷனை போட்டுப் பார்ப்போம்.”
இதுவும் சர்ஜரி முகமாக இருக்கலாம் தானே?” என்று கடிகாரம் கேட்டதை புறக்கணித்தேன். இருக்கலாம்தான்.
பக்கத்திலுள்ள ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தாள். தொடர்ந்தேன். மிஷின் பெண்களுக்கும், மனிதப் பெண்களுக்கும் நடுவே தேவப் பெண்ணாக நகர்ந்தாள்.
அவளை அண்மித்தேன். ம்ம்... கூந்தல் வாசம்.. மனிதப் பெண் வாசம்.. இயற்கையா இல்லையா என்று பத்தாயிரம் வருடங்களுக்கு முன் சிவனையே குழப்பிய பெண்களின் குழலின் வாசம்.. மனித வாசம்.
எக்ஸ்க்யூஸ் மீ, உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே, எங்கேயோ...” என்று நெற்றியை சொறிந்தேன்.
அடுத்த முறை கொஞ்சம் புதுமையாக முயற்சியுங்கள். இது கமலஹாசன் காலத்துப் பழசு.” என்று நக்கல் தேனை காதில் ஊற்றிவிட்டு நகர்ந்தாள்.
அசட்டை, அறிவு, ஆணவம்.. அடடா! இவள்தான் பெண்..! விடக்கூடாது. பின்னால் ஓடினேன். யோசிக்க நேரமில்லை. மண்டியிட்டேன்..
என்னை திருமணம் செய்வாயா?”
இதை அவள் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சநேரம் உறைந்து நின்றுவிட்டாள்.. பிறகு சுதாரித்துசாரி, எனக்கு ஏற்கெனவே நிச்சயம் ஆகிவிட்டது. ஆன்லைன் மூலமாக.”
அதிர்ச்சிதான், ஆனால் இத்தனை பேரழகியை எவனும் இதுவரை நிச்சயிக்காமல் விட்டால்தான் ஆச்சரியம். “சாரி, அந்த அதிஷ்டசாலி யார் என்று தெரிந்துகொள்ளலாமா?”
குமேஷ்.. செவ்வாயில் வேலை. இன்னும் பூமியில் முகத்தை பார்க்கவில்லை. செவ்வாயின் ஒக்சிஜன் பில்டர் முகந்தான் பார்த்தபடி இருக்கிறது..”
அவள் சொல்லிக்கொண்டிருக்கவே எனக்கு இறக்கைகள் முளைத்தது. வானத்திலிருந்து இறங்கி மீண்டும் பூமியில் இறங்கியதும் சொன்னேன், “ மை காட்! நான்தான் குமேஷ், ம்ரியா!!”
ஒரு கணம் திகைத்துவிட்டாள்.. அவளுக்கும் இது இன்ப அதிர்ச்சிதான். என்ன சொல்லப் போகிறாள் என்று காத்திருந்தேன்.. எத்தனையாம் நூற்றாண்டிலும் இந்தப் பெண்களுக்கு தங்கள் கணவர்களை முதன்முதலில் நேரே பார்க்கும்போது வெட்கம் வரத்தான் செய்கிறது. சற்றுப் பெருமையாக வேறு இருந்தது. அவள் வாயைத் திறக்கும் தேவகணத்துக்காக காத்திருந்தேன்.
திறந்தாள்.. “இந்தக் கல்யாணம் நடக்காது குமேஷ்..”
* * *
இப்போதெல்லாம் நான் வீதியில் காணும் பெண்களை எல்லாம் புறப்போஸ் பண்ணுவதில்லை. முகத்தை சர்ஜரி பண்ணிய என் பாட்டியாகக் கூட இருக்கலாம் என்கிற பயம்தான். ‘எத்தனையாம் நூற்றாண்டிலும் இந்தப் பெண்களுக்கு கண்டவள் பின்னால் சுற்றுவோரை பிடிப்பதில்லை  என்றது எனது கடிகாரம்.

No comments:

Post a Comment