Wednesday, 9 July 2014

Story 56:எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

அந்தச் சம்பவம் நினைவை நிழல் போலத் தொடர்ந்து கொண்டே இருந்தது. யாரிடமாவது இதனைப் பகிர்ந்து கொண்டால் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கலாம் என்று நினைத்தான்.
செல்பேசியை எடுத்தான். பொத்தான்களை அழுத்தினான்.
அவசரமாப் பேசணுமா? … ஓகேகண்ணகி சிலை பக்கத்தில வா. பேசலாம்என்று பச்சைக் கொடி அசைத்தான் நண்பன் பச்சைமால்.
மெரீனா கடற்கரை காற்றின் இனிமையான தழுவலை அருமையாக ரசிக்க முடியவில்லை. சற்று நேரம் முகத்தை அழுந்தத் தேய்த்துக் கொண்டிருந்த அருண், தனது மனச் சுமையை இறக்கத் தொடங்கினான் .
அன்று நண்பகல் பன்னிரெண்டு மணி இருக்கலாம். வெளியே தெருவில் யாரோ கோபமாகக் கத்தும் சப்தம்.
முதல் மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து பார்த்தால் எதிர்வீட்டு வாசல் அருகே, தெருவில் இளைஞன் ஒருவன் அலங்கோலமாக விழுந்து கிடந்தான்.
உச்சிப் பகலிலேயே தண்ணியடிச்சிட்டு கெடக்கான்என்று அருவருப்பாக நினைத்தான் அருண். கீழ்த் தளத்தில் குடியிருக்கும் பெரியவர் மாதவன் தான் ஏதோ திட்டிக் கொண்டே உள்ளே போய்க் கொண்டிருந்தார்.
அப்போது யாரோ ஒருவர் அங்கே வந்து, “டேய் தண்ணியத் தெளிச்சுப் பாருங்கடாஎன்று குரல் கொடுத்தார். உடனே ஒரு இளைஞன் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவன் முகத்தில் தெளித்தான். அவனை மெல்லத் தூக்கி நிறுத்தப் பார்த்தான்.
தலை தொங்கியது.
டேய் விடுடா. அவன் பொழைக்க மாட்டான். பக்கத்து சந்துலதான் அவன் அம்மா இருப்பாங்க. வெவரத்தைச் சொல்லு. முடிஞ்சா ஆசுபத்திரிக்குக் கொண்டு போகச் சொல்என்றார் அவர்.
ஆகா! விஷயம் சீரியஸ் போல. தண்ணி கேஸ் இல்லஎன்பது அப்போதுதான் அருணுக்குப் புரிந்தது.
சற்று நேரத்தில் யார் யாரோ வந்தார்கள். அவனைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
என்னதான் நடக்கிறது?’ புரியவே இல்லை.
அப்புறம் வீட்டிற்குள் வந்து அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினான் அருண்.
பிற்பகல் மூன்றரை மணி இருக்கும். மறுபடியும் ஜன்னல் வழியாக வீதியைப் பார்த்தபோது நிறைய கும்பலாக இருந்தது.
குழப்பமாக இருந்தது. ‘ஒருவேளை அவன் செத்துப் போயிட்டானோ?!’
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்றான். அந்த இளைஞனின் உடல் ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட நிலையில் தெருவில் காணப்பட்டது.
அப்போது எதிர் வீட்டுக்காரர் மேலே வந்தார். “என்ன சார் அநியாயம். தண்ணி போட்டா அண்ணன் தம்பிங்கற வித்யாசம் கூடவாத் தெரியாது. இப்படியா சாகற மாதிரி அடிப்பானுங்கஎன்று வருத்தப்பட்டார்.
என்ன சார் சொல்றீங்க?”
இந்த குடிசை வீட்ல மொத்தம் நாலு பசங்க. அத்தன பேருமே நீக்ரோ மாதிரி கறுகறுன்னு இருப்பானுங்க. நேத்து ராத்திரில இருந்து அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டயாம். இன்னிக்கு மத்தியானம் நம்ம வீட்டுக்கு முன்னாடியே தம்பிய மார்லயே மிதிமிதின்னு மிதிச்சுக் கொன்னுட்டான் அண்ணன்காரன்என்று பரிதாபப்பட்டார்.
அதிர்ச்சியாகவும், நம்பவே முடியாததாகவும் இருந்தது அருணுக்கு.
இரவு முழுவதும் அந்த இளைஞன் மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தக் காட்சியே திரும்பத் திரும்ப அவனுள் வந்து கொண்டே இருந்தது.
மறுநாள் காலையில் எதுவுமே நடக்காதது போல அமைதியாகக் காணப்பட்டது வீதி.
என்ன ஆச்சு?” என்று தங்கள் குடியிருப்புக் காவலாளியிடம் விசாரித்தான் அருண்.
இது கொலைன்னு யாரோ போலீசுக்குப் போன் போட்டுச் சொல்லிட்டாங்களாம். ராத்திரி பதினோரு மணிக்கெல்லாம் போலீசு வந்திரிச்சி. ஆனா இவங்க யாருமே பாடி எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னு செம ரகள பண்ணினாங்க. ஆனாலும் முடியல. ரெண்டு மணிக்கெல்லாம் பாடிய கொண்டு போயிட்டாங்கஎன்றார் காவலாளி.
தப்பு செஞ்சவன் தண்டனைய அனுபவிச்சே ஆகணும். கொஞ்சமாவது நீதி இருக்கேஎன்று அருணுக்கு ஆறுதலாக இருந்தது.
அப்புறம் அன்று மாலை நான்கு மணிக்கெல்லாம் போஸ்ட் மார்ட்டம் முடிந்து உடலைக் கொண்டு வந்தது போலீஸ். ஆறு மணிக்கெல்லாம் போலீஸ் மரியாதையுடன் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.
மூன்று நாட்கள் கடந்தன.
கொலை செய்தவன் அந்தத் தெருவில் எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமே இல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
அருணுக்குத் தாங்கவில்லை.
விசாரித்தான்.
ஒன்னரை லட்சம் ரூபா செலவழிச்சி கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டாங்கஎன்ற தகவல் கிடைத்தது.
இவ்வளவு பணம் இவங்களுக்கு ஏது?” என்று குழப்பமாகக் கேட்டான் அருண்.
ராத்திரி நாலு வீட்ல கொள்ளையடிச்சா போதுமேஎன்று சர்வசாதாரணமாகச் சொன்னார் காவலாளி.
 பட்டப்பகலில் பல பேர் பார்க்குற மாதிரி கொலை நடந்திருக்கு. ஆனா பணம் அத ஒண்ணுமே இல்லாம செஞ்சிருக்கு. மனசு தாங்கலைடாஎன்று குமுறினான் அருண்.
அருணைத் தேற்றி ஒருவாறு சமாதானப்படுத்திய பச்சைமால், “கவலைப்படாதே, ஐஜி ஆபீஸ்ல முக்கியமான போஸ்ட்ல என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் செல்வம் இருக்கார். அவர் மூலமா ஸ்டெப் எடுக்கச் சொல்றேன்என்றவாறு செல்பேசியை எடுத்துப் பேசினார்.
முக்கியமான விஷயமா? கண்ணகி சிலை பக்கத்தில தானே இருக்கிறீங்க? அங்கேயே இருங்க. நானே வர்ரேன்என்றார் செல்வம்.
சற்று நேரத்தில் சொன்னபடி அவரும் வந்துவிட்டார்.
ஒன்னரை லட்சம் ரூபா வாங்கிட்டு கதைய முடிச்சிட்டாங்களா? என்ன செய்யறேன் பாருஎன்று ஆக்ரோஷமாகப் பேசினார்.
மறுநாள் போலீஸ் வண்டி வந்தது. குடிசையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கொலைகார அண்ணனைத் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு பறந்துவிட்டது.
இந்த சேதி தெரிந்ததும் மறுபடியும் அங்கே கூட்டம் கூடியது. ஆளாளுக்கு கோபமாகப் பேச ஆரம்பித்தார்கள். “ஒன்னரை லட்சம் கொடுத்தும் போலீஸ் புத்திய காமிச்சிட்டாங்க பாரு. இத சும்மா விடக்கூடாதுஎன்று சீறினார்கள்.
அந்தக் கும்பல் அந்தப் பகுதி காவல் நிலையத்தை நோக்கிப் பறந்தது பணம் கொடுத்ததற்கு நியாயம் கேட்பதற்காக.
காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கோ அதிர்ச்சி. “நம்ப ஏரியாவுல வந்து நமக்கே தெரியாம இந்தக் காரியத்தைச் செஞ்சது யாரு?” என்று அவர்களும் அதிர்ந்து போய்க் கத்தினார்கள்.
இதைக் கேட்டதும் அருணுக்கு சமாதானமாக இருந்தது. ‘உண்மையும், நீதியும் ஒட்டுமொத்தமாக செத்துப் போய்விடவில்லை.’
மறுநாள் காலையில்வாக்கிங்செல்வதற்காக வெளியே வந்தபோது, அந்தக் கொலைகாரன், வழக்கம்போல நடுத்தெருவில் பல் விளக்கிக் கொண்டிருந்தான்.
எப்படி?’
ஒரே குழப்பமாக இருந்தது.
யாரோ மேலிடத்தில போட்டுவிட்டுட்டாங்களாம். அப்புறம் அவங்களுக்கு ரெண்டு லட்சம் ரூபா கொடுத்து அவன வெளியில கொண்டு வந்துட்டாங்கஎன்றார் காவலாளி.
அதிர்ந்து போய்விட்டான் அருண்.
அப்படியானால் அவனது நண்பன் பச்சைமாலின் நண்பர் செல்வமும்?’
என்னதான் நடக்கிறது இந்த உலகத்தில்?’
அருணுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.

No comments:

Post a Comment