"அந்த" 100ரூபாய்
பழைய மின்விசிறிகளின் சத்தம்,குளித்துப் பல நாட்கள் ஆன சுவர்கள்,என தனக்கே உரித்தானப் பெருமைகளோடு,பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அந்த
அரசு அலுவலகம்.
"ரெண்டு நாள் கழிச்சு வாப்பா."
"சார் கொஞ்சம் அவசரம்.நாளைக்கே முடிச்சுத்தாங்க சார்"
"உனக்கு
முன்னாடி 40 பேர் விண்ணப்பம் இருக்கு.அத முடிச்ச அப்புறம் தான்
உன்னோடது எடுப்பேன்."
"பாத்து செய்ங்க சார்"
"அப்படியெல்லாம் செய்ய முடியாது. எல்லா
விஷயத்துலயும் முறைன்னு ஒண்ணு இருக்குல்ல."
என்று சொல்லிக்கொண்டே வாயில் வெற்றிலை
எடுத்து வைத்த
, 50வயது மதிக்கத்தக்க, ஐயா உயர்திரு.இராமநாதன் அவர்கள் எதிர்பார்த்த
பதில்,அவனிடமிருந்து வந்தது.
"சார் நீங்க நெனச்சா முடியும்
சார் "
இந்த வாக்கியம்
சொல்லப்படும் போது
, காதுகளைவிட, கைகளுக்குத்தான் வேலை இருந்தது.
"சரி.செஞ்சுடுவோம்" என்றார் சிரித்தபடி.
100ரூபாயில்
சிரித்துக்கொண்டிருந்த காந்தி
, அந்தக் கிளிப்பச்சைச் சட்டைப் பையினுள் சென்றார்.
"பேரு ராஜேந்திரன் சார்.மறந்துடாதீங்க. நாளைக்குக் காலையில வரேன்."
என்றபடி நகர்ந்தான் அவன்.
"ராஜேந்திரன்
டிஜிட்டல்" கடைக்குள் நுழைந்தான் மெக்கானிக் கடையில்
வேலை செய்யும் பாலு.
"அண்ணே,பன்னண்டு மணிக்குள்ளார கடை பேனர் வேணும்னு ஓனர்
கேட்டாருண்ணே."
"நேத்தே சொல்ல வேண்டிதான தம்பி.இன்னும் அரைமணி நேரத்துல கரண்ட்டு
போய்டும். வேற பார்ட்டியோட வேலை இருக்கு."
"ஓனர் திட்டுவார்ண்ணே.எப்புடியாச்சும் பண்ணிக்குடுண்ணே."
கெஞ்சினான் பாலு.
நேற்று பேனர் அடிக்கக் கொடுக்கும்போதே
,12மணி கெடுவைச் சொல்லாமல் விட்டுவிட்டாய் என்று பழி அவன் மீது தானே விழும்.
அந்த பயம்.
"சரி.
உன் பேனர ஸ்பெஷல் மிஷின்ல போடுறேன் .100 ரூபாய் அதிகம்
ஆகும்.பரவாயில்லியா?"
"சரிண்ணே.சீக்கிரம் அடிச்சுத்தாங்க."
சிறப்புப் பதிப்புக்கும்,சாதாரணப் பதிப்புக்கும் பாலுவுக்கு வித்தியாசம்
தெரியாததால் தன் இழப்பை மீட்டிருந்தார் இராஜேந்திரன்.
தன் தவறால்
100 ரூபாய் அதிகம் கொடுத்ததற்கும் முதலாளி திட்டுவார்.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பாலுவிடம் வந்தார்
, அந்த டாக்ஸி ஓட்டுநர்.
"தம்பி வண்டி பின் வீல் பஞ்சர்
போடு."
கழற்றிப் பார்த்தவன்,
"அண்ணே டியூப் ரொம்ப அடி வாங்கிருக்கு.நெறைய ஒட்டணும்."
"சரி
தம்பி .பண்ணு."
முடித்த கையோடு,
"100ரூவாண்ணே" என்றான்.
"ரொம்ப அதிகம்டா."
"பெரிய ஒட்டுண்ணே.மத்த வேலையெல்லாம் விட்டுட்டு அவசரமா உனக்குப்
பண்ணேன்.போட்டுக் குடுண்ணே."
"வெச்சுக்க போ"
எரிச்சலுடன்
அளித்தான்.
இந்த பஞ்சர் வேலை முதலாளிக்குத் தெரியப்போவதில்லை.
100ரூபாய் அதிகம் செலவானது சரி செய்தாயிற்று.மகிழ்ந்தான் பாலு.
தேவையில்லாமல் 100ரூபாய் செலவான கடுப்பில் இருந்த டாக்ஸி
டிரைவரிடம்,
"டாக்ஸி வருமா?".
என்றான்,
அந்த ஜீன்ஸ்,டீ ஷர்ட்
இளைஞன்
"எங்க சார்?"
"காந்தி
நகர்.12வது தெரு."
"200ரூவா ஆகும் சார்"
"100 தானப்பா?"
"சார் கோவில் தேர் ஊர்வலம் சார்.பஜார் சுத்திகிட்டு போனும்."
"அதுக்குனு 100ரூபா அதிகமா?"
"பெட்ரோல் விலை வேற ஏறிடுச்சு சார்."
"சரி வா".
வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட அந்த இளைஞன்,"டீசல்" என்று
எழுதப்பட்ட கார் டிக்கி மேல் வைத்திருந்த தன் பையை எடுத்து உள்ளே ஏறினான்.
பஜார் பக்கமாகச் சுற்றிப் போனதால்,இளைஞனின் மனைவிக்குப் பிடித்த அந்தப்
பலகாரக் கடையைக் கடக்க நேரிட்டது.
வண்டியை நிறுத்தி இனிப்பு வாங்கிக்கொண்டான்.
வாசலில் வந்திறங்கிய மாப்பிள்ளையை வரவேற்றதோடு மட்டுமல்லாமல்,
"நான் குடுத்துக்குறேன்.நீங்க உள்ள போங்க"
என்றார் மாமனார்.மாப்பிள்ளைக்குச் செலவு செய்வது
, அவர் கௌரவமாயிற்றே.
சட்டைப்பையினைத் துழாவியபடி,"ஏம்பா 200ரூவா?" என்றார்.
" பஜார் பக்கமாச் சுத்தி வந்தோம் சார்"
"இதெல்லாம்
அநியாயம்.உழைச்சு சம்பாதிங்கப்பா.ஏன்
இப்படி கொள்ளை அடிக்கிறீங்க."
"சார்,பேசுனா பேசுன கூலி
குடுங்க சார்."அவன் குரலை உயர்த்தினான்.
"என்ன
மாமா,என்ன பிரச்சனை?"
மாப்பிள்ளையின்
குரல் கேட்க,
"ஒண்ணுமில்லை
மாப்பிள்ளை."
சமாளித்துவிட்டு,
"இந்தாப்பா.புடி.கலிகாலம்"
சலிப்போடு
உள்ளே சென்றார்.
கணவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவர் மகள் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
"ஏன் மாப்பிள்ளை பஜார் பக்கமாச் சுத்தி வந்தீங்க?தேவையில்லாம நேரம்
விரயம் தானே."
"இவளுக்கு அந்த கடை ஸ்வீட் தான் பிடிக்கும்.அதான் வாங்கி வரலாம்னு சுத்தி
வரச் சொன்னேன்."
என்றான்
, மனைவியிடம் அந்த இனிப்புப் பெட்டியை நீட்டியவாறே.
"அதுக்கு நான் 100ரூவா அதிகமாத் தண்டம் அழனுமா"
என்று தனக்குள் புலம்பிக்கொண்டார் மாமனார்.
திடீரென்று பலமாய் வீசிய சூரைக்காற்றில்,
இராமநாதன்,
அரசு அலுவலர்.
என்று அவர்கள் வீட்டு வாசலில்
இருந்த பலகை ஒரு பக்கமாகச்
சரிந்த வேளை,
இராமநாதனின் கிளிப்பச்சைச் சட்டைப் பையினுள்
இருந்த, "அந்த" 100ரூபாய் நோட்டில், காந்தி சிரித்துக் கொண்டிருந்தார்.அந்தச் சத்தம், மனிதர்களைத் தவிர மற்ற அனைத்து உயிர்களுக்கும் கேட்டுவிட்டது.
No comments:
Post a Comment