Thursday 31 July 2014

Story 110: லிண்டா



லிண்டா

உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை யாருமில்லாத ஒரு ரயில் பெட்டியில் ஜன்னலருகே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவது போல் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? மிஸ் லிண்டா டர்னர் தனக்கு ஒரு மகள் இருந்தால் அவளை இவ்வாறு யாருமற்ற ரயில் பெட்டியில்  ஜன்னல் இருக்கையில் உட்கார்ந்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டே பயணம் செய்வது போல ஒரு வாய்ப்பு அமைத்துக்கொடுத்தாலே போதும் என்று சொன்னாராம். அவரிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்திருக்குமா என்று ஒரு சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. அல்லது இது லிண்டாவைப் பற்றி உலவி வரும் கட்டுக் கதைகளில் மற்றொன்றாக இருக்கலாம். லிண்டா தன்னைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ பேசி நான் பார்த்ததே இல்லை. சாத்தியமில்லாதவைகளைப்பற்றி லிண்டா யோசிப்பது கூட கிடையாது.  ஒரு முறைஇந்த ஞாயிறு மிதமான வெயில், குளிரும் இல்லை வெளியே எங்காவது சென்றீர்களாஎன்று நான் கேட்டபோது ஒரு சிரிப்பு தான் பதில் வந்தது. அர்த்தம், நான் அனாவசியமாக பேச முற்படுகிறேன்;எழுந்து என் இருக்கைக்குச் செல்லலாம்.

லிண்டாவைப் பற்றி கதைகள் இந்திய அலுவலகத்திலேயே மிகப் பிரபலம். அப்போது இங்கிலாந்தில் லிண்டவின் கீழ் நேரடியாக வேலை செய்யும்  நண்பர்கள்  சொல்லும் ஒன்றிரண்டு  சொற்களை வைத்து, எல்லோரும் தனக்கு தோன்றியபடி லிண்டாவை கற்பனை செய்து வைத்திருந்தார்கள். அவர் எழுபது  வயது கன்னிப் பெண்.கல்லூரி முடித்த நாளிலிருந்து அதே அலுவலகம். எட்டு முறை பதவி உயர்வு, இரண்டு சரிவு. எங்கள் வயதைக் காட்டிலும் அவரின் அனுபவம் அதிகம். கண்டிப்பு, திறமை, மனித வள  மேலாண்மை, கறார் மனப்பான்மை, தன் சக ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார். மிகப் பெரிய பிராஜெக்டுகளை லிண்டாவை விட்டால் திறம்பட முன்னெடுத்துச் செல்ல யாருமே இல்லை. நான் இங்கிலாந்து கிளம்பிச் செல்லும் முன் லிண்டாவிடம் ஒரு தொலைபேசி நேர்காணல் இருந்தது. அதற்காக மூன்று வாரம் தயார் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி தேர்வில் லிண்டா என்னிடம் அதிகம் கேள்விகள் கேட்ட மாதிரி நினைவில் இல்லை. கடைசியாகஉங்கள் அம்மாவின் பெயர் என்ன ?’ என்று கேட்டார். எனக்கு முதலில் சரியாகக் கேட்கவில்லை. பின்னர் அழுத்தந்திருத்தமாக கூறினார். நானும் சொன்னேன். அந்தப் பெயர் அவர் வாயில் நுழையவில்லை. ஒவ்வொரு எழுத்தாக சொல்லச் சொல்லி திரும்பச் சொன்னார். இங்கிலாந்து வந்த பிறகு நண்பர்கள் சொல்லித் தான் தெரிய வந்தது. இந்தக் கேள்வி லிண்டா எல்லாரிடமும் கேட்பது. அம்மாவின் பெயரை அவர் நினைவில் வைத்துக்கொள்வதெல்லாம் இல்லை. மழை பெய்து ஓய்ந்தவுடன் மரக்கிளையை ஆட்டி விடுவது போல அது ஒரு விளையாட்டு அவ்வளவே.
.
தான் அறிந்திருக்காத விஷயங்களைப் போல் லிண்டாவை எதுவும் அச்சுறுத்துவதில்லை.
நான் கண்ணாடியை கழட்டி துடைக்கும் நேரம் தான் நான் மிகவும் பயப்படும் நிமிடங்கள். கண்கள் சரியாகத்  தெரியாத அந்த நிமிடங்களில் உலகம் வழக்கத்தை விட வேகமாக நகர்ந்து விடுமோ என்ற பயம்.  நீங்கள் எல்லோரும் என் தலையில் ஏறி மிதிக்க அது தான் சரியான தருணம், புரிந்ததா?’ இது லிண்டா அடிக்கடி வார சந்திப்புகளில் சொல்பவை. சொல்லி தானே சிரித்துக் கொள்வார். ஒவ்வொரு வாரமும் இந்த வரி வந்துவிடும். அவர் சொல்லாவிட்டாலும் கண்ணாடியை துடைக்கும் நேரம் தவிர மிச்ச நேரங்கள் அவரை மிஞ்சி உலகம் நகராது. எல்லாமே தன் திட்டப்படி தான் நடக்கும். இங்கிலாந்து, கனடா, இந்தியா, சிங்கப்பூர் என்று அவரின் மேற்பார்வையில்  டீம்கள் இயங்கின . ஒரு பிசகு வந்தாலும்  அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து வருடம் தோறும் லிண்டாவுக்கென தனி கிறிஸ்துமஸ் பரிசுகள் வந்திறங்கும். தலைமை அலுவலகம் லிண்டாவை இழக்க எப்போதுமே தயாராக இல்லை. ஐம்பது மில்லியனுக்கு மேல் எதாவது மென்பொருள் ஏற்றுமதி வேலைகள் வந்தாலே லிண்டா தான் அவர்களின் முதல் பரிந்துரையாக இருக்கும். கஸ்டமர்கள் மெச்சும் பல மென்பொருள் உபகரணங்கள் லிண்டா தலைமையில் செயல்பாட்டுக்கு வந்தவை. வேலையைத் தவிர அவருக்கு வாழ்க்கையே இல்லை என்பதை எல்லோரும் சரியாக கணித்து வைத்திருந்தார்கள்.ஒரு முறை அவர் விடுமுறைக்கு சென்ற நாளில் ஒரு மிகப்பெரிய மென்பொருள் கட்டுமானத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. லிண்டா இல்லாமல் நாங்களே அதை முடித்து முதல் கட்ட வேலையில்  இறங்கி இருந்தோம். லிண்டா அந்த விடுமுறைக்கு மட்டும் லேப்டாப் கொண்டு சென்றதாகவும், தினமும் என் மேலாளரிடம் ஸ்டேடஸ் அப்டேட் வாங்கிக்கொண்டதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். அந்த வார இறுதியில் லண்டன் டவருக்கு சென்றிருந்தேன். பீஃபீட்டர்கள் கதை சொல்லிக்கொண்டே வந்தார்கள். லண்டன் டவரில் ஏழு அண்டங்காகங்கள் இருந்தன. அவை எப்போதுமே லண்டன் டவரில் தான் இருப்பவை. அந்தக் காகங்கள் பறந்து போனால் லண்டன் அழிந்துவிடும் என்ற ஒரு ஐதீகம் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து இருந்து வருகிறது. அதனால் இன்று வரை அங்கு காகங்கள் உள்ளன. அவை கூண்டில் இல்லை. ஆனால் பறந்து வெளியே செல்ல முடியாதபடி அவைகளுக்கு தினமும் கிலோகணக்கில் இரைச்சியும், ஒரு பக்க இறக்கைகளை வெட்டியும் விட்டிருந்தார்கள். அவை காகங்கள் போல் அல்லாமல் அவல கதியில் தத்தி தத்தி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தன. தான் பறக்க வேண்டும் என்பதை  மட்டும் மறந்து விட்டால் தினமும் லண்டனை காக்கும் பணி இவைகள் கையில் தான் என்று கதை சொல்லி முடித்தார். அந்தக் காகங்களுக்கு பறத்தல் என்பது அவசியமே இல்லை. அவைகளின் உலகம் வேறு. அங்கு மாட்டிக்கொண்டோம் என்பதை எவ்வளவு சீக்கிரம் மறக்குமோ அவ்வளவு சீக்கிரம் அவை அந்த புகழுக்கு பழகிக்கொள்ளும். மறுநாள் லிண்டா விடுமுறை முடிந்து வந்துவிடுவார் என்ற எண்ணம் வந்து அடிக்கடி அச்சுறுத்தியது.

லிண்டாவுக்கு நான் செய்யும் வேலை பிடித்துப் போனது. என்னிடத்தில் ஒரு தனி கரிசனம் அவருக்கு உண்டானது. வார சந்திப்புகளில் என்னுடைய இலக்குகள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அல்லது நான் அவரின் போக்குக்கு என்னை தகவமைத்துக் கொண்டு விட்டேன். அவரின் சமரசங்கள் வேடிக்கையானவை. எதிராளி கடைசியில் தான் எதற்காக வாதிட்டோம் என்பதையே மறந்து விடுவான். ஆக மற்றும் ஒரு நாள் உலகம் லிண்டா சொல் பேச்சு கேட்டு ஓடி முடித்தது என்று அலுவலகம் விட்டு செல்லும் ஒவ்வொரு நாளும் தோன்றும். லிண்டா அப்போது கனடா டீமிடம் பேசிக்கொண்டிருப்பார், அங்கு அன்றைய நாள் முடிந்திருக்காது.

ஒரு முறை நான் ஒரு தவறு இழைத்துவிட்டேன். தங்களுடன் ஒரு மில்லியனுக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் அல்லது இருபது வருடங்களுக்கு மேல் தங்களிடம் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு புதிதாக வந்திருக்கக்கூடிய சலுகையை வழங்கு என்ற கூறுக்கு நான் மென்பொருள் எழுத வேண்டும். ‘ஒரு மில்லியனுக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் அல்லது இருபது வருடங்களுக்கு மேல் தங்களிடம் வாடிக்கையாளர்களாக இருப்பவர்என்பதற்கு பதில்   ஒரு மில்லியனுக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் இருபது வருடங்களுக்கு மேல் தங்களிடம் வாடிக்கையாளர்களாக இருப்பவர்என்று நான் மென்பொருளை எழுதிவிட்டேன். அது பூகம்பமாக விடிந்தது. எப்படி இப்படி ஒரு தவறை செய்தேன் என்று என்னாலே நம்ப முடியவில்லை. இதனால் அன்று மட்டும் பயங்கர வருவாய்  இழப்பு. சில கஸ்டமர் தங்களுக்கு சலுகை வரவில்லை என்று கூச்சல் போட்டனர். விஷயம் தலைமை வரை சென்று விட்டது. பத்து நிமிடத்தில் பதில் கேட்டு ஒரு அழைப்பு இருந்தது. அதில் அமெரிக்காவிலிருந்து இருவர், இங்கிருந்து நானும் லிண்டாவும் பேசவேண்டும். முதலில் லிண்டாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்  என்றே தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக அன்று அமைதியாக வந்தார். அமெரிக்காவிலிருந்து அவர்கள் திட்ட ஆரம்பித்தார்கள். லிண்டா மறித்து

உங்களுக்கு இந்த பிழையை நான் மூன்று மணி நேரத்தில் சரி செய்து ஒரு பேட்ச் வெளியிடுகிறேன். வீண் பேச்சு வேண்டாம். இனி இது நடக்காதுஎன்றார். அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.அழைப்பை துண்டித்தார்.  மீட்டிங் முடிந்தது. நான் லிண்டாவிடம்மன்னிக்கவும், இது என் பிழை. இனி….’

போதும். விவரம் வேண்டாம். வேலையை கவனி.’ .

மூன்று மணி நேரம், என்று சொல்ல தன் கடிகாரத்தை காட்டினார். ஒரு சிறு புன்னகை.  அவருக்கு தன் முன் தெரியும் விஷயங்களுள்  எவை முக்கியம், எவை முக்கியமில்லாதவை, எவை அவசரம் , எவை அவசரமில்லாதவை  என்று மனதுக்குள் ஒரு வரைபடம் ஓடிக்கொண்டே  இருக்கும். அவசரமாக சாலையில்  நடந்து போகும் போது வழியில் பூத்துக்கிடக்கும் அழகான பூவை ரசிப்பது என்ற செயல் மேலே சொன்ன வரையறைக்குள் வராததால் பெரும்பாலும் அது போன்ற செயல்களை அவர் செய்வதில்லை. அது போன்று எதாவது ஒரு செயலை வேறு யாராவது செய்யக்கண்டாலும் ஓடி வந்து தன் விமர்சனத்தை சொல்லிவிட்டுப் போவார்.   

இரண்டு நாள் கழித்து அமெரிக்க அலுவலகத்திலிருந்து அழைப்பு, நாங்கள் வெளியிட்ட பேட்ச்சினால் வழக்கமாக வரும் செயல்திறன் வரவில்லை, குறைந்து உள்ளது. அதன் விளக்கம் கேட்டு ஒரு மீட்டிங் வைத்திருந்தார்கள். நானும் லிண்டாவும் அறைக்குள் சென்றோம். அமெரிக்கர்கள் கேட்க்கும் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை. முடிந்த வரையில் நான் சமாளித்துக்கொண்டிருந்தேன். லிண்டாவின் செல்போனுக்கு  ஒரு அழைப்பு வந்தது. அமெரிக்கர்களின் அழைப்பை ம்யூட்டில் போட்டுவிட்டு இந்த அழைப்பை எடுத்தார்.

கண்ணே, பள்ளியில் இன்று என்ன செய்தாய்? அழாதே, இன்னும் ஒரு மணி நேரத்தில் என் வீட்டிற்கு வந்துவிடு. நான் இருப்பேன். அதுவரை நான் வாங்கித்தந்த புத்தகத்தில் கலர் தீட்டிக்கொண்டு இரு. மார்மைட் பாட்டில் இருக்குமிடம் உனக்கு எட்டாது. தேடி உடைக்க வேண்டாம். அழாதே என் செல்லக்கண்ணே. வந்துவிடுகிறேன்

எனக்கு புரியவில்லை.லிண்டவுக்கு சொந்தம் யாரும் இல்லை. நான் நினைத்தபடி போனில் பேசியது பக்கத்து வீட்டுக் குழந்தை.

லிண்டா என்னிடம்,’ இது ரிபெக்கா, பக்கத்து வீட்டுக் குழந்தை. அவள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒத்துப்போவதில்லை.குழந்தை முன்னே சண்டை போட்டுக்கொள்கிறார்கள். விவாகரத்து வாங்கப் போகிறார்கள். ரிபெக்காவின் அம்மாவுக்கு மார்மைட் என்றால் ரொம்பப் பிடிக்கும். தன் அம்மா மார்மைட் உண்பதால் தான் அப்பாவுக்கு அந்த வாசனை பிடிக்காமல் அம்மாவை வேலைக்குக் கிளம்பும்முன் முத்தமிடுவதில்லை, அது தான் சண்டைவரக் காரணம் என்று ரிபெக்கா மார்மைட் பாட்டிலை போட்டு உடைத்து விடுகிறாள். போன வாரம் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் அவள் காலைக் கிழித்துவிட்டது பாவம். அழுதுகொண்டே என் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளுக்கென்ன தெரியும்

நீ மார்மைட் சாப்பிட்டிருக்கிறாயா. காலை உணவுக்கான மிகப்பிரபலாமான  ஆகாரம். அதை சாப்பிடுபவர்களுக்கு ரொம்பப் பிடித்துவிடும் அல்லது சுத்தமாகப்  பிடிக்காது. அது ஒரு கஷ்டமான  கசப்பு

லிண்டா ஒரு குழந்தைக்கு சமாதனம் சொல்வது மிக அரிதான காட்சியாக இருந்தது. சமாதானம்  சொல்லும் மொழியையும் வார்த்தைகளையும் நிதானமாக தேர்வு செய்து தெளிவாக பேசியது  எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. இப்படியான ஒரு உலகம் லிண்டாவுக்குப் புதிது என்பது எனக்குத் தெள்ளத் தெளிவாக தெரிந்து. ஆடவரைப் போல ஒரு கிராப்பும், பேன்ட் சட்டையும்  சிகரெட் நெடியும் கொண்டு  ஒரு பெண்மணி ஒரு சிறு குழந்தைக்காகப்  பரிதாபப்பட்டு பேசுவது எனக்கு அழகாகப் பட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சிறிதும் பொருந்தாத ஜிக்-ஸா புதிர் அட்டைகள் சேரச்சேர முரண்களால் ஆன வேறு உருவகம் பிறப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அன்று அமெரிக்கர்கள் அந்த அழைப்பில்நம் கம்பெனிக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். நமக்கு பிறகு வந்தவர்கள் நம்மை விட வெகு தொலைவுக்குப் போய்விட்டார்கள். மனிதர்கள் மேல் முதலீடு செய்வதை விட டெக்னாலஜியில் முதலீடு செய்ய வேண்டும்என்று கூறிக்கொண்டே இருந்தனர்.

நான் மாலை சீக்கிரம் கிளம்புகிறேன். எனக்கு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்பிவிட்டுச் செல் நான் மாலை சரி பார்த்துக்கொள்கிறேன். ரிபெக்கா எனக்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.’ என்று கூறிவிட்டுத் தன்  இருக்கைக்கு நடந்தார். மறுபடியும் ஏதோ சொல்ல வருவது போல் என்னிடம் வந்துஎப்போதாவது நீ ஒரு விஷக் கிருமி போல் ஆகி வருவதை  உணர்ந்திருக்கிறாயா?. அவ்வபோது எனக்கு இந்த எண்ணம் வந்து போகிறது. கெட்டியாக பற்றிக்கொள்ள எதாவது ஒரு உயிர்  வேண்டி இருக்கிறது. பரிதாபகரமாக இப்போது எனக்கு அது  ரிபெக்காவாக  இருக்கிறாள். என்னை கண்டிப்பாக அவள் மீட்டெடுக்கப் போவதில்லை. அந்தக் குழந்தை தவறான இடத்தில் தவறான நேரத்தில் மாட்டிக்கொள்வதைத் தவிர என்ன பாவம் செய்தது’? சிரித்தார்.  ஸ்டேட்டஸ் ரிப்போர்டை அனுப்ப இரவு வரை ஆகிவிட்டது . ‘சரி பார்த்துவிட்டேன் .மிக்க நன்றிஎன்று உடனே பதில் வந்தது.லிண்டா என்னிடம் மட்டும் தான் இவ்வளவு பேசுவதாக என் மேலாளர் கூறினார். எனக்கு முன் ஐந்து வருடங்கள் முன்பு  அங்கு  வேலை பார்த்த ஒருவரிடம் ஓரளவு பேசியதாக அவர் நினைவு கூர்ந்தார். லிண்டாவுடன்  எதாவது பேச்சு வார்த்தை வந்தால் நான் தலையிட்டால் விஷயம் கொஞ்சம் சுமுகமாக முடிவதாக நண்பர்கள் கூறினார்கள். தேவை இல்லாத அலுவல்களுக்கு என் பெயர் அடிபட்டது.

ஒரு வகையில் லிண்டா இதை யூகித்திருக்கலாம். அவர் பாங்குக்கு என்னை தயார் செய்யும் முனைப்புடனே என்னிடம் அணுகினார். அவரின் குணங்கள் கண்டிப்பாக என்னிடம் கிடையாது. அவருக்கு சுத்தமும் சம்பந்தம் இல்லாத என்னை அவர் பாணிக்கு வேலை செய்ய வைத்து என் வெற்றிகளை அவருடையதாக்கிக் கொள்கிறார் அவ்வளவே. அவருக்கு வேண்டியதை வேறு யார் செய்தாலும் அவருக்குள் ஒரு லிண்டாவை காண விரும்புகிறார். தான் சந்திக்கும் மனிதருள் தன்னையே அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார். ஒரு இயக்கத்தின் முனைப்போடு இது நடக்கிறது. தோற்றாலும் வென்றாலும் அது ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளே. என்னுள் நடக்கும் மாற்றத்தை நான் நன்கு அறிந்தேன். ஒழுங்கின்மை மீது அடங்கா கோபம் உண்டாகத் தொடங்கியது. என் திட்டத்தின் படி எதாவது நடக்கவில்லை என்றால் அது என்னை ஆழமாக பாதித்தது. கடிகாரத்தில் நிமிடத் துல்லியம் வேண்டி ஒரு டிஜிடல் வாட்ச் வாங்கிக்கொண்டேன். இதெல்லாம் ஒரு தொலைவிலிருந்து நோக்கும் போது  தான் மாற்றமாகத் தெரிகிறது. இல்லையில் அது எனக்கு ஒரு மிக அத்தியாவசியப் பொருள். பிறர் யாவரும் இதை சுட்டிக்காட்டவில்லை. பிறரும் ஒரு வகையில் என்னைப் போலத்தான் இருந்தனர். ஒரு பொதுவான விஷயம் எல்லோரிடமும் அப்போது என்னால் பார்க்க முடிந்தது. எல்லோருக்கும் தனக்கே தனக்கென்று ஒரு முட்டாள்த் தனத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ரகசிய அந்தரங்க வாழ்கை போல அது அவர்கள் மட்டும் வாழக்கூடியதாக இருந்தது. கொஞ்ச கொஞ்சமாக வெறியுடன் ஆடும் களியாட்டம் போல அது ஆகிக்கொண்டிருந்தது. நண்பன் ஒருவன் வேல்ஸ் பகுதியில் உள்ள பழங்கால  சர்ச்சுகளில் சுவர் கிறுக்கல்கள் பற்றி அரசாங்கம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அதற்குத் தேவையான புகைப்படக் கருவிகள், புத்தகங்கள் அத்தனையும் தேடி வாங்கினான். சமூக வலைதளங்களில் நடந்த உரையாடல்களில் முனைப்புடன் கலந்துகொண்டான். வார இறுதிகளை முழுக்க இதற்கு ஒதுக்கிக்கொண்டான். அலுவலகத்தில் அதைப் பற்றி பேசுவதில்லை.

 
நான் சமைப்பதை தவம் போல செய்து வந்தேன். நான் நினைத்தது போல சுவை வரவில்லை என்றால் தயவு பார்க்காமல் குப்பையில் கொட்டினேன். ஒரு முறை ஊருக்குச் சென்ற போது என்னிடம் பேச பயமாக இருப்பதாக உறவினர் பலர் கூறினார். சொந்த ஊர் சுத்தமாகப் பிடிக்கவில்லை. திரும்ப  இங்கிலாந்து வர மனம் துடித்தது. மற்றவர் எதாவது பிரச்சனை என்றால் மட்டும் என்னை கூபிடத் தொடங்கினர். என்னிடம் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க வழிகள் இருந்தது. அதை செய்து முடிக்கும் வல்லமையும் நேர்த்தியும் இருந்தது. அறிவுரைகள் இருந்தது. வெற்றிக்கு குறிவைத்து நான் எதுவும் செய்ததில்லை. முதலில் அந்த நேரத்தில் என் வெற்றி என்பது என்ன அன்பதை தீர்மானித்துக் கொள்வேன். கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நீட்டிக்கொண்டே நான் கடைசியில் வந்து வந்தடையும் இடத்திற்கு வருவேன். மற்றவருக்கு இது வியப்பாக இருந்தது. என் செயல்களை முக்கியம் முக்கியமில்லாதவை, அவசரம் அவசரமில்லாதவை என்று பகுத்துக் கொள்வது வசதியாக இருந்தது.

ஒரு நாள் நள்ளிரவு அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது

நீ நல்லா இருக்கியா? உடம்புக்கு எதுவும் இல்லையே?’

இல்லம்மா நல்லா இருக்கேன். என்ன இந்த நேரத்துல?’

இல்லப்பா நேத்து ஒரு கெட்ட கனவு. அப்போ இருந்து மனசே இல்ல

இங்க நடு ராத்திரி. போன வைம்மா. நாளைக்கு கூப்பிடுறேன்
மறுநாள்  வேலைப் பளுவில் வீட்டிற்கு அழைக்க மறந்து விட்டேன். அந்த வாரம் முழுக்க அதிக வேலை இருந்தது. உறங்க மட்டுமே வீட்டுக்கு வந்தேன். அம்மாவிற்கு  அழைக்கவில்லை. இரவு தூங்கும் முன் பேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்த போது யாரோ ஒருவர்நாஸ்டால்ஜியாஎன்று சில புகைப் படங்களை பதிவிட்டிருந்தார் . அதில் ஒன்றில்  மொட்டை மாடியில் வடாம் காயப் போட்டிருப்பதைச் சுற்றி நான்கு சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர். புகைப்படமும் தெளிவாக இல்லை. பழைய போட்டோவை ஸ்கேன் செய்து பதிவேற்றி இருக்கக்கூடும். அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவுக்கு சமையல் நளபாகம். வடாம், வத்தல், அப்பளம்  போட்டு தெருவில் உள்ளவருக்கு எல்லாம் கொடுத்தனுப்புவாள். நான் தான் எல்லா வீட்டிற்கும் சென்று கொடுத்துவிட்டு வருவேன். காசு கொடுத்தால் வாங்கக் கூடாது என்று அம்மா கூறி அனுப்புவாள். பெரும்பாலும் எல்லோரும் அன்போடு வாங்கிக்கொள்வர். எனக்கும் பிஸ்கட், சாக்லேட் எதாவது தருவார்கள்.

ஏனோ அந்த போட்டோவைப் பார்க்கும் போது அன்று தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. ஏதேதோ காரணங்களுக்காக கோபமாகவும் இருந்தது. கொஞ்ச நாட்களாகவே சாதாரணமான சில விஷங்கள் என்னுள் பெருஞ்சோகத்தை உண்டாக்கியது. கரணம் தெரியாமல் மனது கனமாக ஆகிவிடும். யோசித்துப்பார்த்தல் எதுவும் இருக்காது..

லிண்டாவிடம் ஒரு நாள்  நான் ஊருக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். இங்கே போதும். அடுத்த மாதமே கிளம்பும்படி இருந்தால் வசதியாக இருக்கும்என்றேன்

லிண்டா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். எழுந்து என் மேலாளரின் இருக்கைக்கு வேகமாக சென்றார் 

எனக்கு இது தான் புரியவில்லை. இவன் ஏன் திடீர் என்று ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்கிறான் ?. எனக்கு மட்டும் ஏன்  இப்படி நடக்க வேண்டும். ஐந்து வருடம் முன்பு ஒருவன் இப்படித் தான் ஒரு சுபதினத்தில் இவ்வாறு கூறினான். இவன் சென்றால் இவன் செய்யும் வேலைகளை யார் கவனிப்பார் ?’

மேலாளர் எதையோ கூறி சமாளித்தார். லிண்டா மெதுவாக என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். நான் செய்து வந்த வேலைகளை எல்லாம் இன்னொருவருக்கு மெதுவாக செய்யக் கற்றுக்கொடுத்தேன்.  இரண்டு வாரங்களில் நான் இந்தியா திரும்புவதற்கான பிரயாணம் முடிவானது. இறுதி நாளில் பேச அழைத்தார்கள். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை. சுருக்கமாக அனைவருக்கும் நன்றி என்று கூறிக்கொண்டேன். லிண்டா நான் பேசுவதை உற்று கவனித்துக் கொண்டிருந்தார். அன்று லிண்டாவிடம் ஏனோ மன்னிப்புக் கேட்கத் தோன்றியது. மேடையிலேயேமன்னித்துவிடுங்கள் லிண்டாஎன்று கூறினேன். கீழே இறங்கியதும் என்னை தழுவிக்கொண்டார். கையில் ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்தார்.

விமானத்தில் ஜன்னல் இருக்கையில் உட்கார வேண்டாம். சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருக்க முடியாது. , நீ தான் சிறியவன் ஆயிற்றே உனக்கென்ன சிரமம் இருக்கப் போகிறதுஎன்று சிரித்தார். அவர் பேசியபோது  குரல் நடுங்கியது. அவசரமாக வெளியே சிகரெட் பிடிக்க சென்றுவிட்டார்.

இந்தியா திரும்பியதும் சில மாதங்கள் கழித்து வேறு கம்பெனிக்கு மாறிவிட்டேன். லிண்டாவை அடிக்கடி நினைத்துக் கொண்டேன். அவருக்கு எழுதலாமே என்று ஒரு நாள் அவரது அலுவலக முகவரிக்கு  இமெயில் அனுப்பினேன். இமெயில் பவுன்ஸ் ஆனது. அப்படி ஒரு முகவரியே இல்லை என்று வந்தது. அதில் எழுத்துப் பிழையும் இல்லை. அவரின் இமெயில் முகவரி எனக்கு மனப்பாடம் . ஏன் செல்லவில்லை என்று ஆதங்கமாக இருந்தது. லிண்டாவின் பெர்சனல் முகவரி எனக்குத் தெரியாது. பின்பொரு நாள் என் பழைய மேலாளருக்கு போன் செய்தபோது லிண்டாவை கம்பெனி  பணிநீக்கம் செய்துவிட்டதாக சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு அமெரிக்கவில் இருந்து ஒரு புதிய நிர்வாக இயக்குனர் அங்கு வந்ததாகவும் அவர் நீண்ட நாட்கள் அந்த கம்பெனியிலேயே இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் பணிநீக்கம் செய்து புதியவர்களை நியமிப்பதாகவும் கூறினார். இதனால் அவர்களுக்கு பெரும் தொகை வருடம் தோறும் மிச்சமாவதாகவும்  அதை புதிய டெக்னாலஜியில் முதலீடு செய்யப்போவதாகவும் கூறினார். லிண்டா தன் மொபைல் எண், பெர்சனல் இமெயில் முகவரி எதாவது கொடுத்துவிட்டுச் சென்றாரா என்று கேட்டதற்கு இல்லை என்று பதில் வந்தது. லிண்டாவின் அலுவலக இமெயில் முகவரி தவிர  வேறு எதுவும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அலுவலகத்தைத் தாண்டி அவரைப் பற்றி எவருக்கும் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment