Thursday, 17 July 2014

Story 69: தெய்வம் நின்று கொல்லும்தெய்வம் நின்று கொல்லும்
மூர்த்தி விழித்துப் பார்க்கையில் முழுவதும் இருட்டாக இருந்தது. இன்னும் பொழுது விடியவில்லையா என்று குழம்பியவன், தான் படுத்துக் கொண்டிருக்கவில்லை, எதிலோ சாய்ந்து நின்று கொண்டிருப்பதாக உணர்ந்த பொழுது திடுக்கிட்டான். நிமிர்ந்து நடக்கமுயன்றவனின் கால் எதிலோ இடிபட்டது. கைகளை நீட்டிப் பார்த்தான் அதுவும் இடித்தது. பயந்து போய் நாலாபுறமும் அசைந்து பார்த்தான். அனைத்து பக்கமும் தடுப்பு. தட்டிப் பார்த்தான். மரம் போல் சத்தம் வந்தது. தான் ஒரு பெட்டிக்குள் இருப்பதாகத் தெரிந்தது. அதிர்ச்சியானவன் கனவாய் இருக்குமோ என்றெல்லாம் கண்களை கசக்கி பிழிந்து பார்த்தான். ஊஹும். பலனில்லை. தான் நிஜத்தில் ஒரு பெட்டிக்குள் அடைபட்டிருப்பது உறுதியானது.
இருட்டென்றால் சிறு வயதிலிருந்தே பயம் அவனுக்கு. கல்லூரி செல்லும் வரை தனியாக படுத்தது கூட கிடையாது. எப்பொழுதும் அப்பா அல்லது அம்மாவின் அருகில் தான். அவனுக்கு ஏழு வயதாகும் போது அவன் அம்மா அவன் தங்கையை பெற்றெடுக்க தன் தாய் வீட்டிற்க்கு போனபோது அவன் அப்பாவுடன்ராசாத்தி வரும் நாள்என்ற அன்றைய கனவுக்கன்னி கஸ்தூரி நடித்த பேய் படத்தை பார்த்ததிலிருந்து அவனுக்கு இருட்டென்றால் பயம். அப்பா எந்த பயமும் இன்றி பார்த்திருந்தார். அவன் அரண்டு தூங்கிய பிறகும்கூட பார்த்திருப்பார்.
இன்று இப்படி பெட்டிக்குள் கார் இருளில் மாட்டிக்கொண்டது அவனுக்கு சற்று பயத்தை தந்திருந்தது. தான் எப்படி இதில் மாட்டிக்கொண்டோம் என்று முடிந்தவரை யோசித்துப்பார்த்தான். முதல் நாள் இரவு தன் படுக்கையில் படுத்திருந்தது தான் நினைவில் இருந்ததே தவிர வேறேதும் இல்லை. தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு என்றாலும் எப்போதும் எங்கும் சென்று இப்படி மாட்டிக் கொண்டதில்லை அவன்.
சுற்றும் முற்றும் பார்த்தான். முழுவதுமாய் குனிந்து காலைப் பார்க்கமுடியாவிட்டாலும் காலருகில் ஒரு சிறு ஒளிக்கீற்று இருப்பதை தெரிந்துகொண்டான். நாம் இந்த உலகத்தில் தான் இன்னும் இருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்திருக்கலாம், உதவி கேட்டு குரல் கொடுக்கத் துணிந்தான்.
ஜனனி ஜனனிஎன்று தன் மனைவியின் பெயரை முதலில் அழைத்தான். இன்று அவன் அம்மாவும் அப்பாவும் உயிருடன் இல்லை என்பதால் அல்ல, அவனுக்கு ஜனனியை மிகவும் பிடிக்கும் என்பதால். காரணம் ஜனனியை ஜன்னி வந்த அன்றுகூட ஓய்வெடுக்காமல் துரத்தி துரத்தி காதலித்தவன். ஒரு நாள் துரத்தி துரத்தி அவள் அண்ணன் இவனை அடித்தபிறகும்கூட ஜனனியை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துகொண்டவன். அதனால் முதல் குரல் அவளுக்காகவானது.
ஜனனி என்ற பெயருக்கு சீட்டு ஏதும் விழவில்லை என்பதால்ரகு ரகுஎன்று தன் பால்ய நண்பன் ரஹ்மான் நினைவாக பெயர் சூட்டப்பட்ட தன் அருமைச் செல்வன் ரகுராமை அழைத்தான். 6 வயதாகும் ரகுராமை ரகு என்றழைத்தால் தான் அவன் செவிமடுப்பான், காரணம் ராம் என்று அவனுக்கு பள்ளியில் ஒரு எதிரியாம். 5 வயதில் ஒரு எதிரி. இவர்கள் இருவருக்கும் இடையில் யார் சரியாக வீட்டுப் பாடம் எழுதுகிறார்கள் கலர் டிரஸ் போடுகிறார்கள் என்று கலகம் மூட்டி நாரதர் வேலை பார்க்கும் அந்த வாத்தியாரை ரெண்டு அடி போட்டால் சரியாகும் என்று மூர்த்தி அவ்வப்போது யோசித்துக் கொள்வதும் உண்டு.
ரகு என்ற அழைப்புக்கும் பதில் இல்லை என்பதால் தான் எங்கிருக்கிறோம் என்று துளியும் தெளிவின்றி கலக்கத்தில் இருந்தான் மூர்த்தி. ஒருவேளை தன்னை யாராவது கடத்தி வந்துவிட்டார்களோ என்ற ஐயம் பகீர் என்றெழுந்தது. ச்சீ சீ.. தன்னிடம் பேரம் பேச என்ன இருக்கிறது. எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சாதாரண.. இல்லை அதற்க்கும் கீழான நடுத்தர வர்க்கம். நாளுக்கு ஒருமுறை தான் பால் கலந்த டீ சாயந்திரம் பாலுடன் கூடுதலாக தண்ணீர் கலந்த டீ தான். விற்க்கும் பெட்ரோல் விலையில் சொந்த எக்ஸல் சூப்பரை துண்டு போட்டு மூடிவிட்டு நண்பனுடன் ஷேர் செய்து அலுவலக பயணம். அப்பா விட்டுட்டு போன வீடு இல்லாட்டி ரொம்ப கஷ்டந்தான் என்று எண்ணி அச்சத்திலும் கூட அழுத்துக்கொண்டான்.
அவன் அச்சத்தை மேலும் திடமாக்க அந்தச் சத்தம் கேட்டது. அது மிக அருகில் கேட்டது. செவிப்புலனை செம்மையாக்கி காதிரண்டையும் கூராக்கி அந்த சத்தத்தை கவனிக்கலானான் மூர்த்தி. அது ஏதோ உருளுவது போன்ற சத்தம், எதையோ யாரோ உருட்டிக் கொண்டிருப்பதாய் பட்டது. திகிலுடன் நின்றிருந்தான் மூர்த்தி. தான் வீட்டைச்சுற்றி, இல்லையில்லை ஊரைச் சுற்றி வாங்கியிருக்கும் கடனுக்காக யாராவது கடத்தியிருப்பார்களோ என்று பயந்தான். யாராயிருந்தாலும் முதலில் அவர்கள் பேசட்டும் என்று அமைதிகாத்தான். ஆனால் அவன் எண்ணத்தை மண்ணாக்கி அந்தச் சத்தம் சில விநாடிகளில் மறைந்துபோனது. ஐயகோ... கிடைத்த ஒரு வாய்ப்பையும் பயத்தில் தவறவிட்டேனே என்று மீண்டும் புலம்பலானான்.
பயமும் கோபமும் படபடப்பும் கலந்துகட்டி அவனை கடுப்பேற்ற துவண்டெழுந்து கைகளால் பலகைகளில் தட்டியும் கூச்சல் போட்டும் பார்த்தான். எந்த எதிர் குரலும் இல்லை. சில வினாடி கழித்து மீண்டும் அதே சத்தம் கேட்டது. தட்டுவதை நிறுத்தி விட்டுஹலே யார் அது, ஜனனி, ரகு, யார் அங்க. யார் இருக்கிறது அங்க. எதாவது பேசுங்க. நான் எங்க இருக்கேன்என்று மிரட்டிப்பார்த்தான். பதில் இல்லை
தயவு செய்து யாராவது பேசுங்க. எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு. யார் நீங்க. உங்களுக்கு என்ன வேணும். எதுக்காக என்ன இப்படி பூட்டி வச்சிருக்கீங்க. தயவு செய்து திறந்துவிடுங்கஎன்று கிட்ட்தட்ட அழுத நிலையில் கெஞ்சலானான். மீண்டும் அமைதி. எந்த மாற்றமும் இல்லை.
பொறுத்தது போதும் பொங்கி எழு என்று கண்ணாம்பா நேற்று சன் டிவியில் சிவாஜியை பார்த்து பேசிய வசனம் சிவாஜிக்கு அல்ல தனக்கானது என்று காலத்தின் கோலத்தை உணர்ந்தான். மதம் கொண்ட யானையாய் மாறினான், சினம் கொண்ட சிங்கமாய் கர்ஜித்தான். பலத்தை ஒன்று திரட்டி ஓங்கி குத்தினான் பலகையில். நல்ல தேக்கில் செய்த பலகை போல, மணிக்கட்டை கட்டு போடுமளவிற்கு உடைத்துவிட்டது. மதமும் சினமும் நன்மை பயக்காது என்பதை கொஞ்சம் வலியுடன் உணர்ந்து கொண்டான். மீண்டும் அமைதி.
இருட்டும் அமைதியும் அவனை பைத்தியக்காரனாக்கும் தருவாயில் மீண்டும் அதே சத்தம் கேட்டது. இந்தமுறை அது அருகில் கேட்டது. நெருங்கிவந்தது. நின்றது. பலகையில் எதோ உரசுகிறது. திகிலுடன் பின்னோக்கி சாய்ந்துகொண்டு யாராவது இருந்தால் அவரை தள்ளிவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்று தீர்மானித்தான் மூர்த்தி. கதவு திறக்கப்பட்டது. ஆத்திரத்தில் பாயப் போன மூர்த்தி முன்பு ரகு நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு பின்னே அவனுடைய மூன்று சக்கர சைக்கிள் இருந்தது. அவன் பூட்டப்பட்டிருந்தது அவன் வீட்டு காலி அலமாரியில் என்று புரிந்தது. மூர்த்திக்கு வியர்த்திருந்தது.
குழப்பத்துடனும் கோபத்துடனும் அந்த பெட்டியிலிருந்து வெளிவந்தவன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ரகுவை நோக்கி
யாருடா என்ன வச்சு பூட்டியது. அம்மா எங்க ?’
அம்மா கோயிலுக்கு போயிருக்கா, நான் தான் பூட்டினேன்என்று முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு சொன்னான் ரகு.
அவன் தான் பூட்டினான் என்று சொன்னவுடன் கடுங்கோபத்தில் அவன் தலையில் கொட்டிவிட்டுஎன்ன திமிருடா உனக்கு, எதுக்குடா என்ன வச்சு பூட்டினஎன்று கேட்டவாறு அவனை அடிக்க ஆரம்பித்தான்.
வலியில் துடித்தவாரு அழுதுகொண்டுஅன்னைக்கு என்ன பொம்மை கேட்டு அழுததுக்கு உள்ள வச்சு பூட்டினேல, அப்ப நான் எப்படி அழுதேன். அதான் நீ இங்க நின்னு தூங்கிறதப் பார்த்து பூட்டி வைச்சேன்என்று குழந்தைக்கே உண்டான மழலைக் குரலில் அழுதுதான் ரகு.
அடித்துக் கொண்டிருந்த மூர்த்தி சட்டென்று நிறுத்தினான். அன்று நகரின் முக்கிய பகுதியில் இருந்த அந்தப் பெரிய மாலுக்கு சுற்றிப்பார்க்க சென்றிருந்தபோது ரகு விலையுயர்ந்த பொம்மை கேட்டு அந்தக் கடையிலிருந்து வீடுவரை அழுது ஆர்ப்பாட்டம் செய்து வந்ததால் மனைவி வீட்டு சீதனமாக வந்த இந்தத் தேக்கு மர அலமாரியில் சில நிமிடங்கள் அவனை பூட்டி வைத்தது நினைவுக்கு வந்தது. தனது தண்டனை அவனை எந்த அளவு காயப்படுத்தியிருக்கிறது என்று அனுபவித்து உணர்ந்தான். ரகுவை கைகளில் மெல்லத் தூக்கித் தழுவினான்.
சும்மாவா சொன்னார்கள் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று.
தெய்வம் நின்று தானே கொல்லும்.

No comments:

Post a Comment