Tuesday 15 July 2014

Story 61: அசடு



                                                                                அசடு

வெயில் ஒரு புழுவைப் போல் மெல்ல உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது. காதோரம்,இரு நெற்றிப் பொட்டுக்கள், தொண்டைக் குழி என எல்லா இடங்களிலும் வியர்வைத் துளிகள் திரண்டு சொட்டத் தயாராய் நின்றன.கைக்குட்டையை எடுத்து அழுந்தத் துடைத்துக் கொண்டான். உள்ளே இருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தாள்.நீட்டியதைக் கையில் வாங்கிக் கொண்டான்.

வெளியே வைத்திருந்த நீராய் இருந்திருந்தால் இன்னேரம் கொதித்திருக்கும் வெயிலுக்கு. ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வந்திருக்கிறாள். இருந்தாலும் அவ்வளவு அதிகக் குளிர்வில்லை. அவளுக்குத் தெரியும். அவன் எப்போதும் தண்ணீரை ஒரே மூச்சில் குடிக்க விரும்புவான் என்று.கடும் குளிர்வாய் இருந்தால் அது முடியாது. அதனால் பதமாக எடுத்து வந்திருந்தாள். மூடியைத் திறந்து க்ளக் என சத்தம் எழும்ப முழு பாட்டிலையும் குடித்து முடித்தான்.

அவன் பெருமூச்சு விடுவதைப் பார்த்தாள். " ஏன் இவ்ளோ கஷ்டப் படறே? ரூம்ல ஏசி போடறேன். வாயேன் உள்ளே போய் உக்காந்து பேசலாம்" .

சட்டென்று புன்னகைத்து தலையை ஆட்டினான் வேண்டாமென்பது போல்." பரவால்ல. இங்கேயே இருப்போம்".

ஏசிக் குளிர்ச்சியை உடல் ரொம்பவே வேண்டினாலும் என்னவோ தயக்கம்.அர்த்தமில்லாமல்.

இப்போது அவள் பெருமூச்செறிந்தாள். " ஆல்ரைட்." வரவழைத்துக் கொண்ட புன்னகை. " சொல்லு.. ஹௌ ஆர் திங்க்ஸ்? நீ எப்படி இருக்கே?"

அத்தனை நாட்கள் கழித்து கொஞ்ச நேரம் முன்பு நேரில் பார்த்த ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் கேட்ட அதே கேள்வி தான். இப்போது நிதானமாக வீட்டில் எதிரே உட்கார வைத்துக் கொண்டு கேட்கிறாள். ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டென்று அவனுக்குத் தெரியும்."வெரி பைன்.நல்லா இருக்கேன்". மீண்டும் புன்னகை.

பதிலுக்கு இவன் கேட்கவில்லை " நீ எப்படி இருக்கே" என்று. கார்த்திக்கைப் பற்றி அவனுக்குத் தெரியும். .

"வீட்ல என்ன சொல்றாங்க? பொண்ணு பாக்கறாங்களா?"

சிறிய மௌனம். "ம்ம்... பாத்துட்டு தான் இருக்காங்க.ஒண்ணும் செட்டாகல."

மீண்டும் சிறு மௌனம்.

இன்னும் என்னவோ சொன்னாள். சரியாய் கவனிக்கவில்லை. அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.அவளுக்கும் தெரிந்தே இருந்தது. பெரிதாய்க் கண்டு கொள்ளவில்லை.அவனை அவள் அறிந்திருந்தாள்.

அப்புறம்?

அப்புறம் என்ன? கார்த்திக் அங்கே இருக்கார். சீக்கிரம் நானும் போயிடுவேன். நல்ல லைப். திரும்ப இண்டியா வருவோமான்னு தெரியாது. அதான் ஞாபகத்துல வர்ற பிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லாரையும் இப்பவே டைம் இருக்கும் போது விசிட் பண்ணிட்டு இருக்கேன். கார்த்திக்கோட அத்தை ஒருத்தங்க இருக்காங்க அந்த ஏரியால. சுத்த போர். செம பிளேடு போட்டுட்டாங்க.நொந்து போய் திரும்பி வரும்போது ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்.நீ வந்து நிக்கறே. தென்? ஹியர் யு ஆர். புன்னகைத்தாள்.அவனும்.

அடுத்து ஒரு மௌனம். சற்றே நீண்ட, சங்கடமளிக்கக் கூடிய மௌனம்.இருவருமாய் பேசுவதறகு விஷயத்தையும் வார்த்தைகளையும் தேடும் அவகாச மௌனம்.
வெக்கை சூழ்நிலையை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டிருந்தது.சட்டென்று நிமிர்ந்தவள்," ஏய்.., இரு... நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்" என்று எழுந்து திரும்பி வேகமாகச் சென்றாள். அவன் வேண்டாமென்று சொல்லி விட்டால் மீண்டும் உட்கார வேண்டும். அவளுக்கு ஒரு சிறு இடைவேளை தேவையாய் இருந்தது. அதனால் அவசரம்.

அவனும் வேண்டாமென்று சொல்லவில்லை. இடைவேளை அவனுக்குமே தேவையாய் இருந்தது. அவள் சென்றதும் ஆழ்ந்து மூச்சு விட்டான். அவள் இல்லாத இடத்திலும் அவள் இருப்பை மிக லேசாக அறிவித்துக் கொண்டிருந்தது அவள் விட்டுச் சென்ற பர்ப்யூம் மணம். அவளது வாசமும் கொஞ்சம் கலந்திருந்ததோ?

சரியாய் ஐந்து நிமிடங்கள். கையில் ஜூஸோடு வந்தாள். கையில் தந்து விட்டு அமர்ந்தாள். முன்பை விட சற்றே நெருக்கமாக அமர்ந்தாள்.

விட்டுச் சென்ற இடத்திலிருந்து மௌனம் தொடர ஆரம்பித்தது. கீழே குனிந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், மெதுவாக சொன்னாள் " சாரிடா"...

அவள் எதைப் பற்றிப் பேசப் போகிறாள் என்று கிட்டத் தட்ட அனுமானித்து தான் அவனுமே வைத்திருந்தான். ஆனால் அவள் மன்னிப்பில் ஆரம்பித்ததை எதிர்பார்த்திருக்கவில்லை.

அறிந்தது போல் அவளே தொடர்ந்தாள். "உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தியிருக்கேன்.தெரியாம எல்லாம் இல்ல. தெரிஞ்சே. வேணும்னே தான்." நிறுத்தினாள்.

அவன் மறுப்பான் என்று எதிர்பார்த்தாள். அதையே தான் அவனும் செய்தான்.சிறு புன்னகையுடன்." என்ன பேசற நத்திங் லைக் தட். எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. ப்ரொபோஸ் பண்ணேன். அண்ட் வாஸ் சின்சியர் டு யூ டூ. அதுக்காக உனக்கு என்னை பிடிக்கணும்னு இல்லையே? நீ உனக்கு பட்டதை சொன்னே.இன்பாக்ட் அப்போ ரொம்ப கோவம் வந்தது. எதனால இவளுக்கு என்னை பிடிக்காம போச்சு. நம்ம கிட்ட என்ன குறைன்னெல்லாம். இப்போ நினைச்சா கொஞ்சம் வெக்கமா, ஏன் சிரிப்பு கூட வருது" என்று புன்னகையிலேயே முடித்தான்.

சிறு மௌனம். அவள் பேசுவதற்கான வினாடி வந்தது. கடந்தது. பேசவில்லை. அவனே பேசினான் " கார்த்திக் இஸ் ஸோ ஐடியல் பார் யு. செம பேர் நீங்க ரெண்டு பேரும். கார்த்திக் மேல செம்ம காண்டு அப்போ எனக்கு. " சொல்லி விட்டு லேசாக வாய் விட்டு சிரித்தான். தொடர்ந்தான். " பட் மெச்சூரிட்டி கம்ஸ் வித் டைம். நீ எனக்கு ஓகே சொல்லிருந்தா நான் உன்னை நல்லா பாத்திட்டு இருந்திருப்பேன். பட் அதை விடவே கார்த்திக் உன்னை ரொம்ப நல்லா பாத்துக்கறானே?"

அமைதியாக இருந்தாள். நிறைய விஷயங்கள் பேச வேண்டும் என்று நினைக்க நினைக்க அவற்றை பேச முடியாமல் போகும் போது நிறைய மௌனங்களால் இட்டு நிரப்பப் படுகின்றன அவற்றுக்கான தருணங்கள்.


அவளும் அமைதியாக இருந்தாள். சட்டென்று நிமிர்ந்தவள், " எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது" என்றாள்.

ஆறு வருடங்களுக்கு முன் அவளிடமிருந்து கேட்கத் தவம் கிடந்த வார்த்தைகளை திடீரென்று வெயில் பெருகும் பிசுபிசுப்பான  ஒரு மதிய நேரத்தில், கணவனுடன் வெளிநாடு செல்லும் ஏற்பாட்டில் இருக்கும் அவள் வாயிலிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.அதிர்வில் கை லேசாக நடுங்குவது போலிருந்தது. ஜூஸ் கிளாஸை சட்டென்று வைத்து விட்டான்.

தொடர்ந்தாள். "நீ ப்ரொபோஸ் பண்ணப்போ ஆக்சுவலா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது. இன்பாக்ட் பெருமையா இருந்தது. உனக்கு முன்னாடி நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணப்போ வராத பீல் உன் மேல எனக்கு வந்தது. பிகாஸ் யு வேர் பெர்பெக்ட். நல்ல வேலை, டீசண்டான சம்பளம், குட் லுக்கிங்..." நிறுத்தினாள்.

அவன் மனதில் தோன்றப் போகும் அடுத்த மிகப் பெரிய கேள்வியை படித்தவளாகத் தொடர்ந்தாள். "ஓகே. வானா டெல் திஸ் நௌ. திரும்ப உன்ன பாக்க முடியுமான்னு தெரில. ஸோ.... நீ யோசிக்கலாம். இவ்ளோ சொல்ற நான் ஏன் உன்னை வேண்டாம்னு சொன்னேன்னு...." மீண்டும் சிறு இடைவேளை மௌனம்.

" எனக்கே தெரில. அதான் உண்மை. எப்போ எங்கே எந்த நொடில உன்னை மாதிரி ஒருத்தனை மிஸ் பண்ணா பரவால்லங்கற எண்ணம் வந்ததுன்னு சரியா தெரில. மே பி, இவ்ளோ பர்பெக்டான பையன் என் கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணி கெஞ்சினப்போ வந்த கர்வமா இருக்கலாம். உன்னை வேண்டாம்னு சொன்னதுல அப்போ என்னவோ அவ்ளோ சந்தோஷம்.விஷயம் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சு என்னைப் ஆச்சரியமா பாத்தப்போ அப்படி ஒரு பெருமை. பட் அவங்கள்லாம் ஆச்சரியமா பாக்கல. என் லூஸுத் தனமான முடிவை நினைச்சு என்னை பாவமா பாத்திருக்காங்கன்னு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சது".

சட்டென்று இடை மறித்தான். மீண்டும் மறுக்கத் தான். " அப்டில்லாம் ஒண்ணும் இல்ல. தட் வாஸ் நாட் பேட் டெசிஷன். இப்போ பாரு, யுவர் லைப் இஸ் பர்பெக்ட்." என்று அவளை சகஜமாக்க முயன்றான்.

தன்னைப் பற்றி தன்னிடமே விட்டுக்கொடுக்காமல் பேசும் அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.

"நீ சொல்றது சரி தான். எந்தக் குறையுமே இல்ல.கார்த்திக் இஸ் ஜெம். ஆனாலும் உன்னை விட்டிருக்க கூடாதோன்னு அப்பப்போ தோணும்.ஏன் அப்படி தோணுதுங்கறதுக்கு ஹேவ் நோ ஆன்ஸர். சில விஷயங்கள்ல நீ கூட இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாக்காம இருக்க முடில. என்னை என்னன்னு சொல்லலாம்.... எனக்கே தெரிலடா. நான் ஒரு அசடுனு சொல்லலாமா" என்று கேட்டு வாய் விட்டு சிரித்தாள்.

பதில் எதிர்பார்க்காத கேள்வி என்று தெரிந்து அமைதியாய் இருந்தான். சிரித்து ஓய்ந்தவள் " ஏய் இங்க பாரேன்" என்றாள். அவள் முகம் பார்க்க முடியாமல் தவிர்த்துக் கொண்டிருந்தவன் வேறு வழியே இல்லாமல் அவள் கண்களை எதிர்கொண்டான்.அவ்வளவு நேரமும் அவள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்பது அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது.

அப்போது தான் அது நிகழ்ந்தது. சட்டென்று எழுந்தவள், கண் மூடி அவன் உதட்டில் மென்மையாய் மிக மென்மையாய் ஒரு குழந்தைக்குக் கொடுப்பதைப் போல் முத்தமிட்டாள். ரசிக்கும் மனநிலையில் இல்லாதபோது கிடைக்கும் குழந்தையின் புன்னகையைப் போல். துக்க வீட்டில் மணந்து பரப்பும் சாமந்தியைப் போல்.ஆளற்ற வீட்டில் புகைந்து முடிக்கும் ஊதுபத்தியைப் போல், நனைவதற்கு யாருமற்ற அத்துவானத்தில் பெய்யெனப் பெய்யும் மழையைப் போல் அந்த முத்தம் இருந்தது.

சரியாய் மூன்றே வினாடிகள். சட்டென்று விலகிக் கொண்டாள். உதட்டின் மேல் அவன் வியர்வை லேசாகக் கரித்தது. எதுவும் நடவாதது போல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவன் தலைமுடியைச் செல்லமாய்க் கலைத்து விட்டாள். 

இவ்வளவு நேரம் எங்கே என்று தேடிக் கிடைக்காத அமைதி சட்டென்று உள்ளுக்குள் வந்து அமர்ந்தது போலிருந்தது அவனுக்கு.அவனும் புன்னகைத்தான். வாட்ச்சைப் பார்த்தான். " கே யா. டைம் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன். கார்த்திக் வந்தா சொல்லு." என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்.

அந்த முத்தம் எதுவுமே பேசவில்லை என்றாலும் ஏராளமாய்ப் பேசியது போலிருந்தது இருவருக்கும்.

வெளியில் வந்து நிறுத்தியிருந்த பைக்கை நோக்கி நடக்கத் துவங்கினான். அவளுக்கே அவளுக்கான பிரத்தியேக வாசனை இன்னும் உதட்டின் மீது சுழன்று கொண்டிருந்தது. அவனைக் காதல் கொள்ள வைத்த வாசனை. அத்தனை நேரம் புழுக்கிப் பொசுக்கிக் கொண்டிருந்த வெயில், மழைக்கான வெயிலாய் இருந்திருக்க வேண்டும். வானம் இருண்டிருந்தது. மழை வரும் போலிருந்தது. லேசான இடி. மேலே நிமிர்ந்து பார்த்தான்.

எங்கோ அத்துவானத்திலிருந்து இவனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒற்றை மழைத்துளி இவன் நிமிர்ந்து பார்த்ததும் நேராகக் கீழே இறங்கி வந்து உதட்டின் மேல் அமர்ந்தது.மெல்லத் துடைத்துக் கொண்டான். அந்த மழைத் துளி நனைத்தது போகவும் அவள் வாசனை உதட்டின் மீது மிச்சமிருந்தது.





1 comment:

  1. மெல்லிய கவிதை.. பொருத்திப் பார்க்க வைத்த கதையோட்டம்..
    பலர் வாழ்வில் நிகழ்ந்திருக்கக் கூடும் இதோ போல. அதன் சுவாரசியம் குறையாம்ல் எழுத்தில் தரமுடிந்தது உங்கள் சாமர்த்தியம். வாழ்வில் எப்போதும் ஒரு மெல்லிய திரை ஆடிக் கொண்டிருக்கும். அதை விலக்கிப் பார்க்கவே மனசுக்குள் ஒரு பதைப்பு இருக்கும். பார்த்ததும் இன்னொரு தளத்திற்குக் கொண்டு போய் விட்டு விடும். பயணங்களில் கிடைக்கிற அபூர்வ காட்சிகளைக் கண்ணில்.. மனசில் ஏற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான். அதைத் தாண்டி இறங்கிப் போகச் சொல்லும் தவிப்பிற்கு மட்டும் பை சொல்லி விட வேண்டும். அழகான் எழுத்து. வாழ்த்துகள் !

    ReplyDelete