Sunday 27 July 2014

Story 98: அதி உயிரி



அதி உயிரி

                அவன் எழும்பும் போது மணி சரியாக 5.30 ஆகியிருந்தது. அவன் அலாரம் வைத்துக் கொள்வதில்லை. அதற்கான தேவையிருப்பதாக அவன் நினைக்கவில்லை; நொடி வரை துல்லியமாகக் கணக்கிடும் கடிகாரம் ஒன்று அவன் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

                முதலில் குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளித்தான். நன்றாக அழுந்தப் பல் தேய்த்து மீண்டும் ஒருமுறை வாயைக் கொப்பளித்தான். அவனது வாயில் வாழ்ந்து கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிந்து அவற்றின் பிரேதங்கள் நீரோடு வெளியேறின.

                நீரால் முகத்தைக் கழுவி, குளிர்ந்த ஷேவிங் கிரீமை தாடையில் பூசினான். ஷேவிங் பிரஷ்ஷால் தடவத் தடவ நுரை பெருகியது. ஒருநாள் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்த முடிகளை முழுவதுமாக மழித்தான். முகம் மீண்டும் வழவழப்பாகி விட்டது. ஈரம்போக முகத்தை வெள்ளைத் துண்டால் துடைத்தான். பாத்ரூமை விட்டு வெளியேறினான்.

                வீடு அமைதியாக இருந்தது. யாருமே வீட்டில் இல்லை. அவனது அம்மா இரண்டு வருஷங்களுக்கு முன் இறந்து போனாள். அதிலிருந்து அவன் தனியாகத் தான் அந்த வீட்டில் வசிக்கிறான். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. பேரழகிகள் என்று வர்ணிக்கப்பட்ட பல பெண்களைப் பார்த்தாயிற்று. யார் மீதும் காதல் வரவில்லை.

                அவனைச் சுற்றியிருந்த எல்லோரும் ஒரு வயதில் காதலில் விழுந்தும், மிதந்தும், மூழ்கியுமிருந்தார்கள். ஆனால் காதலின் ஈரம் அவனை எங்கும் தொடவில்லை. வெகுநாள் யோசித்த பிறகு அதற்கான காரணம் அவனுக்குப் புலப்பட்டது. எல்லோருமே அவர்களின் பாதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முழுமை பெற்றிருக்கும் ஒருவன் எதற்காக ஒரு பாதியைத் தேட வேண்டும்? அதற்கப்புறம் அவன் தான் காதலிக்காததைப் பற்றிக் கவலைப்படவில்லை.

                ஒருமுறை வீட்டைச் சுற்றி நடந்தான். எல்லா அறைகளும் ஏறக்குறைய காலியாகவே இருந்தன. எல்லாச் சுவர்களிலும் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. எங்காவது, ஏதாவது கறை தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தான். எங்குமே கறை இல்லை. வீடு இன்னும் சுத்தமாகவே இருந்தது.

                குளிப்பதற்காக மீண்டும் பாத்ரூமுக்குள் நுழைந்தான். வெந்நீரையும், குளிர்நீரையும் சரிவிகிதத்தில் கலந்து கொண்டான். கிருமி நாசினி சோப்பால் நன்றாய்த் தேய்த்துக் குளித்தான். அவனது தோலில் ஒட்டிக் கொண்டிருந்த கிருமிகள் பிரேதங்களாய் மாறி நீரோடு வெளியேறின.

                தலையை ஈரம் போக நன்றாய்த் துவட்டிக் கொண்டான். படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் கிரேக்கக் கடவுளைப் போலிருந்த தன் உடலை நார்சிசஸின் கர்வத்தோடு பார்த்தான். பல வருடங்களாய் செய்து வரும் சாயங்கால உடற்பயிற்சியாலும், கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கத்தாலும் சிற்பம் போல் செதுக்கப்பட்டிருந்தது அவன் உடல். அலுவலகத்துக்குச் செல்வதற்காக உடைகளை அணிந்து கொண்டான்.

                குளிர்ந்த பாலில் சாக்லேட்டைக் கலந்து அருந்தி, பிரட்டையும் சாப்பிட்டான். இந்தியர்களின் சமையல் முறை நேர விரயம் செய்வது என்பது அவனுடைய அபிப்ராயம். சாப்பிட்டு முடித்து வீட்டைப் பூட்டிக் கிளம்பினான். நகரத்தின் சாலைகள் அவனுக்கு அருவருப்பு. பேருந்துகளின் பிரயாணம் இன்னும் மோசமானது. வியர்வையைச் சுரக்கும் எக்கச்சக்கமான உடல்களின் நடுவே சிக்கி, நசுங்கி பிரயாணிக்க அவனுக்கு விருப்பமில்லாததால் அவன் நடந்தே போய்க் கொண்டிருந்தான்.

                சாலையோர நடைபாதையில் சிமென்ட் ஸ்லாபுகள் இளகிப் போய்க் கிடந்தன. அவற்றின் இடைவெளியிலிருந்து எலியொன்று வெளிக்கிளம்பி மனித உலகத்தைப் பார்த்து விட்டு, மீண்டும் ஸ்லாபுகளுக்குள் இருக்கும் தன் உலகத்துக்குள் நுழைந்தது. அவன் மாநகராட்சியை மனதுக்குள் சபித்துக் கொண்டான். சாலையைக் கடக்க அவன் காத்திருந்தான். சிவப்பு விளக்குப் போட்டாயிற்று. வெள்ளைக் கோடுகளில் அவன் கால் வைத்தான். வேகமாய வந்த லாரி ஒன்று கட்டுப்பாடின்றி அவனைத் தன் சக்கரத்துக்குள் முழுதாய் நசுக்கிக் கொஞ்ச தூரம் போய் நின்றது.

***

                பூமி சுற்றிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நொடியிலும் அதற்குள் பல உயிரினங்கள் உருவாகிக் கொண்டிருந்தன; பல அழிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பற்றி பூமிக்கு எந்தக் கவலையுமில்லை. பூமி இன்னும் சுற்றிக் கொண்டே இருக்கும். சூரியன் செவ்வரக்கனாய் மாறி பூமியை விழுங்கும் வரை பூமி சுற்றிக் கொண்டு தானிருக்கும். அதற்கப்புறம் சூரியனும்...


No comments:

Post a Comment