அன்பிற்கும் உண்டோ
அடைக்கும்தாழ்!
கல்யாணம்
ஆகி சிறுவதிலேயே தன் கணவனை இழந்துவிட்ட
சீதை மனம் தளராமல் யார்
உதவியையும் நாடாமல் பட்டாணி கடை
வைத்து தன் மகனை வளர்த்து
நல்ல இடத்திலும் கல்யாணம் செய்து வைத்துவிட்டாள். பிறகு
பேரக்குழந்தைகளுடன் காலத்தை கழிக்கும் வரை
வேலை பார்த்த சீதைக்கு இயற்கை
தன் வேலையை காட்டியது. பழைய
மாதிரி அவளால் வேலைக்கு செல்ல
முடியவில்லை. வயது ஏறிக்கொண்டே இருந்தது.
வீட்டில் மரியாதை குறைந்து கொண்டே
சென்றது. தனி அறையில் இருந்த
சீதை நடு வீட்டிற்கு வந்தால்
பின்பு திண்ணைக்கு வந்துவிட்டாள். பின்பு அவளுடைய நிரந்தரமான
இடமாக திண்ணை இருந்தது. அங்கேயே
சாப்பிடுவாள், அங்கேயே தூங்குவாள்.
சிறுவயதில் அவளுடன் விளையாடிய பேரக்குழந்தைகள்
வளர்ந்த உடன் அவளிடம் நெருங்குவதே
இல்லை. அவளும் அதை கண்டுகொள்வதில்லை.
அவளிடம் ஐந்து நிமிடம் பேச
யாருக்கும் நேரமில்லை, பொறுமையும் இல்லை. மகன் மட்டும்
பேருக்கு சாப்பிடியானு கேட்பான். எப்போதாவது செலவுக்கு பணம் கொடுப்பான். அவளுக்கு
பிடித்த ஒரு விசயம் இருக்கு,
அவள் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் போது அந்த வழியாக
தினமும் ஒரு உப்பு விக்கும்
கிழவன் உப்பு, உப்பு என்று
அவன் ஊர் பாஷையில் வித்தியாசமாக
கூவிக்கொண்டே செல்வான். அவன் அந்த கிழவி
வீட்டை கடக்கும் போதெல்லாம் கிழவிக்கு ஒரு சிரிப்பு வரும்.
ஒரு நாள் கிழவி அந்த
உப்புகாரனை கூப்பிட்டது. கிழவனும், கிழவி உப்பு வாங்க
போகுதுனு ஆவலோடு வந்தான். கிழவி
பேச்சு கொடுத்தது நீ எந்த ஊருப்பா
ஏன் இப்படி கூவுறனு கேட்டது.
கிழவன் பேசும் ஊர் பாஷை
இந்த கிழவிக்கு பிடித்து போனது. அவன் பேச
பேச கிழவி சிரித்துக்கொண்டே இருந்தது.
கிழவன் கடுப்பாகி ஏம்மா உனக்கு உப்பு
வேணுமா வேணாமானு கோபமாக கேட்டான். கிழவி
உடனே மகன் கொடுத்த ஐம்பது
ரூபாயை எடுத்து கிழவனிடம் கொடுத்து
எனக்கு இன்னைக்கு வேணா நாளைக்கு வாங்கிக்கிறேனு
சொன்னது. அப்போ நாளைக்கு பணம்
கொடு எதுக்கு இன்னைக்கு கொடுக்குறனு
கேட்டதுக்கு பரவாயில்லை கொண்டு போனு அனுப்பியது.
கிழவன்
நாளைக்கு வரும் நேரம் கிழவி
வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது. கிழவன் குரல் பக்கத்து
தெருவில் கேட்கும் போதே கிழவிக்கு சந்தோசமாயிற்று.கிழவன் வந்தான் எவ்ளோ
உப்பு வேணும்னு கேட்டான். கிழவி என்னென்னமோ பேசி
நேரத்தை கழித்தது. கிழவன் மறுபடியும் உப்பு
வேணுமா வேணாமானு கோபமாக கேட்டான். அதற்கு
இந்த கிழவி என் மருமகள்
ஊருக்கு போயிருக்காப்பா நாளைக்கு வாங்கிக்கிறேனு அனுப்பிவிட்டது. இப்படியே தினமும் ஏதோ ஒரு
காரணம் சொல்லி ஒரு வாரமாக
ஒட்டிவிட்டது. இந்த கிழவனுக்கும் அந்த
தெரு வந்தாலே கிழவியிடம் பேசிட்டு
செல்வது பழகிவிட்டது. இருவரும் ஏதோ மனம் விட்டு
பேசி வந்தனர். ஒரு நாள் கிழவி
கேட்டது. உன் வீட்டுக்காரம்மா என்ன
பண்ணுதுனு. அதுக்கு இந்த கிழவன்
நான் கல்யாணம் பண்ணிக்கலனு சொன்னான். கிழவிக்கு ஒரே ஆச்சர்யம், ஏனய்யா
கல்யாணம் பண்ணிக்கலனு கேட்டது. இல்ல கிழவி நான்
சினிமால நடிக்கனும்னு ஆசைபட்டேன். அப்போ எல்லாரும் என்னை
பார்த்து சிரிச்சாங்க. நான் ஒரு முடிவு
பண்ணேன், சினிமால நடிச்ச அப்புறம்
தான் கல்யாணம்னு, 40 வயசு வர முயற்சி
பண்ணேன். எனக்கு வாய்ப்பும் கிடைக்கல
அதுக்கு பிறகு எனக்கு கல்யாண
ஆசையும் வரல, சரி விடு
கிழவி நான் பொழப்ப பாக்க
போறேனு வருத்தத்துடன் கிழவன் சென்றான்.
கிழவி இரவு முழுவதும் தூங்கவே
இல்லை. அந்த கிழவனை நினைத்து
கவலைப்பட்டுக்கொண்டே கடவுளையும் திட்டிக்கொண்டிருந்தது. அது கடவுளுக்கு கேட்டுவிட்டது
போல, அடுத்த நாள் அந்த
தெருவில் வயசு பசங்க பொன்னுங்க
எல்லாரும் மேக்கப் போட்டுக்கிட்டு போனாங்க
அந்த கிழவி பேரனும் கிளம்பிக்
கொண்டிருந்தான். கிழவி பேரனிடம் கேட்டது,
எல்லாரும் எங்கப்பா போறாங்கனு அதுக்கு பேரன் சினிமால
நடிக்க ஆள் எடுக்குறாங்க பாட்டினு
சொன்னான். கிழவிக்கு உடனே யோசனை எங்கோ
சென்றது. பேரனிடம் என்ன படம்பா எந்த
கதாபாத்திரம் என்று கேட்டுக்கொண்டிருந்தது. பேரன் கிழவிகிட்ட
பேப்பர காட்டி இத படிச்சுக்கோனு
சொல்லி கிளம்பிவிட்டான். கிழவி கண்ணாடிய எடுத்து
போட்டு பேப்பரை உத்து உத்து
படித்தது. அதில் நடிக்க வயது
வரம்பு கிடையாதுனு போட்டு இருந்தது. கிழவிக்கு
ஒரே சந்தோசம்.
வழக்கம்
போல கிழவன் வரும் நேரம்
ஆனது. கிழவன் வந்த உடனே
அங்கேயே நில்லு என்று சொல்லி
கிழவி வெளியே வந்தது. கிழவி
கிழவனை கூட்டிட்டு நடக்க ஆரம்பித்தது. கிழவன்
எங்க போறோம்னு கேட்டதுக்கு நீ எதுவும் பேசாம
என் கூடவானு கூட்டி போனது.
நடந்து ரொம்ப நாள் ஆனதால்
கிழவியால் நடக்க முடியவில்லை. போகும்
வழியில் ஒரு குச்சியை எடுத்துக்
கொண்டு ஊனி நடக்க ஆரம்பித்தது.
கிழவன் எங்க போறோம் எங்க
போறோம்னு நச்சரிக்கவும் கிழவி உண்மையை சொன்னது.
கிழவன் ஒரு நிமிடம் நின்னான்,
ஏன் கிழவி உனக்கு ஏதாவது
மூளை இருக்கா படத்துல நடிக்க
சின்ன வயசு, நல்ல உடம்பு
வச்சு அழகா இருக்கனும் என்ன
போய் கூட்டிட்டு போற. கிழவி நீ
எதுவும் பேசாம என் கூடவானு
கூட்டிட்டு போனது. அங்க போய்
பார்த்தா 2 கி.மீ க்கு
வரிசை இருந்தது. கிழவனுக்கு ஒரே சிரிப்பு அங்க
பாரு கிழவி கூட்டத்தை இதுல
நான் போய் நடிச்சு, வா
கிழவி வீட்டுக்கு போலானு சொன்னான் கிழவன்.
கிழவி அசரவேயில்லை, இல்ல நீ வரிசையில
நில்லுனு கிழவனை வற்புறுத்தியது. கிழவனுக்கு
பிடிக்கவில்லையென்றாலும் அந்த கிழவியோட நம்பிக்கைக்காவது
கிழவன் வரிசையில் நின்றான்.
அந்த வரிசையில் அந்த கிழவியோட பேரனும்
நின்னான்.மூன்று மணி நேரம்
ஆனது பாதி தூரம் கூட
போகவில்லை. கிழவியால் ரொம்ப நேரம் நிக்க
முடியவில்லை உட்கார்ந்துவிட்டாள். கிழவன் நீ வீட்டுக்கு
போ கிழவி நான் நிற்கிறேனு
சொல்லியும் கேட்கவில்லை. தரையில் உட்கார்ந்து கொண்டே
நகர்ந்து நகர்ந்து கிழவன் கூட கடைசி
வர வரிசையில் நின்றது. நமக்காக கிழவி ரொம்ப
கஷ்டப்படுவதை மனதில் நினைத்துக் கொண்டு
வருத்தப்பட்டான். அங்கு நின்றவர்கள் எல்லாரும்
இவர்கள் இருவரை தான் பார்த்தார்கள்.
ஒரு வழியாக இருவரும் நெருங்கி
விட்டனர். கிழவனை மட்டும் உள்ளே
அனுப்பினாங்க. கிழவன் போகும் போது
கிழவியை பார்த்துக்கொண்டே சென்றான். கிழவி நம்பிக்கையோடு காத்திருந்தது.
அந்த நம்பிக்கை வீணாகவில்லை. கிழவன் வெளியே வரும்
போது வாயெல்லாம் சிரிப்பு. கிழவி என்னை நடிக்க
தேர்ந்தெடுத்துட்டாங்கனு சொன்னதும் கிழவி முகத்தில் கண்ணீர்
தாரை தாரையாக கொட்டியது.
என்னை விட என் கனவுகளுக்கு
மதிப்பு கொடுத்த கிழவிக்கு என்ன
பண்றதுனு தெரியாம கிழவனுக்கு பேச்சே
வரவில்லை. நான் நாளைக்கே சென்னை
போறேன். உனக்கு போன் பண்றேன்
நம்பர் கொடு என்று கிழவன்
சொன்னான். உடனே கிழவி வரிசையில்
நின்ற பேரனிடம் நம்பர் வாங்கி கொடுத்தது.
அடுத்த நாள் கிழவன் சென்னைக்கு
சென்று விட்டான். காலை எழுந்ததிலிருந்து பேரனிடம்
போன் வந்ததா வந்ததானு நச்சரித்தது.
ஏய் கிழவி உனக்கு யார்
போன் பண்ண போறானு பேரன்
திட்டினான். திட்டி கொஞ்ச நேரத்தில்
போன் வந்தது. பேரன் எடுத்து
யார் பேசுறதுனு கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டான். கிழவி திண்ணையிலிருந்து எட்டி
பார்த்து யார் பேசுறாங்கனு ஒட்டு
கேட்டது, இருந்தும் சரியாக கேட்கவில்லை. பேரனிடம்
பேசியது அந்த கிழவன் தான்,
பாட்டியிடம் பேசனும் என்று சொன்னதுக்கு
அப்படியெல்லாம் யாரும் இல்லையென்று போனை
அணைத்துவிட்டான்.
கிழவி போன்ல யாருப்பானு கேட்டதுக்கு
என் நண்பன் என்று பொய்
சொல்லிவிட்டான். இருந்தும் கிழவிக்கு சந்தேகம், கிழவன் தான் நமக்கு
போன் பண்ணிருப்பானோ என்று கிழவன் போன்
பண்ணும் போதெல்லாம், பேரன் போனை அணைத்துவிடுவான்.
கிழவி கிழவனிடம் பேசாமல் பரிதவித்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் பேரன் குளித்துக்
கொண்டிருக்கும் போது போன் வந்தது.
ரொம்ப நேரம் போன் அடித்துக்கொண்டிருந்தது.
கிழவிக்கு ஒரு சந்தேகம் கிழவன்
ஏதும் போன் பண்ணுவானோ என்று
கிழவி மெதுவா போய் போன்
எடுத்து ஹலோ என்றது. பேசியது
அந்த கிழவன் தான். ரெண்டு
பேருக்கும் சந்தோசம் தாங்க முடியல, அதை
எப்படி வெளிபடுத்துவது என்று தெரியாமல் கண்ணீருடன்
சிரித்துக் கொண்டிருந்தனர். நீ எப்போ வருவனு
கிழவி கேட்டது. அதற்கு கிழவன் ஏன்
கேட்குற என்று கேட்டான். இல்ல
சினிமால நடிச்சவுடனே கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னில அதான் கேட்டேன்.
அதற்கு
கிழவன் எனக்கு பொன்னு இருக்கானு
கேட்டான். அதற்கு கிழவி பொன்னு
ரெடியா இருக்குனு தன்னை சொல்லாமல் சொல்லியது.
கிழவனும் நீ எந்த பொன்னை
சொன்னாலும் கட்டிகிறேனு, சொல்லாமல் சொன்னான். இருவரும் வெட்கப்பட்டு கொண்டே போனை வைத்துவிட்டு,
கிழவி பேரனுக்கு தெரியாம போனை அப்படியே
மெதுவாக வைத்துவிட்டு, எதுவும் நடக்காதது போல்
திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டது. பேரன்
குளித்து விட்டு வந்து பாட்டி
எனக்கு ஏதும் போன் வந்ததானு
கேட்டான். அதற்கு கிழவி தெரியலப்பானு
சொல்லி அமைதியாக உட்கார்ந்து கொண்டது. பேரனை ஏமாற்றி கிழவனிடம்
பேசிவிட்டோம் என்று கிழவி நமட்டுச்
சிரிப்பு சிரித்தது. கிழவன் எப்போ வருவான்
என்று கிழவி காத்துக் கொண்டிருந்தது.
ஆனால் ஒரு மாதம் ஆனது,
இரண்டு மாதம் ஆனது கிழவன்
வரவே இல்லை. கிழவன் என்ன
ஆனான் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் என்றாவது ஒரு நாள் உப்பு
சத்தம் கேட்காதா என்று வாசலையே தினமும்
பார்த்து காத்துக்கொணடிருக்கிறாள் சீதை.
No comments:
Post a Comment