கடைசி கடிதம்
சொக்கநாத
பிள்ளை அவர்கள் தன் இறப்பை
நெருங்கிவிட்டார். நேற்று இரவு உறங்கச்
சென்ற போது, ஆஸ்துமா நோயாளியான
பிள்ளை அவர்கள் வழக்கத்திற்கு மாறாக
அதிகமாக இருமினார். அவரது மனைவி பதறிப்
போனார். கசாயம் காய்ச்சிக் கொடுத்தார்.
அரைக்குவளைக் கசாயம் மட்டுமே பருகிவிட்டு
பிள்ளை அவர்கள் உறங்கிவிட்டார்.
இன்றும்
விடிகாலையிலேயே அதே இருமல். இன்னும்
பலமாக இருமினார். சிறிது ரத்தம் கூட
துப்பிவிட்டார். உடனே பதறிப்போய் பக்கத்துத்
தெருவில் இருந்த கிராம மருத்துவரை
ஓடிப்போய் அழைத்துவந்தான் பிள்ளையின் மூத்த மகன். மருத்துவர்
வந்து பார்க்கும் முன்பே போய்விட்டார் சொக்கநாதபிள்ளை
அவர்கள்.
மருத்துவர்
வந்து நாடி பார்த்து இறப்பை
ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போனார். பின், முக்கிய
உறவினர்களுக்கு தந்தி கொடுக்க பிள்ளையின்
மூத்த மகன் பக்கத்து பட்டிணம்
வரைக்கும் தனது மோட்டார் வண்டியில்
சென்று வந்தான். பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவினர்களான பிள்ளை அவர்களின் தம்பிக்கும்
பிள்ளை அவர்களின் இளைய மகன் நேரில்
போய் செய்தியைச் சொல்லி அழைத்து வந்தான்.
மாலைக்குள்
முக்கியமானவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். மாலையில்
சொக்கநாத பிள்ளையவர்களின் இறுதிச்சடங்கு முறையாக நடந்தது. இரவுக்குள்
எல்லா உறவுகளும் வந்தார்கள். பிள்ளையின் மனைவிக்கும் மகன்களுக்கும் ஆறுதல் கூறினர் வந்த
உறவினர்கள். தன் இளைய மகனின்
மடியில் சாய்ந்து துக்கித்துக் கிடந்தாள் பிள்ளையின் மனைவி.
“இப்படியே!
உக்காந்திருந்தா எப்படி? மணியாச்சா இல்லையா?
உறங்கலாமே!” என்றார் பிள்ளையின் தம்பி.
அப்படி
சொன்னதைக் கேட்டுத் தலை நிமிர்த்திப் பார்த்தாள்
பிள்ளையின் மனைவி. சுவர்க் கடிகாரம்
மணி 12.34 எனக் காட்டியது. பின்,
மறுபடியும் தன் மகனின் மடியில்
சாய்ந்தாள். அப்படியே உறங்கிப்போனாள்.
மறுநாள் காலை 9.30 மணி
இருக்கும் ஒரு காயிதம் வந்தது. அதனை
தபால்காரரிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்தார்
பிள்ளையின் தம்பி. அது சொக்கநாத
பிள்ளையின் பெயருக்கு வந்திருந்தது.
அந்த காயிதம் வந்ததை
அண்ணனின் மூத்த மகனிடம் போய்
சொன்னார். காயிதம் வந்த செய்தியை
மகனுடன் இருந்து கேட்ட பிள்ளையின்
மனைவி,
“அவரு தான் பொய்விட்டாரே!
என்ன காயிதம்?...” என்றாள்.
“யாரோ சந்தனமுத்தாம்! மதுரையில்
இருந்து அண்ணன் பேருக்கு காயிதம்
போட்டு இருக்கார்.”
பிள்ளையின் மகன் அந்த காயிதத்தை
வாங்க சித்தப்பாவிடம் கைநீட்டினான். அதற்கு, அவனது சித்தப்பா,
“இது அண்ணன் பேர்க்கு
வந்திருக்கு. அண்ணன் தவிர யாரும்
படிக்கப்பிடாது.” என்றார்.
பிள்ளையின் மகன் தன் தாயைப்
பார்த்தான். உடனே பிள்ளையின் மனைவி,
“ஏன்? இங்க கொண்டாங்க… நான்
அவரு தொட்டு தாலி கட்டிகிட்டவ
தானே… நான் படிக்கேன்…” என்றாள்.
“அது தான் கூடாதுத்தா…
எங்க அண்ணனே சொல்லும். ஒருத்தர்
காயிதத்தை அவர் தவிர இன்னோருத்தர்
யாரும் படிக்கப் பிடாதுன்னு."
என்றார்
பிள்ளையின் தம்பி.
“என்ன…? நான் கூட
படிக்கக் கூடாதுன்னா… பின்ன யாரு படிப்பாரு…”
சற்று காட்டமாகவே கேட்டாள் பிள்ளையின் மனைவி.
“யாரும் படிக்கப் பிடாது
தான்”
“ஏதாச்சும் முக்கியமான விசயமா இருந்தா?..” பிள்ளையின்
மூத்த மகன்.
“இருக்கட்டும்… அது அவருக்கு வந்தது
தானே… நாம யாரும் படிக்கப்
பிடாது. நான் விடமாட்டேன். அண்ணன்
அப்புடித்தான் சொல்லும்.”
பேச்சுவார்த்தை முற்றி வார்த்தை தடித்துவிடவும்,
“என்னம்மா… நாட்டாமைய பாப்போம்…” என்றபடி எழுந்து கிளம்பினார்
பிள்ளையின் தம்பி.
“அதையும் பாப்போம்…” என்றபடி
தாயும் மகனும் பின் சென்றனர்.
நாட்டாமை தண்டையாவிடம் போய் முறையிட்டனர். நாட்டாமை
ஊரைக்கூட்டச் சொன்னார்.
சற்று நேரத்தில் ஊரு
சனம் எல்லாம் பெருமாள் கோயில்
பக்கத்து வேப்பமர நிழலில் கூடியது.
அங்கு இருந்த ஒரு திண்டில்
நாட்டாமை மட்டும் அமர்ந்தார்.
பிள்ளையின் மனைவி ஒரு புறமும்
பிள்ளையின் தம்பி ஒரு புறமும்
நின்றனர். விவகாரம் மீண்டும் ஒரு முறை கூட்டத்தில்
விளக்கப்பட்டது.
நாட்டாமை மீசை முறுக்கிக்கொண்டு சற்று
பாக்கும் துப்பிய பின்,
கொஞ்சம்
தண்ணீர் குடித்துவிட்டு பேசினார்.
“ம்ம்ம்…. நம்ம சொக்கநாத பிள்ளை
நல்ல மனுஷன். அந்த மனுஷன்
சாவுக்குப் பெறவு இப்புடி ஒரு
விவகாரம் வருதது வருத்தமாத்தான் இருக்கு.
ஆனா, தீர்ப்பு சொல்லணும்...” என்று இழுத்த நாட்டாமை
மீண்டும் தண்ணீர் குடித்துகொண்டார்.
ஊர் அவர் சொல்லப்
போகும் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தது. நாட்டாமை தொடர்ந்து பேசினார்.
“அதாவது, பிள்ளையோட ஒடபொறந்தவரு
காயிதத்தை படிக்ககூடாது அப்பிடிங்காரு. அது நாயந்தான். அவரு
அண்ணாச்சி சொன்னாப்ல நடக்கணுங்காரு…. பிள்ளையோட பொண்டாட்டி அந்த காயிதத்துல எதும்
முக்கிய சேதி இருக்கும்…. அதுனால
படிக்கனும்காவ…. சரி…. அதான்… இப்ப
என்ன பண்ணலாம்னா…. காயிதம் அனுப்புன ஆளயே
கேட்டுடலாம். அவரத்தான் கேக்கணும். அவருக்குத்தான் அந்த காயிதத்துல இருக்கது
தெரியும். மித்த ஆளு படிக்கலாமான்னு
அவர கேட்டுகுங்க…. அவர் படிக்க சொன்னா
சரி… இல்லாட்டி படிக்க கூடாதுப்பா…. அம்புட்டுத்தான்….
என்னய்யா….” என்று சொல்லித் துண்டை
உதறிவிட்டுக் கிளம்பினார் நாட்டாமை.
அன்றே பிள்ளையின் மகனும்,
தம்பியும் சேர்ந்து விஷயத்தை தெரிவிப்பது போல அந்த காயிதத்தை
அனுப்பிய மதுரை சந்தனமுத்துக்கு ஒரு
கடிதம் அனுப்பினர். நான்கு நாட்கள் கழித்து
பதில் கடிதம் பிள்ளை அவர்களின்
தம்பி பெயருக்கு வந்தது. அந்த கடிதத்தைப்
படித்துவிட்டு பிள்ளையின் மகனிடமும் காட்டினார் அவர்.
அந்த கடிதத்தில் எழுதியிருந்ததாவது…
“நான் திரு.சந்தனமுத்துவின் மூத்த
மகன். எங்கள் தந்தையின் நண்பர்
இறந்து போனதற்காக நாங்கள் வருந்துகிறோம். ஆனால்
உங்கள் கடிதத்தை படிக்கும் முன்பே எங்கள் தந்தையும்
இறந்து போய்விட்டார். ஆகையால், நீங்கள் கேட்ட கேள்விக்கு
நாங்கள் பதில் கூற முடியாது.
நல்ல வேளையாக எங்கள் தந்தை
அவரது நண்பரைப் போல ‘ஒருவரின் கடிதத்தை
மற்றவர் படிக்கக் கூடாது’ என்ற ஒரு
கொள்கை கொண்டவர் இல்லை என்பதால் உங்கள்
கடிதத்தை நாங்கள் படித்து பதில்
அனுப்ப முடிந்தது.
இப்படிக்கு
ச. கணபதி
பிரச்சனைக்கு
முடிவு வரும் என்று நினைத்தால்
புது குழப்பமாக ஆகிவிட்டதே அந்த கடிதம்! காயிதத்தை
படிக்க வேண்டியவரும் படிக்கும் முன்பே இறந்துவிட்டார். அனுப்பியவரும்
இறந்துவிட்டார். அந்த காயிதத்தில் இருப்பதை
படிக்கலாமா? கூடாதா? என்ற குழப்பத்துடன்
மீண்டும் நாட்டாமை தண்டையாவை பார்த்து முறையிட்டனர்.
“என்னப்பா
இது? இப்படி ஆகிப்போச்சு…” என்று
அலுத்துகொண்டார் நாட்டாமை. சற்று யோசனைக்குப் பிறகு
பேசினார்.
“அந்த காயிதத்துல எதாவது முக்கியமான சேதி
இருக்கலாம். பிள்ளை செய்ய வேண்டிய
காரியம் எதும் இருக்குலாம்… அதனால
பிள்ளைக்கு வேண்டிய யாராச்சும் காயிதத்தை
படிச்சுடுங்க…. என்ன யார் படிக்கிய?...”
என்று நிறுத்தினார்.
பிள்ளை
அவர்களின் மனைவி அந்த காயிதத்தை
படிக்கலாம் என பிள்ளையின் தம்பியும்
ஏற்க, பிள்ளையின் மனைவி காயிதத்தைப் படித்துவிட்டு மகனிடம்
கொடுத்தார். மகன் படித்து தன்
சித்தப்பாவிடம் கொடுத்தான். அவர் படித்துவிட்டு நாட்டாமையிடம்
கொடுத்துவிட்டார். நாட்டாமை படித்ததும் “ம்…. ம்… கூட்டம்
கலையட்டும்” என்று கூறிவிட்டு அந்த
காயிதத்தை பிள்ளையின் தம்பி கையில் திணித்துவிட்டுப்
போனார்.
அந்த காயிதத்தில் இருந்தது என்ன?
அந்த காயிதத்தில் இருந்தது பின்வருமாறு.
“நான் சந்தனமுத்து. நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடத்தில் 9,10 சேந்து படிச்சோமே. உன்
முகவரி எனக்கு இப்பதான் கிடச்சுது.
நம்ம மாணிக்கம் தான் உன் முகவரி
தந்தான். இப்ப எனக்கு உடம்பு
சரியில்ல. உன்னை ஒருதடவை பாத்துட்டா
என் ஆவி அடங்கிடும். வந்துருய்யா
சீக்கிரம்.”
இப்படிக்கு
சந்தனமுத்து
∞
(பாவம்!
அந்த முதிய நண்பர்கள் நெடுநாள்
கழித்து சந்திக்க முடியாமல் ஆகிவிட்டது. தங்களுக்கு வந்த கடைசி கடிதத்தை
இருவருமே படிக்க முடியாமல் போய்விட்டது.
அந்த முதிய நண்பர்களின் நட்பு
சொர்க்கத்தில் தொடருமாக)
No comments:
Post a Comment