நிதர்சனம்
1. கண்களில்
கண்ணீர்
பல ஆண்டுகள் போராடி சுதந்திரம் பிறக்க
இன்னும் சில தினங்களே இருந்தன.
நாடு முழுவதும் புத்துனர்ச்சியுடன் சுதந்திர தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆங்காங்கே மேடை பேச்சுக்களும் கூட்டங்களும்,
பொம்மலட்டங்கள்களும் தெருக்கூத்துக்களும் தலைவர்களையும் தியாகிகளையும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருந்தன. இவற்றின் எந்த
ஒரு பாதிப்பும் இல்லாமல் சிதம்பரத்திற்கு கிழக்கே ரெண்டு மைல்
தொலைவில் வெள்ளாற்றங்கரை ஓரத்திலே தில்லை காடுகள் நடுவே
இருந்தது கிள்ளை கிராமம்.
அவ்வாற்றின்
கரை வழியே ஓடிய மண்
பாதைகளில் அச்சிறுவன் நடந்துக்கொண்டிருந்தான். ஏறக்குறைய 12 வயது இருக்கும். கையில்
துணிப்பையுடன் வெகுதூரம் நடந்து வந்தமையாலும், உக்கிரமான
வெயிலும், உப்புக் காற்றும் அவனுக்கு
களைப்பையும் தாகத்தையும் கொடுத்திருந்தமையாலும் தூரத்தில் தெரிந்த ஆலமரத்தில் ஓய்வெடுக்க
எண்ணி அதை நோக்கி சென்றான்.
அங்கு சிலர் அமர்ந்திருப்பதை பார்த்த
அவன்... அங்கே நிற்காமல் மேலே
சென்றான். அப்பொழுது ஒரு குரல் அவனை
நிறுத்தியது.
"டேய்
முருகா... என்ன பாத்துட்டு பாக்காத
மாறி போற..?" எனக் கேட்டுக்கொண்டே ஒருவன்
அவனை நோக்கி வந்தான்.
"என்ன
சிதம்பரத்துல நல்ல வியாபாரமா பை
காலியா இருக்கு..." என்று பேசிக்கொண்டே அந்த
பையில் கைவிட்டு மீதம் இருந்த முறுக்கு
துணுக்குகளை எடுத்து வாயில் போட்டான்.
முருகன் அவனிடம் பேச்சு கொடுக்காமல்
மேலே செல்ல முயற்சித்தான்.
"யங்கடா
ஓடுற... மனோ எப்படி இருக்கா..."
"இங்க
பாரு சுந்தரம்... மனோ பத்தி என்
கிட்ட பேசாதேன்னு பல தடவ சொல்லியாச்சு,
என்ன விடு நான் போகணும்"
"நா
பேசாம யாரு பேசுவா, போன
தைலயே முடிச்சுருக்க வேண்டியது பாழா போன உன்
அண்ணன் போய் போலீஸ்ல மாட்டிக்கிட்டு கல்யாணத்த
கெடுத்துட்டான்..!!"
அண்ணனை
பத்தி பேச்சை ஆரம்பித்தவுடன் முருகனின்
முகம் சுருங்கி போனது. அவனது அண்ணன்
கணேசை போலீசார் போன வருடம் அரசாங்கத்திற்கு
எதிராக பேசியதற்காகவும், வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்தனர். அதன்
பின் என்ன ஆனான் என்ற
செய்தியே இல்லை. சுந்தரத்திற்கு சர்காரில்
சில ஆட்களை தெரியும் கணேஷ்
பற்றிய விவரமும் தெரியும் இருந்தும் அவன் யாரிடமும் சொல்வதில்லை.
"நா
சொல்றத மனோட்ட சொல்றியா...? என்றான்
"அப்படி
என்ன சொல்ல போற.."
"ஹ்ம்ம்
உங்கண்ணன் கணேசை பத்தி...."
"மாமா
மாமா சொல்லு மாமா..."
"இப்போ
தான் மாமாங்கற நெனப்பு வருதா உனக்கு..?"
"சொல்லு
மாமா.. நீ என்ன சொன்னாலும்
மனோட்ட அப்படியே சொல்லிடறேன்"
"கல்யாணத்துக்கு
ஏற்பாடெல்லாம் ஆரம்பிக்க சொல்லு..!!" என்று கண்சிமிட்டினான்
"ஏன்
மாமா..? அண்ணன் இல்லமா எப்படி..?"
"முட்டாள்
உங்கண்ணே விடுதலை ஆயிட்டான்..!! வந்துருவான்..!!"
என்று சுந்தரம் கூறியவுடன் முருகனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நடந்து வந்த களைப்பெல்லாம்
மறந்து
"ஐ...
நா இப்பவே போய் சொல்றேன்..!!"
என்று ஓடத்துவங்கினான்.
"எங்க
ஓடுற நில்லு மனோக்கு ஏதாவது
வாங்கித்தரேன் எடுத்துட்டு போ" என்று சுற்றி முற்றி
பார்த்தான்.
ஆலமரத்தின்
அடியில் ஒரு முதியவர் வெற்று
மார்புடன், முகம் மறைத்த தாடியுடன்
வேரில் சாய்ந்து படுத்திருந்தார்.
அவரிடம்
"யோவ் அது என்ன அந்த
பைல விக்குறதா..?" என்றான்
அவர் பதில் சொல்லாமல் அவனை
உற்று பார்த்தார்.
"யோவ்
கேக்றோம்ல என்ன வச்சுருக்க பைல..?"
அவர் மீண்டும் பதில் சொல்லாமல் பையை இறுக்கிப்
பிடித்தார்.
சுந்தரத்திற்கு
அவர் அவனை அவமதிப்பதாய் தோன்றியது.
"கேட்டுக்கிட்டே
இருக்கேன்... கிழட்டு @@##..!!" என்று காலால் உதைத்தான்.
அவர் கையில் இருந்த அழுக்கேறிய
பை மண்ணில் நழுவியது. ஈன
சுரத்தில் அவர் இடுப்பை பிடித்துக்கொண்டு
முனகினார்.
"மாமா..
அவர விட்டுடு மாமா..." என்றதிற்கு முருகனுக்கும் தலையில் அடி விழுந்தது.
அந்த பையை தலைகீழாய் தூக்கினான்
உள்ளிருந்து கச்கப்பட்ட காகிதங்கள் விழுந்தன. அதை பார்த்த சுந்தரத்திற்கு
புருவங்கள் உயர்ந்தன.
"ஓஹோ
நீதானா..? ஜமீன சர்காருல கடுதாசி போட்டு மாட்டி விட்டது
நீ தானா..?"
அவர் பயத்தில் நடுங்க ஆரம்பித்தார்...அவரது
தோளில் போட்டிருந்த துண்டை பிடித்து அவரை
இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
"சாமி
நான் இல்ல சாமி...எனக்கு
எழுத படிக்கவே தெரியாது..!!" கெஞ்சினார்
"அப்புறம்
என்ன மயித்துக்கு இவ்வளோ காகிதம்...வெள்ளகாரங்க
மாதிரி பீ தொடைக்கவா..?"
அவர் கைகளை பிடித்துக் கெஞ்ச
ஆரம்பித்தார்... பொளேர் என்று கன்னத்தில்
ஒரு அரை..
" என்ன
கைய பிடிக்குற..? அவ்வளோ தைரியமா..? உன்ன
தான் நாலு மாசமா தேடிகிட்டு இருக்கேன்.... இத்தனை நாளு ஜமீன்
காசுல தானே வயித்த ரொப்புன...இப்போ வெள்ளகாரே போறான்னு
சொன்னவுடன்னே... மொட்டக் கடுதாசியா..?"
" அய்யா
சாமி...பெரிய விவகாரம்
எல்லாம் எனக்கு தெரியாது சாமி...வெயிலுக்கு காத்தாட மரத்தடி ஒதுங்குன்னே...ஊரு பக்கம் வந்தே
நாளாச்சு சாமி.. வுட்டுடுங்க..." என்று கை
படாதவாறு கெஞ்சினார்.
அவர் துண்டை விட்ட சுந்தரம்
"அப்புறம் எதுக்கு உனக்கு இவ்வளோ
கடுதாசி..??"
" எல்லாம்
குப்ப சாமி...திருவிழா, நாடக
விளம்பர கடுதாசிங்க..."
சுந்தரம்
அவரை பார்த்தான் "அதெல்லாம் உனக்கு எதுக்கு..?"
"நான்
படம் வரைவேனுங்க..." சுந்தரம் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். மீண்டும்
ஒரு அரை "என்ன பாத்தா என்ன
முட்டா பய மாறி தெரியுதா..?"
அவருக்கு
கண்ணீரே வந்துவிட்டது "சத்தியமா சாமி..!!"
"ப்ச்ச
உன்கிட்ட பேசினா
சரி பட்டு வராது" அவர்
துண்டை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றான்.
"சாமி
நம்புங்க...நா வேணா உங்கள
வரையட்டுமா..?"
சுந்தரம்
சற்று நின்று "என்ன ஒன்னும் வரைய
வேண்டாம் இந்த இவன வரை
பாப்போம்" என்று
முருகனை காமித்தான்.
அவர் கசங்கிய காகிதம் ஒன்றை
கையில் எடுத்தார்...எச்சில் தொட்டு நேர்
படுத்தினார்...இடுப்பில் சொருகி இருந்த கரி
துண்டு ஒன்றை எடுத்து தரையில்
தேய்த்து கூர்மை செய்துக்கொண்டார். முருகனை
இப்படி அப்படி உட்கார் என்று
கூறினார். தலையை கொஞ்சம் திருப்ப சொன்னார் அவன் திருப்பாததால்
லேசாய் அவன் தாடையை பிடித்து
திருப்பினார்.மூங்கிலால் படீர் என்று அவர்
கையில் ஒரு அடி விழுந்தது.
"ஆ ஆ.." என்று கத்திக்கொண்டே கையை
உதறினார்.
"என்ன
ஆ ஊன்னுட்டு...தொடக்கூடாது...ஹ்ம்ம் ஆரம்பி ஆரம்பி நேரம்
ஆகுதுல..!!" என்று கூறிக்கொண்டே முருகனுக்கும்
ஒரு அடி "அவன் பாட்டுக்கு தொடுறான்
அப்படியே பிள்ளையார் மாறி உட்காந்திருக்க..!!" என்றான் சுந்தரம்.
முதியவரும்
கண்களை துடைத்துக்கொண்டு வரைய ஆரம்பித்தார். பொறுக்க
முடியாமல் சில நிமிடங்களிளேயே
சுந்தரம் வரைந்து கொண்டிருந்த காகிதத்தை பிடுங்கி
பார்த்தான்.
"ஹ்ம்ம் சுமாரா
வரையுற...இருந்தும் நா நம்பள, நாளைக்கு வருவேன்...எல்லாத்தையும் எடுத்துட்டு வா " என்று அவர் வரைந்ததை எறிந்தான்.
சரி என்று தலை ஆட்டினார்.
“அது என்ன அந்த சுருக்கு
பைல..?”
அவர் நடுக்கமான குரலுடன் "நரி எழந்த பழம்.."
என்றார்
கொடு என்று பிடுங்கி
கொண்டான். அதை முருகனிடம் கொடுத்து
"இத மனோட்ட கொடுத்துரு நரி
இழந்த பழம் கிடைகிறது ரொம்ப
கஷ்டம் போ" என்றான்
முருகனும்
அந்த ஒரு வார்த்தைக்கு தான்
காத்திருந்தார் போல ஓட ஆரம்பித்தான்
"டேய் முருகா போற வழியில
நீயே தின்றாத" என்று சுந்தரம் சொன்னது
முருகன் ஓட ஓட காற்றில்
கரைந்து வழுவிழந்தது. சுந்தரம் மறைந்ததும் முருகன் அந்த பையை புதரில்
எறிந்து விட்டான்.சுந்தரத்திற்கு தெரியாமல் அவன் எடுத்து வந்த காகிதத்தை
பார்த்தான். அது அவனை கண்ணாடி
போல் பிரதி பலித்து இருந்தது.
ஒரே ஒரு வித்யாசம் படத்தில்
அவன் கண்களில் கண்ணீர்.
2. கடவுளாய்
இருங்கள்....!!!
அடுத்த
நாள் முருகன் முறுக்குகளை விற்றுவிட்டு
சீக்கிரமே திரும்பி வந்துக்கொண்டிருந்தான். வழியில் ஆலமரத்தடியில் சென்று
தாத்தாவை தேடினான்...அவரது பையும் தடியும்
இருந்தது அவரை காணவில்லை...
"தாத்தா...தாத்தா..."
பதிலில்லை...கொஞ்சம் தள்ளி சுற்றும்
முற்றும் பார்த்தான்...பிறகுஅவரது பைக்குள் இருந்த காகிதங்களை எடுத்துப்
பார்த்தான்...நிறைய படங்கள் வரையப்படிருந்தன...அதில் பல கோவில்கள்...கோவிலின் கோபுரம்...கோபுரத்தின் கலசம்...அதில் அமர்ந்திருக்கும்
புறா...கோபுரத்தில் இருக்கும் சிலைகள்...வெளியில் உள்ள பிள்ளையாரை கும்பிடும்
பட்டுச் சேலை அணிந்த பெண்...கூட சாமி கும்பிடாமல்
வேடிக்கை பார்க்கும் சிறுவன்...கிழக்கு வீதியில் பவனி
வரும் உற்சவர்...வெளியிலிருந்து தெரியும் கோவிலின் உள்புறம்...அனைத்தும் கோவில் கோவில் கோவில்...!!!!
அப்பொழுது
வந்த தாத்தா படங்களை அவனிடம்
இருந்து பிடுங்கி கொண்டார்
"என்
கிட்ட இருக்க ஒரே சொத்து
இது தான்...இதையும் எடுத்துட்டு
போய்டாதீங்க சாமி..." அவர் முகத்தில் இன்னும்
கொஞ்சம் பயம் ஒட்டிக்கிடந்ததது. முருகன்
அவரை பாவமாய் பார்த்தான்...தனது
பைக்குள் கைவிட்டு வெள்ளை காகிதத்தையும் ஒரு
பென்சில்லையும் எடுத்து அவரிடம் கொடுத்தான்.
"உனக்கு
தான் வாங்கி வந்தேன் வச்சுக்கோ..."
"எனக்கா.." எனக் கேட்டார்..
"ஹ்ம்ம்
உங்களுக்குத்தான்..... இதுல வரைஞ்சா இன்னும்
நல்லாருக்கும் எங்கண்ணன் இதுல தான் வரையும்..."
அவர் சிரித்தார் "நீ போ.. போ..
யாராவது பத்தா அடிப்பாங்க..!!"
"என்ன
யாரும் அடிக்க மாட்டாங்க... நீ
இங்க என்ன பண்ற..?"
"உன்ன
யாரு அடிப்பா...என்ன தான் அடிப்பாங்க...போ போ..!!"
"நீ என்ன
கோவில் கோவிலா வரஞ்சு இருக்க..?!"
"கோவில்..!!!"
என்று கூறி பெருமூச்சு விட்டார்
"அது
தான் என் கனவு..!!"
"என்ன
சொல்ற..?"
"நீ
கோவிலுக்கு உள்ள போய் இருக்கியா..?"
"இது
என்ன கேள்வி நிறையா தடவ
போய் இருக்கேன்"
"எப்படி
இருக்கும்...ஆள் உயரத்துக்கு தத்ரூபமா
சிலைங்க.... ஒரு வித தெய்வீக
நறுமணம்...நாதஸ்வரம்...மிருதங்கம்...மேகங்களுக்கு நடுவே இருக்குற மாறி
ஆதி அந்தம் இல்லாம நர்த்தனம்
ஆடிக்கிட்டு புகைகளுக்கு நடுவே எம்பெருமான்... சொர்க்கம்
மாறி இருக்குமா..." மெய் மறந்து கூறிக்கொண்டிருந்தார்.
முருகன்
பல தடவை சென்று இருந்தாலும்
கோவிலை இது போல் ரசனையுடன்
ஒரு போதும் அவன் அணுகியதில்லை.
ஆச்சர்யத்துடன் அவரிடம் கேட்டான்
"நீ
கோவிலுக்குள்ள போனதே இல்லையா..?"
அவர் முகத்தில் சோகம் பரவியது "இன்னும்
போனதில்லை..!1"
அப்பொழுது
முருகன் வயது மதிக்கத்தக்க ஒருவன்
ஓடி வந்தான். தாத்தாவை ஏற இறங்க ஒரு
மாதிரி பாத்து விட்டு "டேய்
இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?
உன் அக்கா உன்ன ஊர்
பூரா தேடிகிட்டு இருக்கு"
"ஏன்
என்னவாம்..?"
"உங்கண்ணன்
வந்துட்டானாம்.... தென்னந்திட்டுல ஏதோ கூட்டமாம்..!!"
இதை கேட்ட மறு நொடி
முருகன் அங்கில்லை.. தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தான்.
ஜோல்னா
பையில் புது சட்டை
சகிதம் அதிரசத்துடன்
விறுவிறுவென்று நடக்க
ஆரம்பித்தான். கதிரவன் மேற்கே மறைய
துவங்கியதால் இருட்ட துவங்கி இருந்தது.
முருகன் கடற்கரை மணலில் தடுமாறி
வழியில் இருந்த நண்டுகளை வளைக்குள்
விரட்டிக்கொண்டு அந்த கூட்டத்தை நோக்கி
ஓடினான். தீபந்ததின் வெளிச்சத்தில் கணேஷின் முகம் மற்றொரு
பந்தம் போல் சுவ்வாலை வீசிக்கொண்டு
இருந்தது.சில ஆண்டுகளில் முழுவதுமாய்
மாறி இருந்தான். முகம் முழுவதையும் தாடி
மறைத்திருந்தது. கூட்டத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த அவன்
முருகனை கண்டதும் லேசாய் புன்முரிந்தான்.
"நாம்
மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம்…நாம் போராடி எட்டிய
தருணம்…இன்னும் சில தினங்களில்
நமக்கு சுதந்திரம்...."
கூட்டம்
சந்தோஷ முழக்கமிட்டது.
"பல
பரிசுகளுடன் நாய் போல வாலை
ஆட்டிக்கொண்டு வந்த ஆங்கிலேயர்களை பண்டைய
மரபு விருந்தோம்பலின் படி வாழ்த்தி வரவேற்றோம்....
உபசரித்தோம் நாம்.... வந்தவர்கள் காலை சுற்றிய பாம்பாய்
நம்மை அடிமைப்படுத்த நினைத்த பொழுது வெகுண்டு
எழுந்தோம். போராடி பல தியாகிகள்
உயிர் கொடுத்து நமக்கு நமது உரிமையை
நமது பெருமையை தந்துள்ளனர்... நாம் கொண்டாட வேண்டும்,
இன்று மட்டும் அல்ல என்றும்
தினம் தினம் நமது சுதந்திரத்தை
கொண்டாட வேண்டும்.."
"ஆம்
கொண்டாட வேண்டும்.. கொண்டாட வேண்டும்.." என்று
சிலர் எழுந்து ஆட ஆரம்பித்தனர்.
வேறு சிலர் "ஜெய் ஹிந்த்", "வந்தே
மாதரம்" என்று முழக்கமிட்டனர் . அவர்களை
கை அசைத்து அமரச் சொன்னான்
கணேஷ்.
"கொண்டாடலாம்...கொண்டாடினால் மட்டும் போதுமா..?? அன்று
இருந்த அந்த அமைதி இன்றும்
இருக்கிறதா நம்மிடம்..??"
"இல்லை
இல்லை..!!"
"ஆம்..!!
இல்லை தான்..!! முன் போன்ற வளமான
நாடாக நமது பாரதம் இல்லை,
அமைதி இல்லை, கொட்டிக்கொடுக்கும் வாணிபம்
இல்லை, ஆனால் நம்மிடம் அன்று
இல்லாதா ஒன்று இன்று இருக்கிறது
அது என்ன..??"
"அரசாங்கம்"
"ராணுவம்"
என்று பலக் குரல்கள்
"ஒற்றுமை....
நம்மிடம் இப்பொழுது ஒன்று பட்ட இந்தியா
உள்ளது..!!அது மட்டும் போதுமா..?
சுதந்திரம் வாங்கி சுயாட்சி செய்து
என்னத்த கிழிக்க போகிறீர்கள்..? ஒருவருக்குள்
ஒருவர் சண்டை இட்டு மாண்டு
மடிய போகிறீர்கள் என்று எள்ளி நகை
ஆடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் முகத்தில் மண்ணைப்
பூச வேண்டும்..."
"ஆம்
ஆம்..."
"நமது
மானதிற்காகவும் வீரதிற்காகவும் நாட்டிற்காகவும் போராடிய அனைவருக்கும் நாம்
செய்ய வேண்டியது என்ன தெரியுமா.."
"என்ன
என்ன...???"
"நம்
நாட்டின் பெருமையை, கலாச்சாரத்தை மீட்க வேண்டும்..!!! நம்மை
பீடித்த விஷ பேயாகிய பரங்கியரின்
சுய ரூபத்தை நாம் உணரவே
இரண்டு நூற்றாண்டு ஓடி விட்டது, பரங்கியனை
ஒழிக்கவே மேலும் ஒரு நூற்றாண்டு
ஆகிவிட்டது. நமது நாட்டில் இன்னும்
ஜாதி மதம்... மற்றும் அதன்
பெயரில் தீண்டாமை என்னும் பல பெரிய
பேய்களும் பல சின்ன பேய்களும்
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாய் தின்று
கொழித்து மிக பெரியதாய் வளர்ந்துள்ளன.
அவற்றை விரட்ட எத்தனை நூற்றாண்டுகள்
ஆனாலும் அவற்றை விரட்டும் வரை
நம் போராட்டம் ஓயாது நண்பர்களே ஓயாது..!!
இனி சட்டமன்றகள் மட்டும் அல்ல கோவில்களும்
அனைவருக்கும் சமமே என்பதை அனைவருக்கும்
புரிய வையுங்கள்..!! நண்பர்களே இந்நேரத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல
ஆசைப்படுகிறேன். அது ஒரு அழகான
கிராமம் அந்த கிராமத்தில் கண்
பார்வையற்ற சிறுமி ஒருத்தி இருந்தாள்.
அனைத்தும் முடிந்த அவளால் இப்பூவுலகை
பார்க்கமுடியாது வேதனைப்பட்டாள். அவள் தினமும் கடவுளிடம்
வேண்டினாள் ஒரு நாளாவது கண்
பார்வை கொடுங்கள் என்று. கடவுளும் மனமிரங்கி
ஒரே ஒரு நாள் இவ்வுலகை
ரசிக்க வரம் தந்தார். அச்சிறுமியும்
அந்த ஒரு நாளில் விளையாடும்
மானுடன் துள்ளிக் குதித்தாள்...மயிலுடன் ஆடினாள்...மீனுடன் நீந்தினாள்...கதிரவனின்
செம்மையைப் பார்த்து வண்ணம் கொண்டாள்.. மேகங்களுடன்
மிதந்தாள்.. அந்த நாள் முடிவுற்றது..
சூரியன் மறைந்து இருள் கவ்விய
நேரம் அவள் வாழ்விலும் நீங்கா
இருள் சூழ்ந்தது...அப்பொழுது கடவுள் அவளிடம் சந்தோசமா
எனக்கேட்டார். அதற்கு அவள் விம்மி
அழத்துவங்கினாள். "ஏனம்மா அழுகிறாய்..?" என்று
கேட்டதற்கு...இது வரை எதையோ
நான் இழக்கிறேன் என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தேன்.
இன்று நான் எதை இழக்கிறேன்
என்று தெரிந்து கொண்டேன். முன்னை விட வருத்தமாக
உள்ளது என்றாள். நண்பர்களே நம் மக்கள் எதை
இழந்துள்ளார்கள் என்பதை புரிய வையுங்கள்...நம் நாடு தானே
முன்னேறும்...அவர்கள் கண்களை திறக்கும்
கடவுளாய் இருங்கள்....!!!"
3. இந்தியா
இனி சுதந்திர நாடு
அதிகாலை
ஐந்து மணிக்கே ஊர் கோலாகலமாக
திருவிழா கோலம் பூண்டு இருந்தது.
கணேஷ் முழுக்க சவரம் செய்து
வெள்ளை வேட்டி சட்டை அணிந்து
தின்னையில் அமர்ந்து தனது மனைவி அமுதவல்லியிடம்
மதராசில் நடந்த கூட்டத்தை பற்றியும்
லட்சகணக்கானோர் திரண்டு கோட்டையில் தேசியகொடியை
ஏற்றியதை பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். அவனருகில் வந்து அமர்ந்த முருகன்
"நமக்கு உண்மையிலேயே சுதந்திரம் கெடச்சுடுச்சா அண்ணா..?" எனக் கேட்டான். அதை
கேட்ட அமுது சிரித்தாள். கணேஷ்
அவனைக் கட்டிக்கொண்டு
"ஏ
முருகா அப்படி கேக்குறா... சத்தியாம
சுதந்திரம் கெடச்சுடுச்சு..!!"
"இல்ல
எனக்கு ஒரு வித்தியாசமும் தெரில
அதான்..!!"
"உனக்கு
என்ன தெரியனும்..?"
"நம்ம
ஊர் அப்பிடியே தானே இருக்கு.... நம்ம
வீடும் அப்படியே தானே இருக்கு... காலையில
மாடு ஓட்டிகிட்டு போற கோனார் வழக்கம்
போல காட்டுக்கு போய்ட்டார்...அம்மா வழக்கம் போல
சமையல்கட்டுல இருக்கா...அக்காவ வெளில கூப்டா
வரக்கூடாதுன்னு சொல்றா..!!"
கணேஷ் அவனை சிறிது
நேரம் கூர்ந்து பார்த்தான் "நா சொல்றது உனக்கு
புரியாதுன்னு தெரில...இருந்தும் சொல்லறேன்...இது வரைக்கும் நம்மல
யாரோ ஒருத்தன் ஆண்டான்...இனி நம்மள நாமே
ஆள போறோம்...அதோட பலன் கொஞ்ச
கொஞ்சமா தெரியும்...அக்கா கூட பள்ளி
கூடத்துக்கு போக போறா...நம்மாள்ள
ஒருத்தன் கோட்டைக்கும் போவான்...நாளைக்கு நீ கூட படிச்சுட்டு
கலெக்டர் ஆகலாம்...இனி நாம தாண்டா
ராஜா... நீ ராஜா...நான்
ராஜா...இந்த நாட்டுல இருக்க
ஒவ்வொருத்தனும் ராஜா...யார் வேணாலும்
எங்கு வேணும்னாலும் செல்லலாம்...யாரையும் யாரும் தடுக்க முடியாது...!!!"
"அப்படினா
கோவிலுக்கு யார் வேணாலும் போகலாமா..."
"கண்டிப்பா...அதுக்குன்னு திருவிதாங்கூர்ல சட்டமே இருக்கு..!!"
" சரி"
என்று கூறி எழுந்தான் முருகன்
"எங்கடா
போற..."
"சுதந்தரத்தை
கொண்டாட" என்று கூறி ஓடினான்.
தாத்தா
வழக்கம் போல ஆலமரத்தில் சாய்ந்து
படுத்திருந்தார். முருகன் ஓடி வந்தான்
"என்ன தாத்தா... இப்படி படுதுக்கிடக்குற..!!"
"ஏன்
என்னாச்சு..??"
"நமக்கு
சுதந்திரம் கெடச்சுடுச்சு..!!"
"அப்படியா..?"
"என்ன
அப்படியா உனக்கு ஒன்னும் தெரியாதா..?"
"ஒன்னும்
தெரியலியே..!!"
"சுதந்திரம்
கெடச்சா என்னென்ன கெடைக்கும் சொல்லு.."
" என்னென்ன
கெடைக்கும்..??"
"ஹ்ம்ம்
எல்லாம் கெடைக்கும் இப்போ நா ராஜா..எங்கண்ணன் ராஜா... நீ ராஜா..!!"
தாத்தா
சிரித்தார் " நானுமா..?!"
"ஆமா..!!
நீயும் தான்..!! யார் வேணாலும் எங்க
வேணாலும் போகலாம் கோவில் உட்பட..!!"
என்று முருகன் சொன்ன பொழுது
தாத்தா எழுந்தே விட்டார்.
"என்ன
என்ன சொன்ன..??"
"இப்போ
யார் வேணாலும் கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன்..!!"
தாத்தாவிற்கு
கைகால் ஓடவில்லை...
"வா
கோவிலுக்கு போகலாம்..!!" என்றான் முருகன்
"நில்லு
நில்லு..!!" என்று தாத்தா அருகில்
இருந்த குடிசைக்கு கம்பை பிடித்துக்கொண்டு ஓடினார்.
துண்டைக் கட்டிக்கொண்டு அருகில் இருந்த குளத்தில்
முங்கி எழுந்து... வளந்திருந்த முடிகளை சின்டாய் கட்டிக்கொண்டார்.
துருப்பிடித்திருந்த பெட்டியில் இருந்து ஊதா நிறம்
ஏறி இருந்த வேட்டி சட்டையை போட்டுக் கொண்டார்.
நெற்றியில் பெரிய பட்டை இட்டுக்கொண்டு துள்ளலுடன்
முருகனோடு நடக்க ஆரம்பித்தார்.
சிதம்பரத்தை
நெருங்க நெருங்க நான்கு கோபுரங்களும்
தெரிய ஆரம்பித்தன. குறுக்கு வழியில் சென்று கோவிலின்
சமீபத்தை நெருங்கிவிட்டனர். தாத்தா மெய்மறந்து கோவிலை
பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்.
கோவிலின்
கிழக்கு வாசலுக்கு வந்து சிறிது தயங்கினார்.
போலாம் என்று முருகன் செய்கை
செய்தான். அவர் தனது கால்களை
கோபுர படிகளில் வைத்தார். தன் வாழ்நாளில் பார்க்கத்துடித்த
ஓர் இடம்..!!ஒரு பர்லாங்கு
தூரமே இருந்தாலும் பார்க்க முடிந்திறாத இடம்..!!
இனி பார்க்கவே முடியாது இறந்து விடுவோமோ என்று
நினைத்த இடம்..!! அவர் நடக்க நடக்க
அவர் கண்களுக்கு விருந்தாய் விரிந்து கொண்டிருந்தது..!!
அவர் தன்னை முழுதும் மறந்திருந்தார்.
சுகந்தம் நிறைந்த தென்றல் அவர்
முகத்தில் அப்பியது.... ஆயிரங்கால் மண்டபத்தில் நாதஸ்வரமும் மிருதங்கமும் இசைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு அபிநயம் பிடித்து
பரதம் ஆடிக்கொண்டிருந்தாள் ஓர் யுவதி. அவளை
தாண்டி தங்க கோபுரம் ஜொலித்துக்
கொண்டிருந்தது.
அவர் தன்னை மறந்து "என்னாட்டவர்க்கு
இறைவா..." என்று ஆரம்பிக்கும் பொழுது
ஒரு கல் பறந்து வந்து
அவரது நெற்றியில் பட்டு இரத்ததுடன் தெரித்தது.
"ஆ..."
என்று கத்திக்கொண்டு விழுந்தார்
தீடீர்
என்று என்ன நடந்தது என்று
அறியாத முருகன் அதிர்ச்சியுடன் அவரை
பிடித்தான்.
அப்பொழுது
தான் பார்த்தார்கள் கோவிலே
ஸ்தம்பித்து நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருப்பதை.
ஒருத்தன்
வந்து கீழே கிடந்த தாத்தாவை
உதைக்க துவங்கினான். மேலும் சிலர் சேர்ந்துக்கொண்டனர்.
முருகன் தடுத்தான் "ஏ அவர அடிகிறீங்க..
அதான் சுதந்திரம் கிடைச்சுருச்சுல..??"
ஒரு முரட்டு கை அவனை
அறைந்தது... சில அடி தள்ளி
குளத்துச் சுவரில் இருந்த நந்தியின்
மேல் முட்டிக்கொண்டான்.
ஏறக்குறைய
தாத்தா மயக்கம் அடையும் அளவிற்கு
அடித்துவிட்டு இழுத்து சென்று வெளியில்
எறிந்து விட்டார்கள்.
முருகன்
அழுது கொண்டே அவர் அருகில்
சென்று அமர்ந்தான்... அவரை கஷ்டப்பட்டு எழுந்து
சம்மணம் இட்டு அமரச்செய்தான். இருவரும்
ஒன்றும் பேசவில்லை...முருகன் அழுது முடித்து
கண்களை துடைத்துவிட்டு பார்த்தபொழுது தாத்தா அங்கு இல்லை
அருகில் கசக்கப்பட்ட காகிதம் ஒன்றில் ஓர்
யுவதி பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.
தூரத்தில்
வானொலி ஒலித்தது...ஆல் இந்தியா ரேடியோ...செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.... இந்தியா
இனி சுதந்திர நாடு...??!!
No comments:
Post a Comment