Thursday 31 July 2014

Story 128: ஒரு நாயகன்



ஒரு நாயகன்

ஹலோ

எல ராசு, எங்க இருக்க?”

வீட்லதாம்ல சொல்லு

நம்ம ஜாவா எங்கெருக்கு?”

எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு கரும்வளவி, அதுவா?”

ம்

நேத்து தான் செத்துப்போச்சி. ஒரு வாரமா சீக்கு

என்னது?!”

போன மாசமே ரொம்ப வீக்காகி சரியா சாப்பிடல. தலைய தொங்கபோட்டுக்கிட்டே கிடந்துச்சு. கொஞ்சம் சின்ன வெங்காயம் உரிச்சி கொடுத்தவுடனே தேறிடுட்டு. பிறகு இப்போ ஒரு வாரமா ரொம்ப முடியாம இருந்து நேத்து செத்துப்போயிட்டுல

காட்! எத்தன வைப்பு எடுத்த?”

என்னத்த எடுக்க? குருட்டுக் கண்ணை வெச்சிக்கிட்டுக் கோழியோட சேர்றது சாதாரண விஷயமா? அதுலயும் இப்போதைக்கு ஒரு கோழிதான் கெடக்கு எங்கிட்ட. ஆனா செம லீனியேஜ். .. திருச்சில பந்தயம் அடிச்சதுலாடே, ஒரு யாகூத்து? அதோட அம்மாதான். கோழியைக் குறைசொல்ல முடியாது. இந்தக் கரும்வளவிய மட்டும் ஏறவிட்டு போன மாசம் முதவைப்பு வச்சேன். எல, ஒரு முட்டை கூட பொறிக்கல. 20 முட்டையும் அப்படியே போச்சி. வெயில் ஜாஸ்தியா இருக்குறதுனாலயா இல்ல சத்தில்லையானு தெரியல. சத்துமாவு, விட்டமின் மாத்திரைனு என்னலாமோ கொடுத்துப் பார்த்தேன், நோ யூஸ். ஒரு குஞ்சு கூட எடுக்க முடியல. சரி நீயேன் பதட்டமா பேசுத?”

அங்கயே இரு. உன்னைப் பார்க்கதான் வந்துட்டு இருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம்

உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நேரம் விக்ரமன் தனது யமஹா ஆர்.எக்ஸின் கிக்கரை உதைத்து வண்டியைக் கிளப்பியிருப்பான். எனக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. விஷயம் என்னவாக இருக்கும்?

~~~~~~~~~~

லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுது.  கொல்லைப்புறத்தில் ஓங்கி வளர்ந்திருந்த சக்கைமரத்தின் காய்ந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து விளையாடிக் கொண்டிருந்தது காற்று. மாவிலைகளூடே காய்த்துத் தொங்கிய மாங்காய்களும் பக்கத்தில் பெரிய நெல்லிக்காய் மரம் ஒன்றும் பல வருடங்களாக வரிசையாக நடப்பட்டு அழகாகப் பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டத்து மரம், செடி, கொடிகள் ஒவ்வொன்றும் காற்றின் அவ்விளையாட்டைத் தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தன.

இன்பராஜ் அடுப்பிலிருந்த வெந்நீரை இறக்கிவைத்துவிட்டு மழையில் நனையத் தொடங்கிய மெத்தையை எடுத்துவந்து உள்ளே போட்டார். காம்பவுண்டுக்கு வெளியே இருந்து பார்க்கும் எவருக்கும் அந்தப் பெரிய தோப்பின் நடுவே ஒரு சின்ன வீடு இருப்பது சொல்லாமல் தெரிய வாய்ப்பில்லை. கனடாவில் தங்கிவிட்ட தனது பால்யக்கால நண்பனின் தோப்பு வீடு அது.

இன்பா.. நீ எங்க தங்கியிருப்பா

இனி தான் தேடணும்

ஒன்னு செய்யி மக்ளே. நீயே இந்தத் தோப்பு வீட்டப் பாத்துக்கயேன்? இப்போதைக்கி இத விலைக்கிக் குடுக்கவும் எனக்கு மனசில்லே. தவிர பெரியவனுக்கப் பொண்டாட்டிக்கும் இதை விற்க இஷ்டமில்லே

பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்த இன்பராஜுக்கு இப்போது 60 வயதிருக்கலாம். தளர்ந்துவிட்ட ஒடிசலான தேகம். உடலின் தெம்பை எல்லாம் காலம் உறிஞ்சிக்கொண்டு உயிரை மட்டும் காலனுக்காக மிச்சம் வைத்திருந்தது.

வானம் இருட்டிக்கொண்டு வர, திடீரென மின்சாரமும் போய்விட, மெதுவாக எழுந்து மெழுகுவர்த்தி ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு உள்ளறைக்குச் சென்றார். அடுக்கி வைத்திருந்த பாய், தலையணை, போர்வைகளை விலக்கிக் கீழேயிருந்த பெட்டியைப் பார்த்தார். பூட்டப்படாமல் இருந்த அதனைத் திறந்து சேலையொன்றுக்குக் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு கருப்புச் சட்டமிடப்பட்ட புகைப்படத்தைக் கையிலெடுத்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவரது நனைந்திருந்த கண்கள் ஜொலிக்க சில நொடிகள் அப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அதனைத் தார்ஸா வாசலுக்கருகே அடிக்கப்பட்டிருந்த ஆணி ஒன்றில் மாட்டிவைத்தார்.

~~~~~~~~~~

விக்ரமனின் யமஹா என் வீட்டுமுன்னால் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

ராசு எங்கம்மா?”

உள்ளதான் இருக்கான். போய்ப் பாரு

என்னை நோக்கி வந்தவனை இழுத்துக்கொண்டு என் அறைக்குச் சென்றேன்.

என்னல, கோல்டன் பால் வாங்குன மெஸ்ஸிய மாதிரி மூஞ்சிய வெச்சிட்டு நிக்க? சிரிக்கியா அழுதியா? என்ன விஷயம் சொல்லு

இந்த போட்டோவைப் பாரு

அப்புகைப்படத்தைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன். ஆச்சர்யத்தில் விரிந்த என் விழிகள் மூட மறுத்தன. கண்களில் கொலைவெறியோடு சேவல் ஒன்று அந்தரத்தில் ஆக்ரோஷமாகப் பறந்தவாறு எதிர்ச்சேவலைத் தாக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அது உண்மையா என்றவாறு விக்ரமனைப் பார்த்தேன். அவன் கண்களால் சிரித்துக் கொண்டிருந்தான். 

ராசுக்குட்டியாகிய நானும் விக்ரமனும் நெருங்கிய நண்பர்கள். புதுவீடு கட்டி மாறியபிறகு அம்மாவுக்கு எப்படித் தோன்றியதோ தெரியவில்லை, ‘பிள்ளைகள் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடட்டுமேஎன்று குப்பைக்கோழி ஒன்றையும் சேவல் ஒன்றையும் வாங்கி வளர்த்துவந்தார். அப்போதுதான் எனக்குச் சண்டைச்சேவல் மீது ஆசை வந்தது. தெரிந்த அண்ணன்களிடம் எல்லாம் இதைப்பற்றி விசாரிக்க, எனக்கொரு இழை கிடைத்தது. ஸ்டாலின் அண்ணனின் வீட்டிலிருந்து இரு குஞ்சுகளைவளர்த்துத் தருகிறேன்என்று சொல்லி இரவல் வாங்கிவந்தேன். ஒரு கோழி, ஒரு சேவல். பிறந்த சில மாதங்களிலேயே தெருவிலிருந்த மற்ற சேவல்களைச் எனது சண்டைச்சேவல் விரட்ட ஆரம்பிக்க, தனியாகக் கூண்டு ஒன்று செய்து அதனை அடைத்துவைத்தேன். அப்படியே வேறு சிலரின் நட்புகளும் கிடைக்க, கல்லூரியைத் தவிர என் வாழ்க்கை முழுவதும் சேவல், கோழி, தப்புனி, பந்தயம் என்று ஆகிப்போனது. அப்போது கிடைத்த நட்பு தான் விக்ரமனுடையதும்.

மெல்ல சண்டைச்சேவல்கள் வளர்ப்பதின் நுணுக்கங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டதோடு சில தலைமுறைகள் சேவல்களையும் கோழிகளையும் வளர்த்து, சண்டைக்குத் தயாராக்கி, வெப்போர்கள் சிலவற்றில் இறக்கிச் சிலபல பந்தயங்களும் வென்று அதிலே பைத்தியமாகிப் போனேன்.

கல்லூரியின் இறுதியாண்டு ப்ராஜக்ட் வைவா நடைபெற்ற அறை. நாங்கள் நான்கு மாணவர்கள், எங்களுடன் மாடர்ன் பிசிக்ஸ் ஆசிரியர் மற்றும் வேறு கல்லூரியிலிருந்து எங்களை மதிப்பிட வந்திருந்த எக்ஸ்டர்னல்.

என்னடே செஞ்சிருக்கீங்க?”

சார்.. ஸ்ட்ரான்சியம் பேரியம் டார்ட்டரேட் நான் லீனியர் ஆப்டிக் க்ரிஸ்டல்ஸ்

...

...

...

.கே. யூ மே லீவ்

ராசுக்குட்டி, நீ மட்டும் இருஎங்கள் ஆசிரியர்.

யோசித்தபடியே ஸ்லோ மோஷனில் உட்கார்ந்தவனை அழைத்துப் பக்கத்தில் அமர வைத்தார் எக்ஸ்டர்னல். எனக்கோ ஒரே குழப்பம்.

அப்றம் தம்பி. சேவல் வளர்க்குறாப்ல போல? கேள்விபட்டேன்

ஆமா சார். ஒருவருஷமாத் தான்தயங்கியவாறு நான்.

ஏம்ல.. அதைப் போய்ச் செய்தியே, அது ஒரு மேட்னஸ்லா?” என்று பலமாகச் சிரித்தவாறு என் முதுகில் ஒரு அடியைக் கொடுத்துவிட்டுத் தானும் கிறுக்குப்பிடித்து அலையும் கதையை என்னிடம் சொல்லத் துவங்கினார். எல்லாம் முடிந்து என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்ட பிறகே மற்ற மாணவர்களுக்கான வைவா தொடர்ந்தது.

விக்ரமன் வேறு சில புகைப்படங்களையும் மற்றொரு வீடியோ ஒன்றையும் எனக்குப் போட்டுக்காட்டினான். அவற்றில் அதகளம் பண்ணிக்கொண்டிருந்த சேவல் சந்தேகமில்லாமல் அவன் எனக்கு வாங்கித்தந்து நேற்று இறந்துபோன கரும்வளவி தான். சத்தியமாக அது அவ்வளவு பெரிய அசகாயச்சூரன் என்பதே அதற்குமுன் எங்கள் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

வெறும் 6 நிமிட ஆட்டம் கூட இல்லை. ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் அடிக்கவில்லை. ஆனால் எதிர்ச்சேவல் அடிக்கும் அடிகளை எல்லாம் அசால்ட்டாக வாங்கிக்கொண்டிருந்தது. தனது நேரத்துக்காகக் காத்திருந்தவனைப் போலச் சரியாக 05:47 நிமிடத்தில் தலையைத் தாழ்த்தி ஒரு வானூர்தி போல உடலைத் தட்டையாக வைத்துக்கொண்டு தனது கூர்மையான பார்வையைப் பாய்ச்சியவாறே எதிரே நிற்கும் கதரின் பூவைக் கவ்விக்கொண்டு தன் முள்ளால் அதன் கழுத்தில் அடித்தது ஒரே அடி. அந்தச் சேவல் தன் கழுத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு கதறியவாறே பல சுற்றுகள் சுற்றிவிட்டு கீழே தொப்பென்று விழுந்து இறக்கையைப் படபடவென அடித்துத் துடித்துக்கொண்டிருந்தது. சில நொடிகளில் உயிரையும் இழந்தது. அவ்வளவு வீர்யமான அடி. சும்மா சொத் சொத் என்று சுற்றிக்கொண்டிருக்காமல் வாழ்வா சாவா என்ற ஓர் அசுரத் தாக்குதல். 

அந்த வீரச்சேவல் முன்தினம் இறந்துபோனதை நினைத்து வயிறு எரிந்து கொண்டிருந்தேன் நான். ‘ச்சே. இருக்கும்போது அதோட அருமை தெரியலையே!’

இந்தச் சேவலை நான் யார்ட்ட வாங்குனேன் தெரியுமா?” விக்ரமன் கேட்டான்..

யார்ட்ட?”

நாகர்கோவில்ல நம்ம பீலா ஒன்னு ட்ரா பண்ணும்போது பக்கத்துல ஒரு மஞ்சசட்டை நின்னாரு ஞாபகம் இருக்கா?”

எல.. ஆமா. அவர் சேவல் கூட, ஒரு சீட்டா, ஒரே தண்ணியில பந்தயம் அடிச்சிதே?”

அவரே தான். எதுக்கும் இருக்கட்டுமேனு அவர் நம்பரை வாங்கி வெச்சிருந்தேன். தற்செயலா உனக்குச் சேவல் வேணும்னு நீ கேட்டவுடனே அவருக்குப் போன் போட்டப்பந்தான் சொன்னார். அவர்ட்ட இருந்த எல்லாக் கோழி, சேவலையும் வித்துட்டாராம். ஆனா இந்தச் சேவல மட்டும் எவனும் வாங்கல. கண்ணு ரெண்டும் குருடா இருந்திச்சில்லா?”

ஆமா. அந்தக் குருட்டுச்சேவலை நம்மளே ப்ரீட் எடுக்கத் தானலே வாங்குனோம்?”

ம். நான் தற்செயலா போகர் எழுதுன பாட்டு ஒன்னை நெட்ல தேடிட்டு இருந்தப்போ தான் இந்தப் போட்டோஸ் கிடைச்சது. இன்னும் தேடினா இந்த வீடியோ. இன்னும் என்னென்ன இருக்கோ?”

போகர் எழுதுன பாட்டா? அதென்ன?”

கொள்ளவே நத்தையென்ற சூரிதன்னை
கொண்டுவந்து ஒருமாதம் நீரில்போட்டு
விள்ளவே மாதமது சென்றெடுத்து
வெண்ணெய்போல் அறைத்துநல்ல சாவலுக்கு
உள்ளுக்குக் கொடுத்துச்சண்டை விட்டுப்பாரு
ஒருக்காலும் எதிரியிதை வெல்லலாகா
தல்லவே கத்திகட்டி விட்டபோதும்
அறுபடாத் தோல்வியென்ப தருமைதானே.”

என்னல பாட்டு இது?”

நத்தைசூரி மூலிகையைப் பத்தின ரகசியம்

செத்துப்போன என் கரும்வளவியைப் பற்றிய எல்லா விவரங்களையும் உடனே கேட்டாக வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

சரி உடனே கிளம்பு. நாம இப்போ நாகர்கோயில் போறோம்என்றேன்.

அதுல ஒரு சிக்கல்

என்ன?”

இன்னும் ஒரு மணிநேரத்துல நான் பெங்களூர் கிளம்பணும், அம்மா அப்பா கூட

~~~~~~~~~~

இன்பராஜ் இரவு தூக்கம் வராமல் தவித்தார். ‘ஏன் அந்தப் புகைப்படத்தைத் தார்சாவில் மாட்டிவைத்தோம்என்று ஆனது. ‘பெட்டிக்குள்ளேயே வைத்திருந்திருக்கலாமோ?’

எதிர்காலமே இல்லையென்று ஆனபின் அவருக்குப் பழைய நினைவுகளின் ஞாபகமே நிகழ்காலமாகிப் போனது. போட்டோவில் அவரது மனைவி வெகு அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருக்க, அருகே அம்மாவை அச்சில் வார்த்தது போல ஒரு பதின்ம வயதுப்பெண். அவளுக்கு அருகில் ஒரு பையன். பையனைக் கொஞ்சம் பெரியதாக்கிப் பார்த்தால் அப்படியே இன்பராஜ் தான். அவர் அடுத்து உட்கார்ந்திருந்தார்.

இன்பா... இன்பா...”

டேய்! அப்பாவைப் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாதுனு எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன் உனக்கு?”

அதுசரி. நீ கூப்பிடறத பார்த்து தான உன் பிள்ளையும் கூப்பிடும்?”

எல்லாம் ஒரு காலம். மூனு பேரையும் கார்ல ஒன்னா கூட்டிட்டுப் போய் என் கையாலயே காவு கொடுத்துட்டேனே! என்னை மட்டும் ஏன் விட்டுவெச்சிருக்க முருகா? நினைச்சு நினைச்சு வெதும்பியே சாகுறதுக்கா?’ இன்பராஜ் கதறி அழுதார்.

~~~~~~~~~~

எனக்குப் பொறுமையில்லை. விக்ரமனைப் பெங்களூருக்கு அனுப்பிவைத்த கையோடு எனது கரிஷ்மாவை எடுத்துக்கொண்டு நாகர்கோயில் புறப்பட்டுவிட்டேன். மனதில் கரும்வளவி போட்ட சண்டைக் காட்சிகள் மறுஒளிபரப்பாகிக் கொண்டேயிருந்தன. சொல்லப்போனால் அந்த ஆளைப் பார்க்க முடியுமா என்பதே சந்தேகம் தான். அவரது அலைபேசி எண் வேலை செய்யவில்லை. நாகர்கோயிலில் இருக்கும் வேறு நண்பன் ஒருவனிடம் பேசி என்னை அழைத்துப் போகச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்.

அண்ணே, நான் ரீச் ஆகிட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?”

தம்பி. ஒரு சின்ன வேலையாகிப் போச்சு. நீ என்ன செய்ற, பக்கத்துல விசாரிச்சி நேரா தாமரைக்குளம்னு ஒரு ஊரிருக்கு, அங்கே போ. ஊருக்குள்ள போய் அல்ஃபோன்ஸ் ஆதிசாமின்னு பேர்ச் சொன்னாலே போதும், யார்வேணா அவருக்க வீட்டை உனக்குக் காட்டிருவாங்க

சில பல அலைச்சல்களுக்கும் விசாரிப்புகளுக்கும் பயணத்திற்கும் பின் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். உள்ளேயிருந்து வந்த அவர், அவரே தான். எனக்குள் ஒரு சந்தோஷ அலையடிக்க, என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

நீங்க கடைசியாக் கொடுத்த கரும்வளவிய நான் தான் வாங்குனேன்

சாதாரணமாகச் சிரித்த அவர், “சொல்லுங்க தம்பிஎன்றார்.

எனக்கு அதோட ஹிஸ்டரி தெரியணும்

ஆர்வமுடன் என்னைப் பார்த்த அவர், அதுவரை அங்கே நிலவிக்கொண்டிருந்த அமைதியைக் குலைத்தவாறு சத்தமாகப் பேசத் தொடங்கினார்.

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

நின்றாடுமாம்?”

சேவல்?”

ஆறுமுகனின் அழகிய கொடியோன் சேவல்

நான் சிரித்தேன்.

நீ வாங்குன சேவலுக்கு ரெண்டு கண்ணும் இருந்திருக்காதே?”

ஆமா. அப்பவே நான் யூகிச்சிருக்கணும். பயங்கரமா சண்டை போட்டிருக்கு. சம்திங் ஸ்பெஷல்னு. ஆனா நான் நினைச்சேன், திறமையில்லாம வசம்மா அடி வாங்கிக் கண்ணு ரெண்டும் போயிருச்சினு

அப்புறம் எதுக்கு அதை வைப்பெடுக்க வாங்கிட்டுப் போன?”

என்னமோ, எங்களுக்குப் பார்த்தவுடனே பிடிச்சிருந்தது சார்

அது இதுவரைக்கும் பத்துப் பந்தயம் அடிச்சதுனு சொன்னா நீ நம்புவியா?”

“... ... ... ...”

பத்தாவது பந்தயத்துலதான் அதுக்கு ரெண்டாவது கண் போச்சு. கண் போனதுக்கப்புறமும் அது பந்தயம் அடிச்சது

தம்பி.. முதல்முறையா அம்பாசமுத்திரத்துக்கு ஒரு பந்தயம் விடக் கொண்டு போனேன். ஒரே தண்ணி தான். சோலி முடிச்சிருச்சு. அப்பவே அவனுக்கு பயங்கர டிமாண்டு. இரண்டாவது பந்தயம் ஸ்ரீவில்லிப்புத்தூர்ல நடந்ததுஅஞ்சே நிமிஷம் தான். அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு சும்மாதான் நின்னுச்சு. கவர்மெண்ட் பந்தயத்தைத் தடை பண்ணதால கொஞ்சம் கலவரமா இருந்துச்சு. அதுக்கப்புறம் திருநெல்வேலிலயே சீவலப்பேரி பக்கத்துல ஒரு காஞ்சுபோன காம்மாயில வெச்சு ரகசியமா ஒரு பந்தயம். அதையும் அடிச்சிருச்சி. அதுக்குப் பிறகு..” அவர் சொல்லிக்கொண்டே போன விஷயங்கள் எல்லாம் என்னை அசரடித்தன.

இதுவரைக்கும் ஒரு பந்தயமும் ட்ரா பண்ணல. ஒன்னுலயும் தோற்கவும் இல்ல அந்தச் சேவல்

உங்ககிட்டயிருந்த மத்த சேவல்லாம் எப்படி

இருந்திச்சு.. ஒரு மாதிரி. ஏன் கேட்க?”

இல்ல. சண்டை விடுறவன் மனசுக்குத் தான சேவல் பந்தயம் அடிக்கும்? திறமைக்கா அடிக்கும்?”

அவர் சத்தமாகச் சிரித்தார்.

பந்தயத்துக்கு எப்படி ரெடி பண்ணுவீங்க?”

உனக்குத் தெரியாதா?”

இல்ல. உங்ககிட்ட கேட்டுக்கலாமேனு

ஒன்னுமில்ல. சேவலைத் தனியா வளர்க்கணும். நவதானியங்கள் எல்லாம் எடுத்து லேசா வருத்து மாவாக்கித் தண்ணியில கலந்து உருட்டிக் கொடுத்தா சத்து கிடைக்கும். அதுபோக சண்டை விடுறதுக்கு 21 நாளுக்கு முன்னாடியிருந்து பாதாம், முந்திரி, ஆட்டு ஈரல், கறினு சத்தான ஆகாரமா கொடுக்கணும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீச்சல் விடணும். தண்ணிக்குள்ள விட்டுட்டு வாலைப் பிடிச்சி மெதுவா தூக்கினா நீந்த ஆரம்பிச்சிரும்

ம்

அதே மாதிரி நிலத்துலயும் பயிற்சி விடணும். சேவலோட முதுகை அமுக்கிப் பிடிச்சா குனிஞ்சிகிட்டே நடந்து போகும். நாம புஷ்ஷப்ஸ், புல்லப்ஸ் எடுக்குற மாதிரி சேவலுக்கு இது நல்ல பயிற்சி. இதுபோக மஞ்சள் போட்டு வேகவெச்ச மூலிகை ஒத்தடம். துணியைத் தண்ணியில நனைச்சி தோசைக்கல்லுல போட்டுச் சூடாக்கி அப்படியே சேவல்மேல ஒத்தியெடுத்தா வலியெல்லாம் பறந்திரும். உடம்பு முழுசும் நீவி விடணும். எக்குத்தப்பா பண்ணிட்டா அவ்வளவுதான். நீவுற நீவுல கழுத்துல வர்மம் பிடிச்சு அப்படியே பந்தயத்துல போய் நின்னுச்சினா எப்படியிருக்கும்? அதால வாயத் திறந்து சொல்ல முடியுமாஎனக்குக் கழுத்து சுளுக்கிருச்சினு?” அவர் துள்ளலோடு பேசிக் கொண்டிருந்தார்.

பந்தயத்தப்போ தண்ணிக்கு எடுக்கும்போதும் ஒத்தடம் கொடுக்கணும். எங்கயாவது அடிபட்டுக் கிழிஞ்சிருந்தா உடனே தையல் போட்டிரணும் பார்த்துக்கோ, அதே இடத்துல திரும்பவும் அடி விழுந்திச்சினாக் கூட பிரியாத மாதிரி இருக்கணும் நீ போடுற தையல்

! ஆமா சார், கோழியோட கலரை வெச்சு இனங்கண்டு பட்சி பார்த்துச் சண்டைக்கு விடுறதெல்லாம் உண்மையா?

அந்தக் காலத்துல பட்சி பார்த்துத்தான் நிறைய மன்னர்கள் போருக்கே போவாங்க. நம்மளோட பலம், எதிரியோட பலவீனம் இரண்டுந்தெரிஞ்சு ரொம்ப நுணுக்கமா யோசிச்சிச் செய்யிற வேலை அது. மாத்திச் செஞ்சோம்னா நம்ம சைடு காலி. சில சேவற்கட்டுல ரெண்டு சேவலுக்கும் ஜாதகம் கணிச்சு, விளையாடுறதுக்கு முன்னாடியே எது ஜெயிக்கும்னு கூட சொல்லிருவாங்க

.. இப்பல்லாம் திருட்டுத்தனமாத்தான் பந்தயமே நடக்கு. முழுசா தடை பண்ணிட்டாங்களா என்னனுகூடத் தெரியல.. ஆனா எங்கேயுமே பெர்மிஷன் கொடுக்கவே மாட்டேங்குறாங்களாம் சார்

எல்லாம் கத்திப்போர் பண்ணுன வேலை

ஆமா சார்.. சேவல் கால்ல கத்திகட்டிப் பந்தயம் விடுறாங்களே. அந்தக் கத்திப்போர் தான் வீர விளையாட்டாம். வெப்போர் எல்லாம் விளையாட்டே கிடையாதாம்லா?”

யார் சொன்னா அப்படி?”

எஸ்.ரா.னு ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார்

கத்திப்போர்ல பந்தயம் விடுறவங்க சொல்றத வெச்சி எழுதியிருப்பார். தம்பீ.. நம்ம வெப்போருக்குத் தான் சுத்தமான ப்ரீட் தேவை. இதுதான் நின்னு சண்டைபோடும். சும்மா சடசடனு அடிச்சிட்டுக் கிடக்காது. நேக்கோட விளையாடும். கத்தியில்லாம அந்தச் சேவலையும் நம்ம சேவலையும் பந்தயம் விட்டுப்பாரு. அது மண்ணைக் கவ்விட்டு ஓடிறும்

!”

அதெல்லாம் ஒரு பந்தயமா தம்பி? களமே லிட்டர் கணக்குல ரத்தம் கொட்டிப்போய்க் கெடக்கும். சும்மா எவனும் போனான்னுவை? அந்த ரத்தவாடையிலேயே மயக்கம்போட்டு விழுந்திருவான். தோத்துப் போன சேவல் எல்லாம் கறிக்குத்தான் போகும். அதையெல்லாம் தடை பண்ணுறதுல தப்பேயில்ல. ஆனா அதுக்காக நம்ம நூத்துக்கணக்கான வருஷப் பாரம்பரியத்தை மறந்து வெப்போர் சேவக்கட்டைத் தடை பண்றதெல்லாம் முட்டாள்த்தனம் அல்லது அறியாமை தான்

ம்

தமிழ்நாட்டுல இருந்துதான் பாகிஸ்தான், பெர்சியா, இந்தோனேஷியாக்கு எல்லாம் பரவிச்சினு கூட சொல்லுவாங்க. ஆனா பழங்கால நாகரிகங்கள் எல்லாத்துலயும் இந்தச் சேவல் சண்டை நடந்ததுக்கான ஆதாரங்கள் இருக்காம். அவ்வளவு தொன்மையான புகழை, நம்ம வீரத்தின் அடையாளத்தை ஏன் தொலைக்கணும்?”

ம்

எனக்கொரு நோவுனா கூட நான் மருந்து மாத்திரை வாங்க யோசிப்பேன். கோழி, சேவலுக்கு ஏதாவதுன்னா கொஞ்சம் கூட யோசிக்கிறதில்ல. அப்படி வளர்த்தேன் ஒவ்வொரு சேவலையும் கோழியையும்

உண்மை தான் சார்

சரி.. அந்தக் கரும்வளவி எப்படியிருக்கு?”

அது ...”

அடக் கடவுளே

~~~~~~~~~~

இன்பராஜ் பல வருடங்களுக்குப் பிறகு குடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பையன் கடைசியாகக் கேட்டது கேள்வியல்ல. குற்ற விசாரணை.

                அல்ஃபோன்ஸ் சார்.. கேட்கிறேன்னு தப்பா நினைச்சிக்க வேண்டாம். இவ்வளவு பெரிய இடத்துல தனியாவா இருக்கீங்க? வீட்ல யாரையும் காணோமே? சேவல்கூட?”

                என் பேர் இன்பராஜ் தம்பி. அல்ஃபோன்ஸ் இல்ல. அவன் என் நண்பன். அவனோட இடம்தான் இது. நான் சும்மா பாத்துட்டிருக்கேன்.”

~~~~~~~~~~

வண்டியில் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். அலைபேசியில் விக்ரமனின் அழைப்பு வந்தது. எடுத்துக் காதில் வைத்து,

நானே கூப்பிடனும்னு இருந்தேன்என்றேன்.

எல ராசு.. அந்த நாகர்கோயில் மனுசன் பயங்கரமான ஆளா இருப்பார் போல. இப்பந்தான் ஒருத்தன்கிட்ட பேசுனேன்

அவரைத் தான் இப்போ பாத்துட்டு வர்றேன்

நினைச்சேன். உனக்குப் பொறுமைங்கறது சீரோ பெர்சண்ட்

சரி நீ என்ன சொல்ல வந்த?”

ஒன்னுமில்ல நீ முதல்ல சொல்லு. அவர் என்ன சொன்னார்?”

சேவல் சேவல்னு ஒரே சேவல் பத்துன பேச்சுதான். வேற ஒன்னும் தெரியாதுபோல அவருக்கு? ஆனா பாட்டெல்லாம் பாடுதாருடே, பரவால்ல. எல.. நம்ம குருட்டுச்சாவல் பத்துப் பந்தயம் அடிச்சிருக்குனு சொல்லுதார்ல. நம்பமுடியுதா உன்னால?”

இப்பம் நான் ஒன்னு சொல்லுதேன் நம்பமுடியுதா கேளு. சேவலத்தவிர அவருக்கு வேறொன்னும் தெரியாதுன்னு சொன்னியே? அந்தாளு நேஷனல் வாலிபால் ப்ளேயர். ஒரு பெரிய அத்லெட். ரன்னிங், ரிலே, ஹைஜம்ப்னு கிட்டதட்ட ஐம்பது கோல்ட் மெடல்ஸ் வாங்கினவராம். ஸ்போர்ட்ஸ் கோட்டால செண்ட்ரல் கவர்மெண்ட் ஜாப் கிடைச்சு வேலை பார்த்து, கல்யாணமாகி ரெண்டு குழந்தைகளோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தவராம். அந்தச் சேவலுக்குக் கண்ணு போன மாதிரி இவருக்குக் குடும்பமே ஒரு விபத்துல அழிஞ்சிபோச்சு. அதுக்கப்புறம் மனசு உடைஞ்சுபோய்வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு வீ.ஆர்.எஸ். கொடுத்துட்டு, சேவல், கோழினு இருந்திருக்கார். இப்பம் அதயும் விட்டுட்டு யாருக்கும் தெரியாம இங்க வாழ்ந்துட்டிருக்காரு.”

அடுத்தடுத்து வந்த அதிர்ச்சிகள் என் மூளையை வெறுமையாக்கின. அவருக்கும் அவர் கொடுத்த சேவலுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதுபோலத் தோன்றியது எனக்கு. A book cannot be judged by its cover என்பது உண்மைதான்.

மெதுவாக வண்டியை முற்றத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழையப்போனேன். வலப்பக்கம் மச்சுப்படிகளுக்குக் கீழே அடைவைத்திருந்த இடத்திலிருந்துகுய்யா குய்யாஎன்று சத்தம் வந்தது.

அப்போதுதான் ஒரு கோழிக்குஞ்சு ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து உலகத்துக்குத் தன் வரவைக் கூவிக்கொண்டிருந்தது. மெதுவாக முட்டையோட்டைப் பார்த்த நான்ஹோஓஓஓவென்று கத்திவிட்டேன். காரணம், இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த அந்த முட்டை கரும்வளவியின் வழிவந்தது. அரிசிப் பானையில் எஞ்சியிருந்த அந்தக் கடைசி முட்டையை அடைக்கு வைத்திருந்தது எனக்கே மறந்துபோயிருந்தது. வேறொரு சேவலின் மற்ற முட்டைகள் எவையும் இன்னும் குஞ்சு பொரித்திருக்கவில்லை.

அலைபேசியை எடுத்து இன்பா சாரின் எண்ணை அழுத்தினேன்.

சார்.. நான் ராசு பேசுறேன்

“...”

சீக்கிரமே உங்களுக்கு அழகான கிஃப்ட் ஒன்னு வரக் காத்துக்கிட்டிருக்கு. நீங்க மறுக்கவே முடியாத கிஃப்ட்

பாய்ந்து மெறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும்வாய்க் கொண்டுங் கடுஞ்சேவல்ஆய்ந்து
நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு

என்னும் பாட்டை மெய்ப்பிக்க ஒரு நாயகன் உதயமாகிக் கொண்டிருந்தான்.

~~~~~~~~~~

No comments:

Post a Comment