Saturday 26 July 2014

Story 82: வந்தே மாதரம்



  வந்தே மாதரம்
 சத்தியமூர்த்தி பீரோவைத் திறந்த போது உண்டானலொடக்சத்தத்தின் தொடர்கள் யாரோ சமையலறையில் பாத்திரங்களை உருட்டிவிடுவது போல இருந்தது.சத்தியமூர்த்தி ஒருமுறை சமையலறையை பார்த்துக் கொண்டார்.அவரது வீட்டில் சமையலுக்கு என்று தனி அறை கிடையாது.இருக்கும் ஒரே ஒரு அறையின் பரப்பில் இருபத்தைந்து சதவீதத்தை சமையலுக்கு என்று ஒதுக்கி வைத்திருந்தார்.ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவிற்கும் இரண்டு மூன்று பாத்திரங்களுக்கும் ஒரு வாட்டர் கேனில் பாதியளவு மண்ணெண்ணெய்க்கும் அந்த இடம் போதுமானதாகவே இருந்தது.
அந்த பீரோவின் வயது அவர் வயதில் குறைந்தது பாதியாவது இருக்கும்.பீரோவை திறத்தலில் ஒளிந்து கொண்டிருந்த சமையலறை ஞாபகத்தை நினைக்கும் போது அவருக்கே சிரிப்பு வந்தது. உதட்டோரம் வறுமை சிரிப்பாக விழுந்தது.ஏறக்குறைய காலியாக இருக்கிறது என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு உள்ளே ஒன்றுமே இல்லை.நான்கு வெள்ளை வேஷ்டிகள் கலைந்து கிடந்தன. ஒரு தேசியக் கொடி மட்டும் கலையாமல் இருந்தது. அதனைத் தன் வலது கையால் தடவினார்.தேசியக் கொடியின் மூவண்ணங்களுக்கும் கை இறங்கி ஏறியது. அப்படித் தொடுவது அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.இல்லையென்றால் அடுத்தவேளை உணவே எப்படி என்று தெரியாமல் இருக்கும் இந்த வேளையிலும் நினைவு தேசியக் கொடியைத் தேடுவதும் மனது தேசியக் கொடிக்கு அலைவதும் சாத்தியமாகாது.
ஒரு மனிதனால் தனது உயிரை உடம்பிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்து அதனை ஒரு பழைய பீரோவுக்குள் வைக்க முடியுமென்றால் அந்த மனிதனின் பெயர் சத்தியமூர்த்தியாக இருக்க வேண்டும்.உயிர்  தேசியக் கொடி என்று சொல்லத் தேவையில்லை.இந்தக் கொடியின் மடிப்பு சிறிது கலைந்தாலும் தனது உயிர் போய்விட்டதைப் போல இருக்கும் சத்தியமூர்த்திக்கு. இவ்வளவு வறுமையிலும் இந்த பீரோ பழைய இரும்புக் கடைக்கு போகாமல் இருப்பதற்கும் காரணம் இந்த தேசியக் கொடி தான்.
 இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட கடன் கொடுத்தவன் வீட்டிலிருந்த சொற்ப பாத்திரங்களையும் ஒரு கால் ஒடிந்த விழும் நிலையில் இருந்த கட்டிலையும் தூக்கிக் கொண்டு போன போது பீரோவின் மீதும் கை பட்டது.அதனைத் தூக்குவதற்கு ஒருபுறமாய் சாய்த்த போது கதவு தானாகவே திறந்து உள்ளேயிருக்கும் தேசியக் கொடி கீழே விழுந்தது.அதுவரை அமைதியாக ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்திக்கு பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும்.பைத்தியம் என்பது தன்நிலை மறப்பதா அல்லது தன்நிலை தெரிந்து கொள்வதா என்று புரியவில்லை.அன்று அவர் போட்ட சத்தத்தில் வாசலுக்கு வெளியே வீட்டினுள் வித்தை ஏதோ நடக்கிறது என்று நினைத்து கூடியிருந்த பாழும் ஜனத்தின் கால்கள் தன்னாலேயே ஆட்டம் கண்டுவிட்டன.
வெள்ளைக்காரனுக்கு ஏதிராக போட்ட சத்தத்தின் மிச்சம் இன்னும் இருக்குமல்லவா.வயதானால் வெட்கம் போகும்,மானம் போகும் ஏன் உறவுகள் கூட போய்விடும். ஆனால் குரல் போகாது என்று அன்றைக்குத் தான் தெரிந்தது சத்தியமூர்த்திக்கு. அவரின் கண்களில் இருந்த வெறியைப் பார்த்து பயந்து போய் அந்த பீரோவை விட்டுவிட்டுச் சென்றனர்.இப்போது பீரோவுக்கும் உயிராக இருப்பது இந்த தேசியக் கொடி தான்.உயிருள்ள ஒரு பொருளும் உயிரற்ற இரு பொருள்களும் உயிர் என்ற வார்த்தையில் ஒன்றையொன்று பிணைந்து கிடக்கின்றன.
முதலில் இந்த தேசியக் கொடியை மடிப்பது கூட அவருக்குப் பிடிக்கவில்லை.”தேசியக் கொடிங்கறது நம்ம தேசம் மாதிரி. தலைகுனிய விடக்கூடாதுஎன்று அவரது மனது கிடந்து தவித்தது. ஆனால் அதனை மடிக்காமல் உள்ளே வைக்க முடியாது.அதன் மேல் கீழான உயரத்தைக் காட்டிலும் அதன் இட வல நீளம் அதிகம்.எப்படியும் ஒரு பத்து அடியாவது இருக்கும்.
இந்த தேசியக் கொடி டெல்லியிலிருந்து அவரது நண்பர் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது. அந்த நண்பர் இறந்தே இருபது முப்பது வருடங்களாவது ஆகியிருக்கும்.சுதந்திர தினம் அல்லது குடியரசு தினத்தில் மட்டும் தான் இந்த தேசியக் கொடி வெளிவரும்.வீட்டிற்கு வெளியில் இருக்கும் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு அது தலைநிமிர்ந்து காற்றில் அலையும் நொடிகளை மனதார ரசித்து பூரிக்கும் போது அவர் அருகில் இரண்டு மூன்று சின்னக் குழந்தைகள் நின்று கொண்டிருக்கும்.அவற்றின் பார்வை கூட தேசியக் கொடியின் மீது விழாது.எல்லா குழந்தைகளும் வலது ஓரத்திலுள்ள திண்ணையில் வைத்திருக்கும் மிட்டாய் தட்டையே பார்த்தபடி இருக்கும். வயது வந்தவர்களே இவர் தேசியக் கொடியின் முன் நிற்கும் நிலையைக் கண்டு சிரித்துவிட்டு போகும் போது இந்தப் பச்சைக் குழந்தைகள் பாவம் என்ன செய்யும்.
வீட்டைப் பூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தார் சத்தியமூர்த்தி.அழுக்கேறிய உடம்பும் நரையேறிய மயிரும் நாளானதால் மங்கலாகிப் போன சட்டையும் வெடிப்புகள் சூழ்ந்த பாதமுமாக அவர் அந்த அரச மரத்தின் நிழலில் நடந்த போது அரச மரத்தில் இருந்து ஒரு இலை கீழே விழுந்தது.இயற்கை அற்புதமான ஒரு கவிதையை எழுதியது.இது எதுவும் தெரியாமல் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
என்ன பெருசு..இன்னைக்கும் தாசில்தார் ஆபிஸ்ல தான் பொழப்பு போலஎன்று டீக்கடையில் அமர்ந்திருந்த கருத்த உருவம் கையில் இருந்த டம்ளரை வட்டமாக ஆட்டியபடியே கேட்டது.
என்ன தம்பி பண்றதுகவர்மென்ட்ல இருந்து காசு கெடைச்சா தான் இருக்கப் போற கொஞ்ச நஞ்ச நாளையும் மூனு வேளை கஞ்சியோட ஓட்ட முடியும்”. பதிலில் ஒட்டிக் கொண்டிருந்த வறுமை எந்தவிதத்திலும் கேட்டவனைப் பாதிக்கவில்லை என்பது அவனது சிரிப்பிலேயே தெரிந்தது.நமக்கு வராத வரை கஷ்டம் என்பது தூரத்தில் எங்கேயோ இருப்பது.
போய்யாயோவ்..இன்னமுமா அவுங்களை நம்பிகிட்டுக் கெடக்கஅதலாம் அவிங்க பொங்கி முழுங்கி இந்நேரம் பேண்ட்ருப்பாங்க”.சிரித்துக் கொண்டே சொன்னது அந்த உருவம்.இன்னும் சில சிரிப்புகளும் சேர்ந்து கொண்டன.
இதையெல்லாம் காதில் வாங்காதபடி பழைய நினைவுகளில் முங்கிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார் சத்தியமூர்த்தி.பழைய நினைவுகலுக்குள் ஒளிந்திருக்கும் உலகம் இறந்தது.அவைகளாலேயே இவர் உயிருடன் இருக்கிறார்..வெள்ளைக்கார இன்ஸ்பெக்டரின் முன்னால் தான் நெஞ்சை நிமிர்த்தி நின்றதை இப்போது நினைக்கும் போதும் அவருக்கு அவ்வளவு பெருமிதமாக இருக்கிறது.நடையில் ஒரு கர்வம் சேர்ந்து கொள்கிறது.அந்த சம்பவத்தின் பசுமை வறுமை என்னும் வெயில் கொளுத்தினாலும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது.
அப்போது சத்தியமூர்த்திக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும்.கடைத் தெருவில் சத்திய மூர்த்தி நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் இவர் மீது இடித்துவிட்டான்.பார்க்காமல் வந்தது அவன் தவறு தான் என்றாலும் இந்தியனாகப் பிறந்தது இவர் தவறு தானே.அவன் வெள்ளைக்காரத் தமிழில்யார் நீஎன்றான்.முன் வார்த்தையை விழுங்கி பின் வார்த்தையை நீட்டி அவன் பேசிய வெள்ளைக்காரத் தமிழைக் கேட்கும் போது இவருக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று இருந்தது.இவர் அமைதியாகசத்தியமூர்த்திஎன்றார்.
எவ்வளவு துணிச்சல் இருந்தா ஒரு இண்டியன் நீ.என் மேல இடிப்ப
இந்தியர்கள்கிட்ட துணிச்சலைப் பத்தி கேக்கறத விட்டுட்டு வெள்ளைக்காரங்க மேல இருக்கற வெறுப்பைப் பத்தி கேட்டுப் பாருங்க.பதில் உடனே வரும்”.ஒரு முப்பந்தைந்து வயது வெள்ளைக்காரனை பதினெட்டு வயது இளைஞன் நேருக்கு நேர் நிமிர்ந்து நின்று பேசுவதே அந்த இன்ஸ்பெக்டருக்கு பெரிய அவமானமாகப்பட்டது.அந்த அவமானங்களை எல்லாம் மொத்தமாகத் திரட்டி பலமாக சத்தியமூர்த்தியின் கன்னத்தில் அறைந்தான்.
என் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டுவிட்டுப் போ. இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டேன்”. அடி வாங்கியது சத்தியமூர்த்தி.ஆனால் அந்த இன்ஸ்பெக்டரின் முகம் சிவந்திருந்தது.பலமான அறை தான் என்றாலும் இந்தியனின் மனம் அளவிற்கு பலம் கிடையாது.சத்தியமூர்த்தி அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
என்ன..பேசாமல் நிற்கிறஎன்றான் இன்ஸ்பெக்டர்.
இப்போது இந்தியர்களோட துணிச்சல் பற்றி உங்களுக்குப் புரிஞ்சிருக்குமேபதிலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறிப் போனான் இன்ஸ்பெக்டர். தடுமாற்றத்தை மறைக்க தன்நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல முடிவெடுத்தான் இன்ஸ்பெக்டர்.
கையிலிருந்த லத்தியால் ஓங்கி சத்தியமூர்த்தியின் தலையில் அடித்தான்.அவன் மீது காறித் துப்புவது போல இரத்தத் துளிகள் வெளியேறி சிதறித் தெறித்தது.
ஒரு கருப்பு நாய் நீஎங்கிட்டயே திமிரா பேசுற
தலையில் வாங்கிய அடியின் வலி பெரிதாகப்படவில்லை சத்தியமூர்த்திக்கு.ஆனால் அந்த இன்ஸ்பெக்டரின் வார்த்தைகள் கொடூரமாக வலித்தன.அவன் கன்னத்தில் அறைய வேண்டும் போலிருந்தது.ஆனால் ஒரு வெள்ளைக்கார அதிகாரியின் மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று தெரிந்திருந்தது.இருந்தாலும் அவனது வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை சத்தியமூர்த்தியால்.இதற்கு மேல் வாயை மூடிக் கொண்டிருப்பது தன் தாய் தவறானவள் என்பதற்கு சமம் என்று தோன்றியது.காயத்தின் மேல் வைத்து அழுத்திப் பிடித்திருந்த கையை தலைக்கு மேல் உயர்த்தினார்.
வந்தே மாதரம்”.குரல் கணீரென்று ஒலித்தது.
இன்ஸ்பெக்டர் லத்தியால் தலையில் இன்னொரு அடி அடித்தான்.நிலைத் தடுமாறி கீழே விழுந்துவிட்டார் சத்தியமூர்த்தி.
இப்போ சொல்லுடா பாப்போம்என்று கத்தினான் இன்ஸ்பெக்டர்.
கீழே இருந்து மெதுவாக கையை தரையில் ஊன்றி எழுந்தார் சத்தியமூர்த்தி.நேருக்கு நேராக அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்.முகம் முழுவதும் இரத்தம் பரவிக் கிடந்தது.மீண்டும் கத்தினார்.
வந்தே மாதரம்
தனது பூட்ஸ் காலால் வயிற்றில் ஓங்கி மிதித்தான் இன்ஸ்பெக்டர்.பதில் தாக்குதல் வந்தே மாதரம் என்ற வார்த்தைகளால் நடைபெற்றது.
மீண்டும் உதைத்தான்,அடித்தான்.அவனது வெறி ஏறிக் கொண்டே போனது.ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு உதைக்கும் வந்தே மாதரம் என்று திரும்பத் திரும்ப கத்திக் கொண்டேயிருந்தார் சத்தியமூர்த்தி.அன்றைய சூழலில் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாகச் சேர்க்கும் சக்திவந்தே மாதரம்என்ற சொல்லுக்கு இருந்தது.சத்தம் அதிகமாக அதிகமாக ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது.மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் வந்தே மாதரம் என்று கத்தினான்.பரவிக் கிடந்த எண்ணெயில் அந்த வந்தே மாதரம் ஒரு தீக்குச்சியைப் போல விழுந்தது. இப்போது அனைவரும் வந்தே மாதரம் என்று கத்தத் தொடங்கினர்.நிலைமை மோசமாகிக் கொண்டே போவதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் அடிப்பதை நிறுத்திவிட்டு கடைசியாக சத்தியமூர்த்தியைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டுப் போய்விட்டான்.
முகம் முழுவதும் இரத்தத்துடன் மயங்கிக் கிடக்கும் போதும் சத்தியமூர்த்தியின் வாய் வந்தே மாதரத்தை நிறுத்தவில்லை.முனகிக் கொண்டேயிருந்தது.
தாசில்தார் ஆபிஸின் வெளிச்சுவர் கதவைத் தொட்டுத் திறக்கும் போது கதவை வருடிவிட்டு உள்ளே சென்றார் சத்தியமூர்த்தி.தினசரி விஜயம் ஆபிஸ் கதவுகளிடம் கூட ஒரு சினேகத்தை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் ஆபிஸ்ர்களிடம் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தி இருக்கும் என்று அவருக்குத் தெரியவில்லை.எப்போதும் சென்று அமரும் ஆலமர நிழலில் எப்போதும் போல் அமர்ந்தார்.ஆலமரம் எப்போதும் போல் இலைகளை ஆட்டி ஒரு வரவேற்பைக் கொடுத்து அடங்கியது.நெருங்கிவிட்டோம் என்று தெரியாமலேயே நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
தாசில்தார் அறையிலிருந்து பியூன் வெளியே வருகிறானா எனப் பார்த்த படியே அமர்ந்திருந்தார் சத்தியமூர்த்தி.இவர் வந்ததை அவன் ஏற்கனவே பார்த்திருப்பான் போல.ரொம்ப நேரமாக ஆள் கண்ணிலேயே படவில்லை.எதேச்சையாக வெளியே வந்த பியூனைப் பார்த்துவிட்டார் சத்தியமூர்த்தி.காந்தியை கண்டது போல் முகமும் மனமும் துளிர்ந்தன.வறுமை சாதாரண பியூனை கூட காந்தியாக்கிவிடுகிறது.பியூன் அருகில் சென்றார்.
தம்பி..தியாகிகள் பென்சன்சொல்ல ஆரம்பிக்கும் முன்னேயே இடைமறித்தான் பியூன்.
இரு பெருசு..இப்படி அவசரப்பட்டா எப்படி.இங்க என்ன நீ மட்டுமா இருக்க..இந்தா அப்பிடி போய் உக்காரு..ஏங்க இங்க யாரு ராமசாமி. உள்ள சார் கூப்பிடுறாருசொல்லிவிட்டு அவன் உள்ளே போய்விட்டான்.மீண்டும் சத்தியமூர்த்தி அந்த ஆலமர நிழலுக்குச் சென்றார்.அந்த மரமும் எப்போதும் போல் அவரை மீண்டும் வரவேற்றது.
உள்ளே தாசில்தாரிடம் அந்த பியூன்சார்..அந்தக் கெழவன் இன்னைக்கும் வந்திருக்கான் சார்என்றான்.
யாருய்யாஎதுவுமே தெரியாதது போல் கேட்டார் தாசில்தார்.
அட..அந்தாளுதாங்க.தியாகி பென்சன்,தியாகி பென்சன்னு உயிரெடுப்பானே
ஏதாவது சொல்லி அனுப்பிவிடுய்யா.ஒரு இருநூறு ரூபா கேட்டா எதுக்குத் தரனும்னு லா பாயிண்ட் பேசுறான்.ஏதோ வெள்ளைக்காரங்களை விரட்டிடாங்களாம்.அந்தத் திமிரு.இப்படி எல்லாம் அலையவிட்டா தான் இவங்களுக்கெல்லாம் புரியும் நாம வெள்ளைக்காரங்களை விட மோசமானவங்கன்னு
கொஞ்ச நேரம் கழித்து பியூன் வெளியே வந்தான்.இவர் மறுபடியும் அவனிடம் சென்றுதம்பிஎன்று ஆரம்பித்தார்.
யோவ்இன்னைக்கெல்லாம் சாரை பாக்க முடியாது.போயிட்டு ரெண்டு மூனு நாள் கழிச்சு வாசொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர முயற்சித்தவனின் கையைப் பிடித்தார் சத்தியமூர்த்தி.
தம்பிஇப்படித் தான் தினமும் சொல்றீங்க.இன்னைக்கு எப்படியாவது பெரிய மனசு பண்ணி உள்ளே விடுங்க தம்பி
யோவ்..என்ன பெரிய இவன் மாதிரி கையைப் புடிக்கற..எடுய்யா கையை
தம்பிஎன்று அவர் மறுபடியும் ஆரம்பிப்பதற்குள்எடுய்யாங்கிறேன்என்று சத்தியமூர்த்தியை லேசாகத் தள்ளிவிட்டான் பியூன்.சற்று நிலைத்தடுமாறியவர் சுதாரித்துக் கொண்டுதம்பி..நான் உங்களைத் தான் கடவுள் மாதிரி நம்பிகிட்டு இருக்கேன் தம்பி..இந்த நாட்டுக்காக பாடுபட்டவனை பசிக்கு காவு கொடுத்துடாதீங்க தம்பி.அது நம்ம நாட்டுக்கே அசிங்கம் தம்பி
அவர் பேசுவதை கேட்க விரும்பாதவன் போல வெளிப்புறக் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பியூன்.
தம்பி..உங்க கால்ல வேணும்னாலும் விழுகிறேன் தம்பி..கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி
வெள்ளைக்காரனுக்கு முன் திமிறிக் கொண்டு நின்ற உடல் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து பியூனின் கால்களைப் பிடித்தது.துணிச்சலுக்கு வெள்ளைக்காரனிடம் விளக்கம் கொடுத்தவரை வறுமை முதுகெலும்பு இல்லாதவராக மாற்றிவிட்டது.உயிர் போகும் நிலையிலும் வெள்ளைக்காரனின் காலைத் தொடாத கைகள் இன்று ஒரு பியூனின் கால்களை கட்டிக் கொண்டு கிடக்கின்றன.
யோவ்..காலை விடுய்யாஎன்று கூறிக் கொண்டே பியூன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க ஆரம்பித்தான்.அவன் நடக்க நடக்க அந்த கால்களின் பின்னால் கால்களைப் பிடித்தவாறே உருண்டு கொண்டு இருந்தார் சத்தியமூர்த்தி.உருளும் போது வேஷ்டி பறந்து வேறு பக்கம் சென்றுவிட்டது.
ஏறக்குறைய எழுபது வயது இருக்கும் கிழவன் வெள்ளைக்காரனேயே நெஞ்சை நிமிர்த்திப் பார்த்த கிழவன் வேஷ்டி கூட இல்லாமல் வெறும் கால்சட்டையுடன் உருண்டு கொண்டிருக்கிறான்.அங்கே இருப்பவர்கள் அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தியா சுதந்திரம் வாங்கி ஐம்பது வருடங்களுக்கு மேலாகிறது.
காலை விடாததால் கடுப்பேறிப் போன பியூன்கெழட்டு நாயேஉன் சேட்டைய எங்கிட்டயே காட்டுறியாஎன்று கத்திவிட்டு இன்னொரு காலால் ஓங்கி முகத்திலும் வயிற்றிலும் மிதித்தான்.பிடி தன்னால் விலகியது.பியூன் சென்றுவிட்டான்.
சத்தியமூர்த்தி அங்கேயேக் கிடந்தார்.உடல் முலுவதும் அவமானம் ஏறிப் போய் இருப்பது போல தோன்றியது அவருக்கு.வெள்ளைக்காரன் உதைத்த உதைகளை விட இந்த உதைக்கு சக்தி அதிகம் இருப்பது போலத் தெரிந்தது.நரம்பு,தலை,மூளை என அனைத்தும் அவமானத்தின் சின்னங்களாகவேப் பட்டன.
திடீரென எழுந்தார்.”வந்தே மாதரம்என்று கத்தினார்.மீண்டும் கத்தினார்.வேஷ்டியைக் கூட எடுக்கவில்லை.வெறும் கால்சட்டையோடுவந்தே மாதரம், வந்தே மாதரம்என்று கத்திக் கொண்டே ஓடினார்.சாலையெங்கும் வந்தே மாதரம் ஒலித்துக் கொண்டிருந்தது.அவர் பின்னால் தெருவெங்கும் வந்தே மாதரங்கள் முறிந்து கிடந்தன.எல்லோரும் ஏதோ பைத்தியம் போல என்று பார்த்தனர்.
வந்தே மாதரம் என்று கத்திக் கொண்டே வீட்டைத் திறந்து உள்ளே போனார் சத்தியமூர்த்தி.பீரோக்குள் மடிப்பு கலையாமல் இருந்த தேசியக் கொடியை எடுத்தார்.மடிப்பைக் கலைத்தார்.அப்போதே அவரது உயிர் போய்விட்டது.அதே கொடியை உத்திரத்தின் கட்டையின் மீது போட்டு தூக்கு மாட்டிக் கொண்ட போது கால்களும் கைகளும் உதறின.ஒருவேளை கடைசியாக அவர் வந்தே மாதரம் என கத்த முயற்சித்திருப்பார்.


No comments:

Post a Comment