நெற்றித்தழும்பு
- கனவுப் பிரியன்
ஒரு வழியாக தேடி பிடிப்பதற்குள் போதும்
போதும் என்றாகி விட்டது. வண்டியை நிறுத்தி விட்டு கையில் கொண்டு வந்த டாக்குமென்ட்
எல்லாம் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.
வாசலில் நின்றிருந்த செக்யுரிட்டி உடலை
முழுவதுமாக பரிசோதித்துவிட்டு மொபைலை மட்டும் வாங்கி கொண்டு பதிலுக்கு “ டோக்கன் 7
“ என குடுத்து அனுப்பினார்.
நீள புல்வெளி பாதையை கடந்து உள்ளே
சென்றேன். எனக்கு முன்னமே நான்கு ஐந்து பேர் வந்து காத்திருந்தனர். துருக்கி எம்பஸி
அது. விசாவுக்காக வந்திருக்கிறேன்.
அங்கு இருந்த விண்ணப்பம் எடுத்து பூர்த்தி
செய்ய துவங்கினேன். கையில் வைத்திருந்த பாஸ்போர்ட், துருக்கி கம்பெனி அனுப்பிய
அழைப்பு கடிதம், துருக்கியில் பதிவு செய்திருந்த ஹோட்டல் மற்றும் பதிவு
செய்திருந்த விமானத்தின் தகவல் என முழுவதுமாக பூர்த்தி செய்துகொண்டிருந்தேன்.
தனி நபர் தகவலில் அங்க அடையாளம் கேட்டு
ஏதேனும் கண்ணில் படும் மச்சம் அல்லது தழும்பை எழுத சொல்லி இருந்தார்கள்.
நெற்றியில் ஒரு பெரிய வெட்டுக்காயம்
உண்டு. இதைத்தான் எப்பொழுதும் எழுதுவது வழக்கம். இப்பொழுதும் அதையே எழுதி விண்ணப்பத்தை
முழுவதுமாய் பூர்த்தி செய்து கொடுத்தேன்.
என்னுடைய டோக்கன் நம்பர் வர இன்னும்
குறைந்தது அரைமணி நேரம் ஆகுமென்பதால் வரிசையாய் இருந்த சோபாவில் சுகமாய் சாய்ந்து
அமர்ந்து கொண்டேன்.
எல்லோருக்கும் உடலின் எல்லா
தழும்புகளுக்கும் பின்னணியில் ஒரு சுகமான அல்லது சோகமான ஒரு கதை இருக்கும்.
என் நெற்றி வெட்டுக்காயம் பற்றிய நினைவில்
மூழ்கினேன் அதை தடவிக்கொண்டே.
அப்பா ஹார்பரில் சரக்கு கப்பலில் வேலை
செய்தார். பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை செல்லும் அரசுடமை கப்பல் அது. அரிசி,
கோதுமை, பருப்பு, வெங்காயம், நிலக்கடலை, வேப்பங்கொட்டை, காய்ந்த அவுரி இலை, துரித
ஆடைகள், கைலி, பீடி என வித விதமான பொருட்கள் எல்லாம் பயணிக்கும் இலங்கையை நோக்கி.
திரும்பி வரும்போது கண்டிப்பாய் கிராம்பு, ஏலக்காய், தேயிலை, தடி மரக்கட்டைகள்,
ராணி சோப்பு, காய்ந்த சீலா மீன் ( மாசி / துனா ) என திரும்பும்.
வழக்கம் போல அடிக்கடி
கேட்பது தான் அப்பாவிடம் “ கப்பலை பார்க்கணும் ” என்று. “ சரி “ என்று சில நேரம் பதில்
வந்துவிட்டால் உறவுகள் / நண்பர்கள் என ஒரு படையே கிளம்பி விடும் பழைய ஹார்பரில்
இருந்து ஒரு மோட்டார் போட்டில் கப்பலை நோக்கி.
கடல் பயணமும் வாந்தியும்
கூட பிறந்த உறவு. அதனால் பலஹீனமான மக்களை அதிகம் சேர்த்து கொள்வதில்லை.
இந்த வெட்டுக்காயம் உண்டான அன்றும்
இருபது பேர் புடைசூழ பழைய ஹார்பரில் இருந்து மோட்டார் போட் கடலை கீறி கொண்டு
கப்பலை நோக்கி சென்றது. குறைந்தது 15
நிமிட பயணத்திற்கு பின்
மோட்டார் போட் கப்பல் அருகில் சென்றது.
மோட்டார் போட்டும் ஆடும்
கப்பலும் ஆடும் கடலில்.
கப்பலை ஒட்டி மோட்டார் போட்டை
நிறுத்த முடியாது. இடைவெளி இருக்கும் இரண்டிற்கும். இங்கிருந்து அங்கே தாவி கப்பல்
படியை பிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.
சில நேரம் நீண்ட நிறைய
தொடர்ச்சியான முடிச்சுகள் கொண்ட கையிற்றை போட்டுவிட்டு “ படி கிடையாது......ஏறு ” என்று சொல்லி விட
செருப்பை கழற்றி விட்டு ஆடும் கயிறை பிடித்து அங்கும் இங்கும் ஆடியவண்ணம் மேலே ஏறி
செல்லும் வரை வேண்டாத தெய்வமில்லை.
அதை போன்ற சமயத்தில்
சேலைகட்டிய பெண்களை குழந்தைகளை மேலே ஏற்ற வேண்டாம் என சொல்லிவிடுவார்கள். அங்கு
வரை சென்று ஏமாற யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்.
நீண்ட அலுமினிய படிகள்
உண்டு என்றால் தான் அப்பா அழைப்பது வழக்கம். அன்றும் படிகள் இருந்ததால் கீழே “ டப்
டப் ‘ அடிக்கும் அலையின் சத்தத்தில் பயப்படாது ஆடாமல் மேலே அனைவரும் ஏறினோம்.
பகல் வெயில். கப்பலின் மேல்
இரும்பு தளம் எப்படி இருக்கும். கும்பிபாகம் போல பொசுக்கி விடும் காலை. எத்தகைய
செருப்பு அணிந்திருந்தாலும் சரி. முரட்டு சேப்டி சூ மட்டுமே அந்த கடுமையான சூட்டுக்கு
லாயக்கு. தடிமனான கயிறுகள் மேலே கிடக்கும் அதை மிதித்த வண்ணம் ( அதுவும் கூட
சூடாகத்தான் இருக்கும் ) உள்ளே சென்றோம்.
கப்பலுக்கு உள்ளே
வந்துவிட்டால் இனி சுகம் தான். எல்லாம் உண்டு.
எல்லாம் உண்டு என்றால் அட
எல்லாம் உண்டுப்பா ....................ரொம்ப கேள்வி கேட்கப்படாது.
அப்பாவை முழு நீள நீலநிற கவரால் உடையில் ( சட்டையும் பேண்ட்டும் சேர்ந்து பாதர்கள் அணியும் அங்கி போல ஒரே உடையாய் இருக்கும் ) காணும் போது ஏதோ ஒரு உணர்வு. அப்பா கப்பலின் சீனியர் மெக்கானிக். அப்பாக்களை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் சந்திப்பதே ஒரு தனி அழகு. பிறர் அப்பாவுக்கு தரும் மரியாதையை பார்த்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி தோன்றும்.
அப்பாவை முழு நீள நீலநிற கவரால் உடையில் ( சட்டையும் பேண்ட்டும் சேர்ந்து பாதர்கள் அணியும் அங்கி போல ஒரே உடையாய் இருக்கும் ) காணும் போது ஏதோ ஒரு உணர்வு. அப்பா கப்பலின் சீனியர் மெக்கானிக். அப்பாக்களை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் சந்திப்பதே ஒரு தனி அழகு. பிறர் அப்பாவுக்கு தரும் மரியாதையை பார்த்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி தோன்றும்.
எங்கு எல்லாம் அங்கீகாரம்
உண்டோ அங்கே எல்லாம் அனுமதியுடன் சுற்றி காண்பித்தார்.
எப்பொழுதும் போல வரிசையாய்
நின்று பைனாகுலரில் தூரத்து கலங்கரை விளக்கம் மற்றும் கப்பலுக்குள் இவ்வளவு பெரிய
லேத் வெல்டிங் வொர்க்ஷாப் ஆ என்று வாய்பிளந்து பார்த்தோம்.
எப்பொழுதும் அதிகம் நேரம்
இருக்கும் இடம் கப்பலின் சாப்பாட்டு தளம் தான். என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். பெரிய
மாம்பழ பழ சைசுக்கு இறால் மீன் சுவையாய் வறுத்து உளுந்தவடை போல மொரு மொருவென சூட
சூட சாப்பிடுவதில் ஒரு சுகம். மீன் தான் வகை வகையாய் கேட்டு வாங்கி சாப்பிட்டோம்.
சீலா மீனில் புட்டு செய்து தருவார்கள். ஒரு பிளேட் “ அப்படியே சாப்பிடுவேன்
ஸ்டைலில் சாப்பிடுவது “. சுட சுட.
குடிக்கும் இடமும் பார்க்க
அத்தனை அழகாக இருக்கும். யாரும் குடிப்பதில்லை என்றாலும் அழகழகான காலியான சரக்கு
பாட்டில்களை கேட்டு வாங்கி கொண்டார்கள் ஆளாளுக்கு. அத்தனையும் கிடைக்கும் என்ற அந்த
வாழ்க்கையிலும் அப்பா குடிக்காமல் வாழ்ந்ததால் தான் என்னவோ என் போன்ற குழந்தைகளுக்கும்
அதில் ஈடுபாடு இல்லாமல் போனது.
ஒரு முறை இரவில் வேலை
நேரத்தில் இருட்டில் கீழே கிடந்த தடிமனான கயிற்றி கால் இடறி மேல் தளத்தில் இருந்து
கீழே விழுந்து விலா எலும்பில் அடிபட்டு நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அப்பா
சிகிச்சை எடுக்க நேரிட்டது.
எப்பொழுது அம்மா வந்தாலும்
அந்த இடத்தில் சற்று நேரம் அமைதியாய் நிற்பாள். மற்றுமொரு செயலும் அம்மா
எப்பொழுதும் செய்வது வழக்கம். தனியாய் அமைதியாய் ஒரு அரை மணி நேரம் கடலையே
பார்த்துகொண்டிருப்பாள். அது ஒரு பிரார்த்தனை என்று கூட சொல்லலாம். ஒரு முறை
பூம்புகார் என்ற பெயரில் ஒரு சரக்கு கப்பலே மூழ்கியது. அதில் அப்பாவும் இருந்தார்.
மனிதர்கள் பயணிக்கும்
கப்பலுக்கு ஏதேனும் ஆனால் உலகமே அறியும் ஆனால் சரக்கு கப்பல் மூழ்கினால் அது ஒரு
சாதாரண செய்தி. அதிலும் மனிதர்கள் வேலை செய்கிறார்கள் என உலகம் அறிவதில்லை. அதற்கு
முக்கியத்துவம் தருவதும் இல்லை.
மதிய சாப்பாடு எல்லாம்
தடபுடலாக நடந்தது. ஆளாளுக்கு கப்பல் அறையின் ஒரு ஜன்னல் ஓரத்தை பிடித்து கொண்டு
கடலை பார்த்தவண்ணம் வரும் தூக்கத்தை மீறி உப்புக்காற்றை சுவாசித்த வண்ணம் கதை
பேசிக்கொண்டிருந்தனர்.
பொழுது போக்கு அறையில் பெரிய
இரும்பு (தகடு போல ) டேபிள் இருந்தது.
அதன் மேலே ஏறி, கூட வந்த
பெண்ணுடன் ஓடி தொட்டு புடிச்சி விளையாடி கொண்டிருந்தேன் நான். (எட்டு வயசுப்பையன்
நான். தெரியாம ஓடிட்டேன் அவள் பின்னாடி. பெருசாக்காதீங்க. மன்னிச்சு விட்டுருங்க..அந்த
வயசுலே பொண்ணு பின்னாடி சுத்துனியான்னு ஊரைக்கூடிராதீங்க )
வேகமாக ஓடி அவளை
பிடித்திருந்த போது இருவரின் எடையும் ஒரே இடத்தில் இருந்ததாலும் ஓடிய வேகத்தாலும்
எடை தாளாமல் சமன் செய்ய முடியாமல் தகடு டேபிள் கவிழ்ந்து விழ அந்த அறையில் இருந்த
ஜன்னல் கம்பி நெற்றியில் கிழித்து ரத்தம் வழிந்தது எனக்கு. அவளுக்கும் அடி ஆனாலும்
என் அளவுக்கு இல்லை.
அங்கிருந்த first aid பாக்ஸ்
உதவியுடன் கட்டு போட்டதுடன் மட்டுமல்லாமல் திட்டும் விழுந்தது இருவருக்கும்.
6 மணி நேரத்துக்கு மேல் கப்பலில் இருக்க முடியவில்லை. ஒரு மாதம் ஆறு மாதம் என கடலை
வெறித்து பார்த்தவண்ணம் வாழ்வது பெரிய தண்டனை தான்.
வானமும் கடலும் பயணிக்கதான்
லாயக்கு. மற்ற படி தரை தான் எப்பொழுதும் சுகம்.
உப்புக்காற்றால் உடல்
எங்கும் பிசுபிசுப்பு எடுக்க வீடு கிளம்பு தயாரானோம்.
இருட்டும் முன் கப்பலை
விட்டு இறங்கி சற்று காலாற பீச்சில் நடக்கலாம் என்று அனைவரும் நடக்க என்னை அவர்
சைக்கிளில் பின்னால் அமர்த்தி ரோட்டில் உருட்டி கொண்டே வந்தார் மாமா.
பின்னால் அமர்ந்து சைக்கிள்
சீட்டை இறுக்க பிடித்திருந்தாலும் நல்ல தூக்க கலக்கத்தில் இருந்ததால் “ பொத் “
என்று சைக்கிளில் இருந்து கீழே விழ பட்ட காலிலே படும் .....இல்ல ....இல்ல பட்ட
மண்டையிலே படும் என கப்பலில் அடி விழுந்த இடத்திலே மீண்டும் கீழே கிடந்த கல்
குத்தி நெற்றி கிழித்து ரத்தம் வர பீச்சுக்கு பதில் அனைவரும் மருத்துவமனை
வந்தார்கள் திட்டிக்கொண்டே.
கதற கதற நெற்றியில் நான்கு
தையல் ஊசி போட்டு பாண்டேஜ் கட்டி தினமும் வந்து போக உத்தரவிட்டார் டாக்டர். அப்படி
வந்தது தான் இந்த நெற்றி வெட்டுக்காய தழும்பு.
“ டோக்கன் நம்பர் செவன் “ என்று
ஸ்பீக்கரில் அலற
“ எஸ் .........” என்று
எழுந்து பழைய நினைவுகளை களைந்து விசா ஸ்டாம்பிங் ஆளை நோக்கி நடக்கலானேன்.
வாழ்வின் தழும்புகள்
நீங்கள் நினைத்தாலும் உங்களால் மறக்க இயலாதது.
.
No comments:
Post a Comment