தொடர் மழை
சோத்த திண்கிறியா? இல்ல வேற எதாவத
திண்கிறியா?
ஒரு விவசாயி கேட்க வேண்டிய
வார்த்தைகள் தான் இவை.
சோத்துல
உப்பு போட்டு தானே திண்கிற?
வாங்குன காசை திருப்பித் தர
வக்கு இல்ல?
வார்த்தைய
அளந்து பேசு.. நான் என்ன
50 லட்ச ரூபா வாங்கிகிட்டு உன்ன
எமாதிட்டா போக பாக்குறேன்..என்
மக கல்யாணதுக்கு வாங்குன 50 ஆயிரதுக்கு 10 மாசமா வட்டி கட்டிகிட்டு
தானே வாரேன்..3 வருசமா வானமும் எங்கள
எமாத்திடுச்சு.. விவசாயமும் பண்ணல.. இந்த வருசம்
கண்டிப்பா மழை வரும்..உன்
காச அப்ப தந்துடுறேன்..கொஞ்சம்
பொருத்துக்க…
10 மாசம்
வட்டி கட்டிருக்கியா? உன் மகளுக்கு கல்யாணம்
ஆகி 16 மாசம் ஆச்சு..கடைசி
6 மாசத்துக்கு வட்டியும் வரல..சனியன் உன்கிட்ட
பணத்த குடுத்துட்டு நான் அலையுற பாடு
அந்த சித்தக்கூர் ஆண்டவனுக்கு தான் தெரியும்.
வட்டிகாரனின்
வார்த்தையைக் கேட்டு வள்ளியம்மை அழுதுக்கொண்டு
இருந்தாள்.அதைப் பார்க்கும் அக்கம்
பக்கத்தினர் முகத்தில் சோகத்தையும்,அகத்தில் சிரிப்பையும் வைத்திருந்தனர்.
‘இன்னும்
ஒரு வாரத்துக்குள்ள என் பணம் வட்டியோட
வந்தாகனும்..இல்லைனா எங்கயாவது வெசத்த
குடிச்சுட்டு செத்துருங்க..’
தன் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு
அனுப்பும் முனப்பில் இருக்கும் வட்டிக்காரனின் கட்டளைகள் சின்னப்பாவையும்,வள்ளியம்மையையும் கைது செய்தன.
‘ஒரு வாரத்துக்குள்ள எப்படிங்க
பணத்த குடுக்குறது.’
இரவு உணவில் கவலையையும் சேர்த்துப்
பறிமாறுகிறாள் வள்ளியம்மை.மற்ற குடும்ப பெண்களைப்
போல ‘இந்த நகையை வித்து
கடனை அடைங்க’ என்று வள்ளியம்மை
சொல்ல முடியாது.ஏனெனில் அவை அனைத்தும்
மகளிடம் உள்ளது.
அடுத்த
நாள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்
மாணவர்களைப் போல இருவருக்கும் தூக்கம்
வரவில்லை.
ஊரில் யாரிடமாவது கேட்கலாமா?
வேண்டாம்…அவர்களே என்னைப் போல
100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து சாப்பிட்டு
கொண்டிருக்கிறார்கள்.
மகளிடம்….?
இல்லை…அவளே போன மாதம்
பால் வியாபாரம் இனி செய்ய முடியாது.இருந்த பசுக்கள் வெயில்
காரணமாக நோய் வந்து இறந்து
விட்டன.நகையை வைத்து வங்கியில்
கடன் கேட்டுள்ளோம் என்றாள்.
சொந்தகார்களிடம்
கேட்டு பார்ப்போமே?
அவர்கள்
பணம் தருவதற்குள் காளை மாடு கன்று
போட்டு விடும்.
நண்பர்கள்?
பணத்தின்
அளவைப் பொருத்தே நண்பர்களின் அளவும் இருக்கும்.
சின்னப்பாவிற்கு
2 நண்பர்கள்..முதல் ஆள் இராமதுரை..
ஆனால் அவரால் இவ்வளவு பெரியத்
தொகையைத் தர முடியாது.
மாணிக்கம்.
. . கடைசி வாய்ப்பு. . அவன் வெளியூர் போய்
பல வருடம் இருக்கும்….என்னை
ஞாபகம் வைத்திருப்பானா? ஒரே ஊர்க்காரான்,சிறு
வயது நண்பன் எப்படி மறப்பான்..?
வள்ளியம்மை
காலைல வெள்ளென சமச்சு வை..
அறந்தாங்கி போகனும் நான்..
என்ன சின்னப்பா காலையிலே இந்தப் பக்கம்?
காசு இல்லாதவன் காலையிலே யார் வீட்டுக்கும் போக
கூடாது.
‘அறந்தாங்கி
வரைகும் போறேன்.. ஒரு 100 ரூபா குடுத்தினா..வந்து தந்துடுவேன்.”
‘இன்னைக்கு
ஒன்னும் சந்தை இல்லையே. .. அப்பறம்
ஏன்?
‘நம்ம மாணிக்கம் அங்க இருக்கான்ல அவன
தான் பாக்க போறேன்..’
‘அவன் எங்க நம்ம ஊர்
பக்கம் வரான் . . நாம தான் அவன
பாக்க போறோம். . இப்ப எதுக்கு அவன
பாக்க போற?
நண்பனாக
இருந்தாலும் பணம் தருவதற்குள் சில
கேள்விகள் கேட்டு தான் தருவான்.
நடந்த அனைத்தையும் இராமதுரையிடம் கூறினார் சின்னப்பா.
‘மாணிக்கம்
பணம் தருவான்னு நம்புறியா?
‘வேற வழி இல்ல..’
‘அவன் இப்ப முன்ன மாதிரி
இல்ல.. புரிஞ்சுக்கோ?’
‘அவன விட்டா வேற ஆள்
இல்ல..’
‘கேக்க
மாட்ற.. இரு வாரேன்..’
உள்ளே சென்ற இராமதுரை 100 ரூபாயுடன்
வந்தார்.
‘இனிமே
இப்படி கேட்டு வந்துடாத’ இராமதுரை
உருவில் அவர் மனைவியின் வார்த்தைகள்.
வறண்டு
போன வயல்களைக் கடக்கும் போது அவரது வயல்களையும்
கண்டார்..சிறுவயதிலிருந்து வேலை செய்த வயல்கள்
இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட உதவுகின்றன.. வரப்புகளில்
புற்களை மேய்ந்த மாடுகள் வண்டிகளில்
ஏற்றப்படுகின்றன.. தொடர் மழைகளால் நிரம்பிய
குளங்களுக்குப் பித்த வெடிப்புகள் வந்துவிட்டன..இதை நினைத்துக்கொண்டே தன்
வயல்களுக்கு இரண்டு சொட்டு நீர்
பாய்ச்சினார் சின்னப்பா.
சிறுவயதில்
வயலை உழுவக் கற்றதையும்,
தன் மனைவியுடன் களை எடுத்தையும், தன்
மகளுக்கு கல்யாணம் செய்ததையும், ஒரு நாள் விடாமல்
வானிலை அறிக்கை கேட்டதையும், வட்டிக்காரனின்
வார்த்தைகளை மாதம் தவறாமல் கேட்டதையும்
நினைத்துக்கொண்டே பேருந்து நிலையம் வந்தார்.
அமரடக்கி
பேருந்து நிலையம் உங்களை அன்புடன்
வரவேற்கிறது.
என்ன ஒரு புத்துணர்ச்சியான வாக்கியம்.
‘எங்க போகனும்?’
‘அறந்தாங்கி’
‘எங்க ஏறுனது?’
‘அமரடக்கி”
‘100 ரூபாய
நீட்டுற? எல்லாரும் 100 ரூபாயா நீட்டுனா நான்
எங்க போறது.. 12 ரூபா டிக்கெட்.. சில்லரை
எதாவது இருக்கா பாருங்க..’
இந்த கேள்விக்கு சின்னப்பா யோசிக்க தேவையில்லை.
‘இல்லை’
‘எங்கிட்டையும்
சில்லரை இல்ல அப்பறம் தாரேன்.’
அவனும்
கடன் வாங்கி வந்துருப்பான் போல…
சரியான
சில்லரைக் குடுக்காததால் என்னவோ..85 ரூபாய் தான் பாக்கி
வந்தது.
’16 மாசதுக்கு
முன்னாடி என் மக கல்யாணத்துக்கு
சீர்வரிசை வாங்க வந்தது.. அதுக்கு
அப்பறம் இப்ப தான் வரேன்.’என்றவாறே தான் வாங்கி வந்த
10ரூபா பிஸ்கட்டையும், 10 ரூபா அச்சு முருக்கையும்
மாணிக்கத்தின் மகளிடம் குடுத்தார் சின்னப்பா.
மாணிக்கம்
தன் மனைவியிடம் டீ போட்டுக் கொண்டு
வரச் சொன்னார்.இது தான் தன்
நண்பனுடன் நன்றாக பேச கூடிய
நேரம்..
‘என்ன விசயம் சின்னப்பா? 3 வருசமா
மழையும் இல்லயாம்.. இப்ப என்ன பண்ற?
உன் மக கல்யாணத்துக்கு வர
முடியல என்ன மன்னிச்சுரு..’
‘அத விடு .. உன் கிட்ட
ஒரு உதவி கேட்பேன் .. உன்னால
முடிஞ்சா செய்றியா?’
‘என்ன பண்ணனும் சொல்லு’
நடந்ததை
சொல்லி முடித்தவுடன் டீ வந்தது. டீயை
விட மாணிக்கத்தின் மனைவி அதிகம் கொதித்திருந்தாள்.
‘நாங்க
என்னங்க பண்றது?..இப்ப தான் இந்த
வீட்ட கட்டிமுடிச்சோம்..இதுக்கு வாங்குன கடனையே
இன்னும் அடைக்கல.. ‘ என்பதில் ஆரம்பித்து பால்காரனுக்கு பாக்கித் தர வேண்டும் என்பது
வரை கூறி முடித்தாள்.மாணிக்கம்
என்ன சொல்வது என்று தெரியாமல்
அமைதியாகவே இருந்தார்.கடைசி வாய்ப்பு கட்சி
காரர்களின் வாக்குறுதியைப் போல நிறைவேறாமலேயே போனது.
சின்னப்பா போய்டு வாரேன் என்று
எழுந்தார்.அப்போது தான் மூடி
இருந்த மாணிக்கத்தின் வாய்த் திறந்தது.
‘சாப்பிட்டு
போ சின்னப்பா’
‘இப்ப தான் வீடு கட்டிருக்கீங்க
அரிசி இருக்காது.. நான் இன்னொரு நாள்
வந்து சாப்புடுறேன்’ என்று நக்கலாக
கூறிவிட்டு வெளியே வந்தார்.
‘காசு இல்லைனாலும் பேச்ச பாத்தீங்கலளா?’ என்று கூறிக்கொண்டே
சின்னப்பா குடிக்காதா டீயை நாயிடம் ஊற்றினாள்.
சின்னப்பா
வெளியே வரும் போது புது
வீட்டுக்கு 3 ஏசிக்கள் வந்து இறங்கின.
கண்ணின்
கருவிழி கண் முழுவதும் பரவியது
போல் உலகமே இருண்டு போனது.
வட்டிகாரனுக்கு எப்படி பணத்தைக் குடுப்பது..
அதற்கு முன் இராமதுரைக்கு வேற
குடுக்க வேண்டும்..மனைவியிடம் என்ன பதில் சொல்வது..ஊர் மக்கள் முன்
எப்படி தலை காட்டுவது..இதற்குப்
பதில் வெசத்தை குடித்து சாகலாம்
என்னும் வார்த்தைகள் திடீரென ஞாபகம் வந்தன..
மருந்துக்கடை
நோக்கி நடந்தார்.
‘எலி மருந்து ஒன்னு எவ்ளோ?’
’56 ரூபா’
சின்னப்பா
தன் பையிலுள்ள பணத்தை எண்ணினார். 65 ரூபாய்
இருந்தது. ஊருக்குத் திரும்பி போக 12 ரூபாய் வேண்டும்.
மீதம் 53 ரூபா தான் உள்ளது.
‘இதுக்குக்
கம்மியா இல்லயா?’
‘இல்லைங்க’
இப்படி
நடக்கும் என்று தெரிந்திருந்தால் கன்டெக்டரிடம்
3 ரூபாய்க்கு சண்டை போட்டுருக்கலாம் என்று
நினைத்தார் சின்னப்பா.
பேருந்து
ஏறி அமரடக்கி போனார்.
அமரடக்கி
பேருந்து நிலையம் உங்களை அன்புடன்
வரவேற்கிறது.
என்ன ஒரு நக்கலான வாக்கியம்.
மீண்டும்
அதே வறண்ட பூமி..வயல்களின்
ஓரங்களில் அரலிச் செடிகள்.
அரலி…..!
இப்பவே
சாப்பிட்டு விடலாமா? வள்ளியம்மை என்ன செய்வாள்? அவளுக்கு
என்னை விட்டால் யாரும் இல்லை… அவள்
இதற்கு ஒத்துக்கொள்வாளா? நான் சொன்னால் செய்வாள்.
தயக்கத்துடன்
வீட்டை நோக்கி நடந்தார். . நகர்ந்தார்.
.
‘வள்ளியம்மை
ஊர் முன்னாடி அவமானப்படுறதுக்கு அரலிய அரைச்சு சாப்புட்டுருவோம்.
. .என்ன சொல்ற?’
‘நான் இத முன்னாடியே முடிவு
பன்னிட்டேங்க.’
‘என்ன சொல்ற’
‘மாணிக்கம்
பணம் தர மாட்டான்னு தெரியும்.
. . அதான் நம்ம பொண்ணு வீட்டுக்கு
போய்ட்டு வந்தேன்.. அங்க சம்மந்தி அவமான
படுத்திட்டாங்க. . ஊருக்கே இந்த விசயம்
தெரிஞ்சுரிச்சு..’
‘நான் சொல்லாததலாம் ஏன் பண்ற?’
‘எனக்கு
வேற வழி தெரியல.. ஏற்கனவே
அரலிய அரச்சு வச்சுட்டேன். . சாப்புடலாமாங்க?’
கண்ணீருடன்
தட்டைக் கழுவி சோற்றைப் பறிமாறுகிறாள்
வள்ளியம்மை. வட்டிக்காரனின் வார்த்தைகள் சின்னப்பாவின் தொண்டையில் சோற்றை இறங்க விடாமல்
தடுத்தன. தன் மனைவி பட்ட
அவமானத்தை விட அரலி ஒன்றும்
அவ்வளவு கசப்பாக தெரியவில்லை. சின்னப்பா
தட்டிலிருந்து கடைசியாக ஒரு கையளவு சோற்றை
அள்ளி வள்ளியம்மை உண்கிறாள்.
சாப்பிட்டப்பின்
கடவுளை வணங்கிவிட்டு தங்கள் மகளின் சிறுவயது
ஆடைகளை தலைக்கு வைத்துக்கொண்டு மனசாட்சியற்ற
மனிதர்களின் உலகை விட்டு போகிறார்கள்.
அடுத்த
நாள்.தொடர் மழையின் காரணமாக
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை எனும் செய்திக்கு கீழே
: கடன் தொல்லையால் விவசாயி இருவர் தற்கொலை.
No comments:
Post a Comment