Sunday 27 July 2014

Story 94: ஓடு நந்து ஓடு



ஓடு நந்து ஓடு
குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைத் தாண்டி தன் அறுந்த செருப்பையும் பொருட்படுத்தாமல் மிக வேகத்தில் ஒருவன் வியர்வை வியெர்க்க ஓடிக் கொண்டிருக்கிறான். அவனது பெயர் நந்து. ஒரு கையில் காகிதத்தால் சுற்றிய ஒரு பொருளையும் மறு கையில் தனது கை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ஏன்  இப்படி ஓடுகிறான்? எதற்காக இப்படி ஓடுகிறான்? என்பதை பார்க்க அறை மணி நேரம் பின்னோக்கி செல்வோம்.

மணி சரியாக காலை 10:20 இருக்கும். நந்துவின் மனைவி உஷா ஜன்னலை சிறிது நேரம் ஊற்றுப் பார்த்து கொண்டு பின்னர் அருகில் உள்ள பீரோ வை திறந்து மலையாளிகள் அணியும் வெள்ளை நிற புடவையை  வெளியே எடுத்து கண்ணாடி முன் நின்று தன் அழகுக்கு அது பொருந்துகிறதா என்று நெஞ்சோடு புடவையை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள் . இதை சற்று தூரத்தில் இருந்து கவனித்த நந்து "எதற்கு காலையில இந்த புடவையை வச்சு அழகு பாத்துகிட்டு இருக்கிறா !! நம்ம ஏதாவது கேட்டா நேத்து ராத்திரி அவ கிட்ட அழகு சாதன பொருள் ஏன் வாங்குனன்னு கேட்டதுக்கு சண்டை போட்ட மாதிரி இன்னைக்கும் சண்டை போடுவா . நமக்கு எதுக்கு வம்பு" என்று நினைத்துக் கொண்டு சமையல் அறையை நோக்கிச் சென்றான். ஆறிப் போன இட்லியை தட்டிலும், தக்காளி சட்னியை சிறு கிண்ணத்திலும் வைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றான். உஷா அந்த புடவையை அழகாக மடித்து மேஜை மேல் வைத்தாள். பிறகு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு "நந்து... நான் வங்கி வரைக்கும்  போய் விட்டு 11 மணிக்கு வந்துடுவேன் .. பார்த்துக்கோங்க " என்று அந்த புடவையைப் பார்த்து கண்களால் சைகை காட்டி வெளியே சென்றாள்.
அவன் சாப்பிட்டுக் கொண்டே அந்த மேஜையில் உள்ள புடவையை நோக்கினான். கடலுக்கு அடியில் முத்து பிரகாசிப்பது போல் அந்த புடவை பிரகாசமாக அவன் கண்ணுக்கு தென்பட்டது. அவனது நினைவு அலைகளில் பச்சையான புள் தரையில் உஷா அந்த புடவையை உடுத்திக் கொண்டு மயில் தோகையை விரிப்பது போல் தனது முந்தானையை விரித்து அழகாக தலையில் மெதுவாக முக்காடு போட்டுக் கொண்டு கண்களில் வெட்கத்துடன் இது எனக்கு நல்லா இருக்கா என்று அவனைப் பார்த்து கேட்கிறாள். சற்றே அதிர்ந்து தனது நினைவு அலைகளில் இருந்து நிகழ் உலகிற்கு வருகிறான். "எதுக்கு இந்த புடவையை இன்னைக்கு வெளியே எடுத்தா !!" என்று யோசித்து கொண்டே சாப்பிட்ட தட்டையும் கிண்ணத்தையும் கையில் வைத்துக் கொண்டு அந்த புடவையை கிட்ட சென்று பார்க்கிறான். யோசித்துக் கொண்டே அந்த புடவையை உற்று பார்த்துக் கொண்டு இருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவன் தட்டில் மேல் வைத்து இருந்த சட்னி கிண்ணம் பட்டென்று மேஜை மேலே விழுந்தது. சிறு துளி தக்காளி சட்னி அந்த புடவையின் மேல் விழுந்தது. குழந்தையின் அழகான முகத்தில் திருஷ்டி பொட்டு வைப்பது போல், அந்த அழகான வெண்ணிற புடவையில் சிவப்பு நிறத்தில் ஒரு சொட்டு தக்காளி சட்னி திருஷ்டியாக இருந்தது.

புடவையில் கறையை  பார்த்தவுடன் அதிர்ந்து போனான். அவனது நினைவில் பயம் கலந்த கற்பனைகள் உலா வந்தன. "நேற்று இரவு சண்டையில் விவாகரத்து வரைக்கும் பேசினவ, இன்னைக்கு இந்த கறையை அவளோட மிகவும் விருப்பமான புடவையில் பார்த்துட்டானா அவ்வளவுதான்... நான் செத்தேன்... நான் செத்தேன்.. அவ வீட்டுக்கு வர போறா , கறையை பார்க்க போறா , ருத்ர தாண்டவம் ஆட போறா, விவாகரத்து கேட்டு என்ன நீதிமன்றம் வாசலில் நிக்க வைக்க போறா" இவ்வாறு கற்பனையில் பயந்து கொண்டான். அவன் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டான். இப்பொழுது பதட்டப்பட்டால் எதுவும் யோசிக்க முடியாது என்று தனக்கு தானே தைரியம் வரவழைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினான். கறையை உற்று பார்த்தான் , சிறிய பொட்டு போன்று தான் இருந்தது. அழகாக காகிதத்தால் நீக்கிவிடலாம் என்று அருகில் இருந்த காகிதத்தை வைத்து லேசாக அகற்ற முயற்சிதான். அவன் கறை மேல் காகிதத்தை வைத்து துடைக்க துடைக்க அந்த கறை  சேலை முழுவதும் பரவி கொண்டே இருந்தது. அதை பார்த்தவுடன் அவனது இதய துடிப்பு நின்றது, என்ன செய்வது என்று அறியாமல் விழித்தான். கடிகாரத்தைப் பார்த்தான், மணி 10:30 என்று காட்டியது.
11 மணிக்கு வந்து விடுவாள், அதற்குள் துவைக்கும் எந்திரத்தில் போட்டு சீக்கிரம் துவைத்து விட வேண்டும் என்று வேகமாக அந்த புடவையை எந்திரத்தில் போட்டான். எந்திரத்தை ஆன் செய்தான். தண்ணீர் எந்திரத்தில் உள்ளே கொட்ட ஆரம்பித்தது. எந்திரத்தின் கண்ணாடி வழியாக உற்று கவனித்தான். அழுக்கு நீர் அதில் கொட்டிக் கொண்டு இருந்தது. அதை பார்த்தவுடன் எந்திரத்தை நிறுத்திவிட்டு புடவையை எடுத்து பார்த்தான்.  வெள்ளை புடவை காக்கி புடவை போல் இருந்தது. விரக்தியில் "ச்ச்ச... பூமிக்கு அடியில தண்ணீர் எடுக்குறேன்னு சொல்லி இப்படி ஆழத்துல எடுத்தா அழுக்கு நீர் வராம வேற என்ன வரும்..."  என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அந்த அழுக்குத் துணியை தூக்கி ஜன்னல் ஓரம் வீசினான். அப்பொழுது ஜன்னல் வழியே பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடி கொடியில் அதே நிற புடவை காய்ந்து கொண்டு இருந்ததை கண்டான். மறுபடியும் கடிகாரத்தை பார்த்தான், மணி 10:35 என்று காட்டியது.  அவர்களுக்கு தெரியாமல் திருடி, இந்த அழுக்கு துணியை துவைத்தவுடன், அங்கே மீண்டும் இந்த திருடிய துணியை காய வைத்துவிடலாம் என்று எண்ணினான். 

அவனது வீட்டு மொட்டை மாடிக்கு சென்றான். அவனது வீட்டு மொட்டை மாடிக்கும்  பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடிக்கும் ஒரு பத்து அடி இடைவெளி இருக்கும். அருகே இருந்த பலகையை எடுத்தான். அது சரியாக அவனது மாடிக்கும்  பக்கத்து வீட்டு மாடிக்கும் வழி இணைப்பது போல் இருந்தது. பலகையை சரியாக இணைக்கிற படி அதை இணைத்து வைத்தான். பலகை மேல் ஏறி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க ஆரம்பித்தான். இரண்டு அடி எடுத்து வைத்திருப்பான், கொஞ்சம் கீழே கவனித்தான், மிகவும் ஆழமாக தான் இருந்தது. பயம் அவனை தொற்றிக் கொண்டது. இருந்தாலும் அவன் அந்த பயத்தை பொருட்படுத்தாமல் தனது கண்களை அந்த புடவை மேல் பார்க்கச் செய்தான். இன்னும் நான்கு அடி எடுத்து வைத்து இருப்பான். இன்னும் நாலு அடி தான் உள்ளது என்று அடுத்த அடியை எடுத்து வைக்க அந்த பலகை சரிய தொடங்கியது. அய்யோ கீழே விழ போகிறோமே என்று அந்த பலகையில் இருந்து அடுத்த வீட்டு மாடிக்கு தாவினான். பலகை தொப்பு என்று கீழே விழுந்தது. அவனோ பாவம், அவனால் பலகையில் இருந்து தாவ முடிந்ததே தவிர அவனால் பக்கத்துக்கு வீட்டு மாடியில் சேர முடியவில்லை, அவன் பக்கத்து வீட்டு மாடி சுவற்றில் தொங்கிக் கொண்டு இருந்தான். கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த மாடிக்கு போய் விடலாம் என்று கொஞ்சம் மூச்சைப் பிடித்து ஏறினான். அவன் கொஞ்சம் ஏறி அந்த மாடியை எட்டிப் பார்த்த நேரத்தில் , பக்கத்துக்கு வீட்டுக்கார பெண் காய வைத்த  புடவையை கொடியில் இருந்து கழட்டி கீழே எடுத்துச் சென்று விட்டாள். இதை சுவற்றில் தொங்கிய படியே பார்த்த அவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இப்பொழுது எப்படி கீழே இறங்கப் போகிறோம் என்று யோசித்து கொண்டு இருந்தான். பக்கத்தில் குளிர் சாதன பெட்டி ஜன்னலில் ஒட்டப்பட்டு இருந்தது. அதன் மேல் கால் வைத்து சற்று கீழே இறங்கினான். குளிர் சாதனப் பெட்டி இவன் எடையைத் தாங்க முடியாமல் சரிய ஆரம்பித்தது. சரிய ஆரம்பித்த அதிர்ச்சியில் பக்கத்தில் வீடு கட்டுவதற்காக வைத்து இருந்த மண் குவியல் மேல் விழுந்தான். உடம்பில் வலி உடனும், மனதில் ஏமாற்றத்துடனும் தனது வீட்டிற்கு சென்றான். வீட்டுக்குள் வந்து கடிகாரத்தைப் பார்த்தான், மணி இப்பொழுது 10:40. திடிரென்று ஒரு யோசனை அவனுக்குத் தோன்றியது. "இந்த இருபது நிமிடத்தில் ஒரு புதுப் புடவை கடையில் வாங்கி அவள் வருவதற்குள் கொண்டு வந்துட்டா என்ன?" என்று யோசித்தான். உடனே கையில் கடிகாரம் கட்டினான், பணப்பையை எடுத்துக் கொண்டான், இரண்டு சக்கர வாகன சாவியை எடுத்துக் கொண்டு ஏதாவது மறந்துவிட்டோமோ என்று யோசித்து கொண்டே சீக்கிரமாக கிளம்பினான். அவன் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான், இருந்தாலும் அவன் மனம் எதையோ மறந்தது போல் உணர்ந்தது.

கொஞ்ச தூரம் சென்ற பின், அங்கே சிக்னல் இருப்பதைக் கண்டான். கூடவே அங்கே காவல் அதிகாரி  இருப்பதையும் கண்டான். அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது அவன் தலை கவசத்தை அணிய மறந்துவிட்டான் என்று.  "மாட்டினால் இந்த வசூல் ராஜா வசூல் பண்ணி நேரத்தை போக்கிடுவாறு, எதுவும் கண்டுக்காம அவரை வேகமா தாண்டி போய்டுவோம்"  என்று மனதுக்குள் எண்ணி வண்டியை நேராக சிக்னலை நோக்கி ஓட்டினான். காவல் அதிகாரி அவனை கண்டு கொண்டார். காவல் அதிகாரி அவனை நோக்கி லட்டியை நீட்டி விசில் அடித்தார். அவனும் நம்மளை கண்டு கொண்டார் என்று கடுப்பில் மெதுவாக அவரை நோக்கி சென்றான். கிட்டே சென்றவுடன் அவர் நந்துவை பார்க்காமல் அவனுக்கு பின்னாடி ஒரு வண்டியில் மூன்று பேர் வருவதை பார்த்து கொண்டு விசில் அடித்து கொண்டு இருந்தார். " .. அவரு நம்மள பாக்கலையா .. ஐயோ ஐயோ..." என்று சந்தோசமாக மீண்டும் வண்டியை வேகமாக ஓட்டி கொண்டு துணிக்கடையை அடைந்தான்.
அங்கே மலையாளிகள் அணியும் அந்த வெள்ளையும் தங்கமும் கலந்த புடவை இருக்கிறதா என்று கடைக்காரனிடம் கேட்டான். அவர்கள் இருக்கிறது என்று சொன்னவுடன், எந்த புடவை உஷாவின் புடவை போல் அச்சு அசலாக உள்ளது என தேடினான். அவனுக்கு அதே போல் புடவை கிடைத்தது. பெரும் மகிழ்ச்சியை அவன் கண்களில் பார்க்க முடிந்தது. இப்பொழுது கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான், மணி 10:50 என்று காட்டியது. கடைக்காரனிடம் காசை கொடுத்து விட்டு ஒரு உறையில் அந்த புடவையை வாங்கி கொண்டு தனது வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். இப்பொழுது வேகம் எடுத்தால் இன்னும் ஐந்து நிமிடத்தில் சேர்ந்திடலாம் என்று வேகத்தை கூட்டினான். வேகமாக சந்தோசத்துடன் சென்று கொண்டு இருந்தவன் திடிரென்று வண்டி சக்கரம் படார் என்று வெடித்தவுடன் அவன் நெஞ்சு வெடித்தது போல் உணர்ந்தான். கடிகாரத்தில் மணி 10:52 பார்த்தவுடன், கொஞ்சம் கூட யோசிக்காமல் வண்டியை ஓரமாக விட்டுவிட்டு வேகமாக ஓட ஆரம்பித்தான்.

தன் வாழ்நாளில் ஓட்டப் பந்தயத்தில் கூட ஓடாதவன் இன்று உசேன் போல்டு -க்கே சவால் விடும் அளவுக்கு வேகமாக ஓடுகிறான். சந்து சந்தாக உள்ள தெருக்களில் எல்லா தடைகளையும் தாண்டியும், தாவியும், பாய்ந்தும், சிறுத்தை போல வேகமாக ஓடிக் கொண்டு இருந்தான். அவன் வேகத்துக்கு தடை போடுவது போல் இந்நேரம் அவனது செருப்பு அறுந்தது. அந்த அறுந்த செருப்புடன் சிறிது நேரம் ஓட, தனது கடிகாரத்தை பார்க்கிறான். மணி இப்பொழுது 10:55. செருப்பை தூக்கி எறிகிறான். வெறும் கால்களுடன் தனது வேகமான ஓட்டத்தை தொடர்கிறான். அவன் அசூர வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கையில் திடீர் என்று ஒரு அதிர்ச்சியான விஷயத்தைப் பார்க்கின்றான். அதாவது அவன் ஓடிக் கொண்டு இருக்கையில் அவனது மனைவி ஸ்கூட்டியில் தன் முன்னாடி செல்வதை பார்க்கிறான். அவள் வீட்டில் சேர்வதற்குள் இவன் சேர்ந்தால்தான் இவ்வளவு நேரம் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பலனாக அமையும் என்று அவன் நன்கு அறிந்திருந்தான்.
இப்பொழுது அவன் வேகமாக ஓடினால் அவனது மனைவி அவனை பார்க்க நேரிடும், மெதுவாக ஓடினால் அவள் அவனுக்கு முன்னாடி வீட்டுக்கு சேர்ந்துவிடுவாள். அவள் அவனை பார்க்காத மாதிரி மறைவாக பின்னாடியே ஓடி கொண்டு இருந்தான். அப்பொழுது சாலை ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு தெரு நாய் அவன் ஓடுவதை பார்த்து அவனை துறத்த ஆரம்பித்தது. நாய் வேறு வேகமாக அவனை துரத்தியது. இப்பொழுது அவன் நாய்க்கு பயந்து வேகமாக ஓடினால் அவன் மனைவி அவனைப் பார்க்க நேரிடும், மெதுவாக சென்றால் நாய் கடித்து விடும். மிகவும் குழப்பத்தில் வளைந்து வளைந்து ஓட ஆரம்பித்தான். நாயும் அவனுக்கு பின்னாடி வளைந்து வளைந்து ஓடியது. நாய் குறைப்பதின் சத்தத்தை கேட்டு அவன் மனைவி திரும்பி பார்க்க, இவன் கையில் இருந்த சேலையை வைத்து முகத்தை மூடிக் கொண்டு மின்னல் வேகத்தில் அருகில் இருந்த சந்தில் திரும்பினான். அவன் மனைவி திரும்பி பார்க்கும் பொழுது நாய் மட்டும் யாரையோ துரத்தி கொண்டு சந்தில் திரும்பவுது போல் இருந்தது.  பின்னர் தன் ஸ்கூட்டியில் வீட்டை நோக்கி புறப்பட்டாள். 

நாய் அவனை துறத்திக் கொண்டே சென்றது. அவனால் நாயின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நாய் அவனுக்கு மிக அருகே நெருங்கி கொண்டு இருக்க, இவன் பயத்தில் பதற, நாய் அவனது காலை கடிக்க பாய, அவனும் அருகே இருந்த பள்ளத்திற்கு மேல் பெரிய தோரணம் போல உள்ள கம்பியை பிடிக்க, நாய் அந்த பள்ளத்தில் விழுந்தது. அவன் கம்பியை பிடித்த படி தொங்கிக் கொண்டு இருந்தான், நாய் அப்பொழுதும் பள்ளத்தில் இருந்து அவன் காலை கடிக்க பாய்ந்து கொண்டே இருந்தது. நாய் ஒவ்வொரு முறை பாயும் போதும் தன்  கால்களை ஒவ்வொரு வாட்டியும் தூக்கி கொண்டே இருந்தான். பிறகு அவன் மெது மெதுவாக அவன் கையை கம்பி மேல் ஒவ்வொரு அடியாக வைத்து அந்தரத்தில் நகர ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் பள்ளத்தை தாண்டி தெருவில் இறங்கினான். இறங்கியதும் கீழே இருக்கும் நாயை பார்த்து குட்பை சொல்வது போல் சல்யூட் செய்தான். மீண்டும் சிறிது நேரம் ஓடி அருகே இருந்த சுவற்றை தாவி அவனது வீட்டுப் பின் புறத்தில் குதித்தான். மணி சரியாக 11:00 அடித்தது.
உஷா தன் வண்டியை வீட்டின் முன் புறத்தில் நிறுத்திக் கொண்டு இருந்தாள். நந்து பின்புறம் கதவை வேகமாக திறந்து உள்ளே செல்ல, அவன் மனைவியோ வீட்டின் முன் கதவை திறக்க, நந்து கையில் வைத்து இருந்த காகிதத்தை பிரித்து அந்த புடவையை மேஜை மேல் வைக்க, உஷா அவன் முன்னால் நிற்கின்றாள். நந்து உடம்பெல்லாம் வியெர்வை சிந்திய படியும் , மூச்சு வாங்கிய படியும் நின்று கொண்டு இருந்தான். உஷா அவனை பார்த்து "என்ன ஆச்சு உங்களுக்கு?" என்று கேட்கிறாள். "உடற்பயிற்சி செஞ்சிகிட்டு இருந்தேன் " என்று நந்து பதில் அளித்தான். "நீங்க உடற்பயிற்சியா ??!! நல்ல தமாஷ் " என்றாள் சிரித்தப்படியே.  மேஜை மேல் உள்ள புடவையை பார்க்கிறாள் , என்ன இது புதிதாக இருக்குற மாதிரி தெரியுது என்று உற்று பார்க்கிறாள். அப்பொழுது நந்து ஜன்னல் கீழே இருந்த அழுக்குப் புடவையை பார்க்கிறான். அவள் அதை பார்பதற்குள் வேகமாக ஜன்னல் அருகே நின்று அதை அவளுக்கு தெரியாமல் எடுத்து அருகே இருந்த அழுக்கு மூட்டையில் தூக்கி எறிகிறான்.

உஷா அந்த புடவையை மேஜை மேலே விரிக்கிறாள். அருகில் இருந்த கத்திரிகோளை எடுத்து பாதியாக வெட்டுகிறாள். இதை பார்த்த நந்து அதிர்ந்து போனான். "ஏய் என்ன ஆச்சு உனக்கு , எதுக்கு நல்லா இருக்குற புடவையை கிழிக்குற " என்று உரத்த குரலில் கேட்டான். "இன்னைக்கு நான் பீரோவில் இருந்து இந்த புடவையை எடுத்ததே இது இனிமேல் தேவை இல்லாத பழைய டிசைன் என்பதற்காகத்தான். அதுக்குத்தான் ஜன்னலை மறைக்க துணியாய் தைத்து போடலாம்னு கிளிச்சிட்டன்" என்று கூறினாள். நந்துவுக்கு தலையே சுற்றியது, இவ்வளவு கஷ்டப்பட்டது வீணாகி போச்சே என்று விரக்தி ஆனான். "பரவாயில்லை , நான் இந்த புடவைக்காக  இப்படி ஓடினேன் என்று தெரிந்தால் , என்னை வெறுப்பு ஏற்றியே சாகடிப்பா.. தெரியாமல் இருப்பதே நல்லது" என்று நினைத்துக் கொண்டான். புடவையை வெட்டிக் கொண்டிருந்த உஷா, அந்த புடவையில் உள்ள ஸ்டிக்கரில் ரூபாய் 850 என்று போட்டு இருப்பதை  பார்த்து ஆச்சர்யப்பட்டு "எப்படி இந்த புது புடவை இங்கே வந்துது??" என்று நந்துவை பார்த்து கேட்டாள். என்ன சொல்வது என்று தெரியாமல் அருகில் இருந்த அழுக்கு மூட்டையில் இருந்த அழுக்கு புடவையை காட்டி அப்படியே அவளைப் பார்த்தபடி அப்பாவியை நின்றான் நந்து.

No comments:

Post a Comment