Saturday 26 July 2014

Story 88: சங்கிலி



சங்கிலி
அடச் சே!
வழக்கம்போல் சைக்கிள் செயின் கழன்றுவிட்டது. இப்படித்தான் வேளைகெட்ட வேளையில் அறுந்து தொலையும். இப்போதுகூடப் பாருங்கள், சிநேகிதனுடன் நேரத்தை வீணடித்துவிட்டு வீடுதிரும்பும் வழியில்இரவின் பத்துமணிக் கும்மிருட்டில்அதோ, அந்தத் தாவடிச் சுடுகாட்டைக் கடக்கும் வேளையில் கழுத்தறுத்துவிட்டது செயின்.

பேய், பில்லி சூனியம் எல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை என்று நண்பர்களுடன் விண்ணாணம் கதைத்தாலும் கும்மிருட்டின் சுடலை அருகாமை உள்ளூர ஒரு பயத்தை சுரக்கதான் செய்யும் எனக்கும். அப்படிப்பட்ட எனக்கு, பேய் உலவும் சுடலையை அண்மிக்கும் போதெல்லாம் செயின் அறுந்துவிடச் சூனியம் வைத்திருக்கிறார்கள் அன்பர்கள் யாரோ. போகட்டும். கைப்பேசி வெளிச்சத்தைப் பிடித்தபடி பயப் பதற்றத்துடன் நடுங்கும் கைகளால் செயினை கொழுவிவிட்டு நிமிர்ந்து பார்த்தால்...
ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது!
அறுபது வயது முகம்மெல்லிய உடல்ஒட்டிய வயிறுஇடுப்பில் ஒரு அழுக்கு வெட்டிஅதன்கீழே... கீழே.. இன்னும் கீழே...
காலைக் காணவில்லை..!
ஐயோ!! பேய்!!” என அலறியபடி திடுக்கிட்டு எழுந்தேன்.. கட்டிலின் கீழே விழுந்திருந்தேன். அடச்சீ, எல்லாம் கனவா? என்றபடி எழுந்து கட்டிலில் படுத்தேன் என்று இந்தக் கதையை உட்கார்ந்து எழுதும் வெட்டிப்பயல் மட்டும் முடித்தால் எத்தனை நல்லது! ஆனால் இது உண்மை! கண்முன்னே காலில்லாமல் ஒரு உருவம் அந்தரத்தில் நின்றுகொண்டி... ஒரு நிமிஷம்! …ருந்தார்.
ஒரு கால்தான் இல்லை.
பாவம், யாரோ ஊனமுற்றவர்.
..என்ன ஐயா வேணும்?” பயத்தையும் எச்சிலையும் விழுங்கியபடி கேட்டேன்.
ஒண்டுமில்ல தம்பி, நடந்துவரேக்க கால் கழண்டு வீதியில விழுந்துபோட்டுது. ஒருக்கா உந்தடார்ச்சடிச்சு எடுத்துத் தாறியளே?”
காலா? பாவம், மரக்கால் கழன்று விழுந்துவிட்டதுபோலும், அந்த வீதியில் தேடத் தொடங்கினேன். கிழவனை சைக்கிளில் ஏற்றி வீட்டிலே கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். உதவிக்கு உதவி, பயத்துக்குத் துணை. ஒரே கல்லிலே இரண்டு தேங்காய். (அது மாங்காய் சீசன் இல்லை.)
சிறிது தொலைவில் மரக்கால் தெரிந்தது.
கால் கிடக்குது ஐயா!” என்று கூவிவிட்டு எடுக்கக் குனிந்தால்... அதுஅதுமனிதக்கால்!
கொஞ்சமாக சிதைந்து, கழன்ற இடத்தில் சதை பிய்ந்து, மண் எல்லாம் ஒட்டியபடி... நிஜக் கால். திரும்பிப் பார்த்தேன். அந்தக் கிழவன்அந்த ஊனமுற்றவன்அந்தப் பேய்என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருந்தது!
ஐயோ! பேய்!”
என அலறியபடி திடுக்கிட்டு எழுந்தேன். அடச்சீ, வழக்கமாக வரும் கனவு. மண்ணை தட்டிவிட்டு குழியிலிருந்து வெளியே வந்தேன். காலாற வீதியிலே நடந்தேன். இருட்டில் என் பழைய சம்பவங்கள் தெரிந்தன. இதோ, இந்த இடத்திலேதான் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது செயின் அறுந்ததுஒரு உருவம் வந்ததுஅவனது காலை தேடியதுபேய் என உறைத்ததில் அதிர்ச்சியில் மாரடைத்து இறந்ததுசுற்றம் கூடி அழுது இங்கே கொண்டுவந்து புதைத்தது... பழசை நினைத்தபடி நான் நடந்துகொண்டிருக்கும்போது தூரத்தில் இருட்டில் ஏதோ உருவம் தெரிந்தது. இந்த நேரத்தில் சைக்கிளில் என்ன செய்கிறான்? அட, செயின் கொழுவுகிறான். பேய்கள் உலாவும் இந்த இரவுச் சுடலையில் இவன் இருப்பது ஆபத்து. சீக்கிரம் இவன் சைக்கிளை சரிப்படுத்தி வீட்டுக்குப் போக உதவவேண்டும் என எண்ணியபடி வேகமாக நடந்தபோது...
அடச் சே!”
என் கால் கழன்று விழுந்துவிட்டது.


விண்ணாணம் : வாய்ச்சவடால்
வரேக்க : வரும்போது
கழண்டு : கழன்று
தாறியளே : தருகிறீர்களா?
கிடக்கு : இருக்கிறது.

No comments:

Post a Comment