Thursday 31 July 2014

Story 114:மழை



மழை
மழை  என்னும்  தலைப்பில்  கவிதை  எழுதிவரவேண்டும்.
சிறந்த  கவிதைகளுக்குப்  பரிசு  வழங்கப்படும்.

எட்டாம்  வகுப்பில்  இருக்கும்  அகிலுக்கு,தமிழில் பிழையின்றி  எழுதுவதே , எட்டாக் கனியாய்  இருக்கையில், தமிழில்  கவிதை  என்பது   தடையில்லா  மின்சாரம்  போல்  கற்பனை  கூடப் பண்ணமுடியாததாய்  இருந்தது.

ஆனாலும் எழுதவேண்டும்.வெல்ல வேண்டும்.

காரணம்,விஜய்  எழுதப்போகிறான்.

அவன்  வென்றுவிட்டால்  வகுப்பில்  இவனை விட  அதிக  அந்தஸ்த்தை அடைந்துவிடுவானே.

வீட்டில்  யார்  உதவியாவது  கேட்டு,எப்படியாவது  எழுதிட  வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

கல்லூரி  முடிந்து  வீட்டுக்கு  வந்த அண்ணனிடம் சென்றான்.

"மழை பத்தி  ஒரு  கவிதை  சொல்லு  அண்ணா"

"கவிதையா? அதெல்லாம்  எனக்குத்  தெரியாது. இரு. என்  friend  கிட்ட  கேட்டு சொல்றன்"

அவன்  நண்பன்  குறுந்தகவலில்  கவிதை அனுப்பினான்.

"மழைச்சாரல்  தொட்டுச்செல்லும்  போது,
அவள்  கூந்தல்  பட்டுச்சென்ற  போதை,
நெஞ்சில்  இட்டுச்செல்கிறதே.
அவளும்  மழையும்  ஒன்றே,
உயிரைக்  குளிரவைப்பதில்,
உள்ளம்  மகிழவைப்பதில்"

"பிடிக்கல" அகில் சொல்லி நகர,

"கவிதை  ரொம்ப  பிடிச்சிருக்குடா. super. thanks  கோபி.love you"
அதைக் கொஞ்சம் கூட கவனிக்காமல், த‌ன் காதலி அனுப்பியிருந்த குறுந்தகவல் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அகிலின் அண்ணன் கோபி.

"அம்மா  நீயாது ஒரு நல்ல கவிதை  சொல்லுமா" அகில் கெஞ்ச,
அம்மா  சிந்தித்துப் பார்த்தாள்.
தனக்குத்  தெரிந்த தமிழ் வார்த்தைகளைக்  கோர்த்துச் சொன்னாள்

"மழை பொழிகிறது  வானும்,
மறந்துவிட்டேனே  நானும்,
மாடியில்  உலர்த்திய துணிகளை.
அவசரமாய்  எடுக்க  ஓடுகிறேன்.
நான் நனைந்தால்  பரவாயில்லை.
துணி  நனையக்கூடாது"

"இதுக்கு  அண்ணனே  பரவாயில்ல" அகில் வெறுப்படைந்தான்.

வேலைக்  களைப்பில்,  சோர்ந்து  போய் வீடுவந்த அப்பாவையும் அகில் விடவில்லை.

"நீயாவது  நல்ல கவிதை  சொல்லுபா.please" என்றான்.

அவன் அம்மாவைக் காதல் செய்த காலத்தில் கவிதை எழுதியிருந்தார் அவர்.
காதலியுடன்  திருமணத்திற்குப்  பிறகு  கவிதையோடு  விவாகரத்து வாங்கிக்கொண்டிருந்தார்.
இருந்தாலும்  மகனுக்காக  யோசித்தார்.

அரைமணி  நேரம் கழித்து  அவனை  அழைத்தார்.

"மேகங்கள்  ஒன்று  கூடி,
தாகங்கள்  தீர்க்கப்  பொழிகிறது.
தாளமாய்  இடியின்  ஒலிகள்,
வானிலிருந்து  வாழ்த்துச்  சொல்லி,
வாழவைக்கிறது  மனிதகுலத்தை."

சொல்லிமுடித்து,  "எப்புடிடா?"  என்றார் அகிலைப்பார்த்து.

"என்  friend நவீனுக்கு இப்பதான்  phone பண்ணன்.அவனும்  இதே தான் சொன்னான். அவன்  அப்பா சொன்னராம்"

"அவரும்  இத படிச்சிருப்பாரு போல" என்று வாரப்பத்திரிக்கை  ஒன்றைக் காட்டிச் சிரித்தாள் அம்மா.

"என்ன அப்பா இப்டி பண்ணிட" வருத்தத்துடன்  வாசலில் போய் நின்றான்.
லேசாக மழை  தூறியது.

"அம்மா  குடை  ரிப்பேர்" என்று  கூவிக்கொண்டு  சாலையில் போய்க்கொண்டிருந்த  குடை  சரிசெய்பவர்  ஒருவரைப் பார்த்து,

"அவருகிட்ட  போயி கேளுடா.அவருக்கு  மழைய  பத்தி  நெறைய தெரியும்" என்று  கிண்டல்  செய்தான் அண்ணன்.

"குடை  ரிப்பேர்  uncle.மழை  பத்தி  உங்களுக்குத்  தெரிஞ்சத சொல்லுங்களேன்"என்றான்.

"எல்லாருக்கும்  தெரிஞ்சது  தான்  எனக்கும் தெரியும்".

"அப்ப  மழை  பத்தி  நெனச்சா  உங்களுக்கு  என்ன  தோணுமோ  சொல்லுங்க"

"மழை  பத்தி நெனச்சா மனசுல வேற  என்ன தோணும்.சோறு  தான்.
 எம் புள்ளைங்களுக்கு  சந்தோசமா  சாப்பாடு  வாங்கிக் கொடுப்பன்.
கொஞ்ச நாள் தொடர்ந்து பேஞ்சு  அதிக குடை ரிப்பேருக்கு வந்துச்சுனா புதுத்துணி  வாங்கிக் கொடுப்பன்.
மழை  வர நாள் தான் என் குடும்பத்துக்குப் பண்டிகை  நாள்  தம்பி. மழை  என் குலசாமி. "

"அய்யோ.செம.thanks uncle.win பண்ணா உங்களுக்கு சாக்லேட் குடுக்குறன்."
என்று சொன்னான்.

"சரிப்பா"

“நாளைக்கு எப்ப வருவீங்க?”

“மழை வரும்போது”
சிரித்துக்கொண்டே  சென்றார்.

அடுத்த நாள்.

கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மூன்றில் ஒரு இடத்தைக்கூட விஜய் வெல்லவில்லை.
அகிலும் தான்.

விஜய் அழுதுகொண்டிருந்தான்.
தோல்வியைப் பொதுவாக கண்ணீருடன் கட்டிப்பிடிக்கும் அகில்,இம்முறை அழவில்லை.அவனுக்கே வியப்பாய் இருந்தது.

"கவிதையின் நடை,மொழி வளம்,போன்ற பல தகுதிகளின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டாலும்,வாசித்த அனைவரையும் கவர்ந்தது ஒரு கவிதை,அதற்குச் சிறப்புப் பரிசு.அதை வெல்வது,அகில்"

"மழை வருகிறது.
மனதில் சோறு தெரிகிறது.
தொடர்ந்து  பெய்கிறது.
அதிக குடைகள்  வருகிறது.
என்  பிள்ளைகளுக்குப்  புதுத்துணி.
என்  குடும்பத்திற்குப்  பண்டிகை  தினம்.
மழை  எனக்குக்  குலதெய்வம்.
இப்படிக்குக்  குடை  ரிப்பேர்  செய்பவன்"

அவன் வாசிக்க, அரங்கில் எழுந்த‌ கரவொலிகள், அகிலின் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

ஒரு  கையில்  விருதுடனும்  மறு  கையில்  சாக்லேட்  உடனும்  வீட்டு  வாசலிலே நின்று  கொண்டிருந்தான்  அகில்.

"உள்ள  வா  அகில்.யாருக்கு  காத்துக்கிட்டு  இருக்க?" அம்மா  கேட்டாள்.

"மழைக்கு".

No comments:

Post a Comment