மகன்
“வாட்ச்மேன்…டாமியை கக்காவுக்கு கூட்டிட்டுப்
போ”
முதலாளியம்மாவின்
குரல் கேட்டு திரும்பினார் வாட்ச்மேன்
சின்னு.
முன்பெல்லாம்
வீட்டிற்கு காவல் என்ற பணி
மட்டுமே வாட்ச்மேனுக்கு உரியதாக இருந்தது.இப்பொழுது
அப்படியல்ல. தோட்ட வேலைகள் முதல்
நாயை கக்காவுக்கு அழைத்துப் போவது வரை சில
இதரப் பணிகளையும் செய்ய வேண்டும். இதைப்
பற்றி எல்லாம் கவலையேப்படுவதில்லை சின்னு.
இரவு பத்து மணிக்கு அவருக்கும்
காலார நடக்க வேண்டும் போல்
தான் இருந்தது. சின்னு தனக்கென அமைக்கப்பட்டு
இருக்கும் கூண்டுக்குள் இருந்து வெளியே வந்தார்.
டாமி அதற்கென அமைக்கப்பட்டு இருக்கும்
வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தது.
வெடிப்பு
ஏறிய பாதங்களுடனும்,நரையேறிய மயிருகளுடனும் கொட்டிக் கொண்டிருக்கும் இரவில் நனைந்தபடியே நடந்து
சென்று கொண்டிருந்தார் சின்னு.அவரது நீல
நிற வார் கொண்ட ரப்பர்
செருப்பு மட்டும் “சடக்…சடக்” என
ஒலியெழுப்பிக் கொண்டது.சிறிது தூரம்
சென்ற பின் மணியும் அவருடன்
சேர்ந்து கொண்டான்.மணி,சின்னு வேலை
பார்க்கும் வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளி இருக்கும்
வீட்டில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறான். இன்னும்
கல்யாணமாகவில்லை.அவனும் அவன் வேலை
பார்க்கும் வீட்டிலிருக்கும் “ஜிம்மி” என்ற நாயை
கக்காவுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.தினமும்
இந்த நேரத்தில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டே நடப்பது
வழக்கம்.
மணியின்
வருகை சின்னுவுக்கு மிகப்பெரிய ஆறுதல்.ஆறு மாதத்திற்கு
முன்பு வரை தனியாக போய்விட்டுத்
தனியாக வர வேண்டும்.உடன்
டாமி மட்டுமே.துரதிருஷ்டவசமாக டாமியின்
பாஷை sசின்னுவுக்குத் தெரியவில்லை.சின்னுவின் பாஷை டாமிக்குத் தெரியவில்லை.அதனால் முன்பு சொன்ன
தனியாகவில் அவரது பேச்சும் இடம்பிடித்துக்
கொண்டது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை.மணி கலகலப்பான ஆள்.அதுவும் இளைஞன்.அதனால்
பேச்சு எல்லா திசைகளிலும் சென்றது.பேச்சும் மூச்சு போலவே.அடக்கி
வைக்க அடக்கி வைக்க உயிர்
பிரிய ஆரம்பிக்கும்.
அன்றும்
மணி தான் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன
பெருசு…ரொம்ப சந்தோசமா இருக்க
போல”.சின்னுவின் வாயைப் பிடுங்குவதில் மணிக்கு
அலாதி இன்பம்.
“ஆமா.அது ஒன்னுக்குத் தான்
இப்பக் கொறைச்சல்”.வயோதிகத்தின் வலி பேச்சில் சாரலாகத்
தெறித்தது.
“என்னாப்
பெருசு..ரொம்பத் தான் சலிச்சுக்குற…சாப்பிட்டீயா”என்று கேட்டுக் கொண்டே
பாக்கெட்டுக்குள் கைவிட்டு ஒரு பீடியை எடுத்து
வாயில் வைத்துப் பொருத்தினான்.இன்னொரு பீடிய சின்னுவிடம்
கொடுத்தான்.
சின்னு
அதை கையில் வாங்கிய படியே
“அதெல்லாம் ஆச்சுப்பா…உனக்கு” என்றார்.அவன்
வாயிலிருக்கும் பீடியை ஒரு இழு
இழுத்துவிட்டு பதில் சொல்லாமல் ஆச்சு
என்பது போல் தலையை மட்டும்
அசைத்தான்.சிறிது நேரம் இருவரும்
எதுவும் பேசாமல் நடந்தனர் முன்னே
சென்ற நாய்களுக்கு காவலாளிகள் போல.இரவின் ரகசியங்களைத்
தெரு விளக்குகள் அம்பலபடுத்திக் கொண்டிருந்தன.
மணி
எப்போதும் பேசும் சத்தத்தை கொஞ்சம்
குறைத்து சின்னுவிடம் கேட்டான் “ஏய்யா இப்படி மாளிகை
மாதிரி வீடு கட்டியிருக்காங்களே இம்புட்டுக்கும்
காசு இவங்களுக்கு எப்படியா கிடைக்குது”.
“எங்கிட்டாவது
நோட்டு கீட்டு அச்சடிப்பாங்ய்ய உனக்கேன்டா
அதெல்லாம்” என்றார் சின்னு கினண்டலாக.
“இல்ல
பெருசு..நானும் இது மாதிரிலாம்
சம்பாதிச்சு கட்டனும்ல…அதான் ஒரு ஐடியாக்கு
கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு”
கொஞ்சம்
சத்தமாகவே சிரித்துவிட்டார் சின்னு.மணி அவரைப்
பார்த்து முறைத்தான்.
“”போடாப்போடாப்
போக்கத்த பயலே…அவிய்ங்களாம் பரம்பரை
பரம்பரையா சொத்து சேத்தவிய்ங்கடா. அதுல
வந்ததுதான் இதுலாம். உங்க அப்பாரு என்ன
பண்ணுறாரு”
“அந்தாள்லாம்
பரலோகம் சேந்து பதினைஞ்சு வருசமாச்சு”
என்றான் மணி.
“ஊர்ல
சொத்துப் பத்து ஏதாவது இருக்கா”
என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டார் சின்னு.
இப்போது
மணிக்கே சிரிப்பு வந்துவிட்டது.”போய்யாயோவ்..அதெல்லாம் இருந்திருந்தா நான் ஏன் இங்க
வந்து இப்படி நாய்க் குண்டியை
மோந்துகிட்டுத் திரியுறேன்” என்றான் மணி.இப்பொழுது
இருவருமே சேர்ந்து சிரித்துக் கொண்டனர்.
சிரித்து
முடித்தவுடன் மணி கேட்டான் “ஏன்
பெருசு…என்னையைக் கேக்கறியே..இந்த வயசு வரைக்கும்
நீ என்ன சம்பாதிச்சு சாதிச்சுட்ட”
“இந்த
மெட்ராஸ்க்கு வாரதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் கோடிஸ்வரன் தான்டா.
ஆண்டிப்பட்டிப் பக்கம் வந்து சின்னப்பத்
தேவன்னு கேட்டேனா நட்டு வச்சிருக்கக் கல்லு
கூட வழி காட்டும்”
“அப்புறம்
என்னா மயித்துக்கு மெட்ராஸிக்கு வந்தீரு..எதாவது நடிகை கிடிகையைப்
பாத்து கட்டிக்கிட்டுப் போறதுக்கா”
“அடப்
போடா..இந்த நாசமாப் போற
மெட்ராஸிக்கு நானா எங்க வந்தேன்.
நாசாமாப் போயில்ல வந்தேன்.”
“என்னாப்
பெருசு சொல்ற..ஒன்னும் வெளங்களையே”
“பதினைஞ்சு
வருஷம் புள்ள இல்லாம தவமிருந்து
ஒரு பரதேசியைப் புள்ளையாப் பெத்துப் போட்டா என் பொஞ்சாதி..அந்தப் பரதேசிப் பய
மவன் என் சொத்தப் பூராம்
புடிங்கிட்டு அடிச்சுத் தொரத்திவிட்டுடான். அதான் இங்க வந்து
இப்படி சீப்பட்டுக்கிட்டிருக்கேன்”.
சாதாரணமாகத்
தான் சொன்னார் சின்னு.’திக்’கென்று
இருந்தது மணிக்கு. தன்னுடன் தினமும் சிரித்து பேசும்
கிழவனுக்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்குமென்று அவன்
நினைத்துப் பார்க்கவில்லை.அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவரிடம் கேட்டான்.
“என்னய்யா
சொல்ற..இதுவரைக்கும் ஏன்ட்ட இத சொல்லவேயில்லை”
“நல்லா
வாழ்ந்த கதைன்னா நாலாப் பக்கமும்
சொல்லலாம். இந்த நாறிப் போன
கதையைச் சொல்லி என்னாகப் போகுது”
வெறுமையுடன்
கூறினார் சின்னு.இருவரிடமும் ஒரு
மௌனம் அமர்ந்திருந்தது.
“அப்ப
உன் பொஞ்சாதி” என்றான் மணி.
“இங்க
வந்த ஒரு வருஷத்திலேயே மகராசி
போய் சேந்திட்டா” என்றார் சின்னு.
“உன்
பொஞ்சாதி பேரு என்னய்யா.” அமைதியாகக்
கேட்டான் மணி.
“அதான்
சொன்னனே மகராசி”.நாற்பது வருட
உறவு நான்கு எழுத்துக்களில் நினைவுகளாகத்
தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
மணி
வேலை செய்யும் வீடு வந்தவுடன் “போய்ட்டு
வரேன் பெருசு” என்று கூறிக்
கிளம்பினான். அதில் ஒரு சோகமும்
ஒட்டிக் கொண்டே சின்னுவை வந்தடைந்தது.சின்னு “ம்…ம்”
என்று சொல்லி விட்டு தான்
வேலை செய்யும் வீட்டிற்கு வந்து “டாமி”யை
அதன் வீட்டில் விட்டு விட்டு தன்
கூண்டுக்குள் ஒடுங்கி கொண்டார் இரவைப்
பார்த்தப்படியே. சில நினைவுகள் மட்டும்
அவ்வப்போது அலையென எழுந்து கண்களை
மட்டும் நனைத்துவிட்டு சென்று கொண்டிருந்தது.
பின்
இரண்டு நாட்கள் மணியைக் காணவில்லை.காலை ஷிஃப்ட்க்கு மாறிவிட்டானோ
என்று காலையில் அவன் வேலை செய்யும்
வீட்டில் பார்த்தார். அங்கு வேறொருவனே நின்று
கொண்டிருந்தான்.அவனிடம் கேட்டார்.உடம்பு
சரியில்லை என்று லீவு போட்டிருப்பதாகச்
சொன்னான். எத்தனை நாள் என்றும்
தெரியவில்லை என்றான். சின்னு சென்றுவிட்டார்.
இந்த
நான்கு நாட்களாகச் சின்னு தனியாகவே “டாமி”யை கக்காவிற்கு அழைத்துச்
சென்று கொண்டிருந்தார். மணி இருந்த போது
இருந்த மகிழ்ச்சி இப்போது பாதியாகக் குறைந்திருந்தது.
மீண்டும் தனிமைச் சிறையில் தன்னைக்
கட்டாயப்படுத்திப் பூட்டிக் கொண்டார்.தனிமை அவருக்கொன்றும் புதிது
கிடையாது என்றாலும் சில காலத் துணையாகவே
இருந்தாலும் மணி போன்றத் துணையை
இழப்பது சற்று கஷ்டமாகவே இருந்தது.”சொல்லாமக் கொள்ளாம இப்படிப் போய்ட்டானே”
என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டார்.
ஐந்தாவது
நாள் இரவு மணி வந்தான்.சின்னு எப்போதும் போல்
மணி வேலை செய்யும் வீட்டைக்
கடந்து சென்றார்.பின்னாலிருந்து குரல் வந்தது.
“என்னாப்
பெருசு…ஒரு நாலு நாள்
வல்லேன்னா மறந்துட்டியே” என்று அவனும் “ஜிம்மி”யுடன் வந்து அந்தப்
பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டான்.
ரொம்ப
நாள் கழித்து சந்தோசப்பட்டார் சின்னு.
மணியின் வருகை அவருக்கு புதுத்
தெம்பாக இருந்தது.எதுவும் பேசாத பயணங்களைத்
தள்ளி வைத்து விட்டு மணியுடன்
பேசுவதற்குத் தயாரானார்.
“அட
மடப் பய மவனே…சொல்லாம
கொள்ளாம இப்பிடியா விட்டுட்டு போவாக”.கோபம் நிஜம்
தான் என்றாலும் வீரியம் கிடையாது.
“அதுக்கு
ஏன் பெருசு மேலே இருக்கற
என் அப்பனலாம் வையிற” என்றான் மணி.
சட்டென சிரித்துவிட்டார் சின்னு. சின்னுவை சிரிக்க
வைக்கக் கூடிய ஒரே ஆள்
மணி மட்டும் தான்.
“வேலைக்கு
வராம நாலு நாளா எங்கட
திரிஞ்சுட்டு வார” என்றார் சின்னு.
“சும்மா
ஊர் சுத்தலாம் போகல பெருசு.ஒரு
சினிமா படத்துல நடிக்கக் கூப்புட்டாக.அதான் போயி சும்மா
ஒரு காட்டு காட்டிட்டு வரலாம்னு”
என்றான் மணி.
“எந்த
முட்டாப் பயடா உன்னைப் போயி
நடிக்கக் கூப்டது.இது ஏதோ
நாறப் பய ஊர்ல முழுகி
எந்திரிச்சவன் முட்டாள்ங்கற கணக்கால கெடக்கு”
மணி
முறைத்தவாறே கூறினான் “அதெல்லாம் உனக்கெதுக்கு.அதான் நடிச்சுட்டு வந்துடோம்ல”
“ஆமா
நடிச்சேன் நடிச்சேங்கிறியே..அப்படி என்னா வேசத்துலடா
நடிச்சுப்புட்ட”
மணி
கொஞ்சம் அமைதி காட்டிவிட்டுப் பின்பு
சொன்னான் “வாட்ச்மேன் வேசந்தான்”
சின்னு
பலமாக சிரித்துக் கொண்டே “ அட கட்டைல போறவனே.அங்க போயும் வாட்ச்மேன்
வேசந்தானா” என்றார்.
“ஆமா.
எதக் கொடுக்கறாங்களோ அதத்தானே செய்ய முடியும்”
அங்கு
நடந்த சில சுவாரஸ்யமான சம்ம்பவங்களை
சின்னுவிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். சின்னுவும்
சிரித்துக் கொண்டே மணியின் ரகளைகளைக்
கேட்டுக்கொண்டிருந்தார்.அவனுக்கு நடித்தது கூட பெருமையாக இல்லை.ஆனால் அந்த “Rea star”யிடம்
ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைத்தான்.
சின்னுவிடம்
ஒரு பேப்பரைக் காட்டி “என்னன்னு தெரியுதா”
என்றான்.
எழுத்துக்
கூட்டி ஓரளவுக்குப் படிக்கத் தெரிந்த அவருக்கு இந்த
சுற்றி விடப்பட்ட எழுத்துக்கள் புரியவே இல்லை. இந்த
மாதிரியான எழுத்துக்களை அவர் டாக்டர் எழுதித்
தரும் மருந்துச் சீட்டில் மட்டுமே பார்த்திருகிறார். பதட்டத்துடன்
அவனிடமே கேட்டுவிட்டார்.
“ஒடம்புக்கு
என்னய்யா ஆச்சு. மருந்து வாங்க
காசுலாம் இருக்குல”
எல்லாத்தையும்
பொருத்துக் கொண்ட அவனுக்கு இதைப்
பொருத்துக் கொள்ளவே முடியவில்லை.அவனை
கிண்டல் பண்ணினாலும் அவன் அமைதியாக இருப்பான்.
ஆனால் அவன் தலைவனை யாராவது
கிண்டல் பண்ணினால் தாங்க மாட்டான்.
“யோவ்
பெருசு என்ன நக்கலா.இது
என் தலைவனோட ஆட்டோகிராப்புயா“ என்றான்
சிறிது காட்டமாக.
ஆட்டோகிராப்
என்றால் என்னவென்று புரியாத சின்னு “என்னாது”
என்று கேட்டார்.
அதற்கு
மணி “ஆட்டோகிராப்புயா…ஆட்டோகிராப்பு” என இருமுறை அழுத்திச்
சொன்னான்.ஒன்னும் புரியாத சின்னு
“அதென்ன பூவோ ஒன்னும் வெளங்கல”
என்று சலித்துக் கொண்டார்.
“இது
பூவும் இல்ல ஒன்னும் இல்ல.
என் தலைவனோட கையெழுத்து” என்று
விளக்கம் கொடுத்தான் மணி.
“இப்படி
வெளங்கறாப்புல சொன்னாத் தானப் புரியும்” சொல்லிவிட்டு
அவன் கையில் இருக்கும் பேப்பரை
வாங்கி அதனைத் திருப்பித் திருப்பி
பார்த்தார்.ஒன்னும் புரியவில்லை சின்னுவிற்கு.
“என்னடா
இது..கோழிப் பீப் பேண்டாப்புல”
இதைக்
கேட்டவுடன் கோபம் பொத்துக் கொண்டு
வந்துவிட்டது மணிக்கு.சின்னுவிடம் எதுவும்
பேசாமல் கையில் இருக்கும் பேப்பரை
பிடிங்கிக் கொண்டு வேகமாக நடக்க
ஆரம்பித்தான்.சின்னு கூப்பிட கூப்பிட
எதுவும் பேசவில்லை. வேகமாக சென்று அவன்
வேலை பார்க்கும் வீட்டிற்குள் சென்று வெளிக் கதவை
தாழ் போட்டுக் கொண்டான்.
இவனது
வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத
சின்னு சிறிது நேரம் கழித்து
அவன் இருக்கும் வீட்டிற்கு முன் வந்து நின்றார்.
”மணி..மணி” மெதுவாக குரல்
கொடுத்தார்.உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை.கதவைத் தட்டலாமா என்ஸ்ரு
நினைத்தார்.ஆனால் வீட்டிற்குள் இருக்கும்
முதலாளி எழுந்துவிட்டால் வம்பாகிவிடும். அதனால் தட்டாமலேயே சென்றுவிட்டார்.
அவருக்கு
மனது இருப்புக் கொள்ளவில்லை.ஏதோ தவறு செய்த
மனம் பொல மனது “படக்..படக்” என அடித்தது.
அவருக்கு பேச்சுக்கென இருந்த ஒரு துணையையும்
கெடுத்துக் கொண்டுவிட்டதால் அவருக்கு அவர் மேலயே கோவம்
வந்து கொண்டிருந்தது. மீண்டும் எழுந்து சென்று மணி
என்று குரல் கொடுத்து வருவோமா
என்று கூடத் தோன்றியது. ஆனால்
அதனால் எந்தப் பயனும் இல்லை
என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்த்திருந்தது.அமைதியாக இரவைப் பார்த்தப் படியே
அமர்ந்திருந்தார். இரவு பெரு வெள்ளமென
ஓடிக் கொண்டிருந்தது மௌனமாக.
பொழுது
விடிந்ததும் நேரே மணி வேலை
செய்யும் வீட்டிற்குச் சென்றார். அன்றைக்கு விசாரிக்கச் சென்ற போது இருந்தவனே
இன்றும் இருந்தான்.இவரைப் பார்த்தவுடன் “என்ன
தாத்தா” என்றான்.”ஒன்னுமில்லை” என்று சொல்லிவிட்டு நடக்க
ஆரம்பித்தார்.மரியாதைகளில் மனசு செல்லவில்லை.அவன்
சொல்லும் “என்னாப் பெருசு” என்பதற்கு
மனம் ஏங்கியது ஒரு சின்னக் குழந்தையைப்
போல.
இரண்டு
நாட்களாகியும் மணி வரவில்லலை.இவருக்கு
என்னவோ போல் இருந்தது.முன்பிருந்த
பிரிவு போல் அல்லாமல் இரண்டு
நாள் போவது இரண்டு ஜென்மமாக
இருந்தது. பாசத்திற்கும் தனக்கும் எப்போதுமே ஒத்து வருவதில்லை என்று
புலம்பிக் கொண்டார். முதலில் தன் சொந்த
பிள்ளையிடம் வைத்த பாசம் இவரின்
ஞாபகத்திற்கு வந்தது.தனது பிள்ளை
மேல் அபரிவிதமான பாசத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார்.சிறு வயதில் அவனும்
அவர் மேல் பாசமாகவே இருந்தான்.ஆனால் வளர வளர
அப்பாவை சரியாகப் புரிந்து கொண்டான்.அவரை வேறு எதுவினாலையும்
அடிக்க முடியாது அன்பைத் தவிர என்பது
அவனுக்குப் புரிந்தது.அதே அன்பாலயே அவரை
அடித்துத் துவைத்து விட முடிவு செய்தான்.
அவனின்
நேரம் கெட்ட சகவாசம் கேட்காமலேயே
அவனிடம் ஒட்டிக் கொண்டது.மிகவும்
நல்ல மனிதரான சின்னுவுக்கு ஒரே
கெட்டப் பழக்கம் குடி. பீடி
குடிப்பது கூட சென்னை வந்ததுக்குப்
பிறகே ஆரம்பித்தது.குடி என்ற ஒன்றை
வைத்தே அவரது மகன் அவரை
வீழ்த்திவிட்டான்.
ஒருநாள்
குடித்துவிட்டு முழு போதையில் வீட்டுக்கு
வந்தபோது அவரது மகன் விளையாட்டாக
சில பேப்பர்களை காட்டி கையெழுத்து போடச்
சொன்னான்.வளர்த்தது பாம்பு என்று தெரியாமலயே
பால் வார்த்துக் கொண்டிருந்த சின்னு,ஆசை மகனுக்காக
அவன் நீட்டிய இடமெல்லாம் கையெழுத்து
போட்டுவிட்டு போதையிலயே தூங்கிவிட்டார்.
அவருக்கு
நினைவு வந்த போது நடுத்தெருவில்
இருந்தார் சின்னு. சிறிது நேரத்திலேயே
தான் ஏமாற்றப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டார்.வந்த கோபத்தையெல்லாம் எடுத்துக்
கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
இவரும்
இவரது மகனும் சண்டையை குரல்
வழியாகவேப் போட்டுக் கொண்டிருந்தனர்.ஊரே வாசலில் கூடி
நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.அது மட்டுமே அவர்களுக்கு
செய்யத் தெரியும்.கோபம் தலைகேறிய சின்னு
மகனின் சட்டையைப் பிடித்துவிட்டார்.பேரன்,பேத்தி எல்லாம்
எடுத்ததற்கு அப்பறம் கோவம் கீவத்தையெல்லாம்
கோமணத்தோடு கழட்டி வீசி விட
வேண்டும் என்பது அவருக்குப் புரியவில்லை.மகன் எடுத்தான் விறகு
கட்டையை “கெழட்டு நாயே..யார்
சட்டைலடா கை வைக்கற..என்ன
யாருன்னு நெனைச்ச” என்று விளாசித் தள்ளிவிட்டான்.முகமெல்லாம் வீங்கி இரத்தம் சொட்ட
சொட்ட “உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா.
நீலாம் புழுபுழுத்தே தான் சாவ” என
மகனைப் பார்த்து சாபம் விட்டுவிட்டு நடையைக்
கட்டினார்,நல்லவர்களின் சாபம் பழிக்காது என்பது
தெரியாமலயே.
இந்த
மாதிரியான மகனைப் பிரிந்ததில் துளி
வருத்தம் கூட இல்லை சின்னுவுக்கு.ஆனால் மணி, மணியைத்
தன் மகன் போலவே நினைத்திருந்தார்
சின்னு. தான் மட்டும் நினைத்தால்
போதுமா என்ற சலிப்பு தான்
மிஞ்சியது சின்னுவுக்கு.லேசாக சிரித்துக் கொண்டார்.சிரிப்பு,சில நேரங்களில் மனதின்
வெளிப்பாடு. ஆனால் சில நேரங்களில்
மட்டுமே.
அடுத்த
நள் இரவு டாமியுடன் மணியின்
வீட்டை கடந்து சென்ற போது,
பின்னாலிருந்து விசில் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தார் சின்னு. மணி நின்று
கொண்டிருந்தான் ஜிம்மியுடன். சின்னுவுக்கு சந்தோசத்தில் அழுகையே வந்துவிட்டது.ஆனால்
அழவில்லை. அடக்கிக் கொண்டார்.
“என்னடா
மணி…சும்மா வெளையாட்டுக்கு பேசினதுக்குப்
போயி இப்படி கோயிச்சுக்கிட்டு போயிட்டியே”
என்றார் அப்பிராணியாக.
“யோவ்
பெருசு..என்ன உளர்ற.கோயிச்சுக்கிட்டு
போயிட்டனா. நானே அவசரமா வெளியில
வருதுனு அடக்கிட்டு இருந்தேன். நீ வேற கோழிப்பீ
அது இதுனு கெளப்பிவிட்டுட்ட.அதான்
அங்க ஓட ஆரம்பிச்சவன் நேரா
கக்கூஸ்ல போய் தான் நின்னேன்”
என்றான் சிர்த்துக் கொண்டே.
சின்னுவுக்கு
இப்போது தான் சந்தோசமாக இருந்தது.”என் மேல ஒன்னும்
கோயிச்சுக்கலையே” என்று மணியிடம் கேட்டார்
சின்னு.
“யோவ்..சத்தியமா நான் போனதுக்கு இதான்யா
காரணம்..உன் மேல எதுக்குய்யா
நான் கோவிக்கப்போறேன்” என்றான் மணி.
சின்னுவுக்கு
மனம் ஆறுதல் அடைந்தது.
“அப்பறம்
ஏன்டா ரெண்டு மூனு நாளா
ஆளையேக் காணலை. நான் பயந்து
போயிட்டேன் தெரியுமா நீ என்மேல தான்
கோவிச்சுக்கிட்டனு” சின்னுவின் ஆதங்கம் அவரைப் போலவே
அப்பாவியாக இருந்தது.
மணி
குழைய ஆரம்பித்தான். சின்னுவிற்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவாக
சின்னுவிடம் கூறினான்.
“எனக்கு
கண்னாலம்யா..அதான் ஊருப் பக்கம்
போயிட்டேன்..பொண்ணு நம்ம பக்கத்து
ஊரு தான்” என்று கூறிய
படியே சட்டையின் முதல் இரு பொத்தான்களை
கழட்டி உள்ளே இருந்த கவரை
எடுத்து சின்னுவிடம் நீட்டினான். கவர் வெள்ளை நிறத்தில்
விநாயகர் படத்துடன் நாலா புறமும் மஞ்சள்
தடவி இருந்தது.
சின்னு
சந்தோசத்தில் நிலை தாடுமாறியபடியே கையெடுத்து
வானத்தைப் பார்த்து கும்பிட்டுவிட்டு அதனை வாங்கினார். சிவப்பு
மஞ்சள் நிறத்தில் இருந்த பத்திரிக்கையில் இருந்த
நீல வண்ண எழுத்துக்களை வாசிக்கத்
தொடங்கினார்.
“ஆண்டிப்பட்டி
சின்னப்பத் தேவர் – (லேட்) மகராசி தம்பதியின்
சுவீகாரப் புதல்வனான
குமாரர்.மணி அவர்களுக்கும். . . . . . . . . ”
No comments:
Post a Comment