தலைவன்
அந்தக்
கூட்டத்துக்கே அன்றைய விடிகாலை அமைதியில்லாததாக
இருந்தது. பெண்கள், ஆண்கள், முதியவர்கள், குழந்தைகள்
எல்லோருமே அங்கே திரண்டிருந்தார்கள். அனைவரது
பார்வையும் மேற்கு நோக்கியதாக இருந்தது.
முணுமுணுப்புக்களும், சலசலப்புக்களும், கொட்டாவிகளும் அவ்வப்போது எழுந்து எழுந்து அடங்கின.
எல்லோரையும் விட ஆர்வத்தோடு பார்த்தபடி
கூட்டத்தின் முன்னே ஒருவன் காத்திருந்தான்.
அவன்தான் அவர்களின் தலைவன். மொத்தமாக அந்த
சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்துக் குடிக்
கூட்டத்தினதும் தலைவன். தனது மகனுக்காகத்தான்
அவன் காத்திருக்கிறான். கூட்டமும் பார்த்திருக்கிறது. எவனைப் பார்த்திருக்கிரார்களோ, அவன் வந்தானாகில்,
அவன் தலைவனாவான்.
அந்தக்
குடிகளின் தலைவனாவது என்பது பரம்பரை பரம்பரையாக
வருகிற பதவிதான் என்றாலும், அதனை உரியதாக்குவதோ, தக்கவைப்பதோ,
அத்தனை எளிதானதல்ல. அந்தக் குடிகளின் அனைத்து
பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைபவனே தலைவனாகத்
தொடர்வான். தகுதியற்றவன் தான் தகுதியீனத்தாலேயே மரணமடைந்து
விடுவான். அடுத்தவன் தனது தகுதியை நிரூபித்துத்
தலைவனாவான். அப்படியாக அடுத்த தலைவனாவதற்குத் தனது
தகுதியை நிரூபிக்கப் போன இன்றைய தலைவனின்
மகனுக்காகத்தான் அந்தக் கூட்டம் காத்திருந்தது.
“இப்படித்தான்
எனது சிய்யானும் வேட்டைக்குப் போனவர் வெகுநேரம் வரவில்லை.
காத்திருந்து காத்திருந்து இனி வரமாட்டார் என்று
எல்லோரும் அவருக்குத் தாழி தயாரிக்கத் தொடங்கிய
காலைப் பொழுதில்தான் அந்தப் புலியின் தோலை
இடுப்பில் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்..” என்று
யாருக்கோ நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தாள் மூதாள். அந்தக் கூட்டத்திலேயே
மிகவும் மூத்தவள். அதற்குரிய அத்தனை மரியாதையையும் பெறுபவள்.
அவளது ஆலோசனை இல்லாது எந்தக்
காரியமும் நிறைவேற்றப் படுவதில்லை. இன்றைய தலைவனின் தந்தையின்
தாய். மரணத்துக்கு அவள் இன்னும் காலம்
கொடுக்கவில்லை. குடிகளின் சிறுவருக்குக் கதைகள் சொல்லுவதுதான் குறிகள்
சொல்லாத போதுகளில் அவளது வேலை.
“எங்களது
சிய்யான்தான் முதலாவதாக குடிகளை ஆண்ட ஆண்.
அதுவரை அன்னைமார்தான் வழிநடத்துவார்கள். வழிவழியாக வாழ்ந்துவந்த இடத்தை கடலுக்குக் காவுகொடுத்துவிட்டு
இங்கே பெயர்ந்தபோதுதான் புத்திக்கூர்மையுடன் உடல்வலிமையும் தேவைப்பட்டதானது தலைமை. நாங்கள் முன்பிருந்த
கடற்கரையில் மிதமிஞ்சிப் போனால் காளைகளை அடக்கி
உழவுக்குக் கொண்டுவருவதற்கே ஆண்கள் தேவைப்பட்டார்கள். இங்கே
வந்தபிறகுதான் புலிகள் ஆனைகள் எல்லாம்
நாம் வாழும் இடத்துக்குள் வகைதொகையின்றி
வந்தபடி இருக்கின்றன. முதல் தலைவனின் குடிவரிசையில்
வந்தவன் நீ.. உனக்கு இதெல்லாம்
எளிய காரியம். முடித்துவிட்டு வா...” என்று வாழ்த்தித்தான்
தனது பேரன் மகனை அனுப்பியிருந்தாள்
மூதாள்.
குணதிசையில்
பகலவன் தான் வருவதற்கு முனதாகவே
ஒளியினைப் பரப்பத் தொடங்கியிருந்தான். எல்லோரது
இறுக்கம் குடிகொண்ட முகத்திலும் ஒளியின் கசிதல் படத்
தொடங்கியது. குடிகளின் தலைவன் அந்த ஒளிப்
பொழிவில் தெரிந்த தமது தெய்வத்தின்
கோயிலைப் பார்த்தான். எல்லாம் வல்லவனான அந்த
இறைவன்தான் தனது மகனை தன்னிடம்
சேர்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஒற்றை
மகவு. இவன் இல்லையேல் தலைமைக்
குடிவரிசை இல்லாது ஒழிந்துவிடும். புதியவன்
ஒருவன் தலைவனாவான். தனது அரத்த ஆட்சி
வரிசை தன்னோடு முடிவதில் அவனுக்கு
உடன்பாடில்லை.
கொற்றவை
முதலிய பெரும் பெண்தெய்வங்கள் தவிர்த்த
ஒரே ஆண்தெய்வம் அது. தனது சிய்யான்தான்
அந்தத் தெய்வம் என்று மூதாள்
அடிக்கடி சொல்லுவாள். முதன் முதலில் புலிகொன்ற
வீரனுக்கு, காலம் அலங்காரங்கள்
செய்து தெய்வமாக்கியது என்பாள். அந்தத் தெய்வத்தின் முன்றிலில்
வைத்துத்தான் அவனை ஆனை வேட்டைக்கு
அனுப்புவதாக முடிவெடுத்தார்கள் குடியோர். பயிர்நிலங்களில் ஒரு கொடூர ஆனை
செய்த அட்டூழியத்தால் அந்தப் பருவத்தின் பயிர்கள்
பல நாசமாகின. கொல்லத்தான் வேண்டுமென்று முடிவான மாலையில் தலைவனின்
மூப்பைக் காரணியமாக்கி மகவை அனுப்ப முடிவானது.
முன்வந்தான் மகன். எருதின் மேல்,
குமிண்சிரிப்புடன், மேனியிற் பால்நிறத்தின் சாம்பலைப் பூசியும், கொன்ற நாகங்களையும் வென்ற
எதிரிகளின் மண்டையோடுகளையும் அணிகலன்களாகவும் கொண்டும் வீற்றிருக்கும் தெய்வத்தின் பாதம் வணங்கிப் புறப்பட்டு
இன்று விடிந்தால் மூன்று நாட்கள் ஆகிறது.
இன்றைக்குக் காலைக்குள் வராவிட்டால் தாழியுள் அவனது உடைமைகளைப் போட்டுப்
புதைத்து ஈமம் செய்யவேண்டியதுதான் மரபு.
காத்திருந்தவர்களில்
சிலர் மனைகளுக்குத் திரும்பத் தொடங்கினர். சிலர் அங்கேயே அடுப்புக்
கூட்டிக் கூழ் தயாரிக்க ஆயத்தமாகினர்.
யாரும் யாருக்கும் கட்டளை இடாமலே, யாரும்
யாரையும் கலந்து ஆலோசிக்காமலே ஈமத்துக்கும்
ஆயத்தங்கள் நடந்தன. வெளிப்படையாக அவை
நடந்தாலும், யாரும் அது நடப்பதாகக்
காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இருள் விலகிக்கொண்டிருந்த அந்தச்
சூழலில் சோகம் பரவியது.
பறவைகள்
தத்தமது மொழிகளின் பாடல்களைப் பாடிக்கொண்டு இரைகளைக் கவ்வப் புறப்பட்ட விடியலின்
கலகலப்பான கணத்தில், மேற்குநோக்கிக் காத்திருந்த தலைவன் திரும்பினான். தலையைக்
குனிந்தவாறே ஈமத்தின் ஒழுங்குகள் நடக்கும் இடத்திற்குச் சென்று ஏற்பாடுகள் சரியாக
நடக்கின்றனவா என்று பார்த்தான். அங்கே
இருந்தவர்களில் சிலர் கண்ணீர் உகுக்கத்
தொடங்கினர். அனைவரதும் செல்லப்பிள்ளை தலைவன் மகன். அவன்
தலைவனாகப் போகிற பொற்காலத்துக்காகக் காத்திருந்தவர்கள்
பலர். திடகாத்திரமானவன், பேரழகன், கண்டவுடன் மதிக்கவைக்கும் கம்பீரமானவன், கருங்கல் நிறத்தில் மினுமினுப்பானவன். வீரன் மட்டுமல்லாது நல்ல
கூத்தாடி. இதுவரை காலமும் அந்தக்
குடிகள் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆடிவந்த கூத்துக்களை எல்லாம்
ஒழுங்குபடுத்தி அழகான ஒரு கூத்து
வடிவமாக மாற்றி அதை அனைவருக்கும்
கற்றுக் கொடுத்தவன். கருணைக்காரன். ஒருமுறை வேட்டையில் திடீரெனத்
தன்மீது பாய்ந்த பன்றியைக் கொன்றுவிட்டு,
பின்னர் அது அண்மையில் ஈன்ற
தாய் என்பதைக் கண்டதும், அதன் குட்டிகளைத் தேடிக்
கண்டுபிடித்து அவற்றுக்கு அன்றாடம் பால்கொடுத்த புண்ணியவான்.
அவன் இனி இல்லை.
இனிவரும்
எந்தத் தலைவனும் அவனை அண்மிக்கக்கூட இயலாது
என்ற ஏக்கத்தில் ஈமத்தை சிறப்பாக நடாத்துவதற்காக
அனைவரும் ஒவ்வொருவராக எல்லையில் அவன் வருகைக்காகக் காத்திருப்பதை
விடுத்து, ஈமக்கூடத்துக்கு வந்துகொண்டிருந்த வேளையில்தான் மூதாள் பெருங்குரலெடுத்துக் கத்தினாள்..
“சிவன்
வருகிறான்!!!”
எல்லோரும்
சட்டென்று எல்லையை நோக்கி ஓடிவந்தார்கள்.
தலைவன் அனைவரையும் தள்ளிக்கொண்டு ஓடிவந்தான். மகனைக் காணாது உடல்
நலிந்து மரணத்துக்குக் கிடந்த தலைவன் இல்லாளும்
ஓடிவந்தாள். புதிய தலைவனை வணங்கவென்று
கதிரவனும் மேலே எழ, அந்தக்
கதிரவக் கரங்களின் வணக்கத்தை ஏற்றவாறு விடையின் மேலே கம்பீரமாக வீற்றவாறு
வந்துகொண்டிடுந்தான் சிவன். தலைவன் மகன்.
இனிவரும் காலத்தில் குடிகளை மட்டுமன்றி, இனிவரும்
எல்லாக் காலத்துக்கும் இறைவனாகப் போகின்ற இனங்களின் தலைவன்.
அவன் பின்னால்.. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஆனைகளின் தலைகள்
தும்பிக்கையில் நார்கொடுத்துக் கட்டப்பட்டு இழுபட்டு வந்துகொண்டிருந்தது. சூரிய ஒளியிலே மார்பு
மினுமினுக்க, முடிந்த கொண்டாய் அவிழ்ந்து
சடை பறக்க, போர்த்திருந்த ஆனையின்
தோல் காற்றில் ஆட, வழியில் கொன்ற
புலியின் தோல் இடையில் தொங்க,
தமிழரின் முதல்ப் பெருந்தலைவன் வந்துகொண்டிருந்தான்.
இனிவரும் குடிகளால், தனக்கு முந்தையவர்கள் செய்த
சாதனைகள் எல்லாம் தன்மேல் ஏற்றப்பட்டு,
இறைவனாக, இறைவர் தலைவனாக வணங்கப்படப்
போகின்ற, பிற்காலத்தில் மூன்று எதிரித் தலைவர்களை
கோட்டையோடு வைத்துக் கொழுத்தப் போகின்ற, நிலத்தைக் கைப்பற்ற வடதிசையிலிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை எல்லாம்
துவம்சம் செய்யப்போகிற, பின்னாளில் தான் வடிவமைத்த ஆனந்தக்
கூத்தை தமிழரை ஆட வைக்கப்
போகின்ற, தன் மூப்பு நாளில்
தமிழை செழுமைப்படுத்த எத்தனையோ சித்து விளையாட்டுக்கள் செய்யப்போகின்ற,
தானே கவியாக மாறப் போகின்ற,
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்
அத்தனை தமிழர் நெஞ்சிலும் நிலைக்கப்
போகின்ற சிவன், குடிகளின் ஆரவாரத்துக்கு
மத்தியில், ஒற்றை ஆனை பிடிக்கப்
பொய், மூன்று ஆனை கொண்டு
வந்துகொண்டிருந்தான்.
No comments:
Post a Comment