கேள்விகளால் ஆனது
சிட்னியின்
புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு
இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த்
தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன்
சிவத்தின் அம்மா நேசம் அங்குதான்
இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து
விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த
சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித
தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை - திடீரென்று யாருக்கும்
சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து
விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம்
தான். ஆனாலும்?
அவரைப்
பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு தடவை இங்கே
வந்திருக்கின்றேன். தனிய வருவது இதுதான்
முதல் தடவை. கதவைத் தட்டிவிட்டு,
சத்தம் ஒன்றும் உள்ளேயிருந்து வராததால்
கதவை மெல்ல நீக்கிப் பார்த்தேன்.
ரெலிவிஷன் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
சாப்பாட்டு மேசையில் தலையைக் குப்புறக் கவிழ்ந்த
வண்ணம் நேசம் இருந்தார். சாப்பாடு
அப்படியே இருந்தது.
“அம்மா...”
மெதுவாகக் கூப்பிட்டேன். நான் எப்போதும் அவரை
அம்மா என்றுதான் அழைப்பேன். அவர் தலையை நிமிர்த்திப்
பார்த்துவிட்டு, “சிவம் வரவில்லையா?” என்றார்.
“நான் வேலை விஷயமா இந்தப்
பக்கம் வந்தனான். வந்தவிடத்திலை உங்களை ஒருக்கா பாத்திட்டுப்
போகலாம் எண்டு வந்தனான்.”
அவரின்
முகம் திடீரென்று மலர்ந்தது. மெளனமாக என்னை உற்றுப்
பார்த்தபடி இருந்தார். நான் அவருக்குப் பக்கத்தில்
இருந்த கதிரையில் அமர்ந்தேன்.
“அம்மா
எப்படி இருக்கிறியள்?”
“ஏன் எனக்கு என்ன குறை?
எனக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொல்லியிருப்பானே!”
சொல்லும்போதே அவரின் நா தழுதழுத்தது.
அந்த உரையாடலைத் திசை திருப்ப நினைத்தேன்.
“அம்மா...
இப்ப எங்கடை ஊர்ப்பக்கம் போய்ப்
பார்க்க ஆமிக்காரன்கள் விட்டிருக்கின்றான்கள். நான் ஒருக்கா இலங்கைக்குப்
போய் எனது வீடு வளவுகளைப்
பார்த்து வரலாம் எண்டு இருக்கிறன்.”
“தம்பி
ராஜன்...
எனக்கொரு உதவி செய்யவேணும்” திடீரென்று
எனது வலது கையைப் பிடித்து
இடைமறித்தார் நேசம்.
“சொல்லுங்கோ
அம்மா... செய்யிறன்”
“எனக்கொரு
மகன் கோண்டாவிலிலை இருக்கிறான். என்ரை மூத்த மகன்...”
சொல்லும்போதே அவரின் கண்கள் பனித்தன.
இதைத்தான்
அம்மாவுக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொன்னானோ?
“என்னம்மா
சொல்லுறியள்? உங்களுக்கு நியூசிலாந்திலை ஒரு மகளும், சுவிசிலை
ஒரு மகனும், மற்றது இஞ்சை
சிவமும்... மொத்தமாக மூண்டு பிள்ளையள்தானே!”
“அதோடை
என்ரை மூத்த மகன் தேவராஜன்.
இலங்கையிலை கோண்டாவிலிலை இருக்கிறான். அவனுக்கு கொஞ்சம் புத்தி சுகமில்லை.
அவனை நீ போய்ப் பாத்து
வரவேணும்.”
“கட்டாயம்...
கட்டாயம் பாத்து வருவன் அம்மா”
எனக்கு
அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது. விடைபெறும்போது
எனது கையிற்குள் ஒரு என்வலப்பைத் திணித்தார்
நேசம். அதற்குள் தேவராஜன் கோண்டாவிலில் இருக்கும் விலாசமும், அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்
சிவலிங்கம் என்பவருக்கு ஒரு கடிதமும், எண்ணூறு
அவுஸ்திரேலிய டொலர்களும் இருந்தன. நான் திகைத்துப் போனான்.
“உலகத்தில
நல்லவர்கள் எண்டு நாங்கள் நினைத்துக்
கொண்டிருக்கிற எல்லாருமே நல்லவர்கள்தானா?” என்றொரு கேள்வியை திடீரென்று
என்னிடம் கேட்டார்.
“உங்கடை
மகனுக்கு ஏன் அப்படி வந்தது?”
அவர் தன் இரண்டு கரங்களையும்
வான் நோக்கி உயர்த்தி, பழியை
ஆண்டவன்மீது போட்டார். மனதுள் வேறு ஏதோ
முக்கிய சமாச்சாரம் சொல்வது போல அவர்
முகம் பிரதிபலித்தது. ஏதோ பெரிய கெடுதல்
பற்றி நினைக்கிறார் போல என்று என்
மனம் கூறியது.
“அம்மா...
நான் போக இரண்டொரு கிழமைகள்
எடுக்கும். வர ஒரு மாதம்
செல்லும். பரவாயில்லைத்தானே உங்களுக்கு.”
“உனக்கு
வசதிப்படேக்கை அவனைப் போய்ப் பார்த்து
வா. அவன் பாவம். இவங்கள்
ஒருத்தருமே அவனைப்பற்றி ஒண்டுமே சொல்லுறான்கள் இல்லை.
அவனுக்குத் தாற காசையும், பிள்ளையளின்ரை
படிப்புச் செலவு அது இது
எண்டு இப்ப குறைச்சுப் போட்டான்
சிவம். நியூசிலாந்திலை இருக்கிறவள் புருஷனுக்குச் சுகமில்லை எண்டு சொல்லி ஒண்டும்
தாறதில்லை. சுவிசுலை இருக்கிறவன்தான் கொஞ்சம் தாறவன். அவனும்
பிள்ளை குட்டியள் இல்லாததாலை தந்து கொண்டிருக்கிறான்.”
நான் சற்று நேரத்தில் அங்கிருந்து
கிழம்பினேன். கதவைத் திறந்து வெளியேறும்போது,
”அவனைப் போய் பாத்துவாற விஷயத்தை
ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதை. அதுதான் முக்கியம்.
அது சரி இப்ப போறவைக்கு
அங்கே பிரச்சினை இல்லையே?” என்றார் நேசம்.
”இங்கே
இருக்கிற ஆக்கள் காட்டிக் கொடுத்தால்...
ஓ..” சொல்லிக் கொண்டேன்.
காரிற்குள்
ஏறி சீற்றைப் பதித்துவிட்டு சரிந்து கொண்டேன். தலை
வெடித்துவிடும் போல வலித்தது. ஒருவேளை
நேசம் சொல்வது உண்மையாக இருக்குமோ?
நானும்
சிவமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பொறியியல் படித்தோம். அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் சிவம்
’தூங்காபி’யில், நான் ‘செவின்
ஹில்ஸ்’சில். இரண்டும் அருகருகே
உள்ள கிராமங்கள்தான். சிவத்திற்கு முதல் குழந்தை பிறந்த
போதுதான் நேசம் இலங்கையில் இருந்து
இங்கு வந்தார். சிவம் அவரின் கடைசிப்பிள்ளை.
எங்களுக்கும் அதே காலகட்டத்தில்தான் குழந்தை
பிறந்தது. இருவருக்கும் முதலில் ஆண் குழந்தைகள்.
நேசம் என்னையும் தனது பிள்ளையப் போலவே
கருதினார். அவரின் சமையல் பக்குவம்
சொல்லில் அடக்கிவிடமுடியாத சுவை நிறைந்தது. மருமகளுக்கு
பத்தியம் வைக்கும்போதெல்லாம் என்னுடைய மனைவி மதிவதனிக்குமாக சேர்த்தே
வைப்பார். மதிவதனிக்கும் அவர்மேல் ரொம்ப பாசம். இரண்டு
குடும்பங்களும் ஒரே குடும்பம் போலத்தான்
பழகினோம். வேறுபாடுகள் என்று எதுவும் கிடையாது.
எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வோம். பல்கலைக்கழகத்தில் இருந்ததைவிட அப்போதுதான் எங்கள் இருவரின் நட்பு
மேலும் இறுக்கமடைந்தது.
நேசத்திற்கு
எண்பது வயதாகும்போது அவரின் பிள்ளைகள் அனைவரும்
அவுஸ்திரேலியாவில் ஒன்றுகூடினார்கள். அவரின் பிறந்ததினத்தை மிக
எளிமையாகக் கொண்டாடினார்கள். ஒருவரையும் பிறந்ததினத்திற்குக் கூப்பிடவில்லை. எங்களைக் கூப்பிடாதது எனக்கு மிகவும் கவலை
தந்தது. அதன் பிற்பாடுதான் சிவம்
தனது தாயாரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டான். அவரை அங்கே கொண்டுபோய்
விட்டதற்கான காரணங்களை சிவம் ஒவ்வொன்றாக அடுக்கினான்.
|எங்களைவிட
அவர்கள்தான் அம்மாவை நன்றாகப் பார்ப்பார்கள்
- பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், அம்மாவினால் பிள்ளைகளின் கல்வி தடைப்படுகின்றது -அம்மாவிற்கு
மாறாட்டம் வந்துவிட்டது |
சிவத்தை,
‘நசுக்கிடாமல் காரியம் பார்ப்பவன்’ என்று
சிலர் சொல்லுவார்கள். எல்லாருக்கும் எல்லாரையும் பிடிப்பதில்லைத்தானே! அவன் கதைக்கத் தொடங்கும்போது,
முதலில் தனது முகத்தை பெரியதொரு
அறிவாளி போல பாவனை செய்வான்.
பின் குதிரை கனைப்பது போல
பல்லைக் காட்டிச் சிரிப்பான். கதைக்கத் தொடங்கினால் ஊர்ப்பெண்கள் தோற்றுப் போவார்கள் என்று சொல்வார்கள். அடுத்தவரைப்
பற்றிப் புதினம் அறிவதிலும், வம்பளப்பதிலும்
’நம்பர் வன்’. பாதத்திலிருந்து தலை
வரை ஒரே பருமன். குதிரையின்
கனைப்பு. இவை அவனின் அடையாளங்கள்.
வேலையால்
வீட்டிற்கு வந்ததும், நடந்தவற்றை மதிவதனியிடம் சொன்னேன்.
”ஏற்கனவே
பிள்ளையளின்ரை படிப்பு, வேலை, வீடு எண்டு
போட்டி. இதிலை மகனுக்கு
12ஆம் வகுப்பு றிசல்ட் சரியில்லை
எண்டு இப்ப கொஞ்சநாளா மூஞ்சியை
நீட்டிக் கொண்டு திரியுதுகள். இதுக்குள்ளை
ஊருக்குப் போய் வளவுகளைத் துப்பரவாக்கி,
வீட்டைத் திருத்தப் போறியள் எண்டு கேள்விபட்டா
எப்பிடியிருக்கும்?” என்றாள் மதிவதனி.
”நான் எல்லாரோடையும் நல்ல மாதிரித்தான் பழகிக்கொண்டு
வாறன். அவங்கள் மாறிட்டான்கள் எண்டதுக்காக
நான் மாற முடியாது!” சொல்லிக்கொண்டே
சிவத்துடன் கதைப்பதற்காக ரெலிபோனைத் தூக்கினேன்.
“தயவுசெய்து
அம்மாவைப் போய்ப் பாத்ததை சொல்லிப்
போடாதையுங்கோ” என்றாள் மதிவதனி.
இலங்கை
போகவிருக்கும் விடயத்தை சொன்னபோது, அவன் கனைத்தான். பின்னர்
சிரித்தான். இவன் என்ன பகைவனைப்
பார்த்து வெஞ்சம் வைத்துச் சிரிப்பது
போல சிரிக்கின்றான்.
“என்னடாப்பா
பிறந்த நாட்டிலை போய்ச் சாகப்போறியே!”
“உனக்கு
எப்பவும் நக்கல்தான்...”
“நான் ஏன் சொல்லுறேனெண்டால்... 2009 இலை உச்சக்கட்டப்
போர் நடக்கேக்கை, இஞ்சை நீ கொடி
பிடிச்சாய்... ஊர்வலம் போனாய்...”
“நீயும்தான்
வந்தாய். ஊர்வலம் போனது, கொடி
பிடிச்சது எண்டா புலம்பெயர்ந்த நாட்டிலை
இருந்து எண்பது வீதமான ஆக்கள்
இலங்கைக்குப் போகேலாது” பேச்சுக்கு
முற்றுப்புள்ளி வைத்தேன். இலங்கை போகும் நினைவுகளுடன்
மூழ்கிப் போய்விட்டேன்.
●
இதுவெல்லாம்
நடந்து இரண்டு வாரங்களில் இலங்கை
போய்விட்டேன். மதிவதனியும் பிள்ளைகளும் வரவில்லை.
இருபத்தொரு
வருடங்களின் பின்னர் நான் பிறந்து
வளர்ந்த தெல்லிப்பழைக்கு வந்துள்ளேன். எங்குமே காடு. பாதை
மூடிய பற்றைகள். ‘ஷெல்’ அடியினால் தகர்ந்த
வீடுகள். வீட்டுக்குள்ளிருந்து விருட்ஷமாகி வானை முட்டும் மரங்கள்.
பாம்புப் புற்றுகள். வீடு வளவுகளைத் துப்பரவாக்கும்
முயற்சி உடனே சாத்தியமில்லை என்பதால்,
அந்த வேலைகளின் மத்தியில் சிவத்தின் அண்ணாவைப் பார்த்துவர முடிவு செய்தேன்.
நேசம் கொடுத்த முகவரியை விசாரித்து,
வீட்டை அடைய பகல் பதினொரு
மணி ஆகிவிட்டது. பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு அமைந்திருந்தது.
ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க,
ஒல்லியாய் ஒட்டகம் போல இருந்த
ஒரு மனிதர் வேட்டி சால்வையுடன்
வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். தன்னை
சிவலிங்கம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
கொண்டுவந்த கடிதத்தையும் காசையும் அவரிடம் கொடுத்தேன். நின்ற
நிலையில் கடிதத்தைப் படித்தார்.
”நீர் இங்கு எமது வீட்டுக்கு
வாற விஷயம் சிவத்திற்குத் தெரியுமா?”
என்றார்.
“இல்லை...
அவரின் அம்மாதான் சிவத்திற்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்
என்று சொன்னார்”
“ஒரு கிழமைக்கு முன்னர் சிவம் என்னுடன்
ரெலிபோனில் கதைத்திருந்தான். அம்மாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு யாராவது
வந்தால் தேவராஜனைக் காட்ட வேண்டாம் என்றான்.
நேசம் சிவத்திற்கு எல்லாம் உளறிவிட்டார் போல
இருக்குது. இப்ப அம்மாவின் கடிதத்தைப்
பாத்த பின்புதான் எல்லாமே விளங்குது.”
வீட்டைப்
பூட்டி திறப்பை கையில் எடுத்துக்
கொண்டார் சிவலிங்கம். பின்னர் வீட்டின் பின்புறமாக
இருந்த சீமெந்திலான கட்டடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார்.
அந்த அறையின் கூரை பனை
ஓலையினால் வேயப்பட்டிருந்தது. கதவிற்குப் பதிலாக இரும்பிலான கேற்
இருந்தது. ஜன்னல் இல்லாத அறைக்கு
காற்றுப் போக வர வசதியாக
இருக்கும் என்றார் சிவலிங்கம். இரும்புக்கதவின்
மேல் தனது வீட்டுத் திறப்பினால்
தட்டி, “ராசன்... ராசன்... “ என்று கூப்பிட்டார். உள்ளே
இருட்டாக இருந்தது. கூனிக் குறுகிய ஒரு
மனிதன் கைகளை விசுக்கி விசுக்கி
நடந்து வாசல்வரை வந்தான். இரண்டு கால்களும் உட்புறமாக
வளைந்து இருந்தன. தொளதொளத்த காற்சட்டை. உடம்பின் மேலுக்கு ஒன்றும் இல்லை. ஒரு
குழந்தையைப் போல கள்ளமில்லாமல் சிரித்தான்.
நெற்றியிலே விபூதி சந்தணம். காதிலே
ஒரு பூ. சிவலிங்கத்தையே பார்த்தபடி
நின்றான் அவன்.
“சாப்பாடு
தீத்த வேணும். குளிக்க வாக்க
வேணும். டொக்டரிட்டைக் கூட்டிக் கொண்டு போகவேணும். ஒரு
குழந்தைக்குச் செய்யவேண்டிய சகல வேலைகளும் செய்ய
வேணும்.”
”ஏன்...
ஏன் எப்படி இது நடந்தது?”
சிவலிங்கம்
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.
“வாருங்கள்...
வீட்டிற்குப் போகலாம்.”
சில மனிதர்களின் இருண்ட பக்கம் தெரியாமலே,
அவர்கள் தமது வாழ்க்கையை நல்லபடியாக
வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றார்கள். சக
மனிதரை அடையாளம் காண்பதுதான் இந்நாளில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வீட்டிற்குள்
வந்ததும் கதிரையில் அமரும்படி சொன்னார்.
‘ப்ளீஸ்...
நீங்களாவது நான் சொல்லிறதை தயவு
செய்து கேளுங்க. நாட்டுப் பிரச்சினைகள் தீர்ந்து இப்ப நாலு வருஷமாப்
போச்சு. ஒருத்தர் எண்டாலும் வந்து பாக்கினம் இல்லை.
வந்தால் தங்கடை தலையிலை பொறுத்துப்
போய்விடும் எண்டு பயப்படுகினம்.
எத்தினையோ
வருஷங்கள் வைச்சுப் பாத்திட்டன். இனியும் என்னாலை ஏலாது.
எங்கையாவது அனாதை ஆச்சிரமத்தில் கொண்டுபோய்
விடப்போறன்” சத்தம் போட்டார் சிவலிங்கம்.
”இதையும்
வைச்சிருங்கோ. நான் போய் எல்லா
ஒழுங்குகளும் செய்து தருவன்” என் பொக்கற்றுக்குள் இருந்த
இருநூற்றி ஐம்பது டொலர்களையும் அவரது
கைகளிற்குள் திணித்தேன். சிவலிங்கம் குளிர்ந்து போனார். தேவராஜனின் கதையைச்
சொல்லத் தொடங்கினார்.
”சாதி ஏற்றத் தாழ்வுகள்தான் தம்பி
இதுக்குக் காரணம். தேவராஜன் படிக்கிற
காலத்திலை ஒரு பெண்ணை விரும்பியிருந்தான்.
சாதி காதலுக்குத் தடையா இருந்துது. தேவராஜனைப்
பெத்தவர்கள் தடிச்ச சாதிக்காரர்கள். கலியாணம்
இந்த ஜன்மத்திலை நடக்காது என்று உறுதிபடச் சொல்லிவிட்டார்கள்.
பூசணிக்காய் போல விளைஞ்ச தாய்க்காரியும்,
தம்பி சிவமுந்தான் மிகவும் மூர்கத்தனமாக அதை
எதிர்த்தவர்கள். சிவம் அந்தக் குமரைக்
கொல்லப் போறான் என்று ஊருக்குள்ளை
கதை உலாவினது.”
கருணையும்
சாந்தமும் கொண்ட அந்த அம்மாவா
அப்படிச் செய்தார்? நான் திகைத்தே போய்விட்டேன்.
”நான் தேவராஜனோடை பள்ளியிலை ஒண்டாப் படிசனான். அவன்ரை
காதலியின்ரை சொந்தக்காரன். அவனைப்பற்றி எனக்குத்தான் எல்லாம் தெரியும். இரண்டு
பேரும் ஏழு எட்டு வருஷங்கள்
எண்டு காத்திருந்திச்சினம். பிறகு பெடிச்சிக்கு கலியாணம்
பேசிச்சினம். கலியாணம் முடிஞ்சு இரண்டாம் நாள் பெடிச்சி தூக்கிலை
தொங்கிட்டாள். அண்டைக்குப் பிடிச்சது உவனுக்கு உந்தச் சனியன். விசராக்கிப்
போட்டுது. இப்ப முப்பது வருஷமாப்
போச்சு” சொல்லிவிட்டு பெருமூச்செறிந்தார் சிவலிங்கம். கனத்த மனத்துடன் சிவலிங்கம்
வீட்டிலிருந்து புறப்பட்டேன்.
ஒரு முடக்குக் கழிந்திருக்கும். வாகனமொன்று கிரீச்சிட்டு என்னருகில் நின்றது. மளமளவென்று நாலுபேர்கள் இறங்கினார்கள். என்னைப் பிடித்து இழுத்து,
வாயிற்குள் துணியொன்றை அடைத்தார்கள். கண்களைக் கட்டிப் போட்டு வாகனத்தினுள்
தள்ளினார்கள். என் உடலில் இருந்து
ஒட்டு மொத்த சக்தியையும் யாரோ
உறிஞ்சி எடுத்தது போல இருந்தது. வாகனம்
சிறிது தூரம் ஓடியபின்னர் ஒரு
சுடலைக்குள் நின்றது. கட்டை அவிழ்த்து, வாயிற்குள்
இருந்த துணியை இழுத்தெடுத்தார்கள். அவர்களில்
ஒருவரையும் நான் முன்னர் கண்டதில்லை.
ஒருவன் தன் கழுத்தில் தொங்கிக்
கொண்டிருந்த வீடியோக்கமராவை எடுத்தான். அதனை ஓடவிட்டு சற்று
நேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தான்.
திடீரென்று நிறுத்திவிட்டு என் தலையைப் பதித்து,
“இதிலை கொடி பிடிச்சுக் கொண்டு
நிக்கிற ஆள் நீதானே!” என்றான்.
நான் ஒன்றும் பேசாது மெளனமாக
இருந்தேன்.
”உனக்கு
சிவத்தைத் தெரியுமா?” என்றான் ஒருவன்.
“அவன் என் நண்பன்” என்றேன்.
”நண்பனாம்...
நண்பன்” அவர்கள் வாகனம் அதிர
சிரித்தார்கள்.
சிவம்...
அடப் பாவி... சிட்னியிலை ஊர்வலம்
போகேக்கை நீயும்தானே வந்தாய். நீதானேடா வீடியோ எடுத்தாய். இப்ப
காட்டிக் கொடுத்துவிட்டாயேடா! ஏன் அப்படிச் செய்தாய்?
ஒருவேளை இவ்வளவு காலமும் கட்டிக்காத்த
உன் குடும்பரகசியம் என்னால் வெளிவரலாம் என்று
நினைத்துவிட்டாயா?
தனிப்பட்ட
கோப தாபங்கள்கூட ஒரு இனத்தின் அழிவுக்குக்
காரணமாக இருக்கின்றதே! நண்பர்களில்தான் எத்தினை விதம்! உலகம்
எத்தனை வினோதமானது!
கடத்தியவர்கள்
தங்கள் முகத்தை மறைத்திருக்காவிடில் உயிருக்கு
உத்தரவாதம் இல்லை என்பதை நான்
அறிந்தே இருந்தேன்.
No comments:
Post a Comment