Tuesday, 15 July 2014

Story 62: பாதை மாறிய பயணம்பாதை மாறிய பயணம்

பரபரப்பான உலகத்துல பணத்துக்காகவே எல்லோரும் ஓட வேண்டியிருக்கு. இதைத் தாண்டிய ஒரு உலகத்தை ரசிக்க, அனுபவிக்க இங்கயாருமே இல்லை.

இப்படிதான் பணத்துக்காக ஓடி உழைக்க பூவை விரைவாக  கட்டிக் கொண்டிருந்தாள், பொன்னாத்தா. அவளின் கனவே அவ பையன் ரவி படித்து, பெரிய அரசு வேலையில் அமர்ந்து நம்மளைப் போல அன்றாடங் காய்ச்சி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.. அலாரம் அடித்தது காலை மணி ஆறு. பையன் ரவியை எழுப்பினாள். அய்யா ரவி மணி ஆறாச்சு எழுந்திரு படிக்கணும், வீட்டுப்பாடம் எழுதணும் என்று சொன்னே என்று எழுப்பிவிட்டாள்.
அம்மா நான் பல்லை விளக்கி முகம் கழுவி வாரேன்.சூடாக காப்பித் தண்ணி வைச்சுக் கொடும்மா என்றான் ரவி. அதற்கு பொன்னாத்தா அய்யா அதுக்கு இப்ப நேரம் இல்லை. நீ நம்ம நாயர் கடைக்குப் போய் காப்பி குடித்துவிட்டு அப்படியே நான்கு இட்லி பார்சல் கட்டி வாங்கி வா. நீ சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போ. மதியம் பள்ளியில் சாப்பிடு. அம்மா சாயங்காலம் உனக்கு பிடிச்ச குழிப்பணியாரம் செஞ்சு வைச்சிருக்கேன். இன்று வெள்ளிக்கிழமை விசேஷமான நாள், பூ நிறையகட்டி வியாபராம் செஞ்சா இரண்டு நாள் பூ விற்று வரும் இலாபம் இந்த ஒரு நாளில் கிடைக்கும் கண்ணு, அதான் சொல்றேன் என்றாள் பொன்னாத்தா.சரிம்மா என்றான் ரவி.
கட்டிய பூவை கூடையில் வைத்து விற்கக் கிளம்பினாள் பொன்னாத்தா. ரவியும் எழுதி படித்துவிட்டு மணி எட்டு ஆனதும் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான் ரவி. வழியில் அவனுடன் கூடப் படிக்கும் பாலாவும் சேர்ந்து பேசிக்கொண்டே பள்ளிக்குச் சென்றனர். இருவரும் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு அரசினர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்கள். டேய் ரவி நேற்று கணக்கு டீச்சர் கொடுத்த வீட்டுப்பாடம் செஞ்சுட்டியா என்று கேட்டான். ஆம் என்றான் ரவி. ஏனக்குப் புரியலை, நீ சொல்லித் தருவியா என்றான் பாலா. அதுக்கென்னடா  நான் உனக்குச் சொல்லித் தாரேன் என்றான் ரவி. படிப்பில் முழு கவனம் செலுத்தி எப்பொழுதும் முதல் மாணவனாய் வருவான் ரவி. மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் படிப்பறிவு இல்லாத பூக்காரி பையன் முதலிடம் செல்கிறான். நாம் தனியாக டியுசன் வைத்தும் நம் பையன் நல்ல மார்க் வாங்கமாட்டேன்கிறான் என்று நினைப்பார்கள்.

பள்ளிக்கூடத்தில் அன்று தலைமை ஆசிரியர் உரையாற்றினார். இரண்டு நாட்கள் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இருப்பதாகவும், அதற்கு 300 ரூபாயும், சாப்பாட்டிற்கும் அங்கு செல்லும் நுழைவுக் கட்டணத்திற்குப் பணம் தனியாக  கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.  பணத்தை 10 நாட்களுக்குள் செலுத்தி
ரசீதை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். நான் போவேன் நீ வருவியா? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். பாலா ரவியிடம் நான் டூர் போவேன் நீயும் கூட வா ரவி ஜாலியாக இருக்கும் என்று கூறினாள். ஏனக்கும் ஆசைதான் எங்கம்மாவிடம் கேட்டு கண்டிப்பாக நானும் வருவேன் என்று சொன்னான்.

ஏன் உங்கப்பா தரமாட்டாரா? எது கேட்டாலும் எங்க அம்மாவிடம் கேட்கிறேன் என்கிறாய் என்றான் பாலா. இல்லடா எங்கப்பா ஒரு லாரி டிரைவர் அவர் 4 நாளுக்கு ஒரு முறைதான் வருவார் வந்தாலும் பாதி ரூபாய் காசுதான் தருவார். மீதி ரூபாய்க்கு குடித்துவிடுவார் என்றான் ரவி.
பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்தான் ரவி மணி 5. பொன்னாத்தா காலையில் மகனிடம் சொன்ன மாதிரி பணியாரம் சுட்டு வைத்தாள். அதைச் சாப்பிட்டுக் கொண்டே, எங்க பள்ளிக்கூடத்தில் டூர் போறாங்க அதற்கு 300 ரூபாயும், சாப்பாட்டிற்கும் மற்ற செலவுக்கும் 300 ரூபாயும் ஆகும் என்று நினைக்கிறேன். நானும் போகனும்னு ரொம்ப ஆசையா இருக்குமா தருவியா என்றான் ரவி. மொத்தம் 600 ரூபாய் பணம் எங்கிட்ட எங்கே இருக்கு? அம்மா எப்படி எப்படியாவது முயற்சி பண்ணுமா என்றான் சரிபார்க்கலாம் என்றாள் அம்மா.

மறுநாள் அப்பா வந்தார் அவரிடமும் சொன்னான் ரவி. அவர் இப்ப முடியாது கண்ணு அடுத்த டூர் போனா பார்த்துக்கலாம் தீபாவளிப் பண்டிகைக்கு 1000 ரூபாய் கடன் வாங்கி இருக்கேன். அதையே இன்னும் அடைத்து முடிக்கலை அதற்குள் திரும்பவும் பணமா? ஆமாய்யா எப்ப பணம் கேட்டாலும் ஏதாவது ஒரு நொண்டிச்சாக்கு சொல்லு, குடிப்பதற்கு மட்டும் காசு இருக்குல்ல  அதை சேர்த்து வைத்தால் கடன் வாங்க வேண்டாம்ல என்றாள் அம்மா. வாடிம்மா வா நான் என்ன  மொடாக்குடியனா? ஏதோ இரவும், பகலும் வண்டி ஓட்டின  அலுப்பு தீர கொஞ்சம் ஊத்திக்கிறேன். பழகிப் போச்சுவிடு. சண்டை போடாதே டூர் போக பணம் ஏற்பாடு பண்றேன் என்று கூறி சென்றார் அப்பா.
மறுநாள் பணம் கொண்டு வந்து கொடுத்தார் அப்பா. வாங்கி வைத்துக் கொண்டான். சனி, ஞாயிறு பள்ளிவிடுமுறை திங்கட்கிழமை கொண்டு பணம் கட்டிவிட வேண்டும் என்று டூர் போகிற சந்தோசத்தில் கனவு கண்டு தூங்கிப் போனான். பொழுது விடிந்தது அம்மா இன்று பள்ளிக்கூடம் லீவுதான் நானும் உன் கூட பூவிக்க வறேன் என்றான் ரவி. படிக்கிற பிள்ளை நீ வீட்டிலிருந்து படி உனக்கெதுக்கு இந்த வேலை என்று கூறிவிட்டுச் சென்றாள் அம்மா.

சிறிது நேரம் கழித்து அப்பா வேலை செய்யும் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் வந்து உங்கம்மா எங்கடா? ஏன்றார் பரபரப்பாக ஏன்?என்ன விசயம் என்னிடம் சொல்லுங்க அம்மா பூவிக்க கோயிலுக்கு சென்றிருக்காங்க என்றான். உங்கப்பாவிற்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். இரத்தம் நிறைய போயிருக்கு ஒரு கால் வேற எடுக்கணும் என்று சொல்றாங்க முதலாளி உங்களை கையோடு கூட்டிட்டு வரச் என்று சொல்லியிருக்கார் உடனே கிளம்பு என்றார் ரவியும் அழுது கொண்டே அம்மாவிடம் போய் கூறி இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். அப்பா அவசர சிகிச்சைப்பிரிவில் மயக்கத்தில் இருந்தார். அங்கிருந்த நர்சு ஏம்மா இவர் உம் புருசனா 20,000 ரூபாய்  உடனே கட்டும்மா அப்பதான் ஆப்ரேசன் பண்ண ஏற்பாடு செய்ய முடியும் இரத்தம் வேற வேணும் என்று கூறினாள். அய்யோ கடவுளே அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்? ஏன்ன செய்வேன் என்று புலம்பித் தவித்தாள். ரவியும் கூட சேர்ந்து அழுதான். பொன்னாத்தா  தன்னைக் கூப்பிட வந்த ஆளிடம் அண்ணே நீங்கதான் பணம் ஏற்பாடு பண்ணிக் கொடுங்க உடனே கட்டணும் சொல்றாங்க என்றான். அவர் முதலாளி 10,000- ரூபாய் கொடுத்திருக்கிறார். இந்தாங்க மீதி பணம் நீங்க ஏற்பாடு செஞ்சுடுங்க என்றார். நான் யாரிடம் போய் கேட்பேன் அவ்வளவு பணம் கொடுக்கிற அளவுக்கு எங்க ஏரியாவில் யாரும் கிடையாது என்றாள். அதற்கு அவர் வீட்டுப் பத்திரம், நகை ஏதும் இருந்தா கொடுங்க பணம் ஏற்பாடு பண்ணலாம் என்றார். அன்றாடம் பொழைப்பு நடத்தும் எங்களுக்கு அது ஏதுப்பா உங்க முதலாளியிடமே வாங்கித் தாங்க என்றாள்.
மேலும் ரூபாய் முதலாளியிடம் வாங்கினால் சும்மா தரமாட்டார். அதற்கு ஈடாக அவரும் நகை அல்லது உங்களுக்கு பதிலாக யாரும் கையெழுத்துப் போட்டாதான்தருவார். ஒன்று செய் நீயோ, உன் பையனோ அந்த ரூபாய் கடன் அடையும் வரையில் அவரிடம் வேலை செய்யுங்க அப்படி என்றால் ஒத்துக் கொள்வார் என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரவி அம்மாவிடம் நான் வேலைக்குப் போகிறேன் என்றான். படிக்கிற புள்ளை நீ நான்என்னமெல்லாம் கனவு கண்டேன். உன்னைப்பற்றி அதெல்லாம் வீண் ஆயிடும் என்றாள். பரவாயில்லம்மா இப்ப நமக்கு அப்பாதான் முக்கியம். நீ ஒருத்தி தனியா பூ கட்டி, வீட்டில் சமைத்து அப்பாவையும் கவனித்துக் கொள்ளணும். எப்படி மேலும் உன்னால் அதிக வேலை செய்ய முடியும். எனக்கு நீயும், அப்பாவும் வேணும் என்று தீர்மானமாகச் சொன்னான். நான் வேலைக்குப் போகிறேன் வாங்க அண்ணா போகலாம் என்று கூறினான்.

பிள்ளையின் முடிவு சரி என்று தோன்றியது அவளும் சம்மதித்தாள். இப்படிதான் பரபரப்பான உலகத்துல பணத்துக்காகவே எல்லோரும் ஓட வேண்டியிருக்கு. ரவியும் தன் படிப்பை விட்டு பணத்தை தேடி பாதை மாறி தன் பயணத்தை தொடங்கினான்.  No comments:

Post a Comment