Thursday 31 July 2014

Story 119: என்னவோ போ

என்னவோ  போ

சிட்லபாக்கம் தபால் நிலைய ஊழியர்கள் அனைவரும், தனக்கு நன்கு பரிச்சியமாகியிருப்பதாக தயாளன் உணர்ந்தான். நல்ல பரிச்சியமென்றால், அவர்கள் வீட்டீற்கு தயாளன் செல்லுமளவிற்கோ அல்லது ஒன்றாக உணவகம் செல்லுமளவோ என்று பொருளில்லை. தயாளன் தபால் நிலையம் வரும்போதெல்லாம் தபால்காரர் செல்வம்,  வணக்கம் சார்,  சௌக்கியமா!’ என்று விசாரிப்பார். கொஞ்சம் நல்ல மூடிலிருந்தால்சாப்பிட்டீங்களா?’ என வாஞ்சையோடு கேள்வி வரும். முன் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் எழுத்தர் தபால் உறையில் இவன் எழுதியிருக்கும் விலாசத்தை படித்தவாறு,! ஆனந்த விகடனா! மஞ்சரியா!’ என புன்முறுவலுடன் கூடிய வியப்பை வெளிப்படுத்துவார். அவரின் புன்முறுவல் அவனது படைப்பிற்கு கிடைக்கப் போகும் அங்கீகாரமாக தயாளனுக்கு தோன்றும். இவனது வருகையை அங்கீகரிப்பது போல் தபால்தலை பிரிவு ஊழியர் சற்றே தலையசைப்பார். அவ்வப்போது தன் கேபினிலிருந்து வெளியே வரும் போஸ்ட் மாஸ்டர்,  இவன் சிரித்தால் பதிலுக்கு சிரிப்பார். மற்றொரு எழுத்தர் இவன் என்றைக்காவது ஆர்.டி போடுவான் என்ற நம்பிக்கையில், பெண் எழுத்தரிடம் தயாளனை சுட்டிக்காட்டிரைட்டர் வந்திருக்கார்என்பார். இவை தான், தயாளன் பெருமைப்படும் அங்கீகாரங்கள் மற்றும் பரிச்சியங்களாகும். தயாளனை சொல்லியும் எந்த குற்றமில்லை; இதுவரை எந்தவித பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்திராதவன் சின்ன தலையசைப்பையும், புன்முறுவலையும் கூட மகுடமாகத் தான் கருதுவான்.

சிட்லபாக்கம் தபால் நிலையத்திலிருந்து இதுவரை 48 சிறுகதைகள், 18 கட்டுரைகள் மற்றும் 65 கவிதைகளை தயாளன் அனுப்பியுள்ளான். ஓரு கதை மற்றும் ஆறு கவிதைகள் பிரசுரமாகியுள்ளது. ஆயிரத்தி இருநூறு இலவச பிரதிகள் வெளியாகும் குரோம்பேட்டை பாரதிநகர் டைம்ஸ் பத்திரிக்கையில் தயாளனின் ஜந்து கவிதைகள் வெளியாகியுள்ளது. மற்றொரு கவிதை ஒரு தினசரியின் இலவச இணைப்பில் பிரசுரமானது.  பிரசுரமான ஒரே கதை, திருப்பூரிலிருந்து வெளிவந்த மாத இதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியானது. என்ன காரணமோ தயாளனின் கதை வெளிவந்த இரண்டு மாதங்களில்  அந்த இதழ் நின்றுவிட்டது. திருப்பூர் இதழ் ழூலம் கொரியரில் வந்த டைரியும், பேனாவும் தான் இன்றளவும் தயாளனின் எழுத்திற்கு கிடைத்த சன்மானங்களாகும்.
 குரோம்பேட்டை பாரதிநகர் டைம்ஸ் ஆசிரியர் குமார்சிவா மட்டுமே அவனறிந்த ஒரே பத்திரிக்கையுலக பிரமுகர். பொன்னியின் செல்வன், கம்பராமாயனம் எல்லாம் படித்திருப்பதால் அவரை இலக்கியவாதி(!) என்றுமழைக்கலாம். தயாளன் சன்மானம் கேட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் அவனை பார்க்கும் போதெல்லாம் ‘நானே  வளர்ந்து வரும் ஆளு பாருங்க என்பார். ஓரு சொகுசு கார், ழூன்று நவீன அடுக்கக வீடுகள், ஆறடி உயரம் என தயாளனின் பார்வையில் அவர் நன்றாகவே வளர்ந்திருந்தார்.

சன்மானம் எதுவும் அளிக்கவில்லையென்றாலும் தயாளனை பலருக்கும்இவர் எழுத்தாளர் தயாளன்; அடுத்த சுஜாதாவாக உருவாக வாய்ப்பிருக்குஎன பெருமையாக அறிமுகப்படுத்துவார். அவரால் தயாளனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்;  படிக்கும் பழக்கமற்ற அவரின் கார் ஓட்டுனர், இந்தி மொழி பேசும் காவலாளி, அவரின் ஆறு வயது மகள் சஞ்சு மற்றும் சஞ்சுவின் கணக்கு வாத்தியார் சோமன். மேற்கூறிய பிரமுகர்களில் சோமன் மட்டும் தயாளனைப் பார்த்து,  தமிழிலா எழுதுறீங்க? யாரும் படிக்கிறாங்களா?’ என்று வியப்படங்காமல் வினவினார். எரிச்சலூட்டும் கேள்வியாயினும், தன்னையும் மதித்து ஏதோ கேட்கிறானே என தயாளன் அகமகிழ்ந்தான். 


 வீட்டீல் மடிகணினி இருந்தும், பத்திரிக்கைகள் மிகத்தெளிவாக இமெயிலில் அனுப்பலாம் என குறிப்பிட்டாலும், தயாளன் தபாலில் தான் தன் படைப்புகளை அனுப்புவான். தட்டச்சு செய்யாமல் கையால் எழுதியனுப்பினால் தான் எழுத்தாளனின் உழைப்பும், வலியும் புரியுமென்று நினைப்பான்.  தயாளனுக்கு புரியவேயில்லை; எழுத்தாளனின் வலி, அரவாணியின் துயரம்,  விலைமாதரின் வேதனை ஆகியவை சழூகத்திற்கு என்றுமே  புரியப்போவதில்லை.

ஒவ்வொரு படைப்பையும் அனுப்பிவிட்டு, தபால் நிலையத்திலிருந்து வீடு திரும்பும்போதெல்லாம் தயாளனின் மனம் அலைபாயும். தற்போது அனுப்பிய கதை பிரசுரமாகிவிட்டால், கதையின் தன்மை பிடித்துப் போய், அதையே தொடர் கதையாக எழுத இதழாசிரியர் வேண்டுவார். பின்பு அந்த தொடர்கதையை திரைப்படமாக்க இயக்குனர்கள் போட்டி போடுவர். கதையின் உரிமையை தன் பெயருக்கு மாற்றிட வேண்டும். ஏராளமான திட்டங்கள் மனதில் உருவாகும். எழுத்தாளனின் படைப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் கற்பனை இருந்தால் மட்டுமே அவனது சோகத்தையும், வெறுமையையும் சற்றாவது கடக்க முடியும்.

தன் படைப்புகள் எதுவும் வெளிவராத தருணங்களில் தயாளன் மிகவும் தளர்ந்து போவான். சாலையில் நடந்து செல்லும்போது ‘டே! பாரதிக்கே அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகாரம் தராத உலகம்டாஆங்காரமாக கை நீட்டி முழங்குவான். காரில் செல்பவனும், சாலையோர பிச்சைக்காரனும் அவரவர் நிலையிலுருந்து தயாளனை பரிதாபத்துடன் நோக்குவர். ஆரம்பத்தில்,  ஓரு பீ.பி. நிறுவனத்தில் தயாளன் வேலை பார்த்து வந்தான். தன் படைப்புகளை உருவாக்கவும்,  அது தொடர்பான சிந்தனையில் ஆழ்ந்திருக்கவும், வேலை தடையாகவுள்ளது என அந்த வேலையை விரைவில் விட்டுவிட்டான்.

கடந்த ழூன்று வருடங்களாக, வருமானத்திற்காக வீட்டீல் இருந்தவாறே சில நிறுவனங்களுக்காக பகுதி நேர மொழிபெயர்ப்பு வேலைகளை செய்து கொண்டு, எழுத்துப் பணிக்காக அதிகநேரம் செலவிடுகிறான். சில நேரங்களில் படைப்புகளில் ஆழ்ந்துவிட்டு புதிய மொழிபெயர்ப்பு வேலைகளை தவிர்த்துவிடுவான். அம்மாவும், தயாளனும் மட்டுமுள்ள அந்த குடும்பத்திற்கு தேவையான மாத வருமானத்தை, எப்படியோ மொழிபெயர்ப்பு வேலைகள் ழூலம் ஈட்டி விடுவான். நிரந்தர பணி இல்லாததால் தயாளனுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. மகனுக்கு திருமணம் ஆகவில்லையென்ற வருத்தமிருந்தாலும், அவனது ஆசை, கனவுகளுக்கு தடையெதுவும் சொல்லிட அம்மா தயங்கினாள். வீட்டீலிருந்தவாறு ஃப்ரீலான்ஸ் பணி ழூலம் சம்பாதிக்கிறான் என்பதை மட்டும் சொல்லியிருந்தாலாவது தயாளனுக்கு திருமணம் நடந்திருக்கக்கூடும். கதை எழுதுகிறான்; கவிதை புனைகிறான் என்றால் யார் பெண் கொடுப்பர்? திருடுகிறான் என்று கூறியிருந்தாலாவது பிற்காலத்தில் சழூகத்தில் பெரிய மனிதனாக விடக்கூடும் என்று நம்பி பெண் தரலாம்.  எழுத்தாளனை நம்பி எப்படி பெண் தர முடியும்?


இலக்கியம், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், இசை என பல களங்களிலும் கட்டுரைகள் எழுதும் திறன் தயாளனுக்கு இருந்தது. வனது ஒரே துணையான அம்மாவிடம்  என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு, கூடங்குளம் பிரச்சனை, இயற்கை உரம்  என்று எல்லாவற்றையும் விவாதிப்பான். ஆரம்பத்தில் தயாளனின் அறிவையும்,  ஆர்வத்தையும் கண்டு மகிழ்ந்தவள் தற்போது,என்ன தெரிஞ்சு என்ன பயன்? உனக்கு ஒரு விடிவு பிறக்கலையே! என்னவோ போஎன்று ஆதங்கப்படுகிறாள்.   

தனது படைப்புகளிலுள்ள குறை என்ன? ஏன் அவை பிரசுரம் ஆகவில்லை? என்பதை அறிந்து கொள்ள தயாளனுக்கு இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் யாருமில்லை. அவனது நண்பர்களில் தமிழ் நன்கு படிக்கத் தெரிந்தது இருவர் தான்; ஒருவனிடம் படிக்கத் தந்தால், ஒரு மாதம் கழித்துமுதல் பக்கத்தை படிச்சுட்டேன்; மற்ற பக்கங்களையும் படிச்சுட்டு சொல்றேன்என்றான். ஆனால், இரண்டு வருடமாகியும், இரண்டாம் பக்கத்தை கூட அவனால் படிக்க இயலவில்லை. மற்றொருவன்  பொண்ணுங்க, அப்புறம் செக்ஸ் இல்லாத கதை போரடிக்கும். இந்தியாவோட பெருமை, தமிழின் சிறப்புனு எழுதுனது போதும். அமெரிக்காவை பற்றி பெருமையா எழுது. முடிஞ்சா இங்கிலீசிலேயே எழுது. இப்பம் இங்கிலீஷ் தான் எல்லாமே(!) தெரியுமில்லஉறுதிபடுத்திக் கொண்டான். படுக்கையறையில், மனைவி வேசியாகி கணவனை மகிழ்விக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆணாதிக்க சிந்தனையுள்ளவர்கள் கதை, கவிதைகளுக்கு பொழிப்புரை, விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் இவ்வாறு தான் அமையும்.

முகநூல் குழும சந்திப்புகளுக்கு தவறாது தன் படைப்புகளை தயாளன் எடுத்துச் செல்வான். அனைவரும் உற்சாகமாக மதுவருந்தும் போது, அச்சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் தன் படைப்புகளை ஒவ்வொருவரிடமும் தந்து படிக்குமாறு யாசிப்பான். சிலர் கையில் வாங்காமலேஅட! தமிழிலா எழுதியிருக்கீங்க; நீங்க தமிழ் மீடியத்திலா படிச்சீங்க?வியப்படைவர். ஒரிருவர் மேலோட்டமாக ஒரு பக்கத்தை படித்துவிட்டுலவ் ஸ்டோரி எழுதுங்க பாஸ்; அது தான் கிக், அதை விட கிக் செக்ஸ் கலந்து எழுதுங்கநாராசமாய் சிரிக்கும் கூட்டம். சற்று நேரத்தில் வர்கள் எடுக்கப் போகும் வாந்தியை விட ,வர்களின் சிரிப்பு அருவருப்பு தரும். மாவோ என்று நண்பன் மட்டும் தயாளனின் முகவாட்டத்தை கருத்தில் கொண்டுதயா! இலக்கியம் மட்டுமல்லாமல், எந்த துறை குறித்தும் நீங்கள் முகநூலில் விவாதிக்கும் போது உங்களின் அறிவு, தேடல் எல்லாம் எனக்கு பிரமிப்பாக இருக்கும். உங்களுக்கான நேரம் வரும் தயா; தளர்ந்திடாதீங்கநம்பிக்கை ஊட்டுவான். 

நாட்கள் செல்ல, செல்ல தயாளனுக்கு வாழ்க்கையின் மீதான அச்சமும், வெறுமையும் அதிகரித்துக் கொண்டது. இப்போதெல்லாம் அடிக்கடி தற்கொலை குறித்த  எண்ணமும் தோன்றுகிறது. நேற்று இது குறித்து மாவோவிடம் விவாதித்தபோது,  அவன் கடிந்து கொ ண்டான்  என்ன தயா! நீங்க இவ்வளவு தானா? இணையத்தில் எவ்வளவு தன்னம்பிக்கை கதைகள் எழுதி, எங்களுக்கு வாழ்க்கையின் மீது பிடிப்பு வர வைச்சிருக்கீங்க. உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களை விட நான் அந்த நாளுக்காக ரொம்பவும் ஏங்குகிறேன். ஒரு நாட்டை அல்லது   சழூகத்தை எழச்  செய்யும் வல்லமை, வரலாற்றை மாற்றும் திறன் ஒரு எழுத்தாளனின் எழுத்திற்கு இருக்கலாம். ஆனால், தோல்வியால் துடிக்கும் எழுத்தாளனை, துவண்டிடாமல் தாங்கிப்பிடிக்கும் மாவோ போன்றோர் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்.

இரண்டு மாதங்களாக மொழிபெயர்ப்பு வேலைகளும் குறைந்துவிட்டதால், மாத வருமானத்திற்கு தயாளன் மிகவும் திணறினான். மீண்டும் பீ.பி. வேலைக்கும் போக முடியாது.  நண்பகல் வேளையில் அயர்ந்துறங்கும் அம்மாவின் கவலை தோய்ந்த முகம்,  அவனது வருத்தத்தை மேலும் அதிகரித்தது. அயர்ச்சியிலும், கவலையிலும் கண்ணயர்ந்த தயாளனை அவனது கைபேசி அழைப்பு எழுப்பி விட்டது. ‘பேசுவது தயாளனா!’ என வினவிவிட்டு,  தன்னை பிரபல பத்திரிக்கையின் கதை இலாகா ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர்,தயாளன்! எங்கள் இதழ் நடத்திய சிறுகதை போட்டியில்,  உங்களின்  என்னவோ போசிறுகதைக்கு முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.  உங்கள் சிறுகதை வரும் வார இதழில் பிரசுரிக்கப்படும்.  ஆனால்....’ என்று  தயாளனை தொங்கலில் விட்டார்.

ஆனால்..என்ன?’ தயாளன் மருகினான்.

உங்களின் எழுத்துநடை மற்றும் மொழித்திறன் அருமை. ஆனால்,  கதை மாந்தருக்காக நீங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக குறிப்பிட்ட சேகுவேரா, காரல்மார்க்ஸ், பாரதி, ஆந்த்ரே அகாசி,  ஸ்டிவ் வாக்,  ராகுல் திராவிட் ஆகிய போராளிகளிடமும் பல குறைகளுண்டு.  விவாதிக்கலாமா?  என்று தயாளனை களத்திற்கு இழுத்தார்.

அரைமணி நேரத்திற்கு மேல் தயாளன் தந்த எடுத்துக்காட்டுகள்,  ஆதாரங்களை கூர்ந்து கேட்டவர்,  தயாளன்! ஒரு நோக்கமாகத் தான் உங்களை விவாதத்திற்கு அழைத்தேன். பிரசுரிக்கப்படும் இக்கதையிலும், முன்பு நீங்கள் அனுப்பிய கதைகள்,  கட்டுரைகளிலும் பல தளங்களிலும்; உங்கள் ஆர்வமும் அறிவும் நன்கு புலப்படுகிறது. அதை மீண்டும் தெளிவுபடுத்தவே விவாதத்திற்கு அழைத்தேன்.  வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும், மேற்கூறியவர்களின் போராட்டமான வாழ்க்கையை எங்கள் இதழுக்கு தொடராக எழுதி தரமுடியுமா?’.

பின்னனியில் பியானோ இசைக்கப்படவில்லை; வெளியில் மழை பொழியவில்லை;  வானிலிருந்து தேவதைகள் தோன்றி ஆசிர்வதிக்கவில்லை. ஆனாலும், தயாளன் விரும்பிய இனிய மாற்றம் நடந்துவிட்டது. தூக்கத்திலிருந்து விழித்த அம்மாஎன்ன தயாளா! காப்பி போட்டு தரவா?’ கேட்டாள். அவளை பார்த்து சிரித்த தயாளன்,என்னவோ போஎன்றான். அவன் சிரிப்பிற்கு காரணம் புரியாவிட்டாலும்,  வெகுநாட்கள் கழித்து அவனை சிரித்த முகத்துடன் கண்ட அம்மாவும் அகமகிழ்ந்தாள்.

No comments:

Post a Comment