Monday 14 July 2014

Story 60:பணமும்,பாசமும்

பணமும்,பாசமும்
 இந்த கலியுகத்திலே எல்லாமே பணம்தான் என்றாகிவிட்டது. அதாவது பரவாயில்லை ஆனா, இப்ப பணம்தான் கடவுள் என்கிற அளவுக்கு இந்த சமுதாயம் மாற்றிவிட்டது. இப்படி பணம்தான் முக்கியம், மற்றதெல்லாம் அப்புறம் என்று ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி மாறிப் போயிருக்கிற இந்த காலத்துல பாசம், பந்தம் என்னவென்று எவருக்குமே தெரியாது. பாசத்திற்காக ஏங்கும் ஒரு பையனைப் பற்றிய கதைதான் இது. வாங்க தொடரலாம்.
ஆஹா, சூப்பர், பிரமாதம்  மற்றும் ஒரு பெரிய கரவொலி சத்தத்துடன் தொடங்கியது வெள்ளித் திரைக்கான ஒளிப்பதிவு. இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் ஒரு பெரிய ஹீரோ, ஹீரோயினுக்காக என்று நீங்க நினைத்தால் அது தவறு. இதுக்கு சொந்தக்காரர் ஒரு நகைச்சுவை நடிகர். அவர் பெயர் செல்வா. இது வெள்ளித்திரைக்காக சினிமா வட்டாரம் வைத்த பெயர். ஆனால் இவரின் இயற் பெயர் முத்தமிழ்ச்செல்வன். நெருங்கியவர்கள், உறவினர்கள் இவரை முத்து என்றழைப்பார்கள்.
செட்டில் சூட்டிங் முடிந்ததும் தன் ரசிகர்களை சந்தித்து உரையாடல் மேற்கொண்டார். அப்போதுதான் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் சற்று குறைந்து இருந்தது. ஒவ்வொருவரும் தன் மனதில் தோன்றிய கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு ஏற்றவாறு அவர் பதிலளித்துக் கொண்டிருக்க கூட்டத்தில் ஒருவர் நீங்க ஏன் ஹீரோவாக நடிக்க கூடாது என்று கேட்டார். அதற்கு செல்வா எனக்கு அந்த ஆசை இல்லேப்பா. நான் சினிமாவிற்கு வந்து 5 வருடம் கூட முழுமை அடையல. என்னுடைய லட்சியம் ஒரு தடவையாவது தேசியவிருது மட்டும் பெற்றால் போதும் என்று கூறி விடைபெற்றார். வீட்டிற்குள் நுழைந்த உடன் மிகவும் சோர்வு அடைந்ததாக உணர்ந்தார்.

அப்பதான் இன்றிரவு தன் மகன் விக்னேசுடன் கழிப்பதாக கூறியது நினைவிற்கு வந்தது. தன் மனைவி பானுவிடம் விக்னேசு எங்கே? என்று கேட்க அவள் கோபத்துடன்  அவன் 10 மணிக்கு உறங்கிவிட்டான் என்று கூற செல்வாவிற்கு கோபம் வந்துவிட்டது. இருவருக்கும் வாக்குவாதம் பெருகியது. டிரிங், டிரிங், டிரிங் என்று போன் சத்தம் வந்தவுடனே செல்வா திரும்ப, சமையலறைக்குத் திரும்பினாள் பானு. ஆமா இவருக்கு ஊரிலுள்ள எல்லார் முகத்தையும் பார்க்க நேரம் இருக்கு, ஆனா, தான் பெற்ற பிள்ளையைப் பார்க்க நேரமில்லை. பணம் மற்றும் புகழ் பின்னால் செல்லும் இவருக்கு குடும்பம் எதற்கு? என்று கண்ணீருடன் முனங்கிக் கொண்டே சென்றாள். போன் ஊரிலிருந்து வந்தது. ஹலோ நான் சண்முகம் பேசறேன் முத்துவா? என்றார். ஆமா என்ன விசயம்? சொல்லுங்க என்றான் செல்வா (முத்து) அதாவது, அவர் முத்துவின் வயல்வெளியை பார்த்துக் கொண்டிருக்கும் சண்முகம், அவர் கூறியது நம் வயல் பக்கத்துல உள்ள வயலும் விற்பனைக்கு வருது, நீ சரி என்று சொன்னால்அதையும் வாங்கி பயிர் செய்தால் நன்கு இலாபம் வரும்  என்ன சொல்றே? என்று கேட்டார். அதற்கு முத்து நான் தேவைக்கு மேல இங்கு சம்பாத்தியம் பண்றேன். நீங்க வேணும்னா நம்ம நிலத்தையும் வித்துடுங்க என்றான். பதிலுக்கு அவர் என்ன முத்து? நீ சென்னைக்குப் போனப்புறம் உன் சொந்த ஊரிலுள்ள  வயலைப் பார்க்கிற சாக்கில எப்பவாவது வருவே. இந்த வயலை வித்துட்டா நீ ஊருக்கு வரமாட்டேல்ல. ஆமாம், அதற்குத்தான் எனக்கு என் மகனைப் பார்க்கவே நேரமில்லை. நான் சொல்றதைச் செய்யுங்க என்றான். அவர் எதற்கும் ஒரு வாரம் யோசிப்பா அப்புறம் பேசறேன் என்று கூறி போனை வைத்தார். காலை 7 மணிக்கு விக்னேசு எழுந்தவுடன் அப்பா எங்கே? என்று கேட்க பானு, அப்பா சூட்டிங் போயாச்சு. இன்றிரவு சீக்கிரமா உன்னைப் பார்க்க கட்டாயம் வருவார் என்று ஆறுதல் கூறி கட்டியணைத்தாள். இன்றிரவும் செல்வா வீட்டிற்கு தாமதமாகத்தான் வந்தார். மறுபடியும் இருவருக்கும் சண்டை தொடங்கியது. வாக்குவாதம் முற்றியது. என்னடி பானு ரொம்ப ஓவரா பேசற என்னமாதிரி எந்த அப்பனும், புருசனும் இருக்க முடியாது. பையனுக்கு சிறந்த ஸ்கூல், அவன் எதைக் கேட்டாலும் இல்லை என்று மறுக்காம உடனே வாங்கிக் கொடுக்கிறேன். நம்ம ஊர்ல புகைமூட்டி சமைத்த நீ இப்ப, இங்கு மைக்ரோவனில் சமைக்கும் அளவுக்கு உன்னை மாற்றியிருக்கேன். இதெல்லம்தான்  எப்படி வந்தது? இந்த மாதிரி  உழைத்ததினால்தான் வந்தது. பதிலுக்கு பானு ஆமா உன்னை மாதிரி எந்த புருசனும், அப்பனும் இந்த பூமில இருக்க முடியாது. வெறும் பொருளில் என்ன இருக்கு. உன் படத்துல எவ்வளவு வசனம் பேசியிருப்ப, ஆனா உன்பிள்ளைகிட்ட ஒரு நாளைக்கு ஒரு வரியாவது பேசியிருப்பியா, இல்லை அதவிடு, ஊருக்குதான் நகைச்சுவை நடிகர். இந்த நாலரை வருசத்துல என்னைக்காவது நீ என்னை சிரிக்க  வைச்சிருக்கியா? அழத்தான் வைச்சிருக்க. மறுடியும் டிரிங், டிரிங்டிரிங் திரும்பிய செல்வா போனை அட்டன் செய்ய, பானுவும் முனங்கிக் கொண்டே சமையலறைப்பக்கம் சென்றாள். போனில் பிரபல புரொடியூசர் செல்வாவிடம் நீங்க என் புரொடக்சனில் நடித்த படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது பெற்று இருக்கிறீர்கள் என்று கூறினார். இதைக் கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி அவர் செல்வாவை ஹீரோவாக நடிக்க அழைப்பு விடுத்தார் உடனே மறுக்க முடியாமல் சரி என்று கூற அவர் நாளையே சூட்டிங் ஆரம்பம் வந்திடுங்க என்று கூறி போனை வைத்தார்.

காலையில் சூட்டிங் செல்லுமுன் தான் விருது பெற்றதை பானுவிடம் கூறி நான் மிகவும் சந்தோசமாய் இருக்கிறேன் என்ன வேண்டும் கேள் என்றான். அதற்கு பானு இன்று சீக்கிரம் வாங்க அதுபோதும் என்று கூற அப்பசரி விக்னேசு எதைக் கேட்கிறானோ மறுக்காமல் அதைக்கொடு என்று கூறி சூட்டிங் சென்றார். இதுவரை ஜாலியாகவும், குறும்புத்தனமாகவும் நடித்த செல்வாவிற்கு சற்று பதட்டமும், பயமும் வந்தது. எப்போது என்றால் அன்று உணர்ச்சிகரமான சீனில் நடிக்கும்போது அந்த சீனில் அப்பாவும், மகனும் ஒருவரையொருவர் கட்டியணைத்து அழும் காட்சி என்ன மாயமோ தெரியல டேக்குக்கு மேல டேக் வாங்கியும் சீன் இன்னும் முழுமை ஆகலை டைரக்டர் கோபமாக ஒரு காமெடியனை ஹீரோவாப் போட்டால் இப்படிதான் நடக்கும், இதச் சொன்னா அந்த புரொடியூசருக்கும் புரியாது என்று குறைகூறி செல்வாவை தரக்குறைவாக பேசினார். இதைக் கேட்ட செல்வாவிற்கு கோபம் வந்து டைரக்டரிடம் சண்டை போட்டு சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்தவுடன் அப்பாவை நேரில் பார்த்த சந்தோசத்துடன் ஓடிவந்து கட்டி அணைத்தான் விக்னேசு. எனக்கு மூடு சரியில்லை நீ போய் விளையாடு என்னைத் தனியாக விடு என்றான் செல்வா. வாடிய முகத்துடன் சென்றான் விக்னேசு.
பானு என்ன அதிசயம் சீக்கிரம் வந்துட்டீங்க, சூட்டிங் முடிந்ததா? என்று கேட்டாள். சூட்டிங்கில் நடந்ததைக் கூறினான் செல்வா. அப்படியா? சரி அது இருக்கட்டும் நீங்க என்னிடம் காலையில் கூறியது ஞாபகம் இருக்கா? ஆம் என்றான். அப்பசரி  உன் மகனைக் கூப்பிட்டு என்ன கேட்டான் என்று கேள். தன் மகனை அழைத்து அம்மாவிடம் நீ என்ன கேட்டே? என்று கேட்டான் அதற்கு விக்னேசு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டேன். என்ன ஒரு இலட்ச ரூபா உனக்கா எதுக்குஎன்று கேட்டான் செல்வா. இல்லப்பா என் ஆசிரியர் சொன்னார் என் வகுப்பில் நான்தான் பணக்காரன் என்றார். எப்படி என்று கேட்டேன்? அதற்கு அவர் நீங்க ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள்என்றார். சரிதான் அதுக்கு நீயும் உன்னிடம் ஒரு இலட்சம் பணம் இருந்தால் பணக்காரன் என்று நினைத்தாயா? படிக்கிற வயசுல பண ஆசை வந்துட்டுதா என்று கூறி கன்னத்தில் அறைந்தான். உடனே விக்னேசு ஒவென்று அழ பானு  அவனை கட்டியணைத்து சமாதானப்படுத்தி அவன் என்ன கூற வந்தான் என்று முழுசா கேட்டியா என்று கூறி தங்கம் இப்ப சொல்லுமா என்றாள். அதற்கு விக்னேசு இல்லப்பா நான் பணத்துக்கு ஆசைப்படலை பின்னே எதற்கு?என்றான் செல்வா. அந்த ஒரு இலட்சத்தை வாங்கி உங்களிடம் கொடுக்கத்தான் என்னிடமா எதற்கு? என்றான் செல்வா.அப்பதான் ஒருநாள் முழுக்க நான் உங்க கூட இருக்க முடியும் என்றான். உடனே தன் மகனை கட்டியணைத்தான் செல்வா கண்ணில் நீரூற்றத் தொடங்கியது. அப்பதான் தான் செய்த தவறை உணர்ந்தான். பணத்திற்காக தன்னை விற்றதாக உணர்ந்தான். டிரிங், டிரிங் என்று போன் சத்தம். போனில் டைரக்டர் நான் செய்த தவறை மன்னிச்சுடுங்க சூட்டிங்கிற்கு வாங்க என்று கேட்டுக் கொண்டார். அதற்கு செல்வா நான் இனிமேல் நடிக்கப் போவது இல்லை இனி நான் முத்துவாக வாழப் போகிறேன் என்று கூறி போனை வைத்தான். உடனே ஊரிலுள்ள சண்முகத்தை தொடர்பு கொண்டு அவர் பேசியவாறு அந்த வயலை வாங்குமாறு கூறினான். நானும் விரைவில் ஊர்ப்பக்கம் வருவேன் என்று கூறி போனை வைத்தான். தன் மகனுடன் விளையாட ஆரம்பித்தான்.
                     கதை முடிந்தது!

பணத்திற்காக பாசத்தை மறந்தான். பாசத்தின் தன்மையை உணர்ந்ததும்  பணத்தை மறந்தான்.இதைப் படித்தபிறகு சிலர் பணத்தினால் தொலைத்த பாசத்தை மறுபடியும் பெற முயற்ச்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment