Sunday, 27 July 2014

Story 95: அடிமை வம்சம்அடிமை வம்சம்

தான் வேலை பார்க்கும் பேக்கரியிலிருந்து வெளியே வந்த வெள்ளை கடையின் எதிரே நடைமேடையில் தன் நண்பன் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனருகில் சென்றான்
என்னாச்சு செவலை ?’
ஒன்னுமில்லை வெள்ளைஎன்று அவன் முகம் பார்க்காமலே பதில் சொன்னான் செவலை.
டேய்.. பேக்ரிக்குள்ள எலித் தொல்லைனு வெளிய வந்தா, இங்க உன் தொல்லை. என்னடா ஆச்சு. ஏன் இப்படி மூஞ்சிய தொங்கபோட்டுட்டு உட்கார்ந்திருக்க ?’ என்று கோபமாக கேட்டபடி அவன் அருகில் அமர்ந்தான்.
தலையை நிமிர்த்தி நண்பனைப் பார்த்தவன், மெல்லிய குரலில்ரொம்ப பசிக்கிதுன்னு மதியம் முக்குரோட்ல இருக்க பாண்டி பிரியாணி கடைக்குள்ள போனேன். அந்தப் பாண்டியும் அவன் ஆளுகளும் சேர்ந்து என்ன துறத்தி அடிச்சிட்டாங்கஎன்று சொல்லி கண்ணீர் கசிந்த முகத்தை இறுக மூடிக்கொண்டான்.
அவிங்களுக்கு இதே வேலையாப் போச்சு. அவன் ஆளுகளத்தான் உள்ள விடுறான். நம்ம பசங்க யாரு போனாலும் அடிச்சு துறத்துறான். ரொம்ப திமிரெடுத்துப் போய் அலையிறான்என்று பொங்கினான் வெள்ளை.
நாம ஏன் இவனுகளுக்கு அடிமை மாதிரி இருக்கனும். நம்மள இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கிற உரிமைய யாரு இவனுகளுக்கு தந்ததுஎன்று வெகுண்டான் செவலை.
காலம் காலமா வலியவன் எளியவன ஆள்றது தானடா நடக்குது இந்த உலகத்தில. அது காடானாலும் சரி நாடானாலும் சரி. நாம என்ன விதிவிலக்கா. எல்லாம் நம்மளவிட அவுங்களாம் பெரிய ஆளுன்ற மமதைஎன்று சரித்திரம் பேசிய வெள்ளை, அதோடு
சரி.. உங்க வீட்டில இன்னைக்கு சாப்பாடு இல்லையா ? நீ ஏன் அந்த ஆள் கடைக்கு போன ?’
இல்லைடா.. எங்க வீட்டு எஜமானி அம்மாக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை. அவுங்க புருஷன் அவுங்க இரண்டு பேருக்கும் தான் சாப்பாடு வாங்கி வர்றார். அவருக்கு என்ன கண்டா சுத்தமா பிடிக்காது. அதான் அங்க போனேன்
சரி வா. நான் பேக்ரியில இருந்து ஏதாவது எடுத்து தர்றேன்
இல்லைடா. வேணாம். அப்புறம் உங்க கடை முதலாளி வந்துட்டாருன்னா நல்லா இருக்காது. எங்க வீட்டுக்கு பால் பாக்கெட் வருதுல, அதை வைச்சு நான் சமாளிச்சுக்கிறேன்
அதுவும் சரிதான். என் முதலாளி கடையில ஒரே எலித் தொல்லைங்கிறதால ஏற்கனவே என் மேல கெட்ட கோபத்தில இருக்கார். இதுல ரெண்டு பேரும் கடையில எடுத்துத் திண்றத பார்த்தா கொன்னுருவார்என்று நொந்துகொண்டான் வெள்ளை.
பேசாம நான் எங்க சித்தப்பாகூட துபாய் போயிருந்திருக்கலாம். அவுங்க ஓனர் துபாய்க்கு போகும்போது எங்க சித்தப்பாவையும் கூட்டிட்டு போய்ட்டார். எங்க சித்தப்பா என்னையும் வர்றியான்னு கூப்பிட்டார். நான் தான் உன்னையும் எஜமானி அம்மாவையும் விட்டு போக மனசில்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன். அங்க அவர் ரொம்ப சந்தோஷமா இருப்பார். இந்த ஊர்ல மாட்டிகிட்டு நான் முழிக்கிறேன்’.
துபாய் இல்லைனா என்ன ? பிலிப்பைன்ஸ் போறியா ? ஆள் இருக்கு’.
என்ன நக்கலா ?’ என்று முறைத்தான் செவலை.
பேச்சு மிகவும் இறுக்கமாகவே செல்வதால் செவலையை உற்சாகப்படுத்தடேய் செவலை. ரோஸிய பார்த்தியா இன்னைக்குஎன்று அதே தெருவில் 4 வீடு தள்ளியிருக்கும் ரோஸியைப் பற்றி கேட்டான் வெள்ளை.
துக்கம் தொண்டைய அடைத்துக்கொண்டு இருந்தவனுக்கு சந்தோஷம் பொங்கி வரும் சோடா போல் முகமெல்லாம் வழிய ஆரம்பித்தது. அதை துடைத்தவண்ணம்காலைல முருகன் கடை வாசல்ல பார்த்தேன். மீனா அக்கா கூட கடைக்கு வந்திருப்பா போல. எப்பவும் மீனா அக்காகூடதான் இருப்பாள். பொதுவா வெளிய வந்ததில்லை. ஜன்னல் வழியாவும் மொட்ட மாடியிலயும் தான் பார்ப்பேன். இன்னைக்கு என்னமோ அதிசயமா வெளிய வந்திருந்தாஎன்றான்.
அவள் எவ்வளவு கருப்பா இருக்கா. உனக்கு எப்படிடா அவளை புடிக்குதுஎன்ற வெள்ளையைப் பார்த்து எரித்துவிடுவது போல முறைத்தான் செவலை.
கருப்புனா சும்மாவா ? வெள்ளை கலர் மாதிரி வெளிச்சத்துல வெள்ளையாவும் இருட்டுல கருப்பாவும் சுழ்நிலைக்கு ஏத்தமாதிரி பச்சோந்தி போல நிறம் மாறாது. கருப்பு எப்பவும் கருப்புதான். வெளிச்சத்தை கடன் வாங்கி பொழைக்கவேண்டிய அவசியமில்லை அதுக்கு. கருப்பு தாண்டா நிலையானது. அழகுஎன்று பன்ச் பேசினான் செவலை.
ம்ம்ம்... காதல் வந்தா இப்படியெல்லாம் பேசுவாங்களா ? நல்லாயிருக்கு. இவ்வளவு காதல் வச்சுகிட்டு இப்படியே இன்னும் எத்தனை மாசத்துக்கு பார்த்துப் பார்த்து ஏங்கிக் கிட்டு இருக்கப் போற ? தைரியமா போய் பேசவேண்டியது தானஎன்று உசுப்பேத்தினான்.
அட போடா. அவள் பெரிய இடம். நம்மளையெல்லாம் பார்க்க கூட மாட்டாள். இந்த லட்சனத்தில நான் போய் பேசுறது எங்கிட்டுஎன்று அலுத்துக் கொண்டான் செவலை.
டேய் உன்னை அவள் பார்க்கலைனு யாருடா சொன்னா ? நீ பார்க்கும்போது உன்னை பார்க்கலை அதான் உண்மை. ஆனால் உன்னை ஓரக்கண்ணால எத்தனை முறை அவ பார்த்தானு எனக்கு தாண்டா தெரியும். நீ உங்க வீட்டுக்குள்ள இருக்கும்போது பல தடவை அவள் வீட்டு வாசல்ல வந்து உன் வீட்டு வாசல பார்த்துகிட்டே இருப்பாள். நான் எத்தனை தடவை பார்த்திருக்கேன்என்று கொம்பு சீவினான் வெள்ளை.
டேய் அது என் ஆளு. அவளை அடிக்கடி பார்க்கிறத கட் பண்ணு’.
நீ என் நண்பண்டா. அவள் எனக்கு தங்கச்சி மாதிரிஎன்றான் வெள்ளை.
தங்கச்சி மாதிரி இல்லை. தங்கச்சி தான். அப்படி உறுதியா இருந்துக்க’.
சரி விடுடா. அது என் தங்கச்சினு முடிவு கட்டிட்டா அவளை சைட் அடிக்கிறவன நான் துறத்தி அடிக்கனும். எப்படி வசதிஎன்று தன் பங்குக்கு வம்பிழுத்தான் வெள்ளை. அமைதியானான் செவலை.
சரி விளையாண்டது போதும். அவள் கிட்ட கூடிய சீக்கிரம் உன் காதல சொல்லு. வேற எவனாவது முந்திக்கப் போறான்என்றான் வெள்ளை.
நானும் பல தடவை அவள் கிட்ட பேசிடலாம்னு தான் முயற்சி பண்ணேன். ஆனால் முடியலடா. அவள் கிட்ட போனாலே ஒரு மாதிரி உடம்பெல்லாம் நடுங்குது. முடியெல்லாம் நட்டுகிட்டு நிக்குது’.
பேச தைரியமில்லைனா. எழுதி காட்டு. நேத்து டிவில ஓடின படத்துல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு அப்படிதான் லவ்வ சொல்வான். சுவத்துல கிறுக்குனான். அதை அவ பார்த்து உடனே அவனை கட்டிபிடிச்சுக்கிட்டா. நீயும் அவன மாதிரி முயற்சி பண்ணு. ஆனால் அவள் வீட்டு சுவத்துல எழுதிடாத. டின் கட்டிடுவாங்க. பக்கத்து வீட்டு சுவத்துல எழுது. அந்த வீட்டுல இருக்க நாய் என்ன எப்ப பார்த்தாலும் துறத்திகிட்டே திரியும். அந்த வீட்டு சுவத்துல எழுதுனா எனக்கு ஒரு திருப்திஎன்று அவனுக்கு உதவும் சாக்கில் தன் வஞ்சத்தையும் தீர்க்க நினைத்தான் வெள்ளை.
டேய் அறிவுகெட்டவனே. எனக்கு எழுத படிக்கவே தெரியாதேடா. நான் எப்படி எழுதுவேன். எங்க நாமெல்லாம் எழுத படிக்க தெரிஞ்சுகிட்டா கேள்வி கேட்போம் பெரிய ஆளாயிடுவோம்னு காலம் காலமா நம்மள இப்படி படிப்பறிவில்லாத அடிமையா தான வைச்சிருக்காங்க இவுங்கெல்லாம். நான் எங்க போய் எழுதுறது. அதை அவள் எங்க படிக்கிறது ?’ என்று தன் அடிமை வாழ்வை நினைத்து வருந்தினான் செவலை.
சரி விடுடா. என் முதலாளி கூட அடிக்கடி என்ன காமிச்சு அவுங்க நண்பர்கள் கிட்ட சொல்வார். ஒரு காலத்துல நம்ம கூட்டத்தை சாமி மாதிரி வச்சு கும்பிட்டாங்களாம் சிலர். இப்ப காலமெல்லாம் மாறிப்போச்சு. ஆனால் வீழ்ச்சினு ஒண்ணு இருந்தா எழுச்சினு ஒண்ணு கண்டிப்பா இருக்கும். ஆண்டான் அடிமைனு கேள்வி பட்டிருக்கேன்என்று தன் பூனை மீசையை தடவிக்கொண்டு நம்பிக்கையை விதைத்து வெள்ளை பேசிக்கொண்டிருக்கும் போதே
வொய்ட்டீ... வொய்ட்டீஎன்று குரல் கேட்ட்து
டேய் வெள்ளை உங்க ஓனர் வந்திட்டார். நீ கடையில இல்லைனு தேடிட்டு இருக்கார். நீ போ. நானும் போய் பால் சாப்பிட்டு படுத்துக்கிறேன். இருட்டிடுச்சு. நாளைக்கு பேசிக்கலாம். விடியாமலா போகும்என்றான் செவலை.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பிச் சென்றன வெள்ளை (வொய்ட்டீ) மற்றும் செவலை (ப்ரவ்னி) என்ற இரண்டு பூனைகளும்.No comments:

Post a Comment