கட்டில் எறும்புகள்
“அடிப்பரதேசி
முண்ட..அப்படின்னா நான் எங்கடி போறது?”
இரவின்
மிச்சமாய்த் தங்கி விட்ட இந்தக்
கேள்வி மண்டைக்குள் புழு
போல்
குடைந்து
கொண்டே இருக்கிறது.இந்த மாதிரியான ’புனிதமான’
வார்த்தைகள்
நிறையக்
கேட்டாயிற்று..சொல்லப்போனால் ஏறக்குறைய இது மாதிரியான
வார்த்தைகள்
கேட்காமல் ஒரு நாள் விடிவதும்
இல்லை..முடிவதும் இல்லை என்றே
ஆகி விட்டது.
பொதுத் தேர்வு எழுதும்
மாணவி போல் எக்காரணம் கொண்டும்
விருப்பத்
தேர்வில்
தள்ளி விட முடியாத இக்
கேள்வியை ஒதுக்கித் தள்ள முடியாத
அசூயையுடன்
பார்வதி எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
வெறிப்பதினாலோ,கொறிப்பதனாலோ தீர்வு கிடைக்கக்கூடிய கேள்வியா
இது?
பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த
பார்வதி நேற்றைய இரவை நினைத்து
அச்சப்பட்டாள்.நேற்றைய இரவு மட்டுமா?
ஒவ்வொரு இரவும் இப்படித்தான் அவளைப்
பயப்படுத்திக்
கொண்டிருக்கிறது.இரவின் கருப்பு ஏன்
இவ்வளவு அடர்த்தியாக
இருக்கிறது?அத்தனை பெண்களும் ஓடி
ஒளிந்து கொள்ள வசதி ஏற்படுத்திக்
கொடுக்கவாய்
இருக்குமோ?
விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும்
ஒரு ராட்சசனைப் போல,பிசாசு போல
பின் இரவு பூதாகாரமாய் அவளைப்
பயப்படுத்துகிறது?எல்லோரும் இரவை ஒரு
பூப்போல
புளகாங்கிதத்துடன் எதிர் கொள்வதில்லை.கவிஞருக்கும்,காதல்
வயப்பட்டோருக்கும்
இனிக்கும் இரவுகள் திருமண பந்தம்
கொண்ட பல பெண்களுக்கு
கடுக்காய்
போலக் கசப்பதில் காமனின் சூட்சுமம்
தோற்றுத்தான் போகிறது.
அடிக்கரும்பின்
இனிப்பின் அடர்த்தி நுனிக்கரும்பில் இருப்பதில்லை
அல்லவா?அடிக்கரும்பு என்பது தாம்பத்யத்தின் துவக்கம்
எனில் நுனிக்கரும்பு
என்பது
நாட்கள் பலவான தாம்பத்யம் எனக்
கொள்ளலாமா?
45வயதாகிறது
பார்வதிக்கு..17 வயதில் தாய்மாமனுக்குத் திருமணம்
செய்து
கொடுக்கப்பட்டாள்..
வாழ்க்கை
என்றால் என்ன?ஆணின் ஸ்பரிசம்
என்றால் என்ன என்று உணர்வதற்குள்
கையில்
மூன்று குழந்தைகள்.
அன்பான பேச்சோ சிரிப்போ
எதுவும் அற்ற வாழ்க்கை. கல்யாணம்
ஆன புதிதில்
அவள் வயதொத்த தம்பதிகள் வெளியே
சுற்றப் போவதை,சினிமாவுக்குப் போவதை
ஏக்கத்துடன்
பார்த்திருக்கிறாள்.இவளது மாமன் ஒன்றும்
மோசமானவன்
கிடையாது.ஆனால்,பெண்டாட்டியிடம் சிரித்துப்
பேசினால் அவள் உன்னை
அடிமையாக்கி
விடுவாள் என்று யாரோ சொன்னார்களாம்.அவன் இவளிடம் சிரித்துப்
பேசியதே
கிடையாது.
‘கஞ்சி போட்ட கதர்
சட்டை’ போலவே விறைத்துக் கொண்டே
நடக்கும் அவனைப்
பார்க்கும்
போது சில சமயம் சிரிப்புத்தான்
வரும்..
கல்யாணமான புதிதில் பக்கத்தில் இருக்கும் சொந்தக்க்காரங்க வீட்டுக்கு
விருந்துக்குக்
கூப்பிட்டிருந்தாங்க.பஸ் இறங்கிக் கொஞ்ச
தூரம் நடக்கணும்
அவங்க வீட்டுக்கு..அப்படி நடந்து போயிட்டிருந்த
போது மெதுவாய் அவரோட
கைகளுக்குள்ள
என் கைகளைக் கோர்த்தேன்..அப்படி
ஒரு கிறக்கம்..எங்கியோ
பறக்கற
மாதிரி..
’மாமா’
’என்ன?’
’இப்போ
என்ன நெனைக்கறீங்க?’
’எதப்பத்தி?’
எனக்கு
என்ன சொல்றதுன்னு தெரியல!
‘இல்ல..மாமா..நான் கை
கோர்த்துட்டிருக்கேனே..அதப்பத்தி என்ன நெனைக்கறீங்க?’
’என்னடி?
என்னைக் கைக்குள்ள போட்டுட்டேன்னு நெனைப்பா?’அது இந்த
ஜென்மத்துல
நடக்காதுடி..
எனக்குள்
என்னமோ உடையற சத்தம்..
மழையில்லாம
வெடிச்சுக் கிடக்கிற தரிசா மாறிடுச்சு மனசு!
கல்யாணமான
பத்து நாள்ல இப்படிக்கூடப் பேசுவாங்களா?
கை கோர்த்தபோது இது மாதிரி பொத்திப்
பொத்தி சினேகத்தோட இருக்கணும்ங்கற
எண்ணம்
தான் என் மனசுல இருந்துச்சு..
இந்த ஆம்பிள்ள பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டானே
மனசு அவமானத்துல குறுகிப் போச்சு!
இவனைக்
கைக்குள்ள போட்டுட்டா இவன் என்ன 30ஏக்கரா
முந்திரித்தோப்பையும்,பத்து ஏக்கரா தென்னந்தோப்பையுமா
எழுதி
வைக்கப்போறான்
எம் பேர்ல.?
வெட்டிப்பய
குடும்பம்னு தெரிஞ்சும், லீவு கீவு எடுக்காமப்
போனாத்தான்
வவுத்துக்குச்
சோறுன்னும் சொல்ற நெலைமையில தான்
இருக்கு அவங்க குடும்பம்…
சொந்தம்
விட்டுப் போயிரக்கூடாதேன்னு பாட்டி கெடந்து பொலம்பனதில்,
அம்மாவின்
நச்சரிப்பில் தான் அப்பா இந்தக்
கல்யாணத்துக்கு
சம்மதிச்சார்..
ம்ம்…இப்படி ஒரு கேடுகெட்ட
கல்யாணம் ஆகாட்டாத்தான் என்ன?
கொஞ்சம்
கூட அன்பாப் பேசத்தெரியாத ஆம்பிள்ள
கிட்ட என்னத்தப் பேசி என்ன ஆகப்போகுது?
இப்படியே
மனதுக்குள் புலம்பியபடியே விருந்து
வீட்டுக்குப் போய்
என்னத்தைச்
சாப்பிட?
சாப்பிட்டதாய்
பேர் பண்ணித் திரும்ப வந்தாச்சு!
அதுக்குப்
பிறகு ஒரு நாள் கூட
அவன் கையை அன்பா நான்
தொட்டதே இல்லை.
இப்படித்
தான் ஒவ்வொரு முறையும் என்
சிந்தனையும்,அவன் சிந்தனையும்
வேறுபட்டு
நின்ற தருணங்கள் எப்போதும் ஒரு போர்க்களத்தை எங்களுக்கு
மத்தியில்
விரித்துக் காத்திருந்தது.தலைகள் உருள்வதற்குப் பதிலாக
இங்கு
மனங்கள்
உருண்டு கொண்டிருந்ததை நான் உணர்ந்து கொண்டே
இருந்தேன்.
பிடிப்பில்லாமல்
ஏதோ ஒரு அமானுஷ்யத்தின் கட்டளையில்
கட்டுண்டு கிடப்பது
போல் ஒரு கட்டத்தில் என்
அம்மா அப்பாவின் சந்தோஷத்துக்காய் ,பிறகு என்
குழந்தைகளின்
சந்தோஷத்துக்காய் இந்தக் குடும்பத்துக்குள் கட்டுண்டு
கிடக்கிறேன்...
எனக்கான வாழ்க்கை எங்கே இருக்கிறதோ தெரியவில்லையே!
எப்படித்
தேடுவேன்?எங்கே தேடுவேன்?உண்மையில்
அப்படியேதேனும் இருக்கிறதா
என்ன? தேடிக் கண்டடைவேனா?
இது தான் காதல்
என்கிற வரையறை ஏதும் இல்லாத
போதும் பிரியம் சார்ந்த
அல்லது
வெளிப்படுத்தும் எந்தச் செயலையும் அவன்
செய்ததே இல்லை.எந்தச்
சமயத்திலும்
துளி அன்பையோ காதலையோ வெளிப்படுத்தாத
வாழ்வு ஒரு கட்டத்தில்
அயர்ச்சியைத்
தான் தருகிறது.ஒருவேளை நான் சொல்லும்
இதே மாதிரியான என்னைப்
பற்றிய
கருத்துகள் அவனுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கலாம்.சொல்லத்
தெரியாத
வார்த்தைகளோடு
அவனும் போராடிக் கொண்டிருக்கலாம்.
பகலெல்லாம்
வேலை..நைட் ஆனா கொஞ்சமாய்க்
குடியோடு திரும்புவான்.சாப்பாடு
போட்டு
வச்சா நல்லாத் தின்பான்.
பிறகு,நைட்ல மேல கை
போடுவான்..ஒரு வார்த்தை கூடப்
பேச மாட்டான்..மேல
விழுந்து
எழுவான்.அவ்ளோ தான் என்
தாம்பத்யம்..
காடு கரையில,கெணத்தடில பொம்பளைங்க
நைட் புருஷன் பொண்டாட்டிக்கு இடையில்
நடந்ததைப்
பத்தி சுவாரசியமாப் பேசும் போது கம்முன்னு
உக்காந்திருப்பேன்.
வருஷம்
நம்ம பிரச்சனைக்காக நின்னுட்டா இருக்கப் போகுது?அது பாட்டுக்கு
ஓடிட்டே
தான் இருக்கும்.நல்லதும்,கெட்டதுமா அடிச்சுட்டு வர்ற மழைத்தண்ணி
மாதிரி
ஓடுன கால ஓட்டத்துல மூணு
புள்ளைங்க ஆகிப் போச்சு.
பெரியவ
வயசுக்கு வந்து இன்னியோட ரெண்டு
வருஷம் ஆயிருச்சு!
இப்பவும்
வாழ்க்கை அதே மாதிரி தான்
போகுது.குழந்தைங்களோட
அன்பிலேயும்,கலாட்டாவாலயும் கொஞ்சம் சுமை இறங்கினா
மாதிரி
இருக்கு.ஆனாலும் நைட் ஆனா
இந்த ஆம்பிள்ளையோட வாலிபம் வயசுக்கு
வந்துரும்.எரிச்சலா தான் வரும்.
கூடப்படுத்த நாளைக்கு அடுத்த நாள் குடும்பச்
செலவுக்குப் பணம்
தருவான்.சம்மதிக்கலேன்னா முக்காத்துட்டு கண்ணுல காமிக்க மாட்டான்.
ஒரு கட்டத்துல சத்தியமா
இந்தத் தாம்பத்தியம் மேல எனக்கு கடும்
வெறுப்பு
தான் மிச்சமாய் நினைவில் இருக்குது. பத்தாவது வரையில்
படித்திருந்தாலும்
நிறைய யோசிக்க ஆரம்பித்தது என்
குற்றம் ஆகி
விட்டது..ஒரு திருமணம் முடிந்து
விட்டால் சாகும் வரை புணர்ந்து
கொண்டே
இருக்க
வேண்டுமா என்ன?
ஒரு பெண்ணின் விருப்பம்
இருக்கிறதா இல்லையா என்கிற அபிப்பிராயம்
கூடக்
கேட்கத்
தயாராய் இல்லாத ஒரு சமூகக்
கட்டமைப்பைக் கேள்வி கூடக் கேட்க
முடியாத
அவலம் தான் இங்கே இதை
‘ஒழுக்கம்’ என வரையறுக்கிறது.
மூச்சுத் திணறுகிறது எனக்கு..திருப்தியுடன் ஒரு
விருந்து சாப்பிட்டு
முடித்த
ஒருத்தியை மீண்டும் மீண்டும் அமர வைத்து உண்
என்ற பக்கத்தில்
நின்று
கட்டளையிடுகிறாற் போல் ஒரு உடலின்
தேவை தெரியாமல் உறவைத்
திணிக்கிறது
இந்த திருமண பந்தம்.
இந்த ஆள் பக்கம்
வரும் போது சில சமயம்
மாதவிலக்காக இருந்தால் மூஞ்சியக்
காட்டிட்டு
கெட்ட வார்த்தை ஏதாவது சொல்லி விட்டுப்
போவான்.அவன்
நெருங்காமல்
இருக்கணும் என்பதற்காகவே நாலு நாள்ல தீட்டு
முடிஞ்சு
போனாலும்
ஏழு நாள் தீட்டுத் துணியக்
கட்டிட்டுத் திரிவேன்.ரொம்பத்
தீட்டுப்போகுதுன்னு
நடிச்சுட்டே படுத்திருப்பேன்.
அதுக்கு
மேல அந்த நாடகத்தைத் தொடர
முடியாது.
ஊர்ல இருந்து ஒரம்பரைங்க யாராவது
வந்தாங்கன்னா அவங்களை வலுக்கட்டாயமா
ரெண்டு
நாள் தங்கிட்டுப் போகச் சொல்லுவேன்.அந்த
ரெண்டு நாள் இவன் கிட்ட
இருந்து
தப்பிச்சுக்கலாம்.
பொண்ணு
வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் என் பக்கத்தில் படுத்துக்
கொள்ளத்
துவங்கிய
போது அவன் கொஞ்சம் திணறித்
தான் போனான்.அப்போதும் நடு
இரவுகளில்
திருடன்
போல் வந்து என்னைத் தொல்லைப்
படுத்துவதை நிறுத்தவில்லை.கண்களை
அழுத்தமாக
மூடி உறங்குவது போல் நடித்தாலும் அவனது
மூர்க்கமான இழுத்தலில்
அவன் பக்கமாய்ப் போய் விழ வேண்டி
இருந்தது.
இந்தமாதிரி
ஆண் பெண் உறவை முதலில்
யார் தான் கண்டுபிடித்தது?சில
சமயம்
இப்படியான
குழந்தைத் தனமான கேள்விகளும் அவளுக்குள்
எழும்.அவளே சிரித்துக்
கொள்வாள்.
கொஞ்சநாள் அவன் பின்னிரவில் நெருங்கும்
போது நான் வேறு வழியில்லாமல்
என்
பக்கத்தில்
படுத்திருக்கும் மகளை அவனுக்குத் தெரியாமல்
ஒரு எறும்பு
கடிக்கும்
அளவில் மெதுவாகக் கிள்ளி வைப்பேன்.
அவள் மெதுவாய் முனகிக்
கொண்டே திரும்பிப் படுப்பாள்.அவள் என்னவோ
மெதுவாய்த்
தான் முனகுவாள்.நான் இவனுக்குக் கேட்கிற
மாதிரி சத்தமா
என்னம்மா
என்ன?என்று பதறுவேன்.சம்பந்தமில்லாமல்
தண்ணி வேணுமா என்று
கேட்பேன்.என்னுடைய சத்தத்தில் அவள் அரைத் தூக்கத்தில்
எழுந்து
உட்காருவாள்
இல்லையெனில் கண் விழித்துப் பார்ப்பாள்.
அதைக் கண்டால் அவன்
என்னிடம் இருந்து அகன்று போவான்.இப்படி என் மகளை
என் தடுப்புக் கவசமாகப் பயன்படுத்துவது என்பது எப்போதும் சாத்தியப்படாத
ஒன்று.அவ்வப்போது பயன்படுத்துவதோடு சரி.தினமும் இப்படிச்
செய்தால்
அவனுக்கும்
சந்தேகம் வந்து விடும் அல்லவா?
சில இரவுகளில் கடுமையான தலைவலி சில இரவுகளில்
காய்ச்சல் இப்படி
ஒவ்வொன்றாய்ப்
புதிதாய் யோசிப்பதே என் பெரிய சுமையாகி
விட்டது.கதவுகளில்லாத சிறிய தடுப்புச் சுவர்
கொண்ட ஒரே அறை அது.
நம்
விருப்பம்
சார்ந்து கதவைச் சாத்திக் கொள்ள
முடியாது.
ஒரு நாள் குழந்தைகள் எல்லோரும்
என் அம்மா வீட்டிற்குப் போய்
விட்டார்கள்.எனக்கு அவர்களை அனுப்ப
மனசே இல்லை.அம்மா வலுக்கட்டாயமாகக்
கூட்டிச்சென்று
விட்டார்கள்.
மனதில்
கிலி பிடிக்கத் தொடங்கியது.இன்றைய இரவு அதோகதி
தான் என்கிற எண்ணம்
வேர் பிடித்து உடல் நடுக்கம் அடைவதை
என்னாலேயே உணர முடிந்தது.
பெண்களுக்கு
இது என்ன மாதிரியான கொடுமை?தன் உடல் தன்
சொந்தமில்லாமல்.தன்
உடல் உறுப்புகள் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல்?
ஆடி மாச திவசக்
காக்கைகளுக்குத் திகட்டத் திகட்ட வலுக்கட்டாயமாய்ப்
படைக்கப்படும்
உணவு போல இறைந்து கிடக்கிறதா
இந்த உடல்? இதை இப்படியே
கொளுத்தி
விட்டால் தான் என்ன?உடலைக்
கொளுத்தா விட்டால் கூட இந்த யோனியை
மட்டும்
தீ வைத்துச் சிதைத்துக் கொண்டால் தான் என்ன? இந்த
ஒரு காரணம்
கொண்டு
தானே தனக்கு இத்தனை பிரச்சனையும்?
தலை சுற்றியது அவளுக்கு.கொஞ்சம் கூட அனுசரணை
இல்லாத,தன் நலம்
விசாரிக்காத,தன்னைக் குறித்து எவ்வித
அக்கறையும் இல்லாத,பெண் என்பவள்
ஒரு
மனுஷி என்கிற ஒரு சிறிய
எண்ணம் கூட இல்லாத ஒவ்வொரு
ஆணின் கூடவும்
தாம்பத்யம்
கொள்ளும் மனைவி என்னும் ஒரு பெண் ஜடமாகவே தன்னைப்
பாவிப்பாள்.அதைக் கூட உணரும்
மனநிலையில் இல்லாத ஒரு ஆண்
எவ்வகையான
மனிதனாக
இருக்க முடியும்?
ஒரு இனிய வார்த்தை கூடப்
பேசாமல்..அட..இனிய வார்த்தை
கூட
வேண்டாம்..சாதாரண உரையாடல் கூட
இல்லாமல் பகல் பொழுதுகளும்,பாதி
வாழ்நாட்களும்
கழிந்து விட்ட நிலையில் இரவில்
ஒரு பெண்ணைத் தொட்டு அவள்
அனுமதியின்றி
அவள் ஆடை தளர்த்தவும்,அங்கம்
தொடவும் உரிமையுள்ளதாய் இந்த
ஆண் சமுதாயத்தைக் கட்டமைத்தவர் யார்?
மிருகங்கள் பரவாயில்லை போல் இருக்கிறது.அது
உறவுக்கு முன் தன் துணைக்கு
அதில் விருப்பம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள
முற்படுகிறது.
இனப்பெருக்கத்திற்காக
அந்தக் காலத்தில் மட்டுமே அதை நெருங்குகிறது.
ஆனால்,
நிலத்தைக் குத்தகைக்கோ அல்லது சொந்தமாகவோ ஆக்கிக்
கொள்வது போன்ற
ஒரு செருக்கில் கல்யாணம் என்கிற பெயரில் ஒரு
பெண்ணைப் புணர்வதற்காகவே
என்பதாய்ப்
பாவிப்பவர்களைக் கொண்டு என்ன செய்ய?
வருஷம்
365 நாளும் அப்படியே இருக்க முடியுமா?
தீட்டு
நாள்ல ஆண் பெண் கூடினா
ஆணின் கண்ணு குருடாயிரும்னு ஒரு
கதையைப்
பாட்டி
சொல்லியிருக்கா..இப்ப அதைப் பத்தித்
தெளிவா யோசிச்சா
ஒண்ணு பிடிபடுது.இப்படிப் புருஷன் கிட்டச் சிக்கி
அல்லாடுன யாரோ ஒரு
பாட்டிக்குப்
பாட்டி தான் இந்தக் கதையைக்
கண்டுபிடிச்சிருக்கணும்.அந்த
மூணுநாளாவது
அவ நிம்மதியா இருந்திருப்பா.. மனசுக்குள் அவளைத் தொழுதேன்.
நேத்திக்கு
நடந்தது இது தான்..
கதவு திறக்குற சத்தம் கேட்டுது.வந்துட்டான்
போல..
நான் கண்களை இறுக்க மூடித்
தூங்குவது போல் பாவனை செய்கிறேன்.அவன் வந்து
உடை மாற்றுகிறான்.விளக்கை அணைத்து விட்டு
என் பக்கத்தில் வந்து
படுக்கிறான்.என்னை கடும் பிடிக்குள்
இழுக்கிறான்.நான் அரைத் தூக்கத்தில்
தட்டி விடுவது போலத் தட்டி
விடுகிறேன்.
”ஏன் இப்படித் தூக்கத்துல வந்து தொல்லை பண்றே?”
”உனக்கு
என்ன புருஷன் வர்றதுக்குள்ள தூக்கம்?”
“ம்ம்..மணி பன்னெண்டாச்சு.. தூங்க
வேண்டாமா?”
”சரி..கொஞ்ச நேரம் கழிச்சுத்
தூங்கு..இப்பெல்லாம் நீ ரொம்ப அழிச்சாட்டியம்
பண்றடி”
“எனக்கு
இஷ்டமில்லன்னா என்னை விட்டுறேன்”
”அடிப்
பரதேசி முண்ட..அப்போ நான்
எங்கடி போறது?”
இந்தக்
கேள்வி நான் எதிர்பாராதது. இந்தக்
கேள்வியில் ஒரு நிமிஷம் நான்
ஆடித்தான்
போய் விட்டேன்.’குப்’பென்று வியர்த்தது
எனக்கு.
ஆமாம் இல்லே?
மனைவி படுக்கைக்குத் தான் என்று போதித்து
வைத்திருந்த இந்தச் சமூகம் அவள்
சம்மதிக்கலைன்னா
என்ன பண்றது என்கிற எதிர்க்கேள்விக்குத்
தயாராகவே
இல்லை.அவளுக்கு விருப்பம் இருக்குதா இல்லையா என்கிற கேள்விக்கு
வாய்ப்பே
இல்லை.இங்கு பரஸ்பரச் சம்மதம்
என்கிற வார்த்தை ஒரு சடங்குக்காகக் கூட
இல்லை.
அவளுக்குப்
பிடிக்கலைன்னா அவளைத் தொந்தரவு செய்யாதே
என்று யாரும்
யாருக்கும்
இங்கு போதித்திருக்கவில்லை.
தலை முதல் அடி வரை
பெண்ணின் அனைத்தும் அவளைக் கட்டிக் கொண்ட
ஆணுக்கே
சொந்தம்.அவளுக்கு அவள் உடலே அந்நியம்..என்ன அக்கிரமம் இது?
ஒரு சட்டியைக் கழுவிக் கவிழ்த்துவது போல
இந்த உடலைத் திறந்து .இந்தக்
காமத்தைக்
கழுவிக் கவிழ்த்து விட்டால் எவ்வளவு இதமாக
இருக்கும்?இருக்குமா? ஒருவேளை காமம் தழுவாத
வாழ்வும் கசப்பாய் இருக்குமோ?
இந்த உடல் காமம் காமம்
என்று அரற்றினால் மட்டுமே அதற்குக் காமத்தைக்
கொடுத்தால்
போதாதா?தாயின் திறந்த மார்புகளுக்குள்
தன் சிறு இதழ்கள்
புதைத்து
அளவு தெரியாமல் தாய்ப்பால் அருந்தி விட்ட குழந்தை
பாலைக்
’கதக்குவது’
போல் தேவையே இல்லாமல் தனக்கு
ஒரு பெண் இருக்கிறாள் அல்லது
ஒரு ஆண் இருக்கிறான் என்பதற்காகவே
காமத்தை முப்போதும் அனுமதித்துக்
கொண்டே
இருக்க முடியுமா?
கேள்விகளுக்குள் அவள் தத்தளித்த சமயம்
அவன் அடுத்த தாக்குதலைத் தொடுத்தான்.
”ஏண்டி..தேவுடியா..எப்போப் பாத்தாலும் கூடப்
படுக்கறதுக்குப்
பஞ்சாயத்தாவே
இருக்கே…நீ வேற எவனையாவது
வெச்சிருக்கியா?”
வெளி வந்து விட்டது ஆதிக்காலத்தில்
இருந்து பெண்கள் மேல் ஏவப்பட்ட
ஆதி
விஷம்.இந்தச் சொல் தான்
அவர்கள் பலம் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.அது காலகாலமாய்த் தொடரும்
உண்மையும் கூட!
இவ்வளவு
நேரம் யோசித்துக் கொண்டிருந்தது எல்லாம் தளும்பித் தளும்பிக்
கண்ணில்
வந்து நின்றது.
“என்னடி?ஒண்ணும் பேச மாட்டேங்குற?”
வெகு எகத்தாளமாய்க் கேட்கும் அவனது
கேள்வி
எங்கோ ஒலிப்பது போல் மெதுவாய் அவள்
காதுகளுக்குள் ஒலித்தது.
ஒன்றுமே பேசாமல் அனிச்சையாய் அவள் தன் சேலையை
மேலேற்றிக் கட்டை போல்
படுத்துக்
கிடந்தாள்.அது அவனை அவமானப்படுத்துவதாய்
அவனுக்குத்
தோன்றியிருக்கும்
போல தடாலென எழுத்து பலமாய்
அவளை ஒரு அறை அறைந்து
விட்டு
அறையை விட்டு வெளியேறினான்.
No comments:
Post a Comment