எறியம்
“என்னடா,
இன்னுமா காடு முடியேல்ல..”
“இந்தக்
மொபைல் சிக்னலும் இன்னும் வரேல்லடா..”
“அஞ்சு
மணித்தியாலம் ஆகுது.. ரோட்டு முடியுதில்ல.
எப்பிடி இது சாத்தியப்படும்... விளங்கவே
இல்லையே..” இதற்கு தேனீ என்ன
சொல்லுவான் என்பது தெரிந்தே கேட்டேன்.
“சொன்னா
கடுப்பாவாய்..இது எதோ சுப்பனாச்சுரல்
போலத்தான் கிடக்கு... “ தேனீ முனகினான்.
“ஏற்கெனவே
விசரில இருக்கிறன்..கோபப்படுத்தாம யாராவது ஆக்கள் வருகினமா
பார்... இனி ஓடிப் பிரியோசனமில்ல...”
என்றபடி பைக்கை நிறுத்தினேன்.
இறங்கி
இருவரும் வீதியில் உட்கார்ந்தோம்.
கண்டியில்
ஒரு சின்ன வேலையாக போகவேண்டி
நண்பன் தேனீயையும் இழுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் காலை புறப்பட்டது, கிளிநொச்சியில்
போலீசிடம் வசைபட்டது, வவுனியாவில் சாப்பிட்டது என்று அனுராதபுரம் கடந்து
யானைகள் உலவும் நெடிய காட்டுக்குள்
வீதி ஊடறுத்துப் போகிற வரைக்கும் எல்லாமே
சாதாரணமாகத்தான் நடந்தது. அதற்குப் பிறகுதான் எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
ஏறத்தாழ ஐந்து மணிநேரமாக ஓடுகிறோம்,
ஓடுகிறோம்... எதுவுமே மாறவில்லை.. காடு
மட்டும் கடக்கிறது.. நேரம் போயும் இருள்
வரவில்லை, சன நடமாட்டம் வரவில்லை,
பாதை மாறினோமா என்று பார்த்தால், கிளைகளே
இல்லாமல் நேர்கோடாக இருக்கிறது வீதி.
“அடேய்..
யோசிச்சுப்பார்.. இப்பிடி நடக்கிறது சாதாரணமா
சாத்தியமில்ல... கட்டாயம் எதோ ஒரு சக்தி
செய்யிற வேலைதான். பேயோ, கடவுளோ, யாரோ
வைச்ச சூனியமோ..எதுவாயும் இருக்கலாம்.” தேனீ வழக்கம்போல கடவுள்
பரப்புரையை தொடங்கினான். ஆனால் இந்தமுறை என்னால்
மறுக்கமுடியவில்லை. சூழ்நிலை அப்படி. அதற்காக ஏற்கவும்
முடியவில்லை. கொள்கை அப்படி.
“ம்ம்...
எனக்கும் அப்பிடி நம்பிறதத் தவிர
வேற வழி இல்லத்தான்.. இவ்வளவு
நேரத்தில ஒரு ஆள்.. ஏன்
மிருகம், பறவையைக் கூடக் காணேல்ல, பெற்றோல்
குறைஞ்சு பைக் நிக்கேல்ல. இப்பிடி
இவ்வளவு தொலைவுக்கு நேர்கோடான
வீதி இலங்கையிலேயே இல்ல.. ஒண்டும் விளங்கேல்ல
தான். கொஞ்சநேரம் இருந்து பார்ப்பம், ஏதாவது
வாகனம் வருகுதோ பார்ப்பம். இல்லாட்டி
திரும்பி வந்த பாதையிலையே போவம்..
வேற என்ன பண்ணுறது...” என்று
சொன்னேன் என்றாலும் திரும்பிப் போவது புத்திசாலித்தனம்தானா என்று தெரியவில்லை.
வந்த பாதையும் அதன்
திசையில் நீண்டுகொண்டு போனால்?
தேனீ குழம்பவே இல்லை. இது நிச்சயமாக
கடவுள், பேய் அம்பந்தப்பட்டதுதான் என்று
நம்பினான். சொல்லியும் அலுப்பூட்டினான். நான் வேண்டாவெறுப்பாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
வீதியின் இருபக்கமும் நேராக முடிவிலி வரை
போய் மறைந்தது.. இருபக்கமும் காடு.. வெறும் காடு.
இறங்க முடியாத இருண்ட அடர்
காடு. பயண அலுப்பில் வீதியிலேயே
படுத்துவிட்டேன்.
“அடேய்...!
இங்க பாரடா... ஒரு கிழவன் வருகுது!”
என்னை உலுப்பியபடி தேனீ கத்திய கத்தலில்
நம்பிக்கை இல்லாமல் எழுந்து பார்த்தேன். தூரத்தில்
வீதியின் தொலை முடிவில் ஒரு
வயோதிபர் நடந்து வந்துகொண்டிருந்தார். சற்றும் காத்திருக்காமல்
உடனடியாக பைக்கில் ஏறி அவரை நோக்கி
சீறினோம்.
“வாருங்கள்..
உங்களை நோக்கித்தான் நானே வருகிறேன்..”
“ஐயா...
இங்க...ரோட்டு... நீங்க.. நக்காம.. சீ,
நிக்காம..” தேனீ அமளிப்பட்டான்.
“அமைதி
அமைதி.. எனக்கு எல்லாம் தெரியும்.
உங்கள் பயணமும் வீதியும் முடியாமல்
நீண்டுகொண்டே இருக்கிறது.சரிதானே?”
“சரிதான்,
என்ன, உங்களுக்கும் அதே பிரச்சனையா?” நான்
ஆயாசப்பட்டேன்.
“இல்லை,
உங்கள் பிரச்னையை விளங்கப்படுத்தவே நான் வந்தேன். ஆனால்..”
“சொல்லுங்கோ..”
“சொன்னால்
உங்களுக்குப் புரியும், ஆனால் நம்பத்தான் மாட்டீர்கள்.
ஆனால் இதுவரை நடந்த எதுவுமே
- நீங்கள் தொடர்ச்சியாக நெடுநேரம் நேர் வீதியில் பயனித்துக்கொண்டிருப்பது
- தர்க்க சாத்தியமில்லாதது என்பதால் இனி நான் சொல்லுவதுவும்
சாத்தியமில்லாததாக தெரிந்தாலும் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.”
“ஆம், வேறு வழி? நீங்க
தொடக்கத்திலிருந்து கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்லித்
தொலையுங்களேன் பார்ப்பம்..”
“தொடக்கம்..
ம்ம்ம்.. உங்களது இந்த உலகமே
- பிரபஞ்சமே - உங்கள் வார்த்தைகளில் சொல்லப்போனால்
- ஒரு மாயை. ஹோலோகிராம் தெரியும்
தானே.. அப்படி முப்பரிமாணத்தில் வரையப்பட்டு
இயங்க வைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கணினி புரோகிராமை
எழுதி இயங்க வைப்பதுபோல, நாங்கள்
இந்த உலகத்தை எழுதி இயங்க
வைத்துக்கொண்டிருக்கிறோம்.”
“கொஞ்சமும்
நம்புறமாதிரி இல்லையே...”
“விளக்கமாக
சொல்லிப் புரியவைக்க இது நாவல் இல்லை
தம்பி. உங்களுக்கு வேறு தர்க்க நியாயம்
இல்லாதவரை நான் சொல்லுவதை நம்பத்தான்
வேண்டும்.”
“அதுவும்
சரிதான்..” எனக்கு சொளிப்சிசம் என்கிற
சித்தாந்தத்தில் சிறிது ஈடுபாடு இருந்துவந்தது
உண்மைதான். பிரபஞ்சமே ஒரு கனவாகவோ, முப்பரிமாண
ஹோலோகிராமாகவோ இருக்கலாம் என்கிற சித்தாந்தம் கடவுள்
என்கிற சித்தாந்தத்துக்கு இணையாக நம்பகமானது.
“அப்ப,உண்மையானது வேற ஒரு உலகம்,
அங்க வாழுற நீங்கதான் ஒரிஜினல்..
உங்கட டிசைன் தான் நாங்க.
அப்பிடித்தானே?”
“உண்மையில்
நாங்கள் வாழுகிற - உண்மையான - உலகம் உங்களுக்கு புரியவைக்க
முடியாதது. அதனுடைய எளிமைப்படுத்தப்பட்ட மாதிரிதான்
நீங்கள். அங்கே மொத்தம் நான்கு
பரிமாணங்கள் உண்டு. அதன் நிழலின்
மாதிரியாக உங்களை வடிவமைத்துள்ளோம். எங்கள்
பிரபஞ்சத்தின் முப்பரிமாண எறியம். இந்த புரோகிராம்
கூட உண்மையில் சிக்கலான விஷயம்.. புரிவதற்காக சுருக்கமாக புரோகிராம் என்றேன்.”
“சரி, அப்படியே பார்த்தாலும் இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான
ஆண்டுகளாக இருக்கிறதே... நீங்கள் எத்தனை வருடங்களாக
புரோகிராம் எழுதுகிறீர்கள்?”
“நீங்கள்
தூரத்தை சுருக்கி வரைபடம் வரைவதில்லையா? அதுபோல
நாங்கள் நேரத்தை சுருக்கி உங்களை
இயங்கவைக்கிறோம். உங்களது பல வருடங்கள்
எங்களது சில நிமிடங்கள்.”
“சரி, இதெல்லாம் எதற்காக செய்கிறீர்கள்? அங்கே
ஏதும் உபயோகமில்லாத யுனிவர்சிடி புரஜெக்டா?”
“இல்லை.
நீங்கள் ஒரு மாதிரி.. மாடல்.
அங்கே செய்ய முயற்சிக்கும் சிக்கலான
நடவடிக்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
பார்ப்பதற்காக முதலில் உங்களில் நடவடிக்கைகளை
செய்து பரீட்சித்துப் பார்ப்போம்..”
“புரியலையே...”
“உதாரணமாக
ஒரு நாட்டின்மீது போர்தொடுக்க முன்னர், அதன் விளைவுகளை பார்க்க,
இங்கே போரை சிமுலேட் பண்ணுவோம்.
வியாதிகளின் விளைவுகள், மத,அரசியல் கொள்கைகள்... எல்லாவற்றையும் சோதிக்கும் ஒரு பரிசோதனைக் கூடம்தான்
நீங்கள்.. இப்படி ஏராளமான பூமிகள்
அங்கே பலர் வைத்துள்ளார்கள். எங்களது
மாடல் நீங்கள். கொஞ்சமாக பிரச்னையை தொடக்கி எழுதி விட்டால்,
மீதி தானாகவே நடந்து எங்களுக்கு
முடிவு தெரியும். அதைப்பொறுத்து நமது உலகத்தில் ஒன்றை
தொடங்குவோம், அல்லது நிறுத்துவோம்.”
“அப்போ
நாங்க எல்லாமே உண்மை இல்லையா?
எல்லாமே பொய்யா? அட சவத்த...!”
- தேனீ.
“நம் பிரச்னைக்கு வருவோம்...எங்களுக்கு என்ன முடிவு?” எனக்கு
எந்த உலகம் என்றாலும் இந்தப்
பயணத்துக்கு முடிவு கிடைத்தால் சரி.
கேட்டேன் “ஏன் நாங்கள் இப்படி
மாட்டுப்பட்டிருக்கிறோம்?”
“ஏதோ பிரச்சனையால் நீங்கள் பயணிக்கிற புரோகிராம்
கோடிங்கின் லூப் மூடப்படாமல் தொடர்ந்து
நீங்கள் பயணித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இது கொஞ்சம் சிக்கலானது.
வழக்கமாக வராத பிரச்சனை. எப்படித்
தீர்ப்பது என்று தெரியவில்லை. முயற்சி
நடந்துகொண்டிருக்கிறது.”
“அப்போ
வழக்கமாக எப்படிப்பட்ட புரோகிராம் சிக்கல்கள் வரும்?”
“உங்களுக்குத்தான்
தெரியுமே, ஏதாவது சிக்கல் வந்தால்
அது உங்கள் உலகத்தின் தர்க்கத்துக்குப்
பொருந்தாததாக இருக்கும்.. உங்கள் உலகத்தின் தர்க்கத்துக்குப்
பொருந்தாமல் இருப்பதெல்லாம் எங்களது சிக்கல்கள்தான்.
உதாரணமாக ஒருமுறை ஒரு மனிதனை
புரோகிராம் பண்ணும்போது ஏகப்பட்ட புரோகிராம் சிக்கல் வந்துவிட்டது.. அவர்
தண்ணீரில் எல்லாம் நடக்கத் தொடங்கிவிட்டார்..”
நான் பரவசமானேன். “ஓ ஜீஸ்...”
“அவர்தான்.
இப்படி நெற்றியில் கண்ணுடன் ஒரு மனிதன், நாஸ்கா
கோடுகள், நோஸ்ராடாமஸ்.. எல்லாமே எங்கள் புரோகிராம்
எரர்கள் தான்.“
“பிரச்சனைகளே
டிலீட் பண்ணலாமே?”
“பெரும்பாலும்
அப்படிச் செய்துவிடுவோம். சிலவேளைகளில் நாங்கள் கண்டுபிடிப்பதற்குள் உலகத்துக்கே
தெரிந்துவிடும். நாங்களும் அப்படியே விட்டுவிடுவோம். நீங்களே சர்ச்சைப்பட்டு ஒன்றில்
மறந்துவிடுவீர்கள், அல்லது மதமாக்கி வணங்கத்
தொடங்கிவிடுவீர்கள்.”
“எங்களை
என்ன செய்வதாகத் திட்டம்?”
“உங்களைக்
கூட அழிப்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் லூப்பை
அழிப்பது கடினம். அப்படியே அழிக்கிற
வேளையில் லூப் சடுதியாக
நிறுத்தப்பட்டு மறுபடி நீங்கள் உலகத்துக்குள்
பிரவேசித்துவிட்டால் கஷ்டம். பாதி ஆளாக,
வெறும் தலை மட்டும் எல்லாம்
போய்விடக் கூடும். அதுதான் புதிய
முயற்சியாக நாங்களே நேரடியாக புரோகிராமுக்குள்
இறங்கி சொல்லி விளங்கப்படுத்தலாம் என்று புகுந்து
வந்துவிட்டேன். நீங்கள் எந்த நேரமும்
பிழையிலிருந்து விடுபட்டு உலகத்தில் நுழையலாம்.”
“அதுதான்
எப்ப?”
“யாருக்குத்
தெரியும்? உடனே சரியாகலாம், சில
மணித்தியாலங்கள் ஆகலாம்... எப்படியும் உத்தரவாதமாக சில நாட்களுக்குள் சரிபண்ணி
விடலாம். சரியானதும் உங்கள் பயணம் விட்ட
இடத்திலிருந்து, விட்ட நேரத்திலிருந்து தொடரும்.
லூப்பில் சிக்குப்பட்ட நேரம் உங்களுக்கு மட்டும்தான்
தெரியும். வெளியேறியதும் வழக்கமான நேரக் கணக்கில் சேர்ந்துவிடுவீர்கள்.
ஆனால் இங்கே நடந்தது எதையுமே
நீங்கள் உலகத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.. என்றாலும்
சொல்ல வேண்டாம். உங்களை அழிக்காது விட்டதற்கு
கைமாறாகவாவது.”
“அம்மாடி..
உண்மையோ பொய்யோ, என் உலகத்துக்கு
போனாப் போதும். சாமளை இருக்கிற
இடம்தான் எனக்கு உலகம்.“ தேனீயின்
ஆறுதல்.
“சரி, அது வரைக்கும் நாங்கள்
ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா? வேறு
வழியே இல்லையா.. ஆயாசமாக இருக்கிறது.”
“இல்லை.
உங்களுக்கு உதவியாக ஏதாவது பெண்ணோ,
பொருளோ கொண்டுவரலாம், ஆனால் லூப் இன்னும்
சிக்கலாகிவிடும். சுற்றி காடு கிடைத்ததே
உங்கள் அதிர்ஷ்டம். நான் கூட இங்கே
சிமுலேஷனாகத் தான் வந்திருக்கிறேன். நீண்ட
நேரம் நான் இங்கே இருக்கமுடியாது.லூப் நின்றுவிட்டால் நானும்
உங்கள் உலகத்தில் சிக்கிவிடுவேன். நான் புறப்படுகிறேன். சீக்கிரம்
வீடு போக வாழ்த்துக்கள். ஆனால்
கவலைப்படாதீர்கள். பசி, வியாதி, எதுவுமே
வராது இந்த இடைக்காலத்தில்.. உங்களுக்கும்
சரி, வாகனத்துக்கும் சரி. சாவுகூட.”
திரும்பிப்
புறப்பட்டார்.
“நாராயண,
நாராயண, என்று சொல்ல்லிக்கொண்டே மறையப்போகிறார்
பார்..!” என்றான் தேனீ.
“ஒரு நிமிஷம்..” கூப்பிட்டேன்
திரும்பினார்.
“என்ன?”
“உலகத்தில்
சொன்னால் நம்ப மாட்டார்கள்.. ஆனால்
போனதும் - போனால் - ஒரு சிறுகதையாக இதை
எழுதி போட்டி க்கு அனுப்பவா?
பரிசாவது கிடைக்கிறதா பார்ப்போம்.”
சிரித்துக்கொண்டே
“சரி” என்றார்.
“பார்த்தாயா?
கடவுள் இல்லை என்றாயே.. உந்தாள்தான்
கடவுள்.. அல்லது ஒரு தேவன்...அவங்கட உலகம்தான் தேவலோகம்.
கொஞ்சம் எங்களுக்கு விளங்குறதுக்காக சிம்பிளா சொல்லி இருக்கிறார்.”
தலையிலடித்துக்கொண்டு
உட்கார்ந்தேன். “அடேய், பண்ணி, இப்ப
அது இல்லையடா பிரச்சனை..அவங்கள் இந்தப் பிரச்சனைய
திருத்தும்வரைக்கும் இப்பிடி லூசுகள் மாதிரி
நாங்கள் இந்த ரோட்டுல ஓடிக்கொண்டிருக்க
வேணுமடா.. எத்தினை மணித்தியாலம் ஆகுமோ
தெரியாது...சில நாளும் ஆகலாம்.”
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே எதோ ஒன்று உறைத்தது..
“ஐயா?”
கத்தினேன். “சில நாள் என்றது
என்ன கணக்கு?”
அமைதியாகத்
திரும்பினார். “ஆம் தம்பி.. சில
நாள் என்பது எங்களது கணக்கு.
உங்களுக்கு இப்பிடியே பயணிப்பது எத்தனை மணிநேரமோ, எத்தனை
நாட்களோ.. ஏன், வருடக்கணக்காக, நூறாண்டுகளாகக்
கூட மாற்றமே இல்லாமல் நீங்கள்
இப்படியே பயணித்துக்கொண்டிருக்க வேண்டி வரலாம்... நாங்கள்
பிழையை திருத்தும்வரை.”
வருகினமா
: வருகிறார்களா
பிரயோசனமில்ல
: பயனில்லை
காணேல்ல
: காணவில்லை
நிக்கேல்ல
: நிற்கவில்லை
இல்லாட்டி
: இல்லாவிட்டால்
வருகுது
: வருகிறார்
அட சவத்த : அடக் கொடுமையே!
க்கு இணையான விளிப்பு.
உந்தாள்
: அந்த ஆள்
லூப் :
கணினி புரோகிராமில் சுழற்சியாக மறுபடி மறுபடி நடக்கும்
நிகழ்ச்சி.
No comments:
Post a Comment