Sunday 27 July 2014

Story 96: கடைசிக் கதை



கடைசிக் கதை
தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே, பத்திரிகை ஆசிரியர் அபசகுனம் என்று அழப்போகிறார்.” சிரா முறுவலித்தான்.
ம்ம், டைப் பண்ணு.” முன்னவனிடம் முறுவலிப்பு எடுபடவில்லை.
வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது பேச்சுத் தொனி. இப்படி வழமைக்கு மாறாகவே அடிக்கடி மாறுவதே வழமையான எழுத்தாளக் குணங்களை சமாளிக்க முடிவதால்தான் நான்கு வருடங்களாக அவருக்கு உதவியாளனாக இருக்கிறான் என்றாலும் இது சிராவுக்கே புதிதாகத்தான் இருந்தது, ஆனால் அதற்குக் காரணமும் இருந்தது.
எழுத்தாளர் முன்னவன் ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதுபவர். கடந்த இருபது வருடங்களாக உருவாகும் அத்தனை புதிய எழுத்தாளர்களையும் - இளம் எழுத்தாளர்கள் என்பார்களே - ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பவராக, தமிழிலக்கிய உலகின் சமகால உச்சமாக இருக்கிறார். மனைவி பெயர் கமலா நடராசா. வெளிநாட்டில் இரண்டு மகன்கள். முன்னவன் செய்ததென்னவோ காதல் மணம்தான், ஆனால் அந்தக் காதலின் கதை முழுவதுமாக யாருக்கும் தெரியாது. அவர் எழுதும் கதைகளை வைத்து, அவர் வாழ்ந்த வீடு இருந்த தெருவில் வசித்த, அந்தக் காலத்திலேயே இலக்கியப் பரிச்சயம் இருந்த ஒரு தோழிதான் கமலாம்மாள், அந்நாளில் இலக்கிய உரையாடலாக ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் காதலாகியது, கனிந்தததனால் கல்யாணமாகியது, கமலாம்மாளும் உள்ளுக்குள் ஒரு எழுத்தாளர்தான் என்றாலும், முன்னவன்தான் எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை... இப்படியாக உலகம் தன்விருப்பத்துக்கு வகை வகையாக  ஊகித்து வைத்திருக்கிறது. முன்னவன், “நடராசாஎன்கிற தனது சொந்த உருவத்தின் வாழ்க்கையை பெரும்பாலும் பேட்டிகளில் வெளிப்படுத்துவதில்லை என்பதால், ஊகங்களும் புரளிகளுமே நடராசாவை வடிவமைத்து வைத்திருந்தன.

முன்னர்போல அவர் சிந்திக்கும் வேகத்துக்கு அதை தாளில் கொண்டுவர முடியாததால் நான்கு வருடங்களுக்கு முன்னர் வந்து சேர்ந்தவன்தான் உதவியாளன் சிரா. முன்னவன் சொல்லுவதை தட்டச்சு செய்து பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்குத்தான் சம்பளம் என்றாலும், சந்தைக்குப் போவதுமுதல் முன்னவனின் சொல்லமுடியாத ஆடைகளை துவைத்துப் போடுவதுவரை எதுவும் செய்வான். கமலா அம்மாளும் அவனை பெற்ற பிள்ளையைப்போல் பார்த்துக்கொள்வார். மூப்பு வியாதிகள் காரணமாக கமலாம்மாளுக்கும், ஆண் காந்தாரியாக காதலைக் கொட்டுவதால் முன்னவனுக்கும், மூன்றுவேளை கஞ்சிதான் சாப்பாடு. பொங்கல், தீபாவளிகளில் மட்டும் கஞ்சியுடன் கொஞ்சம் ஊறுகாய் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும் கமலாம்மாள், சமையல்காரி கனகத்திடம் சொல்லி சிராவுக்கு வகைவகையாக சமைத்துப் போடுவார். ‘கமலா ஒரு பொருத்தமில்லாத கணவன் கிடைக்கப்பெற்ற அற்புதமான மனைவிஎன்று சிராவிடம் பிதற்றுவதுண்டு மகன்கள் அனுப்பும் ஷிவாஸ் ரீகல்கள் உள்ளே போன இரவுகளில் முன்னவன்.
அந்தக் கமலாம்மாள் இறந்து மூன்று வாரமாகிறது. முன்னவனின் முகத்தின் இறுக்கத்துக்குக் காரணம் அதுதான்.
ம்ம்... தொடங்குஎன்றுவிட்டு முன்னவன் கதை சொல்லத் தொடங்கினார். சிரா கணணி விசைப்பலகையில் மாக்குழைக்கத் தொடங்கினான்.
---
கடைசிக் கதை
மித்தா குளக்கட்டில் வெகுநேரமாக ரதிக்காகக் காத்திருந்தான். ரதி - மித்தாவின் தோழி. கனத்த வாசிப்புக்காரி. குடும்ப வறுமை காரணமாக கல்லூரி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டவள். பாடங்களை படிக்கும் வாய்ப்பை இழந்தவளுக்கு கிடைத்தது உலகத்தைப் படிக்க உதவும் மித்தாவின் நட்பு. பக்கத்துத் தெருக்காரன். உள்ளூர் தகரக்கொட்டாய் நூலகத்தில் அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பும், நூலகப் புத்தகத்தின் இரவல் வாங்கியவரின் அங்கத்துவ இலக்கங்களிலிருந்து இலக்கிய ரசனை ஒன்றாயிருந்ததை கண்டுபிடித்ததும் நெருக்கமாக்கியது. ஆனாலும் இலக்கியம் தவிர பெரிதாக எதுவும் பேசிக்கொள்வதில்லை. தகரக்கொட்டாய் அறிவை  மேலும் விரிவாக்குவதற்கு ரதிக்கு உதவ முன்வந்தான் மித்தா. தன் கல்லூரி நூலகத்திலிருந்து அவள் கேட்கும் நூல்களை இரவல் எடுத்துவந்து கொடுப்பான். இருவரும் படித்ததும் அந்த நூல்பற்றிய உரையாடல், சிலவேளைகளில் தாங்களே எழுதிய கதை கவிதைகளைப் பரிமாறிக்கொள்வது என்று அவ்வையார் கபிலர் ரீதியிலேயே அவர்களது சந்திப்பு நடந்துவந்தது. அது புரியாத ஊரின் வாயில் காதலர்களாக அவர்கள் அரைபட்டாலும், அந்த அரைபாடுகளும், அவற்றாலான அடிபாடுகளும் கதைக்குத் தேவையற்றவை, கதையே தேவையற்றது என்று எண்ணாதவரையில்.
*
நாச்சியம்மன் கோயிலுக்குப் பின்வீதியை ஒட்டி நூலகம். பின்வீதியில் எந்நேரமும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். வீதிக்கும், பின்னாலுள்ள குளத்துக்கும் இடையிலிருக்கும் சிறிய கட்டிலே அமர்ந்துதான் வழக்கமாக அவர்கள் தமிழ் வளர்ப்பார்கள். அன்றைக்கு மித்தாவின் முகத்தில் அத்தனை உற்சாகமில்லை. கையில் ஒரு ஆனந்த விகடன். கூடவே ஒரு கடிதம்.
ரதி வந்தாள். கையில் விகடனை பார்த்ததும் துள்ளி அதை பிடுங்கி வாசிக்கத் தொடங்கினாள். மித்தா கையிலிருந்த கடிதத்தை ரதியிடம் கொடுத்தான்.
ரதி, ஆனந்த விகடன் சிறுகதைத் திருவிழா போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்திருக்கிறது.” தயக்கம்தான் இருந்ததே தவிர உற்சாகமில்லை.
அட! என்னிடம் சொல்லவே இல்லையே? வாழ்த்துக்கள்.. எப்போது போட்டிக்கு எழுதி அனுப்பினீர்கள்? என்னிடம் காட்டக்கூட இல்லைஎன்று முகம் கறுத்தவள், ஆசுவாசமாகி, “இந்த விகடனில் கதை இருக்கிறதா?” என்று கேட்டபடி ஆர்வமாக புரட்டத் தொடங்கினாள்.
ரதி..” மித்தா கையமர்த்தினான். “கடிதத்தில் என்ன இருக்கிறது தெரியுமா? இத்தனை வித்தியாசமான கருவில் இத்தனை அற்புதமான நடையில் இதுவரை தான் சிறுகதை வாசித்ததே இல்லையாம் என்று ஆசிரியர் கடிதம் அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து கதைகள் அனுப்பவும், முடிந்தால் தொடர்பில் பேணும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பரிசுப்பணம் அனுப்பி வைக்கப்படுமாம்.”
பிறகென்ன, இன்றிலிருந்து நீங்களும் எழுத்தாளர்தான். ஆசைப்பட்டது நடந்துவிட்டது, வாழ்த்துக்கள்! பெரிய எழுத்தாளர் ஆனதால் இந்த சிறு வாசகியை மறந்துவிடாதீர்கள்..”
ரதி... என்னை மன்னித்துவிடு. உன்னைப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. என் வெற்றியில் இத்தனை சந்தோஷப்படும் உனக்குப் போய் இப்படி ஒரு துரோகத்தை பண்ணிவிட்டத்தை நினைக்கும்போது கேவலமாக இருக்கிறது..” மித்தா அழும் கட்டத்துக்குப் போனான்.
ரதிக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன.. என்ன துரோகம்..?”
மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் நீ எழுதியதாக என்னிடம் ஒரு கதை தந்தாய், நினைவிருக்கிறதா? தமிழ் அழிந்தபின்னும் தமிழிலக்கியங்கள் நிலைத்திருப்பதுபற்றி? படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லச் சொன்னாயே, அது அற்புதமாக இருப்பதாக நானும் கூறினேனே?”
ரதிவுக்கு புரியத் தொடங்கியது. “அதை உங்கள் பெயரில் அனுப்பிவிட்டீர்களா?”
முழுவதுமாக இல்லை. அற்புதமான கரு தானே அது.. அதை அப்படியே என் கதையாக மாற்றி எழுதி அனுப்பினேன். என்னதான் நான் எழுதினாலும் கதையின் கரு உன்னுடையதுதானே, அதனால் உன்னிடம் காட்டாமல் அனுப்பிவிட்டேன். ஏனோ அந்த நேரத்தில் இவ்வளவு கேவலமான வேலையை செய்துவிட்டேன். பிறகு அதை நினைத்துப்பார்க்கும் போதெல்லாம் எனக்கே வெறுப்பாக இருந்தது.. இப்போது பரிசு வேறு கொடுத்துவிட்டார்கள்.. உண்மையாக இந்தப் பரிசு, அங்கீகாரம் எல்லாம் உனக்குத்தான் சேரவேண்டியது.. நான் திருடிவிட்டேன்.”
அவன் சொல்லிக்கொண்டு போகும்போதே கோபம், வெறுப்பு எல்லாம் வந்து, வந்த வேகத்திலேயே வடிந்து, அவன்மேலான அன்பு இரக்கமாக மாற, ரதி நிதானமானாள்.
மித்தா, பிரச்சனையில்லை.. விடுங்கள்.”
என்றாலும் மித்தாவுக்கு குற்ற உணர்ச்சி போகவில்லை.
---
சிரா, இன்றைக்கு இது போதும், நீ புறப்படு.”
சிரா எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு புறப்பட்டான். கமலாம்மாள் இறந்தபிறகு இவர் எழுதும் முதலாவது கதை. எத்தனை அற்புதமான ஜோடி.. அம்மாள் இறந்த மூன்று நாட்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் இருந்தார். சாவு வீட்டின் வெளிநாட்டு, எழுத்துலக வருகைகள், சடங்குப் பரபரப்பெல்லாம் வடிந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட சாவு நடந்த மூன்றாம் வாரத்தில்தான் மீண்டும் கூப்பிட்டார் சிராவை. இந்த மூன்று வாரங்களும் வீட்டில் தனியாகத்தான் இருந்தார். துணைக்கு ஒருவரும் வேண்டாமென்றுவிட்டார். மகன்கள் தாமாகவே தத்தமது முதலாளிகளுக்கு சொத்துசேர்க்கப் புறப்பட்டுவிட்டார்கள். பண்ணிவைக்கும் சாப்பாடு சிலவேளை காலியாகும், சிலவேளை காய்ந்திருக்கும் என்று கனகம் சொல்லியிருக்கிறாள். இத்தனை வருட இணைந்த வாழ்க்கையின் பின்னான பிரிவு இந்தளவுக்குப் பாதிப்பதில் வியப்பில்லை என்பதால் சிராவும் அதை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காலம் காயம் ஆற்றும் என்று நம்பியிருந்தான்.
மறுநாள் காலையிலேயே வரச்சொல்லியிருந்தார் முன்னவன். வந்ததும் கதை தொடர்ந்தது.
---
விகடனில் எழுதிய கதை தந்த அங்கீகாரத்தில் மித்தா எழுத்துலகில் வளர்ந்தான். என்னதான் அடிப்படையில் திறமையானவனாக இருந்தாலும், பரந்த வாசிப்பாலும் பயிற்சியாலும் திறமையை வளர்ர்த்தவன் என்றாலும், அந்த அங்கீகாரத்துக்கான திறவுகோலாக இருந்தது ஒரு அறிவுத் திருட்டு என்கிற குற்ற உணர்வு அவனை விட்ட பாடில்லை. அது ஒருபுறமிருக்க, ரதியுடனான நட்பும், தன் துரோகத்தை மன்னித்த பெருந்தன்மையும், (அவனது குற்ற உணர்வும் சேர்ந்திருக்கலாம்.) ஊரின் பேச்சும் அவர்களை காதலர்களாக்கி, முன்னரே சொன்னபடி கதைக்குத் தேவையில்லாத சாதி, அந்தஸ்து பிரச்சனைகளைத் தீர்த்துக் கல்யாணமாகியது. மித்தா எத்துணை சொல்லியும் பின்னர் ரதி எழுத முயலவில்லை. ஆர்வம் விட்டிருக்கலாம், குடும்பம், பிள்ளைகள் கவனத்தை திசைமாற்றி இருக்கலாம், எழுத்து அவளது அந்தரங்க திருப்திக்காகவே அன்றி, பிரபலமாக அல்ல என்று அவள் நினைத்திருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருந்திருக்கலாம், அல்லது முன்சொன்ன எல்லாமே காரணமாக இருக்கலாம். உலகத்தின் அத்தனை ஆண்களைப் போலவே, பெண்கள் மனதிலுள்ளதைக் கண்டுபிடுக்கும் திறமை, இந்தக் கதையை எழுதும் எழுத்தாளருக்கும் வாய்க்கவில்லை.
காலம் காலண்டர்களை கசக்கி எறிந்தது. தமிழிலக்கியத்தில் மித்தா உயர்ந்த இடத்துக்குப் போனான். அதனால், ‘போனான்இலிருந்து, ‘போனார்ஆனார். எனவே, மித்தா உயர்ந்த இடத்துக்குப் போனார். காதலிலும். இருவரும் ஒருவர் இல்லாமல் ஒருவர் இயங்க இயலாத நிலைமைக்குப் போகுமளவு ஐக்கியமாகினர். திருமணமும், காலமும், சரி, சரி... துரோகமும் அவர்கள் காதலைக் குறைக்கவில்லை. மூப்பு காமத்தின் தேவையைக் குறைக்க, அன்பு இன்னும் துலக்கமானது.
ஆனால் மூப்பு உடலைத் தேய்க்கவல்லது அல்லவா, ரதியைத் தேய்க்கத் தொடங்கியது. நிறைவான வாழ்க்கைதான், எமன் வரும் வயதுதான் என்றாலும், காதல் மித்தாவை கலங்கடித்தது. இருபதோ, எழுபதோ, காதலியின் பிரிவு கொடியதுதானே. தன் அலுவலகம் - இலக்கியம் என்கிற பந்தாட்டத்தைச் சமாளித்து குடும்பத்தை நடத்தி, தன் அக்கறையீனம் தெரியாது  பையன்களை வளர்த்தெடுக்க அவள் தன்னில் இருமடங்கு உழைத்திருப்பாள். அவள் விரைவில் உடல்தேய்ந்துபோனதற்கு தானும் ஒரு காரணம்தான் என்று மித்தா அறிந்திருந்தார். அவள்முன்னிலையில் வெட்கப்படுவதற்கு இன்னுமொரு காரணமாக அவருக்கு அது சேர்ந்தது. ஒவ்வொரு ஆணினதும் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுகிற இந்த உலகம், அந்தப் பெண்ணின் நிலையை விசாரிப்பதில்லை.
சாவை இனித் தவிர்க்கமுடியாது, இறுதி நாட்களில் வாயும் மனதும் கேட்பதை கொடுங்கள் என்று மருத்துவம் கைவிரித்த, மகன்களை புறப்பட்டு வரச்சொன்ன ஒரு பாரமான நாளின் இரவில் ரதியின் கட்டிலின் அருகே உட்கார்ந்த மித்தாவின் கண்களில் கண்ணீர் உருண்டது.
போகப் போகிறாயா? நீ இல்லாமல் எனக்குப் பல்லு விளக்கக்கூடத் தெரியாதே?”
சின்னப்..பிள்ளை மாதிரி... ..ழாதீர்கள்.. நீங்கள் ஒரு எழுத்தாளர்..” எங்கோ பாதாளத்திலிருந்து பேசினாள். ஒவ்வொரு வார்த்தையுடனும் உயிரில் கொஞ்சம் விரயமானது.
அந்த எழுத்தாளப் பட்டமே நீ போட்ட பிச்சை தானே.. நீ இல்லாமல் போனால் நான் அனாதையடி, போகாதே!”
பிச்சை.. என்...றெல்லாம் சொல்லா..தீர்கள்.. முதலில் நான் சாகப்போகிறேன் என்று யார்...” ...சொன்னது? என்று சொல்லுவதற்குள் ரதி மித்தாவை அனாதையாக்கினாள்.
---

சிராவுக்கு எதோ புரிந்தமாதிரி இருந்தது.. புரியாத மாதிரியும் இருந்தது. ஏதொ கேட்க வாயெடுத்தான்.
போதும், நாளைக்கு வா, பார்க்கலாம்.” என்றுவிட்டு உள்ளே போய்விட்டார் முன்னவன்.
***
மறுநாள் சிரா வாசலில் காலடி எடுத்துவைத்தபோதே வெறுமை முகத்திலடித்தது. முன்னவனை ஹாலில் காணவில்லை என்பதால் அவரது அறைக்குப் போனான். தூங்கிக்கொண்டிருந்தார். அருகில் மேசையில் கடைசி கதை பிரின்ட் பண்ணப்பட்டிருந்தது. எடுத்துப் புரட்டினான். கடைசிப் பக்கத்தில் ஏதொ புதிதாக இணைக்கப்பட்டிருந்தது. சிலவேளைகளில் சிரா இல்லாத நள்ளிரவுகளில் தோன்றுவதை கதைக்குள் தானே உள்ளிடுவது முன்னவனின் வழமைதான் என்பதால் எடுத்து கடைசிப் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினான்.
---
தன உலகம் செத்துப்போன பத்தாம் நாள் மித்தா எழுத உட்கார்ந்தார்.
அவள் போனவுடனேயே நானும் போயிருக்கலாம். போயிருக்க வேண்டும். அவள் இல்லாத உலகத்தை எப்படி வாழுவது என்று எனக்குத் தெரியவில்லை. காதலின் வார்த்தைகள் இல்லை இவை. யதார்த்தம். எழுத்தை மட்டுமே வாழ்ந்துவந்துகொண்டிருந்த என் பௌதிக உலகத்தை எனக்கும் சேர்த்து வாழ்ந்தவள் அவள்தான். அவள் இல்லாத உலகத்தை வாழும் வழிமுறையை நான் கற்றுத் தயாராகவிருக்கவில்லை, அது தேவையும் இல்லை. இந்த உலகத்துக்குச் சொல்லவேண்டிய கடைசிக் கதை ஒன்று இருக்கிறது எனக்கு. காலம்பூராகவும் என்னைக் குத்திக்கொண்டிருந்த அந்தக் கதையை, என் முதல் கதையின் கதையைச் சொல்லிவிட்டு நிம்மதியாகச் செத்துப்போகிறேன்.
தற்கொலை தவறுதான், ஆனால் தனிமை கொடுமை.”
நன்றி, தமிழுலகமே.
___
முன்னவன் தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பது சிராவுக்கு உறைத்தது.
***

No comments:

Post a Comment