Thursday, 31 July 2014

Story 126: கடவுள்?கடவுள்?
இடம் : கல்லார் பூங்கா,மேட்டுபாளையம்
நேரம் : மாலை 5.10

   ஏன்டி,இந்த மாதிரி ஒரு ஈவ்னிங் டைம் இப்படி உன் கை பிடிச்சு ஜோடியா நடக்கறதுக்காக எவ்வளவு களோபரம் உங்க வீட்டு ஆளுங்கநாள
  நீதான் மிஸ்ட்ரி(mystery) பைத்தியாமாச்சே இதெல்லாம் கடவுள் உனக்கு கொடுத்த ட்விஸ்ட்னு நினைச்சிக்க’.
  அட லூசு பொண்ணே,படத்துக்குதான்டி ட்விஸ்ட்டெல்லாம் சரி, நிஜ வாழ்க்கைக்கெல்லாம் சரிபட்டு வராது.நான் தெரியாமாவோ தெரிஞ்சோ பன்ற தப்புக்கு கோயில்க்கு  போய் பாவமன்னிப்பு கேக்குறேன் சரி,ஆனா இந்த கடவுள் என்னை வெச்சு பன்ற இந்த கொடுமைக்கெல்லாம் என்னைக்கு எங்கிட்ட வந்து பாவமன்னிப்பு வாங்க போராருனுதான் தெரியல?’
  அதுவும் சரிதான் நம்ம லவ்வுக்கு வந்த பிரச்சன மாதிரி கடவுளுக்கு  வந்துருந்ததுனா அவரே ரிலாக்ஸ்ஷேசன் தேடி இமயமலைக்கு மலை ஏரிருவாறு
  அதுவும் உண்மைதான்.ஆமா,நாம கெளம்பும்போது உங்க அம்மா என்னமோ சொன்னாங்களே என்னடி சொன்னாங்க?’
  அதா.. கல்யாணம் முடிஞ்சு முதல் தடவையா வெளிய போறீங்க,அப்படியே சிறுமுகை தென்திருப்பதி கோயில்க்கு போயிட்டு வாங்கனு சொல்லிவிட்டாங்க.போயிட்டு வந்தரலாமா?’
  ம்ம்ம்.. லூசு, டைம் பாருடி அஞ்சு ஆச்சு.இனி அந்த வெங்கடாச்சலபதியே கதர் வேஷ்டி கட்டிட்டு போய் நின்னாலும் இனி நாளைக்குதான்னு தொறத்தி விட்டுடுவானுக’.


  அட,நாம படத்துக்குத்தான் போறோம்னு அவங்களுக்கு தெரியாது.நாம கெளம்பறப்போ வெளிய போயிருந்தாங்கதான.இப்போ கோயில்க்கு போலமா  படத்துக்கு போயிட்டு வந்தோம்னு சொன்னா ஒரு மாதிரி நினைப்பாங்கனுதான் போலாமான்னு கேட்டேன்.அதுக்கு இவ்வளவு பிரசங்கம்
  சரி.. சரி.., இங்க இருந்து எவ்வளவு நேரம்டி வீட்டுக்கு?’.
  நான் தனியா ஸ்கூட்டில போறதா இருந்ததுனா பத்து நிமிஷம்.உன் ஸ்பீட்ல போறதா இருந்தா அஞ்சு நிமிஷம். ஏன்?
  வீட்டுக்கு போலாம்டி,கொஞ்ச நேரத்துல குளிர ஆரம்பிச்சுரும்’.
  அய்யய்யே,உனக்கு ஏன் இவ்ளோ அவசரம்.கொஞ்ச நேரம் இருந்துட்டுத்தான் போலாமே?’
  போடி,இன்னும் மூணு நாள்தான் லீவ்.அப்புறம் போய் கொட்ட கொட்ட நைட் முழிக்கணும் ஆபீஸ்ல.இப்பவே போதும்ங்கற அளவு என்ஜாய் பன்னியாச்சுனா நைட் அங்க போய் முழிச்சு இருக்கறதுக்கு டேலி பன்னிருவேன்’.
  ச்சி.. இன்னும் இருட்ட கூட இல்ல அதுக்குள்ள?. ஆனா உன்னேல்லாம்.. மனுஷனா நீ?
  ஏன்டி, நான் என்னடி பன்னேன்’.
  கல்யாணத்துக்கு முன்னாடிதான் தியேட்டர்க்கு போனா கை சும்மா இருக்காது சரி.கல்யாணம் முடிஞ்சு மூணு வாரம் ஆச்சு இப்ப கூட உன் கை சும்மா இருக்க மாட்டிங்குது ம்ம்ம்?’
  ஸ்க்ரீன்,இருட்டு,நீ வேற பக்கத்துல எல்லாம் பழக்கதோஷம்டி.என்ன என்னடி பன்னசொல்ற?’
  எங்கயோ கழனிதண்ணி பார்த்த மாடாட்டமா? என்னமோ சொல்லுவாங்களே.. எப்பப்பாரு.. ..னு அலையறது,எப்போ கேப் கிடைக்கும்னு.’

  கழனிய பார்த்தா மாடா?,பார்த்த மாடு எப்படி ரியாக்ட் பன்னும்னு தெரியுமாடி..தெரியுமாடி..” என்று சொல்லிவிட்டு தங்களை யாரேனும் பார்த்து கொண்டிருக்கிரார்களா என நோட்டமிட்ட ஷ்யாம் இடதுபக்கம் தன் கையை பற்றி கொண்டு வந்திருந்த ப்ரீத்தியின் கண்ணத்தில் செல்லமாய் விரலில் சுண்டினான்.
  யேய்...பேசமா இரு.பப்ளிக் ப்ளேஸ்லஎன செல்லமாய் கோபித்துவிட்டு ஷ்யாமின் கையை சிறுபிள்ளை போல் பற்றி கொண்டிருந்த ப்ரீத்தி, சுண்டியது வலித்தது போல் கைபிடியை விலக்கி இரண்டு அடி தள்ளி முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.
  ஷ்யாம் வலது கையை நீட்டி ப்ரீத்தியின் சுடிதார் ஷாலை பிடிக்க முயன்றான்.அவளோ ஷால் அவன் கைகளில் அகப்படமால் இருக்க வேகமாய் அவனிடமிருந்து நகர்ந்தாள். ஷ்யாமும் விடுவதாய் இல்லை. இன்னொரு முறை ஷாலை பிடிக்க கையை வீசினான்.ஷ்யாம் கைகளில் ஷால் கிடைக்கும் தருவாயில் இருப்பதை கண்டு ப்ரீத்தி வேகமாய் எட்டு எடுத்து வைத்தாள்.இவனும் விளையாட்டை துவக்கி வைத்தவன் என்ற முறையில் மெல்லமாய் எட்டி ஷாலை பிடிக்க முயன்றான்.முயற்ச்சி தோற்றது.முயற்ச்சி தோற்றதே தவிர இருவருக்கும் சிரிப்பு ஆரம்பமாய் இருந்தது.இரண்டாவது முறை ஷாலை பிடிக்க முயலும் ஷ்யாமின் எண்ணம் தெரிந்து ப்ரீத்தி சிரமம் எடுத்து இரண்டாவதும் பெரியதாய் ஒரு எட்டு எடுத்து வைத்தாள்.இரண்டாவது வலை வீச்சு வீணாய் போகமலிருக்க இந்த முறை ஷ்யாம் விலகி நடக்கும் ப்ரீத்தியை சாடி ப்ரீத்தியின் ஷாலை இடது கையால் பிடித்தான் இப்போது ஷாலுடன் இலவசமாய் அவளின் இடுப்பும் வந்தது.ஷ்யாம் அவளை இடது கையில் தூக்கி அறை வட்டமாய் சுற்றி வலது புறம் இறக்கி விட்டான்.சிவபூஜையில் கரடி நுழைவதை போல் எங்கிருந்தோ சூது கவ்வும் படத்தின் தீம் மியூசிக் ஒலித்தது.
  ம்ம்.. போன் பாரு’.
  என்னதில்லடி லூசு
  லூசா நீ?, சுதுகவ்வும் டோன் யாருது உன்னதுதான
  அட,என் போன் இல்லடிஎன தன் வலது பேண்ட் பாக்கட்டில் இருந்து எடுத்து போனை ப்ரீத்தியிடம் காட்டினான்.அது நிசப்தமாய் தன்னை தளர்த்தியிருந்தது.
  அப்போ பக்கத்துல எங்கயாவதுமா இருக்கும்என ப்ரித்தி சொன்னாள்.
  எங்கடி நாமதான் இருக்கோம் இங்க
  பாரு இந்த ரைட் சைடுல இருந்துதான் போன் சவுன்ட் வருதுஎன ப்ரீத்தி சொன்னாள்.
  இருவரும் வலது புறமாக போனின் சப்தத்தை நோக்கி நகர்ந்தனர்.இரண்டு மூண்று அடிகள் வலது புறமாக சென்றபின் இப்போது தெள்ளத்தெளிவாக போனின் சப்தம் கேட்டது.இப்போது அது ஒரு ஆலமரத்தின் மறுபக்கத்தில் இருந்து கேட்கிறது.இருவருமாய் போனின் சப்தம் கேட்டு மரத்திற்கு விரைந்தனர்.அருகில் ஒரு நான்கு பேர் உட்க்கார கூடிய இரும்பு பெஞ்ச் தெரிந்ததும் அதனருகில் சென்றனர்.
  இங்கபாரு, சீட்க்கு அடில இருக்குபாரு போன்என ப்ரீத்தி சொன்னாள்.
  சோனி எக்ஸ்பீரியாடிஎன பெஞ்சின் கீழ் கேட்பாரற்று கிடந்த போனை எடுத்தான் ஷ்யாம்.
  ஷ்யாமின் கையில் அகப்பட்டவுடன் போன் மறுபடியும் அலறியது.
  ஹே.. அட்டன்ட் பன்னு போன் மிஸ் பன்னவங்களா இருக்கும்என ப்ரீத்தி சொன்னாள்.
  ம்ம்ம்.. இரு..இரு.. ஹலோ..’
  ஹலோ
  ஹாய்.. நாங்க இங்க இப்போ கால்லார் பார்க்ல இருக்கோம்.அங்க இருக்குற ஒரு சேர்கிட்ட இந்த போன் விழுந்து கிடந்ததுஎன ஷ்யாம் ஒரே மூச்சில் பேசி முடித்தான்.
  ..ஷிட்.. இந்த போன் ருத்ரன் அப்பிடிங்கரவரோடது.அவர் மேட்டுபாளையம் விநாயகர் கோயில் வீதில இருக்கரவரு.இப்போ இவர அடிக்கறக்கு எங்கப்பாவும் எங்க விட்டு ஆளுங்களும் அங்க வந்துட்டு இருக்காங்க ப்ளீஸ் போன் மிஸ் பன்னிருந்த அங்கதான் எங்கயாவது இருக்கனும் ப்ளீஸ் அவர்ட்ட இத சொல்லனும் கொஞ்சம் ஹெல்ப் பன்னுங்கஎன மறுபக்கத்தில் உடைந்த குரலில் ஒரு பெண் சொன்னாள்.
 என்னதுமா..ஒரே நிமிஷம் ஒரே நிமிஷம்’.
  போனை ஸ்பீக்கரில் சௌண்டில் போட்டுவிட்டுஉங்க வீட்டு தெருதான விநாயகர்  கோவில் வீதி அங்க ருத்ரன்னு எதாவது பையன தெரியுமாஎன ஷ்யாம் பிரீத்தியிடம் கேட்டான்.
  அவன் தெரிஞ்ச பையன்தான்.ஏன் என்னாச்சு அவனோடதுதான் போனா?’ ப்ரீத்தி கேட்டாள்.
  ஆமாடி,அவனதுதான்.இப்ப அந்த பையன அடிக்க இந்த பொண்ணோட அப்பா ஆளுங்க இங்க வந்துட்டு இருகங்கலாமா,லவ் மேட்டர் போலஎன ஷ்யாம் சொன்னான்.
  ஹலோ..ஹலோ.. இங்க பேசுங்க ப்ளீஸ் எதாச்சும் ஹெல்ப் பன்னுங்க ப்ளீஸ்என அந்த பெண் மறுமுனையில் சொன்னாள்.
  ஹலோ..ஹலோ..சொல்லுமாப்ரீத்தி ஸ்பீக்கரில் அவளுக்கு பதில் அளித்தாள்.
  இப்போ அவன் இந்த நேரத்துக்கு ஜாக்கிங் வருவான்னு விசாரிச்சுட்டு தெரிஞ்சுதான் இவங்க அங்க வந்துட்ருக்காங்க ப்ளீஸ்ணா நீங்க அங்க அவன பாத்திங்கனா எப்பிடியாவது அங்க இருந்து தப்பிச்சுர சொல்லுங்கணா ப்ளீஸ், என் பேர் சூர்ய பிரபா நான் இத சொன்னேன்னு சொல்லுங்கணா ப்ளீஸ் இந்நேரம் அங்க வந்துருப்பாங்கணா சீக்கிரம்னா சீக்கிரம்என மறுமுனையில் பதட்டத்துடன் சொல்லிக்கொண்டிருந்த சூர்ய பிரபாவின் குரலில் இருந்த  நடுக்கம் இருவருக்கும் அப்பட்டமாய் தெரிந்தது.
  சரிமா..ஒரு நிமிஷம் லைன்ல இருஎன சூர்யாவை சமாதான படுத்த முயன்றான்.
  இப்போ நாம கேட்ல இருந்து உள்ள வர்றப்ப வயலட் டிசர்ட் போட்டு ஒரு பையன் என்ன பாத்து சிரிச்சு நீ கூட யார்னு கேட்டத்துக்கு  தெரிஞ்ச பையன்னு சொன்னன்ல அவன்தான் ருத்ரன்என ப்ரீத்தி படபடக்க சொல்லிமுடித்தாள்.
  அண்ணா... அண்ணா... அப்ப அங்கதான்ணா இருக்கணும் கொஞ்சம்  தேடிப்போய் அவன வீட்டுக்கு போக சொல்லுங்கணா ப்ளீஸ்என சூர்யா  கேட்டாள்.
  சரிமா..சொல்றோம் சொல்றோம்என்று சொல்லிவிட்டு சூர்யாவின் பதிலை கூட வாங்காமல் ஷ்யாம் போனை துண்டித்து தன் இடது பாக்கெட்டில் சொருகிக்கொண்டான்.
  ஷ்யாமும் ப்ரீத்தியிடம் தேடலாம் என கண் ஜாடையில் கேள்வியை உதிர்க்க ப்ரீத்தியின் தலை அசைவில் பதிலை பெற்றுக்கொண்டு இருவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தேட ஆயத்தமானார்கள்.ப்ரீத்தி முகத்தை தேடியும் ஷ்யாம் அவனின் வயலட் கலர் டிசர்டயும் குறி வைத்து தேடலை தொடங்கினர்.இருவரின் அட்ரலனும் சுரக்க இருவரின் நடை,நடைக்கு நடை வேகம் கூடியது.
  தூரத்தில் ஒரு இளம் காதல் ஜோடி அவசர அவசரமாய் இவர்களுக்கு நேராய்  ஒடி வந்து கொண்டிருந்தனர்.ஷ்யாமுக்கு ப்ரீத்திக்கும் ஊர்ஜிதமாய்விட்டது தாங்கள் தேடலுக்கான விடைகிடைத்தது என்று.ஓடி வந்த இருவரும் இவர்கள் பக்க நெருங்க
என்ன அங்க என்னாச்சுஎன ஷ்யாம் அவர்களிடம் கேட்டான்.
அங்க ஒருத்தர கும்பலா ரெண்டு மூணு பேரு அடிச்சுட்டு இருக்காங்கஎன ஓடி வந்தவர்களில் இளைஞன் ஒருவன் சொல்லிவிட்டு ஷ்யாமிடம் வந்து நின்றான்.
எங்கஎன ஷ்யாம் கேட்க
  ஓடிவந்தவன்அங்கஎன ஒரு பெரிய ஆலமரம் இருக்கும் திசையை பார்த்து கையை நீட்டினான்.ஆலமரம் இருக்கும் திசையை பார்த்து ஷ்யாமும் ப்ரீத்தியும் அவசர அவசரமாய் நடக்க ஆரம்பித்தனர்.இவர்களுக்கு பின்னால் ஓடி வந்த அந்த காதல் ஜோடியும் பின் தொடர்ந்தனர்.ஆல மரத்தை நெருங்கியதும் கெட்டவார்த்தைகளும் யாருக்கோ அடி விழும் சத்தமும் துல்லியமாய் கேட்டது.              
  அந்த பெரிய ஆலமரத்தை நெருங்கியதும் மரத்தின் இந்த பக்கம் இருவரும் பதுங்கினர்.பிரீத்தியிடம் மரத்தின் பின்னால் ஒளிந்துகொள் என சைகை காட்டிவிட்டு ஷ்யாம் மட்டும் முன்னேறினான்.
  ப்ரீத்தி ஷ்யாம் கைகளை பிடித்து பார்த்து என மெல்லிய குரலில் எச்சரித்தாள்.ப்ரீத்தியுடன் இளம் ஜோடிகளும் சேர்ந்து ஒளிந்தனர்.
  ஷ்யாம் ஆலமரத்தை கடந்து செல்கையில் மூண்று பேர் கொண்ட கும்பல் ஒருவரை அடித்து கொண்டிருந்தனர்.ஷ்யாம் சம்பவ இடத்தை நெருங்க நெருங்க வயலட் டிசர்ட் அணிந்திருந்த ஒருவன் தரையில் சுருண்டு கிடக்கபட்டிருந்தான்.ஒருவன் அவனின் தோளில் மிதிக்க ஒருவன் மடங்கி இருந்த கால்களை ஆக்ரோசமாய் குறிவைத்து காலில் மிதித்திகொண்டிருந்தான்.ஒருவன்பிச்சக்கார நாயே உனக்கு என் பொண்ணு கேக்குதாடா கிறுக்கு**’ என வசைபாடி கிடக்கபட்டிருப்பவனின் நெஞ்சில் இடைவிடாது மிதித்து கொண்டிருந்தான்.
  இந்த காட்சியை பார்த்த ஷ்யாம் மிரட்சியில் ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றான்.அது வேறு ஒருவரும் அல்ல இவர்கள் தேடிய அதே ருத்ரன்தான். ஒதுங்கி நின்ற ப்ரீத்தி ஷ்யாமிடம்தெரிஞ்ச பையன் வேற எதாவது பன்னிட போறானுக எதாவது பன்னுஎன படபடக்க சொன்னாள்.
  நான் என்னடி பன்னட்டும்என கோவமாய் ப்ரீத்தியிடம் பதிலளித்தான்.
  இதை கொஞ்சமும் எதிர்பாக்காத ப்ரீத்தியின் முகம் சுருங்கியது.ப்ரீத்தியின் முகம் சுண்டிபோயிருந்தது ஷ்யாமிற்கு நன்றாகவே தெரிந்தது.உடனே எதை பற்றியும் யோசிக்காமல் ருத்ரன் சம்பவ இடத்திற்குயேய்..யேய்என சப்தமிட்டுக்கொண்டு ஆக்ரோசமாய் முன்னேறினான்.
  ருத்ரனை வலது தோளில் மிதித்து கொண்டிருந்த ஒருவன் ஷ்யாம் அவர்களை நெருங்குவதை பார்த்து
  தம்பி.. இது உன் பிரச்சனை இல்ல வராதஎன எச்சரித்தான்.
  அதை காதில் வாங்கிக்கொள்ளாத ஷ்யாம் எச்சரித்தவனை நெருங்கவும் கையில் அணிந்திருந்த வெண்கல காப்பை மேல் ஏத்திவிட்டு விரல்களை மடக்கி அவன் வாயோடு சேர்த்து ஒரு குத்து விட்டான்.அவன் அந்த அடியை தாங்கமுடியாமல் நிலைதடுமாறி பின்னால் போய் விழுந்தான்.இதை பார்த்த இன்னொருவன்யாரடா அடிக்குறஎன உச்ச குரலில் கத்திவிட்டு ஷ்யாமின் நெஞ்சில் ஒரு எத்து விட்டான்.ஷ்யாம் தடுமாறி குப்பைமேட்டின் அருகில் போய் விழுந்தான்.ஷ்யாம் வீழ்ந்ததை கண்ட எத்தியவன் ஷ்யாமை அடிக்க முனைந்து முன் வந்தான்.ஷ்யாம் விழுநதிருந்த  இடத்தில இரும்பு ஆங்கிள் ஒன்று வலது கைக்கு கிடைத்தது.அதை வலது கையில் எடுத்த கணம் இடது கைக்கு மாறியது.அது அடிக்க முனைந்தவனின் தலையில் நொங்கென பட அவன் தலையில் கை வைத்து வலி தாங்காமல் கால் இடறி அங்கேயே விழுந்தான்.ஷ்யாமும் சுதாரித்து எழுந்து அவனை குறி வைத்து முழு சக்தியுடன் வீசினான் அது டொங்கென அவன் முட்டுகாலைஅது பதம் பார்த்தது.இதை பார்த்த பின் சூர்யாவின் அப்பாவும் குத்து வாங்கிய இருவரும் பின்வாங்கி நின்றனர்.பிரீத்தியுடன் மறைந்து நின்றிருந்த இளம் ஜோடியில் இருந்த இளைஞன் ஒருவன் தனக்கு கிடைத்த இன்னொரு ஆங்கிலையும் கையில் எடுத்து கொண்டு ஷ்யாமுடம் இணைந்து கொண்டான்.ருத்ரனும் தட்டு தடுமாறி எழுந்துஇப்போ வாங்கடா பொட்டய்ங்களாஎன உரக்க சொன்னான்.
  ஷ்யாமின் ஆங்கிள் அடியில் வீழ்ந்தவன் எழாமலையே  நகர்ந்து அவர்கள் இருக்கும் பக்கம் போய் நின்றான்.மூண்று இளங்களும் ரத்தம் சூடேறி நிற்பதை பார்த்த அவ்மூவரின் தலைவன்போலாம்..போலாம் இவனுகளை ஆளை கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாம்என தன் ஆட்களிடம் சொன்னான்.
  இங்கயே இருங்கடா வர்ரேன்என சொல்லிவிட்டு நிற்க நேரமின்று சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர் அம்மூவரும்.
  முடிஞ்சா கூட்டிட்டு வாடா பொட்ட நாயேஎன ருத்ரன் ஆத்திரத்தில் கத்தினான்.
  அவர்கள் மூவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறவும் ப்ரீத்தி பதட்டத்துடன் வந்துஒன்னும் ஆகலியேஎன ஷ்யாமின் நெஞ்சில் கை வைத்து தடவி பார்த்தாள்.
   இல்ல இல்ல அவனுக்கு என்னாச்சுனு பாருஎன  ப்ரீத்தியிடம் சொன்னவன்.
  தம்பி..உனக்கேதும் இல்லையேஎன ஷ்யாமே அவனிடம் கேட்டான்.
  கையை தூக்க முயற்சித்துகைலதானா அடி தூக்க முடியலஎன ருத்ரன் கூறினான்.
  சரி..சரி.. இங்க நிக்க வேணாம் சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போலாம்.திரும்ப வந்தாலும் வருவானுங்கஎன ப்ரீத்தி சொன்னாள்.
  ப்ரீத்தி சொன்னதும் நடக்க முயற்சித்து ருத்ரன் எட்டு எடுத்து வைக்க முயன்றான்.ஆனால் அது அவ்வளவு சுலபமாய் இல்லை சிரமமாய் இருந்தது அவனுக்கு.நடக்க சிரமபடுவதை பார்த்த ஷ்யாம் ருத்ரனை கை தாங்களாய் அவனை கேட்டின் முன் வரை கூட்டி வந்தான்.
  அது என் பைக்என கேட்டுக்கு வெளியே நின்றிருந்த ஒரு வண்டியை பார்த்து சைகை காட்டினான் ருதரன்.
  இல்ல வண்டி வேணாம் ஆட்டோல போலாம்என சொல்லி ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஒரு ஆட்டோவை கூப்பிட்டான் ஷ்யாம்.
  ருத்ரன் தன் பைக் சாவியை யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல்.சாவியை கையில் எடுத்து காட்டினான்.பைக் சாவியை ஷ்யாம் வாங்கி கொண்டு ஆட்டோ டிரைவரிடம்பக்கத்துல இருக்க அனன்யா ஹாஸ்பிட்டல் கொண்டு போங்க நாங்க பின்னாடியே வர்றோம்என சொல்லி ஆட்டோவை அனுப்பிவைத்தான்.ஷ்யாமும் ப்ரீத்தியும் பார்க்கிங்கில் இருந்த ருத்ரனின் வண்டியை எடுத்து ஹாஸ்பிட்டல்க்கு வண்டியை செலுத்தினான் ஷ்யாம்.     

இடம் : அனன்யா ஹாஸ்பிட்டல்,மேட்டுபாளையம்.
நேரம் : 6.10
  இடது மணிக்கட்டோடு விரலை சேர்ந்து ஒரு கட்டு,வலது புருவத்தில் ஒரு பிளாஸ்திரி கட்டு.வலது கையில் சில சிராய்ப்புக்களுக்கு களிம்பு போடப்பட்டு அந்த களிம்பின் எரிச்சல் தாங்க முடியாமல் ஊதி வலியை குறைக்க ருத்ரன் முயன்று கொண்டிருந்தான்.ஷ்யாமும் ப்ரீத்தியும் ரூமுக்குள் நுழைவதை பார்த்து
  அண்ணா வாங்க, வாங்கக்கா. ரொம்ப தேங்க்ஸ்ணா நீங்க வரலினா என்ன பன்னிருப்பானுங்கனே தெரியலணா,துவம்சம் பன்னிருப்பாங்க அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.ரொம்ப தேங்க்ஸ்ணா,உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுனே தெரியலணாஎன ருத்ரன் சொல்லிகொண்டிருந்த போதே குரல் உடைந்து கண்களில் நீர் ததும்பியது ருத்ரனுக்கு.
  ருத்ரன் அப்படி சொன்னதும் ஷ்யாம் என்ன பேசுவது என்பது தெரியாமல் பெட்டின் பக்கத்தில்  நின்று கொண்டிருந்ததான்.
  ஸ்ட்ரெயின் பன்னிக்காத,பெரிய அடி ஏதும் இல்லையேஎன ப்ரீத்தி ருத்ரனிடம் கேட்டாள்.
  இல்லக்கா பெரிய அடி ஏதும் இல்ல சின்னதாத்தான்என கூறிஅண்ணா உங்களுக்கு பெரிய அடி ஏதுமில்லையேஎன ஷ்யாமிடம் பாவமாய் மெல்லிய குரலில் கேட்டான்.
  அதற்குதம்பி அவர் இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் ஜிம் ட்ரெய்னரா இருந்தவருஎன ப்ரீத்தி பெருமை தோணியில் ருத்ரனின் கேள்விக்கு பதில் அளித்தாள்.
  இல்லப்பா..கொஞ்சம்தான்.மூச்சு மட்டும் பிடிச்சுருக்கும்போல குனிய முடியல அது அப்றமா சரி ஆயிடும்என ஷ்யாம் சொன்னான்.
அப்பா அம்மாக்கு கூப்பிட்டு விசயத்த சொன்னியா இல்ல,கூபட்ரதாப்பாஎன ப்ரீத்தி ருத்ரனிடம் கேட்டாள்.
இல்லக்கா.. இப்பத்தான் அவங்களுக்கு இன்பார்ம் பண்ணேன்.இப்போ வந்துருவாங்கக்காஎன ருத்ரன் சொன்னான்.அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே ருத்ரனின் பெற்றோர்கள் அங்கு வந்தனர்.வந்ததும் ருத்ரன் அம்மா அழுதுகொண்டே என்னாச்சு என கேட்க. ருத்ரன் நடந்ததை எல்லாம் இரண்டு நிமிட இடைவெளியில் நிரப்பினான்.சொல்லி முடித்ததும்
ரொம்ப நன்றிப்பா,நீ இல்லன்னா என் பையன அவனுக அடிச்சே கொன்னுருப்பானுங்கஎன ருத்ரனின் அம்மா ஷ்யாமை பார்த்து கை கூப்ப முயன்றாள்.அதை பார்த்ததும்என்னக்கா இதுக்கெல்லாம் போய் பெரியவங்க நீங்கஎன கூப்பிய கைகளை பிடித்து இறக்கினாள் ப்ரீத்தி.
இல்லம்மா என்னதான் இருந்தாலும் முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு ஹெல்ப் பன்றதுக்கும் நல்ல மனசு வேணும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தம்பிஎன ருத்ரனின் அப்பா ஷ்யாமை பார்த்து கை கூப்பினார்.
  அண்ணா.., பரவால விடுங்க.எனக்கு அந்த கால் மட்டும் வரலைனா இந்த பையன தேடி போயிருக்கவும் மாட்டேன்,காப்பத்தி இருக்கவும் மாட்டேன்.நீங்க சொல்ற இந்த தேங்க்ஸ் எல்லாம் அந்த கால் பன்ன பொண்ணுக்குத்தான் போய் சேரும்.என்றான் ஷ்யாம்.
ஆமாங்காஎன ப்ரீத்தியும் தலையசைத்தாள்.
புரியல,எந்த போன்?’ என சந்தேகத்துடன் ருத்ரன் ஷ்யாமிடம் கேட்டான்.
ஒன்னோட போன்தான் தம்பி,சோனி எக்ஸ்பீரியா. ஆலமரத்துக்கு பக்கத்துல இருக்க அந்த இரும்பு சேர் கிட்ட விழுந்து கிடந்தது.நாங்க அந்த வழியா வந்துட்றுந்தோம் என்னடா சூது கவ்வும் ரிங்க்டோன் கேக்குதேனு பார்த்தோம்.அப்பதான் உன் போன் கெடச்சது.அதுல வந்த ஒரு கால் அட்டென்ட் பன்னி பேசவும்தான் இந்த மாதிரி,இந்த மாதிரி ஒரு பையன அடிக்க ஆள் அனுப்பிருகாங்கனு போன்ல அந்த பொண்ணு சொல்லுச்சு  அதுக்கு அப்பறம்தான் நான் உன்ன தேடி வந்து காப்பாத்தினேன்என ஷ்யாம் ருத்ரனிடம் தானே சாதித்து காட்டியது போல் தெரிவித்துக்கொண்டான்.
  அண்ணா, நீங்க என்ன சொல்றிங்க என் போன் எங்கயும் மிஸ் ஆகலையே, என்கிட்டயேதான் இருக்கு என் போன்லதான் அப்பாக்கும் அம்மாவுக்கும் கூப்ட்டேன் இதோ பாருங்கஎன தன் பேன்ட் பாக்கட்டில் இருந்து தன் சோனி எக்ஸ்பீரியா போனை வெளியே எடுத்து காட்டினான்.
ஷ்யாம் அதிர்ச்சியில் உறைந்தது போய்அப்போ என்கிட்ட இருக்குற உன் போன்என தன் பாக்கட்டில் கை விட்டு துழாவினான் அவன் பாக்கேட் காலியாக இருந்தது.அப்போ பார்க்ல எங்களுக்கு கெடச்ச போன்,அதுல உன்ன அடிக்க வர்றாங்கனு எங்க கிட்ட சொன்னதெல்லாம்? என ஷ்யாம் ப்ரீத்தியை ஒன்றும் விளங்காதது போல் பார்த்தான்.அப்போ ௦நாம பேசுனது யார்ட்ட? என ப்ரீத்தியும் ஷ்யாமும் அதிர்ச்சியில் பார்த்தாள்.இருவருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.திடிரென்று  ஹாஸ்பிட்டலில் பவர் கட்.எல்லாரையும் சுற்றி இருள் சூழ்ந்தது.தூரத்தில் யாருடையோ போன் ஒன்றில் சூது கவ்வும் ரிங்க்டோன் ஒலித்தது.....!!!                               
 

No comments:

Post a Comment