Friday, 18 July 2014

Story 72: வன்மக்கண்ணிவன்மக்கண்ணி

எங்கள் ஊரை பனி, குளிர், மேகம், மலை, மரம், காடு, கூப், லாரி, அதன் முதலாளிகள், ட்ரைவர்கள், க்ளீனர்கள், மரம் வெட்டுபவர்கள், பின் அவர்களை சார்ந்தவர்கள், அவர்கள் குடும்பங்கள் என்ற இரண்டு வரிகளில் அடக்கி விடலாம். ஆனால் இவற்றின் ஊடாக பனி போல் படர்ந்து, எங்கும் வியாபித்து, கண்களுக்கு புலப்படாமலே அலையும் ஒரு அரூவமாகவே இருக்கிறது வன்மம். அதனை அடக்க முடியவில்லை. எம் மக்களாலும், எனது வார்த்தைகளிலும்.
இந்த முதலாளிகளுள், பதினைந்து லாரிகளுக்கு மேல் இருந்தால் பெரு முதலாளி. அதற்கு கீழ் அவர் வெரும் முதலாளி - முக்கியஸ்தர். இந்த முதலாளிகளுக்கு  இடையிலான வியாபாரப்போட்டிகளில் மொத்த ஊரும் உழலும். இரண்டு கம்பெனி ட்ரைவர்களுக்கு இடையேயே கடும் மோதல் நிலவும். சில நேரங்களில் அது சாலை விபத்துக்களாகவும் முடியும். ஒரு வன்மத்தின் வெளிப்பாடாகவெ எங்களின் எல்லா செயல்களும் பார்க்கப்படும். அந்த வன்மக்கண்ணியின் முதல் முடிச்சு வேரு எங்கோ யாரோ தீர்த்த வன்மத்தில் இருக்கும்.
இந்த மலை தேவதையின் வயிற்றில் ஒரு மலைப்பாம்பின் சுருள் போன்ற வளைவுகளில் இறங்கி வரும் அந்த லாரிகள் தான் எங்கள் ஊரின் வாழ்வாதாரம். இந்த மலைக்காடுகளின் மரங்களை நம்பித்தான் எங்கள் பொருளாதாரம் இருந்தது. காட்டிலாக்காவில் இருந்து கூப் ஏலத்தில் எடுத்து அந்த மரங்களை வெட்டி சிறுமுகையில் உள்ள காகித தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல சுமார் 150 லாரிகள் உண்டு. அது போக கொஞ்சம் கோடைக்கால சுற்றுலா வருமானம் உண்டு. ஆனால் பொதுவாக கூப்பை நம்பித்தான் எல்லாம். மரத்தை வெட்டி, அதை 12 அடி உருல் கட்டைகளாக அருத்து, யானையை வைத்தும், ரோலர் போட்டும் லாரியில் எற்றுவார்கள். அதிலும் 18, 20 டண் வரை மரங்களை ஃபுல் லோடு ஏற்றி சுமார் 75 டெக்ரீ சாய்மானதில் நெட்ட ஏத்தமாக உள்ள மண் சாலையில் இவர்கள் தம் பிடித்து ஏறி வருவதை காண மயக்கம் வந்துவிடும். அதை சாலை என்றெல்லாம் சொல்ல முடியாது. மழை பெய்து சொத சொத என்று சேரும் சகதியும் கால் வைத்தாலே வழுக்கும். இதில் அந்த டாடா 2020 லாரிகள் ஏரும் அழகே தனி. சில நேரங்களில் முன்னால் ஒரு 4 வீல் ட்ரைவ் ஜீப் கட்டி இழுக்க அது வாழைபழத்தில் கத்தி போல் பின்னால் வழுக்கி செல்லும். ஆனால் அது ஐனூரு, அறனூரு அடி பள்ளத்தாக்கில் உயிரை பணயமும் வைத்து, அந்த உயிரை கையிலும் பிடித்துக்கொண்டு விளையாடும் ஆட்டம். அதில் பல ட்ரைவர்களும், க்ளீனர்களும், மரம் வெட்டுபவர்களும் உயிர் விட்டுருக்கிறார்கள். ஒரு ட்ரைவரின் திறமை அவர் இந்த கட்டத்தை கடப்பதில் தான் உள்ளது. மிகுந்த மன தையிரியமும், திறமையும் தேவை படும் பிழைப்பு. இது ஒரு வீர விளையாட்டு போலவும், அதில் ஒரு போட்டி, பொறாமை அதைத்தொடர்ந்து வன்மம் என்று செல்லும் எங்கள் வாழ்க்கை.
கதைக்கு வருவோம். செலவுகளும், குடும்ப சுமைகளும் அதிகமாகும் பொழுது நகரவெளிச்சங்களை நோக்கி படை எடுத்த விட்டில் கூட்டத்தில், நானும் ஒருவன். சென்னையில் முட்டி மோதி சம்பாதித்து சேர்த்த பணத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு பெட்ரூம் கொண்ட ஃப்லாட் ஒன்று வாங்கினோம். அதை வீடு என்றெல்லாம் சொல்ல இன்னும் மனம் வரவில்லை. எனக்கு என்னமோ எங்கள் ஊரில் உள்ள பழைய வீடுதான் எப்பொதும் வீடு. சொந்த ஊரை காலி செய்து அப்பா அம்மாவை என் கூடவே கொண்டு வந்து வைத்துக்கொள்வதாக ஏற்பாடு. தம்பி வெளிநாட்டில். வீடு காலி செய்வதர்கான ஏற்பாட்டில் பொருட்களை ஏற்ற லாரி ஒன்று தேவைப்பட்டது. அப்பா ஒரு லாரியை வர சொல்லி இருந்தார். மஞ்சள் நிறத்தில் எஸ்.கே. என்று பெரிதாக எழுதி இருந்தது. செங்கண்ணன் லாரி என்று பார்த்த உடன் தெரிந்தது. அப்பாவும் அம்மாவும் ட்ரைனில் வரவும் நான் எல்லாவற்றயும் ஏற்றிகொண்டு லாரியில் வருவதாகவும் ஏற்பாடு. மனைவியும் குழந்தைகளும் சென்னையில் புது வீட்டில் இருந்தனர்.
புறப்படும் அன்று லாரி வந்தது. ட்ரைவர் யார் என்று பார்த்தால் என்னோடு பள்ளியில் படித்த அப்துல் கஃபூர். நெடு நெடு என்று ஒல்லியாக இருப்பான். இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு பயங்கர சந்தோஷம். அவனுக்கும் தான். சுமார் 12 மணி நேர பயணம். இவனோடு எனும்போது கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
பார்த்த உடனேயே "டே மச்சான்" என்றான்.
"சொல்டா மாமா. நீ எப்படா ட்ரைவர் ஆன?. உன்ன நம்பி ஏற்லாமா டா?."
"நீ ட்ரௌஸர் போடற காலத்துல இருந்தே நான் ட்ரைவர்டா...மொதல்ல கட்டில ஏத்துவோம். இங்க பிடி. இத கழட்டி ஏத்தலாமாடா?” என்றவாரு வேலையில் இறங்கினான்.
அவன் சொல்வது உண்மைதான். அவனது அப்பா இத்ரிஸ் பாய் அந்த காலத்திலேயே 8 லாரி வைத்து இருந்தார். மரம் அறுக்கும் பட்டரை எல்லாம் வைத்து தொழில் செய்து வந்தார். பச்சை வண்ண லாரியில் "மதீனா" என்று தங்க நிற எழுத்தில் பெயர் பலகை தாங்கி அந்த லாரிகள் காண அவ்வளவு அழகாக இருக்கும். நல்ல வசதியான குடும்பம் அவனுடயது. 2 அக்காகளும், 1 அண்ணனும், 1 தம்பியும் அவனுக்கு இருந்ததாக ஞாபகம்.
"வீட்டில எல்லாரும் எப்பிடிடா இருக்காங்க" என்று பொதுவாக  கேட்டு வைத்ேன்.
9வது படிக்கும் போது இவன் ஒரு நாள் பள்ளி வருவதை நிறுத்தினான். அப்படியே விட்டு சென்றான் என்று தான் சொல்ல வேண்டும். சொல்ல போனால் அதற்கு பிறகு இப்போது தான் இவனை பார்க்கிறேன்.
"இவன் ஏன் லாரீ ஓட்ட வந்தான்" என்று என்னுள் வந்த கேள்வியை இரவு பயணத்திற்கு மாற்றி வைத்ேன்.
பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்றி, அப்பா அம்மாவை ரயில்வே ஸ்டேஶந் அனுப்பிவிட்டு, நாங்கள் லாரியில் புறப்பட்டோம். அடிவாரம் வரை பொதுவாக தேர்தல், பிரதமர், தமிழக அரசியல் என்று பேசி வந்தோம். மலைசாலையில் பொதுவாக ட்ரைவர்களுக்கு பேச பிடிக்கும். அதனால் பக்கத்தில் இருப்பவர் பேச்சு கொடுத்து கொண்டாே பாடி கொண்டோ வருவது நல்லது. நான் ட்ரைவிஂக் படித்தது இந்த ரூட்டில் தான். வண்டி மிக மெதுவாக செல்லும் பகுதி. தூக்கம் வருவது இயல்பு. ஆனால் தினமும் இந்த சாலையில் ஓட்டுபவருக்கு அது ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.
இரவு உணவிற்க்கு பிறகு, மெதுவாக ஒரு சிகரெட் பற்ற வைத்தபடி,
நீ எப்படா ட்ரைவர் ஆன?” என்றேன்.
அது பெரிய கதைடா.... அத விடு.... அது ஏன் இப்பொஎன்றான்.
மெட்ராஸ் வரைக்கும் பேசலாம். சொல்லு”.
ம்ம்ம்என்று புகை விட்டு கொண்டே, கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
உனக்கு ஞாபகம் இருக்கா தெரியல. 9வது படிக்கும் பொது வாப்பா செத்துட்டாங்கன்னு என்ன கூடிட்டு போனாங்க இல்ல. அதுக்கு அப்புறம் எல்லாம் மாறிபோச்சு.”
எனக்கு ஞாபகம் இருக்கு.. லேசா.”
ம். ரெண்டு அக்காக்கும் நிக்காஹ் முடிக்க வாப்பா 15 லட்சம் கடன் வாங்கி இருந்தாராற்றுக்கு. எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. லாரி எல்லாமே கடன்ல தான் இருந்திருக்கு. கூப் வேற மாமா பேருல இருந்து இருக்கு. எல்லாம் சேந்து ஒரே அடி. தாங்கமுடியல.”
யாருகிட்ட கடன் வாங்கினாரு
இதொ இந்த லாரி ஒனெர் செங்கண்ணன் கிட்ட தான்”.
எனக்குள் பல கேள்விகள் எழ துவங்கியது. அவனே தொடர்ந்தான்.
அப்பொ இவனுங்க குடும்பம் நம்ம ஊருக்கு ட்ரைவர் வேலைக்கு வந்தானுங்க. வாப்பா தான் வேலை போட்டு குடுத்தாரு. நம்ம கூப்புல மரம் திருடி வித்து இருகானுங்க அண்ணனும், தம்பியும். 5 வருஷம் கழிச்சு இவனுங்க லாரி போட்டானுங்க. அதுக்கு காசு நம்ம கூப்புல மரம் திருடி வித்தது. வாப்பா புடிச்சு கேட்டதுக்குமன்னிச்சிருங்க பாய்ன்னு கெஞ்சவும் வாப்பா விட்டுட்டாரு. அன்னைக்கே நம்ம மேல அவனுங்களுக்கு ஏதோ ஒரு கடுப்பு இருந்திருக்கு. இப்படியே இருக்கும்பொது வாப்பா நம்மமயிலம் ஃபின்னான்ஸ்னு ஒரு ஃபின்னான்ஸ் கடை லேக் கிட்ட இருந்துச்சு தெரியுமா?. அங்கதான் வண்டி எல்லாம் ஃபின்னான்ஸ் போட்டு இருக்காரு வாப்பா. அந்த ஓனர் பொண்ண நம்ம செங்கண்ணன் கல்யாணம் பண்ணவும் அந்த கடை அவன் சொந்தம் அயிருச்சு. அவன் கூப் எடுக்க, கொள்ளன்னு இருக்கும்போது, ஒரு லாரி 5 லாரி ஆச்சு. அப்போ கூப் டிமான்ட். ஏலம் எல்லாம் நிப்பாட்டி வெச்சுருந்தாங்க கவர்மென்ட்ல. லாரி நிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் காசு போச்சு. அப்போ இவனுங்களுக்கு வாப்பா பேர்ல இருக்குற கூப் வேணும். வேற கூப் ஏதும் அப்பொ ஏலம் இல்ல. என்னடா செய்யரதுன்னு பாத்தானுங்க. ப்ளான் பண்ணி, எல்லா கடனயும் ஒரே நேரத்துல நெருக்கி கேக்கவும், வாப்பாவுக்கு மூச்சு முட்டி போச்சு வாப்பா கொப்ரேடிவு பாங்க்ல வேர கடன் வாங்கி இருக்காரு. அதுல இவங்க அண்ணன் தான் செர்மன். அதுக்கும் சேத்து நோட்டிஸ் விட்டானுங்க. வாப்பா, மாமா கிட்ட சொல்லி கூப் எல்லாத்தையும் எழுதி குடுத்துட்டாரு. இதுக்கு எடையில சின்ன அக்கா நிக்காஹ் வேற. அது முடிய கொள்ள வாப்பா மொத்தமா சுருண்டுட்டாரு..திடீர்ன்னு நெஞ்சு வலி. எல்லாம் போச்சு. அவரும் போய் சேந்துட்டாரு. வண்டியெல்லாம் அவன் கொண்டு போய்ட்டான். நாங்களும் எங்க அம்மா ஊருக்கு போய்டோம். இதான் நடந்துச்சு”, என்றவாறெ சிகரெட் துண்டை வீசினான்.
அப்பொ படிப்பு
எங்க படிக்க?. சாப்பாட்டுகே வழி இல்ல மாப்ள... மாமா கொஞ்சம் காசு குடுத்தாரு. அத அண்ணன் குடிச்சே அழிச்சான். தம்பி சின்ன வாப்பா கடைக்கு வேலைக்கு போய்ட்டான். அவன் சாப்பாட்டு ப்ரச்சனை தீர்ந்துச்சு. நான் அங்க ஒரு மண்ணு அள்ளுர லாரில க்ளீனரா சேந்து, இப்பொ ட்ரைவர் அயிட்டேன். 8 வருஷம் ஆச்சு கட்டை வண்டி ட்ரைவர் ஆகி. லோடு கம்மியானா இந்த மாதிரி வீட்டு சாமான், காய்கறி எல்லாம் ஓட்ட  வேண்டியதான்
வாப்பாவ கொன்னவன் கிட்டயே எப்படிடா வேல பாக்குர”, என்று அடக்க முடியாமல் கேட்டு விட்டேன்.
கோபப்படுவான் என்று நினைத்தேன். திரும்பி எந்த சலனமும் இல்லாமல் ஒரு பார்வை பார்த்தான். கொஞ்சம் நேரம் ஒன்றும் சொல்ல வில்லை.
அது இன்னொரு பெரிய கதை
ம்ம். அதையும் சொல்லு
என்னத்த சொல்ல. எல்லாம் லவ் தான்
லவ்வா? கல்யாணம் அயிருச்சா? சொல்லுடா கதைய
ம்ம்
சொல்ரான்னாஎன்று இன்னொரு சிகரெட் பற்ற வைத்து அவன் கையில் கொடுத்தேன்.
மூனு வருசத்துக்கு முன்ன நான் ரெகுலர் ஓட்டுர ரூட்ல ஒரு பழக்கடை இருக்கு. அங்கதான் அவ இருப்பா. அவங்க அம்மாவுக்கு ஒத்தாசையா வியாபாரம் பாத்துகிட்டு இருப்பா. தெனமும் பாப்போம். லேசா சிரிப்பா. அப்புறம் கொஞ்ச நாள் கண்ணுலயே பேசுவோம். ஒரு நாள்என்ன புடிச்சிருக்கானு?” கேட்டேன். “ஆமான்னா”. அப்பிடியே லவ் அயிருச்சு. அப்புறம் 1 வருஷம் கழிச்சு கல்யாணம். அவுங்க க்ரிஸ்டின். ரெண்டு வீட்லயும் ஒத்துக்கல. என்ன பண்ணுறது. பெரிய ப்ரெச்சனை அயிருச்சு. ஊருல ஒரு பய வேல தர மாட்டென்டான். அம்மாவும், தம்பியும் வீட்டுக்கு வராதன்னுட்டாங்க. அப்பொ திரும்பி இங்க நம்ம ஊருக்கே வந்தேன். இங்கயும் இருந்த காச வெச்சு ஒரு சின்ன வீடு ஒத்திக்கு எடுத்தேன். 2 மாசம் ஓடிச்சு. அப்புறம் சாப்பாட்டுக்கே வழி இல்ல. ஒரு நாள் இவ நாப்கின் கேட்டா. அதுக்கு கூடயா கடன் கேக்க முடியும். ஆனா அதையும் அன்னைக்கு கடையில கடனுக்கு தான் வாங்கிட்டு வந்தேன். ரொம்ப ச்ச்சின்னு போச்சு. என்ன வாழ்க்கைடான்னு அகிருச்சு. இருந்த பசில காலைல நேரா இவன் வீட்டுக்கு போனேன். வேலை குடுங்கன்னேன். என்ன நெனச்சானொ தெரியல. சேந்துக்க அப்பிடின்னான். வாப்பாவ கொன்ன பாவத்துக்கா இருக்கும். அந்தா அந்தான்னு அகி போச்சு 2 வருஷம். இப்பொ அவ மாசமா இருக்கா.”
உனக்கு அவன் மேல கோவமே வரலையாடா.?”
கோவ பட, சாப்புட, தூங்க, நாப்கின் வாங்கனு எல்லாத்துக்கும் காசு வேணும் மாப்ள. நம்ம கிட்ட அது இல்ல. அப்புறம் என்ன கோவ மசுரு வேண்டிக்கெடக்குஎன்று சிரித்தான்.
அது சரி. அப்புறம்
அவனிடம் ஒன்றும் பதில் இல்லை. இப்படியே மௌனமாக, சிகரெட் புகையினூடாக திருச்சி தாண்டி விழுப்புரம் அருகில் வண்டி சென்று கொண்டு இருந்த்து.
என்னைக்காவது வெறி வரும். இவனாலதான எல்லாம்னு தோணும். வாப்பாவ சாகடிச்சதுக்கு இவன நடு காட்டுல வெச்சு போட்றனும்ன்னு தோணும். ஆனா தப்பு வாப்பா மேலயும் தான்னு தோணும். அவரு எமாந்துட்டாரு. வேற என்ன சொல்லஎன்று அமைதியானான். உள்ளுக்குள் அவன் இன்னும் அமைதி ஆக வில்லை என்றே எனக்கு தோன்றியது.
நீ தூங்கு. நான் தாம்பரம் வந்தா எழுப்பி விடுறேன்என்றான்.
ம்ம்
உறக்கம் வரவில்லை. கண்களை மூடி யோசித்துகொண்டு இருந்தேன். சென்னை வந்து விட்டது.
எல்லாம் இறக்கி வைத்து, வீட்டில் நன்றாக சாப்பிட்டு, உறங்கி மாலை ஊருக்கு கிளம்பினான். அவன் எதையோ சொல்லாமல் கிளம்புவதாகவே எனக்கு பட்டது. அவன் வீட்டுக்கு கொஞ்சம் இனிப்பும், பழங்களும் வாங்கி கொடுத்து விட்டேன்.
இப்பொது 2 ஆண்டுகள் கழித்து அப்பா ஒரு நாள் இந்த கோடை விடுமுறையில் ஊருக்கு போகலாம் என்றார். சரி என்று அவர்களை எப்ரல் மாதம் அனுப்பி வைத்தேன். நான் மே மாத கடைசியில் சென்று கூட்டி கொண்டு வருவதாக ஏற்பாடு.
ஊருக்கு சென்று இரண்டாம் நாள், சரி, அப்துல் கஃபூரை பார்க்கலாம் என்று லாரி ஆபிஸ்  சென்றேன். லாரி ஆபிஸில் கேட்ட பொது என்னை ஒரு மாதிரி பார்தார்கள். எனக்கு ஏன் என்று அப்பொது புரியவில்லை. பின்பு கீழ் இறங்கி வரும் வழியில் செங்கண்ணனின் ஜீப் ஒன்று சுமார் 80 அடி பள்ளத்தில் அந்தொணியார் சர்ச்க்கு கொஞ்ச தூரத்தில் உருண்டு கிடப்பதாக பேசிக்கொண்டார்கள். கொஞ்சம் விசாரித்து, விசயம் அறிந்தவுடன் நேராக அரசு மருத்துவமனை நோக்கி சென்றேன்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில், அப்துல் கஃபூரை படுக்க வைத்து இருந்தார்கள். சுற்றி ஒரே போலிஸ் கூட்டம். உள்ளே அவன் அருகில் சென்றுஎன்னடா ஆச்சுஎன்று மெதுவாக விசாரித்தேன்.
மெதுவாக சிரித்தான். வாய் கொஞ்சம் சிரமபட்டு தான் திறந்தது.
நீ என்ன மாப்ள இங்கஎன்றான்.
உன்ன பாக்க வந்தா நீ இங்க படுத்து கெடக்குர. ஏண்டா. என்ன ஆச்சு?”
நானும் எவ்வளவு நாள்தான்டா என்னையே எமாத்தறது. இப்போலாம் லாரி ஒட்டுறது இல்ல. அவன் ஜீப் தான் ஒட்டுறேன். அவன் பெர்சனல் ட்ரைவர். கொஞ்ச நாளா பாத்துகிட்டே இருக்கேன். சும்மா வாப்பாவ பத்தி எதாவது சொல்லிகிட்டே இருப்பான். இன்னைக்கு காலைல வரும்பொது, ஏதொ பேசும்போது, நீயும் உன்  வாப்பா மாதிரி ஏமாளியா இருக்காதடா அப்துல்ன்னு ஆரம்பிச்சு, ரொம்ப நேரம் அட்வைஸ் பண்ணான். செம்ம வெறி ஆயிருச்சு. கரக்டா அந்த நேரம் பாத்து ஒரு ஃபோன். நம்ம ரங்கராஜன் இருக்காப்லைல, தெரியும்ல உனக்கு. அவரு மகன ஏமாத்தி, நெலத்த எழுதி வாங்கி இருக்கான். அந்த ஆள் அழுவுராரு ஃபோன்ல, இவன் பெரிய மயிரு மாதிரி, போய் சாவுயாங்கரான். உன்னை யாருய்யா ஏமார சொன்னதுன்னு கேக்குறான். எனக்கு என்னமொ இவன் என் வாப்பாகிட்ட சொல்ர மாதிரியே இருந்திச்சு. ஆனது ஆகட்டும்னு மயிரு ஒன்னாச்சுன்னு வண்டிய நேரா லெஃப்ட்ல எறக்கினேன். நல்ல ஸ்பீடு.... தா......லி. இன்னையோட சாவட்டும்னு தோனுச்சு. 80 அடி இருக்கும். மூனு பெல்டி. எனக்கு அடி கம்மிதான். திரும்பி பாக்குறேன்... அவனுக்கு தலையில நல்ல அடி... ஆனா சாவல....அப்பிடியேன்னு கெடக்கான். ஒடஞ்சு கெடந்த கண்ணாடிய எடுத்து ஒரு சொருகு....கழுத்துல....மூச்சு நின்றுச்சு. அதுக்குள்ள என்னைய வந்து தூக்கினானுங்க. அனா அந்த தா........லி செத்துட்டான் பாரு. இனி எந்த குடும்பமும் நடுதெருவுக்கு வராது பாரு. அது போதும். எனக்கு வேலை குடுத்தான், சாப்பாடு போட்டான், எல்லாம் சரி. ஆனா இந்த நெலமைக்கே அவன் தான காரணம். எங்க வாப்பா இன்னும் உயிரோட இருந்திருந்தா , நானும் படிச்சு, இன்னக்கு நல்லா இருந்திருப்பேன்ல மாப்ள. ............லி எல்லாத்தையும் கெடுத்துட்டான். இன்னைக்கு முடிச்சிட்டேன்.” என்றபடி சாய்ந்தான்.
இது கொலை கேஸ் அகாதாடா?”
அட போடா மாப்ள. இப்பொ இது மிஞ்சி மிஞ்சி போனா அக்சிடென்ட் கேசு”.
ம்ம். உடம்ப பாத்துக்க. நான் வரேன்.”
நான் சொன்னத வெளில சொல்லிராத. நானும் என் வெறிய எப்ப தாண்டா தீக்கறது. இனி எந்த குடும்பமும் நடுதெருவுக்கு வர கூடாது. அதுக்குத்தான் செஞ்சென். நாளைக்கு வா.” என்றான்.
வெளியில் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள். கையில் ஒரு குழந்தை தூங்கிகொண்டு இருந்தது. இவன் மனைவியாக இருக்கக்கூடும்.
கேட் அருகில் காரில் ஒரு பெண் அழுதபடி உட்கார்ந்து இருந்தாள். ஒரு 10 வயது பையன் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான். அது செங்கண்ணன் குடும்பம். அருகில் பெரும் கூட்டம் பிணத்தை வாங்க காத்திருந்தது. வன்மக்கண்ணியின் எந்த முடிச்சு இது என்று எனக்கு தெரியவில்லை. லேசாக பனி கொட்ட தொடங்கியது. அதில் நிரைந்து இருந்த வன்மத்தின் அடர்த்தியால் மூச்சடைத்தது.

1 comment: