Sunday 27 July 2014

Story 92: தண்ணீர்... தண்ணீர்...



தண்ணீர்... தண்ணீர்...

பூமி பிளப்பது போல் பளீர் என்று வெயில் சுட்டு எரிக்கும் நேரத்தில் அதாவது மதிய நேரத்தில், எவ்வளவு வெயில் சுட்டாலும் தாங்கும் நம்ம பூமி அதாவது நம்ம தமிழ் பூமியில் இருப்பதும் இல்லாதது போன்ற ஒரு உருவம். ஆம் ஒரு பென்சில் போன்ற ஒருவன் நாகரிகமாக உடை அணிந்து கொண்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டு இருக்கிறான். அவனது பெயர் வேலு. அவனுக்கு ஏதும் முக்கியமான வேலை இருப்பதாக தெரியவில்லை, ஆனால் அவன் சேர விரும்பும் இடத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் விரைவாக சேர நினைக்கிறான்.

அவன் பழைய காலத்து திரைப்படங்கள் போல கருப்பு வெள்ளை நிற உடை அணிந்து இருந்தான். வெள்ளை நிற சட்டையும் கரு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தான். பேருந்து நிலையத்தில் இவனோடு சேர்ந்து இன்னும் சில பேர் நின்று கொண்டு இருந்தனர். அவன் ஒரு ஐந்து நிமிடம் தான் காத்து கொண்டிருப்பான். அவனது முகம் கொஞ்சம் களைப்பாகவும், வெயிலில் வாடியும் இருந்தது. ஆனால் அந்த களைப்பு சில நொடிகளில் மாறியது, பானி பூரி தள்ளு வண்டியை பார்த்தவுடன். அவன் பானி பூரியை பார்த்தவுடன் ஒரு கணம் அவனது நினைவில் பானி பூரியை காசை சுண்டி விடுவது போல் சுண்டி விட்டு அது மேல மெல்ல பறந்து 360 டிகிரி-ல் சுற்றி கொண்டே மெல்ல கீழே விழ அவனது அகல பாதாள குகை போல் உள்ள தனது வாயை திறந்தபடியே நிற்கின்றான், குலாப் ஜாமுன் ஜீராவில் விழுவது போல, செர்ரி பழம் பாலில் விழுவது போல, விஸ்கி -ல் ஐஸ்கட்டி விழுவது போல, பூரி அவனது வாயில் மெல்ல விழுந்தது. அவன் அப்படியே கண்களை மூடி பல்லால் அரைக்க அவனது நாக்கு சுவையை சுவைக்க மீண்டும் நிகழ் காலத்துக்கு வந்தான்.

அவனுக்கு பானி பூரி என்றால் அவ்வளவு இஷ்டம். சரி அதை வாங்கி சாப்பிடலாம் என்று அந்த தள்ளு வண்டியை நோக்கி செல்கிறான். அப்பொழுது அவன் எதிர்பார்த்து கொண்டிருந்த பேருந்து அங்கு வந்து நின்றது. ஆனால் பானி பூரியோ அவனை பேருந்தை மறக்க செய்தது. ஓடோடினான் பானி பூரியை நோக்கி. வேகமாக சென்று அண்ணா பானி பூரி ஒரு ப்ளேட் எவ்வளவு என்று கேட்டான், பத்து ரூபாய் என்றார் பானி பூரி கடைக்காரர். ஒரு ப்ளேட் கொடுங்க என்று கேட்டு கொண்டு நாவில் எச்சில் ஊற கண்களில் சந்தோசம் பொங்க கடைக்காரனிடம் பானி பூரி ப்ளேட்  வாங்கி ஒன்றன் பின் ஒன்றாக சுவைக்கத் தயாரானான். பானி பூரியை ஓவ்வொன்றாக புதினா தண்ணியில் முக்கி கொடுக்க, அதை சுவைக்க ஆரம்பித்தான் வேலு. சுவையில் மெய் மறந்தான், காரத்தில் கண்ணீர் வடித்தான். இப்படி அவன் சுவைத்து கொண்டு இருக்கும் போதே அவன் போக வேண்டிய பேருந்து பேருந்துநிறுத்தத்தை - கடந்து சென்று கொண்டு இருந்தது. இதை விட்டால் இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பேருந்து கிடையாது என்று அவன் மேல் பாக்கெட்டில் இருந்த பத்து ரூபாயை அவசர அவசரமாக கடைக்காரனிடம் கொடுத்து விட்டு வேகமாய் பேருந்தை பிடிக்க சென்றான்.

மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்து ஒரு பெரிய ஜம்ப் செய்து பேருந்தில் ஏறினான். அவனுக்கு உட்கார இடம் கிடைத்தது, இடம் கிடைத்த கையோடு தனது சட்டை பாக்கெட்டில் இருந்த கடைசி ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டிக்கெட் வாங்கினான். ஓடி வந்ததால் அவனுக்கு மூச்சு கொஞ்சம் அதிகமாவே இறைத்தது, கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆனான். இப்பொழுது அவனுக்கு புதுசாக ஒரு பிரச்சனை உருவானது, அதுதான் தாகம். பானி பூரி சாப்பிட்டதால் வந்த காரம், அவன் வயிறை எரிக்கிறது, நெஞ்சை அடைக்கிறது. நிலத்தில் விழுந்த மீன் போல இவன் தண்ணீருக்காக துடிக்கிறான். பேருந்தில் அங்கும் இங்கும் திரும்பி பார்க்கிறான், ஒரு 2 வயது குழந்தை அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பாட்டிலை திறந்து கொண்டு இருந்தது. இவன் அதை பார்த்து அவர்களிடம் தண்ணீர் கேட்கலாமா வேண்டாமா என்று மனசுக்குள் ஒரு சண்டையே போட்டுக் கொண்டுஇருந்தான். சரி காரம் தாங்க முடியவில்லை அவர்கள் கிட்ட கேட்டுவிடலாம் என்று எண்ணி அவர்கள் அருகில் சென்றான். அப்பொழுது அந்த குழந்தை தனது நாக்கை நீட்டி பாட்டிலின் உள்ளே விட்டு தண்ணீர் குடித்து கொண்டு இருந்தது. இது அவனுக்கு அறுவறுப்பாக இருந்தது, இந்த தண்ணீர் ஒன்றும் எனக்கு தேவை இல்லை என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அடுத்த பேருந்துநிறுத்தத்திலேயே இறங்கினான்.

அவனது தாகம் இப்பொழுது அதிகம் ஆனது, உடனே அருகில் இருக்கும் கடைக்கு போய் தண்ணீர் பாட்டில் வாங்கலாம்னு முடிவு செய்தான். நம்ம ஊரில் தான் வாட்டரும் -ம் குவாட்டரும் -ம் அரசாங்கமே காசுக்கு விக்குதே, அதனால அம்மா தண்ணீர் பாட்டிலே வாங்கலாம் என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டான். காசை எடுக்கலாம் என்று அவனுடைய பர்சு - தனது பின்னாடி பாக்கெட்டில் தேடுகிறான், அப்பொழுது தான் அவனுக்கு தெரிய வருகிறது அவனது பேண்ட் பாக்கெட் கிழிந்து இருக்கிறதென்று. ஐயோ எவனோ பிக் பாக்கெட் அடிசிட்டாண்டா என்று அதிர்ச்சி ஆகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் தாகத்தோடும் காரத்தோடும் அங்கேயே நிற்கின்றான். பர்சு போனால் போகட்டும் தண்ணீர் இப்போது வேண்டும் என்று முடிவு எடுக்கிறான். கொஞ்சம் தூரம் நடந்து அருகில் உள்ள சில கடைகளில் போய் குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று கேட்கிறான். அப்பொழுது ஒரு கடைக்காரர் "தம்பி நம்ம ஊர்ல என்னைக்கு கரண்ட் வந்துருக்கு, இன்னைக்கு காலைல இருந்து பவர் ஷட்டெளன்,  எங்கேயும் மோட்டார் ஓடல, தண்ணீர் எங்கேயும் இலவசமா கிடைக்காதுப்பா " என்று ஏற்ற இறக்குதுடன் கூறினார். இதை கேட்டவுடன் காரத்துடன் கோபமும் அவனுடன் சேர்ந்து கொண்டது.

தண்ணீர் வேறு எங்கேயாவது கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தான். அப்போது ஒரு குடிமகன் நன்கு மது அருந்தி விட்டு தள்ளாடி வந்து கொண்டு இருப்பதை கண்டான். "மோட்டார் -  தண்ணி வருதோ இல்லையோ , இந்த டாஸ்மாக் மட்டும் எப்பவுமே தண்ணி இருக்கு" என்று தனக்கு தானே நினைத்து கொண்டான். குடிகாரனிடம் மெதுவாக சென்று "குடிக்க ஏதாவது கிடைக்குமா அண்ணே " என்று கேட்டான். அதற்கு குடிகாரன் "நில்லு நில்லு...பாட்டில் ஒன்னு இருக்கு " என்று குடிகார பாஷையில் பேசி தள்ளாடிக் கொண்டே தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை காட்டினான். ஆனால் அந்த பாட்டில் கூட காலியாக தான் இருந்தது. அந்த காலி பாட்டிலை திறந்து குடிகாரன் அதை தட்டி தட்டி கடைசி சொட்டையும் ருசித்தான். இதை பார்த்த வேலுவுக்கு எரிச்சல்தான் வந்தது. "இவனெல்லாம் ஒரு ஆளு இவன் கிட்ட போய் கேட்டேன் பாரு" என்று தனக்கு தானே திட்டி கொண்டான்.

தண்ணீர் தாகத்தில் மிகவும் களைப்பாக காணப்பட்டான். உடம்பு முழுவதும் வியர்வை, அவனது வெண்ணிற சட்டை அன்றைக்கு கண்ணாடி சட்டையாக தெரிந்தது. அருகே ஒரு சிறு கோவில் ஒன்று தென்பட்டது, அங்கே மெதுவாக நடந்து சென்றான். அப்பொழுது அவன் பேருந்தில் பார்த்த அதே குழந்தை தன் அம்மாவுடன் அவனை கடந்து செல்கிறது. அப்பொழுதும் அக்குழந்தை தன் நாக்கை உள்ளே விட்டு அதே பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டுஅவனை வெறுப்பேற்றுவது போல் சைகை செய்கிறது. அவனால் அதை கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெறுப்பின் வேகத்தில் திரும்பி பார்த்த போது, ஒரு வயசான மூதாட்டி கையில் தேங்காயுடன் சாமிக்கு  உடைப்பதற்காக நின்று கொண்டிருந்தாள். அந்த மூதாட்டி அருகே சென்று "பாட்டி நான் தேங்காய் உடைத்து தரேன் நீங்க போங்க" என்று சொன்னான். அதற்கு மூதாட்டி தனது பொக்கை வாயால் "ரொம்ப சந்தோசம் பா.. என் அய்யா.. இந்தா பிடி" என்று கூறினார். அவன் அருகே உள்ள ரிக்க்ஷாவில் பாட்டியை ஏற்றி விட்டு " நான் உடைச்சிடரேன்... நான் உடைச்சிடரேன்..." என்று சொல்லி கொண்டே ரிக்க்ஷா போகும் வரை தேங்காய் உடைப்பது போல் சைகை செய்கிறான்.  "இந்த கண்ணனுக்கு தெரியாத கடவுளுக்குத் தான் இந்த வீனா போக போகும் தேங்காயா??!! இது இன்னைக்கு எனக்கு உபயோக படட்டும்" என்று மனதில் நினைத்து கொண்டு மெதுவாக தேங்காயை அருகில் இருந்த கல்லில் இடிக்கிறான். லேசாக இடிக்கிறான் உடையவில்லை, மறுபடியும் இடிக்கிறான் லேசான விரிசல் மட்டுமே விழுகிறது, இன்னும் கொஞ்சம் பலமாக இடிக்கிறான். "போச்சு.. இதுவும் போச்சு" என்று எரிச்சலில் கத்துகிறான். ஏன் என்றால் அவன் உடைத்த வேகத்தில், தேங்காய் உடைந்து வெளியே கொட்டி விட்டது. அவனுக்கு இதிலும் பெரிய ஏமாற்றமே.

இப்போது வயிற்றில் எரிச்சல் அதிகம் ஆனது, தண்ணீர் தண்ணீர் என்று அவன் உடல் பாகங்கள் அனைத்தும் அவனை கெஞ்சி கேட்கிறது. திரும்பி நடந்தான் மறுபடியும் அதே குழந்தை. அந்த குழந்தையின் அம்மா அவளை தூக்கி வைத்துகொண்டு நடந்து கொண்டு இருந்தார்கள். இப்பவும் அந்த குழந்தை அவனை பார்த்து கொண்டு நாக்கை நீட்டி தண்ணீர் குடிப்பது போல் பாசாங்கு செய்தது. எரிச்சலின் உச்சிக்கு சென்றான். வேகமாக அந்த குழந்தையை நோக்கி ஓடினான், அந்த குழந்தை வைத்து இருந்த பாட்டிலை தட்டி கொண்டு அவள் அம்மாவை லேசாக இடித்து கொண்டும் ஓடினான். பாட்டிலை பறிகொடுத்த அடுத்த நொடியில் அந்த குழந்தை கத்திக்கொண்டே தன் அழுகையை ஆரம்பித்தது. அம்மாவோ ஏதோ நகை பறித்து கொண்டு போய் விட்டான் என்று நினைத்து திருடன் திருடன் என்று கத்த ஆரம்பித்துவிட்டாள். அருகே இருந்தவர்கள் அவனை துரத்தி கொண்டு ஓடினார்கள். அம்மா தன் குழந்தையின் செயின் - பாக்கிறாள் "எதுவும் திருடு போகவில்லையே எதை எடுத்திருப்பான்" என்று தனக்குள்ளே நினைத்து யோசித்து கொண்டு இருந்தாள்.
வேலு தனது தாகத்தையும் பொருட்படுத்தாமல் வேகமாக ஓடுகிறான். அவன் பின்னாடி ஒரு 5 அல்லது 6 பேர் ஓடி வருகிறார்கள்.  இது தான் நல்ல தருணம், அப்படியே ஓடிக்கொண்டே தண்ணீரை குடித்து விடலாம் என்று, பாட்டிலை திறக்க முயற்சி செய்யும் போது , அந்த பாட்டில் கீழே விழுந்து விடுகிறது. கீழே விழுந்த பாட்டில் நடு ரோட்டில்  உருண்டு கொண்டு இருந்தது. இவனோ ரோட்டை க்ராஸ் பண்ணி விட்டான். அவனை துரத்திய ஆட்கள் அவன் எதிர் புறம் நிற்கிறார்கள். அவனுக்கு இப்போது ராக்கெட் போகும் வேகத்தை விட ரொம்ப சீக்கிரமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும், அதாவது அடியா இல்லை தண்ணீரா என்று. சற்றும் யோசிக்காமல் தண்ணீர் என்று முடிவு செய்து , நடு ரோட்டில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுக்க சென்றான். பாட்டிலை எடுக்க கையை நீட்டினான். சர்ரென ஒரு கார் அந்த பாட்டில் மீது ஏறி அதை நசுக்கி சென்றது. தண்ணீர் பாட்டில் உடைந்து தண்ணீர் எல்லாம் கீழே வீணாகி கிடந்தது. அதை பார்த்த அடுத்த நொடியில் அடி வாங்காமல் தப்பிக்க உசேன் போல்ட் -  விட வேகமாக ஓடினான்.

சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள பார்க் - அடைந்தான். மூச்சு வேற மிகவும் இறைக்கிறது. நாவெல்லாம் வறண்டு பாலைவனம் போல் இருந்தது. நெஞ்சு பட பட வென்று  அடிக்க, தண்ணீர் தண்ணீர் என்று தனது வாயால் சொல்ல கூட முடியாமல் சோர்ந்து போனான். மெதுவாக தட்டுத்தடுமாறி அந்த பார்க்கில் ஏதாவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடுகிறான். தேடும் போது அங்கங்கே பெஞ்சிலும் புதரிலும் இளஞ்ஜோடிகள் நெருக்கமாய் இருப்பதைக் கண்டான்.  "இது என்ன பட்டப் பகலில் பப்ளிக்கில் எச்சில் பரிமாற்றம்.. தூ.." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான். தூரத்தில் ஒரு குழாயை கண்டான், ஆர்வத்தோடு ஓடினான். குடிநீர் என்று எழுத பட்டு இருந்தது. கண்களில் சந்தோசம். ஆனால் அவனால் அதை தனது முகத்தில் காட்ட முடியவில்லை. மெல்ல குழாயை திறந்தான், தண்ணீர் வரும் என்று எண்ணி கையை நீட்டினான், அங்கும் அவனுக்கு சோகமே. தண்ணீர் துளி கூட வரவில்லை. அவனால் எந்த ஒரு ரியேக்சன் -ம் கொடுக்க முடியவில்லை. கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது, தனது நாவால் அதை சுவைக்க முயற்சித்தான். ஆனால் அதுவும் அவனுக்கு பத்தாதே...

கண்கள் இருண்டன, அவனுக்கு பூமி சுத்தியது, மயக்கம் அவனை தள்ளாட நடக்க வைத்தது. பாலைவனத்தில் கண்ட கானல் நீர் போல அங்கு ஒரு குட்டை அவன் கண்ணுக்கு தெரிந்தது. தள்ளாடியபடியே அதை நெருங்கி சென்றான். வேற வழி இல்லை, இந்த அழுக்கு தண்ணீர் தான் என் உயிரை காக்கும் என்றால் இதை குடித்து விடலாம் என்று இரு கைகளை சேர்த்து அங்கு தண்ணீரை எடுத்தான். அவன் கையை வைத்து தண்ணீரை எடுக்கும் போது, ஒரு தண்ணீர் துளி அந்த குட்டையின் மேல் விழுவதை கண்டான். அடுத்த வினாடியில் ஒரு துளி பல துளிகளாக குட்டையின் மேல் விழ ஆரம்பித்தது. கார்மேகம் சூழ்ந்தன, குளிர் காற்று சில்லுனு வீச, மழை பொழிய ஆரம்பித்தது. அவன் தன் முகத்தை வானத்தை நோக்கி பார்த்து கொண்டு, தனது வாயை திறந்தபடியே நின்றான். மழை துளிகள் அவனது வாயில் நேராக விழுந்தன. ஒவ்வொரு துளியையும் அவன் அமிர்தம் போல் சுவைத்தான். கண்களில் பரவசம், நெஞ்சில் குதுாகலம், வேகமாக அருகில் இருந்த தேங்காய் மட்டையை எடுத்து அதில் மழை நீரைப் பிடித்துப் பருக ஆரம்பித்தான்.  தன் உயிர் காத்த மழையைக் கண்டு, அதில் நனைந்தபடியே நடனம் ஆட தொடங்கினான். அவன் வாழ்நாளில் என்றும் பெறாத சந்தோசம் இன்று பெற்றது போல் உணர்ந்து ஆனந்த கூத்தாடினான் மழையுடன். அருகில் உள்ள அனைவரும் இவன் கிறுக்கு போல என்று சொல்லி கொண்டு சென்றார்கள். உதவி செய்யா மக்கள் பழி பேச மட்டும் முதலில் வருவார்கள் என்பதை அன்று அவன் நன்றாக புரிந்து கொண்டான். அவர்கள் பேசுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் அன்று மழை முடியும் வரை அவன் ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது...

No comments:

Post a Comment