Sunday 27 July 2014

Story 97:காஃப்கா எழுதாத கதைகள்



காஃப்கா எழுதாத கதைகள்

                இப்படியே காலி அறையில் உட்கார்ந்து கொண்டு வெற்றுத்தாளையும், விட்டத்தையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் எப்படி காஃப்கா ஆக முடியும்? இரண்டு நாட்களாக இப்படி வெறுமனே பல மணி நேரங்கள் கழித்தாயிற்று. இன்னும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. எழுதுவதற்கு எக்கச்சக்கமான விஷயங்கள் மனத்தில் குவிந்து கிடப்பதைப் போலவே இருக்கிறது. ஆனால் எழுத உட்காரும்போது புறமனதில் இருக்கும் அந்த சிந்தனைகள் அகமனதுக்குள் சென்று விடுகின்றன.

                மனதுக்குள் குவிந்து கிடக்கும் அந்த வெளிவராத கதைகளை நம்பிக் கொண்டிருந்தால் இப்பிறவியில் காஃப்காவாக முடியாது. வெளியுலகத்தில் எத்தனையோ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பொறுக்கிக் கொள்ள வேண்டியது தான். மனதிலிருக்கும் கதைகள் வெளிவந்தால் வரட்டும்; வராவிட்டால் எப்படியாவது நாசமாகப் போகட்டும். தீர்மானமான முடிவோடு பேனாவை மூடி வைத்து விட்டு எழுந்தேன். சாலையில் இறங்கும் போது சாயங்காலம் ஆகியிருந்தது.

                நகரம் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பஸ்களில், ஆட்டோக்களில், கார்களில் வேலைக்குப் போயிருந்தவர்கள் தாங்கள் போன வழியிலேயே திரும்ப வந்து கொண்டிருந்தார்கள்; தங்களுக்கிருந்த அந்த ஒரே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். நாளைக்கும் அவர்கள் அப்படியே போய் திரும்ப வருவார்கள். அவர்கள் வேலைக்குப் போவதை நிறுத்தும் போது அல்லது இறந்து போகும் போது அவர்களின் பிள்ளைகள் வேலைக்குப் போகத் தொடங்கியிருப்பார்கள். மனித இனம் அழியும் வரைக்கும் அல்லது பூமி அழியும் வரைக்கும் இது நடந்து கொண்டே இருக்கும். நினைக்கும் எனக்கே இவ்வளவு அலுப்பாக இருக்கிறது. இதைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு அலுப்பாக இருக்கும்?

                நான் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கதைகளை ஒவ்வொரு முகங்களிலுமாகத் தேடிக் கொண்டிருக்கும் போது, நிரம்பி வழியும் அட்டைப்பெட்டி போலிருந்த ஒரு பேருந்து என் முன் வந்து நின்றது. இவ்வளவு அழுத்தங்களைத் தாங்கியும் மூலைகளில் பிளக்காத அந்த உலோக அட்டைப்பெட்டியின் வன்மையை நினைத்து நான் வியந்து கொண்டிருந்த போது ஒரு அழகான இளம் பெண் அந்த பேருந்திலிருந்து இறங்கினாள். அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அணிந்திருந்த அடையாள அட்டை என் கண்களிடம் சொல்லியது.

                இவளைப் பின் தொடர்ந்து போனால் ஏதேனும் கதை கிடைக்கக் கூடும். அவள் என்னைக் கடந்து ஐந்தடி தூரம் போனதும் அவளைப் பின் தொடர ஆரம்பித்தேன். அவன் காதில் இயர்ஃபோன் பொருத்திக் கொண்டிருந்தாள். அதில் பீத்தோவனுடைய ஒன்பதாம் சிம்பொனியின் இரண்டாம் இழை இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்; இல்லையென்றால் ஜஸ்டின் பீபர் 'பேபி' என்று மூச்சு விடாமல் பத்து முறை அலறிக் கொண்டிருக்கலாம். அவள் அந்த இயர்ஃபோனை செல்ஃபோனில் இருந்து உருவும் வரை அது எந்தப் பாட்டு என்று எனக்குத் தெரியப் போவதில்லை. ஷ்ரோடிஞ்சர் பூனையைக் கொண்டு செய்த அந்த மன ஆய்வை விட இந்த மன ஆய்வே எனக்கு வெகு சிக்கலாகப்பட்டது. ஒருவேளை அது புரிதலின் பிழையாகவும் இருக்கலாம்.

                அந்தப் பெண் தனது இயர்ஃபோனை கடைசி வரைக்கும் காதிலிருந்தும் கழற்றவில்லை; செல்ஃபோனிலிருந்தும் கழற்றவில்லை. அவளுடைய விடுதிக்குள் நுழைந்தாள். வெளியே நின்று கொண்டிருந்த அந்த மீசைக்கார வாட்ச்மேனைப் பார்க்கும் போது காரணமற்ற பயமொன்று மனதில் கிளம்பினாலும் அதை முகபாவத்தில் வெளிக்காட்டாமல் அந்த விடுதியைக் கடந்து நடந்தேன். அந்தக் கதை வார்த்தைகளற்று விடுதிக்குள் நுழைந்துவிட்டது. கொஞ்சம் காற்றாவது வாங்கிப் போகலாமென்று அருகிலிருந்த அந்தப் பூங்காவினுள் நுழைந்தேன்.

                பூங்கா முழுக்கக் காதல் ஜோடிகளால் நிறைந்திருந்தது. அதைப் பார்த்தவுடன் உற்சாகம் தொற்றிக் கொண்டது. இன்றைக்கு ஒரு காதல் கதையாவது கிடைத்து விடும். அதை அழியாத அமர காவியமாக்கி விட வேண்டியது தான்.

                புல்வெளியில் அரையிருட்டான மரநிழலில் அமர்ந்திருந்த அந்தக் காதல் ஜோடியின் அருகில், அந்த மரத்தின் மற்றொரு புறத்தில் உட்கார்ந்தேன். அவர்கள் பேச்சை மட்டுமே உபயோகித்து ரோமியோ - ஜூலியட்டைப் போல் அழியாத காவியமொன்றை உருவாக்கி விடலாம் என்ற கனவுடன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். சொற்கள் எதுவும் காதில் விழவில்லை. முனகலொலிகள் மட்டுமே கேட்டன.

                சந்தேகப்பட்டுத் திரும்பி, இருட்டுக்குப் பழகிப் போயிருந்த கண்களால் அவர்களைப் பார்த்தேன். என் கதையின் முதல் வரிகள் மனதில் தோன்றின. "அவள் அவனது மடியில் படுத்திருந்தாள். அவன் அவளுடைய டி-ஷர்ட்டுக்குள் கைவிட்டு...". வேண்டாம். முதல் கதையே இப்படி இருக்க வேண்டாம். "அந்தமாதிரி கதைகள்" எழுதுகிறவன் என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

                இருள் முழுதாய் கவிந்திருந்தது. பூங்காவை விட்டு வெளியேறி வீடு நோக்கி நடந்தேன். நாளைக்கு வேறு எங்காவது போகலாம். அப்பொழுது எனக்காக, என் ஒருவனுக்காக மட்டும் காத்திருக்கும் கதையைக் கண்டுபிடிக்க முடியலாம்.


No comments:

Post a Comment