Wednesday 30 July 2014

Story 109: காதல் இயந்திரம்



காதல் இயந்திரம்
பொங்கும் எழில் எல்லாம் ஆங்காங்கே தங்குவதால் பொழில்நாடு எனப் பேசலான எழில்நாடு - எண்ணிக்கையில் ஈக்களைப்போல ஆக்களையும், எண்ணங்களில் ஆக்களைப்போல ஆட்களையும், வண்ணங்களில் பூக்களைப்போல பாக்களைப்பாடி பறந்துதிரியும் புட்களையும் கொண்ட தென்தவளம் என்கிற அத்திருனாட்டை பாண்டியமன்னனின் சிற்றரசாய் ஆண்டுகொண்டிருந்தான் மன்னன் குலவிழியான். அவனுக்கு ஒரே ஒரு மகள் - தேனிலினியாள். அவளழகு எழுத்திற் பொழிதற்பாலதன்று. கல்லிற் பொளிதற்பாலது. இப்படி இன்னொரு பெண்ணைப் படைக்க தன்னால் முடியாதெனவெண்ணிப்போலும், இளவரசி விழிதிறக்கமுன்னமே தன்விழிமூடினாள் பட்டத்தரசி. தன இல்லத்தரசி போனதும், தாயுமாயிருந்து தன் உள்ளத்தரசியாய் வளர்த்துவருகிறான், இவளை அரசன். தோழர்களோடும் விளையாடும் வயதுமுடிந்து, தோழிகளோடு மட்டும் விளையாடும் வயதுவந்துவிட்டிருந்தது தேனுக்கு. அந்திப் போதுகளில் அரண்மனையை அண்டிய தேன்வழியாற்றங்கரைக்குத் தோழியரோடு சென்று, நிலவு நிலவுக்கு வரும்வரை விளையாடி, சிலவேளை நீராடி வருவது அவளின் வழக்கம். ஆதாலாலேயே, அந்தப் பகுதிக்கு ஆடவரோ, நீர் ஆடுவோரோ சொல்லக்கூடாது என்பது அன்றைய பழக்கம்.
*
அமாவாசை - இரவின் முந்திய அந்தி.
தோழியரோடு ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு உறுத்தல்- யாரோ அந்நியன் அருகாமையின் குறுகுறுப்பு. மீன்விழிகள் மின்னுமிழ சட்டென்று திரும்பினாள். அவள் பார்த்த திசையில் - பார்த்த நொடியில் கவரக்கூடிய கட்டழகுடன் காளை ஒருவன் காலை அலம்பிக்கொண்டிருந்தான். மன்மதன் ஏற்பாடுபோலும், தற்செயலாய் அவனும் இவளைப் பார்த்தான். நான்கு விழிகளும் சந்தித்தபோது அவளது நெஞ்சம் சில்லுச்சில்லாய் உடைந்துபோனது.
கூர்மையாலும், குறும்புத்தனத்தாலும் முறையே அறிஞரையும், அரிவையரையும் கவரும் விழிகள், மொழியாலும் முறுவலாலும் முறையே புலவரையும், பெண்டிரையும் கட்டக்கூடிய செவ்வாய், அகலத்தாலும்,அழகாலும் முறையே பகைவரையும், பாவையரையும் கலங்கடிக்கும் மார்பு - ஆண்களில் முப்பத்திரண்டு லட்சனம் தேடுவோர் அவனில் ஒன்றிரண்டு அதிகமாகக் காணலாம் போலிருந்தது. இப்படியொரு காளையைக் காணும் வாய்ப்பை இதுவரை கொள்ளாத எந்தக் கன்னியின் உள்ளமும், காதலில் விழுமா, விழாவா?
கண்கள் நான்கும் கைதாகிக் கிடக்க, அவன் அடியெடுத்து அடியெடுத்து அருகில் வந்தான். இவள் அடியெடுத்து அடியெடுத்து அப்பால் போனாள். ஆனால் நின்ற இடத்திலேயே நின்றாள். நாணம் பின்னால் தள்ளத் தள்ள, காதல் அவளை முன்தள்ளியது. அருகிய இவன், மருகிய அவளின் கைகளைப் பற்றமுயல, நாணம் மேலிட அவள் அந்த இடத்தை விட்டகல முயல, மீண்டும் மன்மதன் ஏற்பாட்டால் காலிடற, விழவிருந்த அவளை இவன் இடையில் பிடிக்க, இடையில் இருவருக்கும் இம்மியின் குழந்தையளவே இடைவெளி. இதன்பின்னும் இருவருக்கும் காதல்தீ பற்றாவிட்டால் இவர்களின் வயதுக்கும் மதிப்பில்லை, மன்மதன் ஏற்பாட்டுக்கும் மதிப்பில்லை.
பற்றிக்கொண்டது, இருவரும் விழுந்தார்கள். காதலிலும்.
*
அமாவாசை தொலைத்த நிலவின் பாதியை மீட்டிருந்தது காலம்.
இப்போதெல்லாம் இளவரசி தோழி ஒருத்தியோடு மட்டும்தான் ஆற்றங்கரை வருகிறாள். காதல்செய்ய இவளும், காவல்செய்ய அவளும். காதல்மொழி பேசிப் பேசியே அந்திப்பொழுதின் சந்திப்புகளில் சுகம்கண்டார்கள் காளையும், கன்னியும். அன்றைய அந்தியும் அவ்வண்ணமே.
அவள் கரங்களைக் கையிலெடுத்தான். “அனிச்சம்பூ பட்டாலே வாடிடுமோ நின்கரங்கள்.. இத்தனை மென்மையா..”
போதும், புகழ்ச்சிமொழி.. கண்டதும் காதலுற்றுவிட்டேன்.. தங்கள் பின்புலம் தெரியவில்லை, மன்னரின் முன்னிறுத்த என்னவழி என்றும் புரியவில்லை.”
முன்னமே சொன்னேனே.. நான் யார் என்பது உன்னால் அறியவோ, புரியவோ முடியாதது. ஆனால் நான் உன்னைக் கைப்பிடிப்பது உறுதி. இது உறுதிமொழி, என் தேன்மொழியே.. நான்வந்த நோக்கம் வேறுதான், ஆனால் அதுமறக்க, இந்த நறுமுகையின் முறுநகை என்னை சிறைசெய்து விட்டது.”
காதல்மொழிகள் தொடர்ந்தன. நிலவும் காதலுடன் வளர்ந்தது.
*
அன்று பௌர்ணமி.
வழமை போல சந்திப்பு, வழமைக்கு மாறாய் அவன் முகம் வாடியிருந்தது. இருவருக்கும் இடையேயிருந்த மௌனத்தை அவள் கலைத்தாள். “அன்பே, இப்படியே நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டும், நிலவும் நிலைக்கவேண்டும், காலமெல்லாம் இப்படியே கடந்துபோக வேண்டும்.”
என் அவாவும் அஃதே.. ஆனால் அன்பே.. ஒருவேளை நான் உன்னைப் பிரியநேர்ந்தால் - அதுவும் இன்றே - என் செய்வாய்? என்னை மறப்பாயா? வெறுப்பாயா?” ஏதொ ஒன்றை தொடக்கினான். அவள் தடுத்தாள். “கற்பனைகூட வேண்டாம். காதல் என்பது அன்பு மட்டுமல்ல, நம்பிக்கை! மூச்சுள்ளவரை உங்கள் நினைப்பு, உங்கள் நினைப்புள்ளவரைதான் மூச்சு.”
அவன் முகத்தில் ஏக்கம், கண்களில் சோகம். மௌனம் மறுபடி இடத்தில் நிலவொளியுடன் நிரவியது.
ஒருவர்மடி ஒருவராகச் சாய்ந்து கண்மூடியதில் அன்புக்குரிய ஆடவன் அரவணைப்பில் உறங்கிவிட்டாள் அன்னமொத்தாள்.
தொலைவின் ஆந்தையின் ஆய்க்கினையால் தற்செயலாய்க் கண்விழித்தாள். “ஐயகோ.. நித்திரை வந்ததும் தெரியவில்லை, நிசி போனதும் தெரியவில்லை.. அரண்மனையில் தேடுவார்கள், வருகிறேன் அன்பே..” என்று திரும்பினாள்.
அவனைக் காணவில்லை.
***
ஜீவனின் ஆய்வுகூடம்.
02 ஒகஸ்ட் 2190
சாத்தியமே இல்லை!”
நண்பன் கடைசியில் கால இயந்திரத்தைக் கண்டுபிடித்தே விட்டான் என்கிற சந்தோஷத்தில் பிரதீப் சொன்ன வார்த்தைகள் அவை.
டைம் மிஷின் பற்றி அலுப்பூட்டும் கதைகள்தான் படித்திருக்கிறேன். அதிலும் அந்தக்காதல் இயந்திரம்கதை.. சே..! சரி, அதைவிடு.. எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு விளக்கமாகச் சொல்லு, கேட்போம்.”
மண்ணைக் கிளறி மண்டையோடு தேடும் உன் மண் மண்டையோடு இந்த நான்கு பரிமாண விஷயங்கள் ஒத்துப்போகுமா? விடேன்.. டைம் மிஷின் கண்டுபிடித்துவிட்டேன், அதைத்தான் நீ பார்க்கிறாய். அவ்வளவுதான். போதுமா?”
வாழ்த்துக்கள்! இந்தவருட நோபல் உனக்குத்தான்.”
நோபல் என்னடா நோபல், இது எனக்குத் தரப்போகும் காசில் நானே ஒரு ஜீவன் பரிசு தொடங்குவதாகத் திட்டம். சிறந்த தொல்பொருளியலாளர் என்று உனக்கு ஒரு விருது தருகிறேன். நானும் தராது விட்டால் உனக்கு வேறு யார்தான் தரப்போகிறார்கள்?”
எல்லாம் சரியென்றால், உலகத்துக்கு வெளியிட வேண்டியதுதானே?”
அது சரிதான், ரோபோக்களை இறந்தகாலத்துக்கு அனுப்பிப் பார்த்துவிட்டேன். எல்லாம் சரி. ஒருமுறை மனிதர் ஒருவரையும் அனுப்பிப் பார்த்துவிட்டால், எல்லாம் ஓகே ஆகிவிடுமல்லவா?”
அதற்கு உனக்கு ஒரு துணிச்சலான இளிச்சவாயன் தேவை, அது நான்தான்.. அப்படித்தானே?”
பயப்படாதே.. ஒரு பிரச்சனையும் இல்லை. இதோ பார், அபோர்ட் பட்டன்.. ஏதும் பிரச்சினை, உன்னைக் காணவில்லை என்றால் கூட இங்கிருந்து நான் உன்னை நிகழ்காலத்துக்குத் திருப்ப எடுக்க முடியும். யாரோ ஒருவரை அனுப்ப முடியாது. போய் இறந்தகாலத்தில் ஏதாவது குளறுபடி செய்துவிட்டால் ஆபத்து. நம்பிக்கையானவரை அனுப்பவேண்டும். அத்தோடு நீதான் பழையகாலத்தை ஆராய்ந்து வைத்திருக்கிறாயே, நீ போனால் எந்தக் காலத்துக்கும் ஏற்றாற்போல மாறிக்கொள்ளுவாய், நீ ஆராய்ச்சி செய்யும் மனிதர்களை, லைவ் ஆகவும் அலைவ் ஆகவும் பார்க்கலாம்... மேலும் இதில் முதன் முதலில் பயணித்தவர் என்கிற பெருமை வேறு..”
சரி, சரி.. இப்போதே புறப்படவா?”
அவசரப்படாதே, இதை இயக்குவது உள்ளிட்ட சில பயிற்சிகள் உனக்குத் தரவேண்டும். நாளை காலை போகலாம்.”
*
மறுநாள் : ஒகஸ்ட் 03
சரி, ஏறு.. இது ஒளியைவிட வேகமாக இயங்குவதால் இது இயங்குவது உனக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது. செட் செய்து எங்கோ ஒரு காலத்தில், ஏதொ ஒரு இடத்தில் இறங்கியபிறகு அங்கே சமாளிப்பது உன்பாடு.”
அதை நான் பார்த்துக் கொள்கிறேன், வரட்டுமா?”
பொறு, போகும் இடத்தில் எந்த உயிரையும் அழிக்காதே, முக்கியமாக உருவாக்காதே. பூமியின் சமநிலையே குலைய வாய்ப்புள்ளது. பாதுகாப்புக்காக நீ வாழுகின்ற ஒரு இறந்தகாலத்துக்குப் போகமுடியாதவாறு செய்துள்ளேன். அடுத்தது  பதினைந்து நாட்களுக்குமேல் தங்காதே. பிறகு திரும்பி வருவதற்கு பேட்டரிகள் சக்தி போதாது போய்விடும்.”
பை
வாழ்த்துக்கள்
*
ஜீவன் கூட்டிக்கழித்துப் பார்த்தான். பிரதீப் போய் 13 நாட்களாகி விட்டன, இன்னும் வரவில்லை. என்ன செய்கிறான் அப்படி?
14ஆம் நாள்.
இன்னும் வரவில்லை.
15ஆம் நாள். வரவில்லை.
பொறுப்பில்லாத பயல்! 15நாட்களுக்குள் வரச் சொன்னேனே.. ஏதும் பிரச்சனையா?’ வேறு வழி இல்லை.. ஜீவன் அபோர்ட் பட்டனை அமுக்கினான். கண்ணை மட்டுமல்ல்லாது காத்து, மூக்கெல்லாம் சேர்த்துப் பறிக்கும் ஒளியோடு மிஷின் வந்து சேர்ந்தது.
நகைப்பூட்டும் பழங்கால உடையோடு பிரதீப் இறங்கினான்.
இத்தனை நாட்களாக அப்படி என்ன செய்தாய்? யாரையெல்லாம் பார்த்தாய்? ஏதும் பிரச்சனையா? சொல்லு, என்ன ஆகிற்று?”
ஜீவன் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரதீப் புறப்பட்டுவிட்டான்.
*
மூன்று வாரங்களாகின்றன பிரதீப் நிகழ்காலத்துக்கு வந்து. சரியாக சாப்பிடுவதில்லை, யாருடனும் பேசுவதில்லை. எதோ விரக்தியில் இருந்தான். இவன் உலகறிந்த தொல்லியலாளன் என்பதால், பல இடங்களில் இருந்தும் ஆய்வுகள், மாநாடுகள் நடக்கும்போது கலந்துகொள்ளச் சொல்லி அழைப்பு வருவதுண்டு. அப்படிப்பட்ட அழைப்புகளையும் தவிர்த்தான். பிரதீப்பின் இந்த நடத்தையால் குழம்பிப் போயிருந்தான் ஜீவன். இயந்திரத்தை வெளியிடுவதில் இது ஒரு சிக்கலாக இருந்தது அவனுக்கு. என்னதான் பிரச்சனை?
ஒருநாள் பிரதீப்பிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
மதுரைக்குப் போகப் போகிறேன். ஒரு சிறிய அகழ்வாராய்ச்சி.”
உடனே மீண்டும் அழைத்தான். பதிலில்லை.
எரிச்சலாக இருந்தது ஜீவனுக்கு.
*
பிரதீப் மதுரைக்குப் போய் சிலபல வரலாறுகளைத் தோண்டத் தொடங்கினான். மதுரையில் இருந்த நண்பர்கள், பேராசிரியர்கள், அகழ்வாய்வாளர்கள் உதவியோடு வெறிவந்தவன் போலத் தேடினான் எதையோ.
புதையல் தேடும் ஆர்வத்துடன் பிரதீப் தேடி, பாண்டியர் காலத்தைய சிற்றரசான  தென்தவளத்தைப் பற்றிய குறிப்புக்களைக் கண்டுபிடித்தான். அந்தக் குறுநாடு இருந்த இடத்தையும் கண்டறிந்து, அங்கே போனான். ஒரு பழைய சிறு அரண்மனையின் சுவடுகளைக் கண்டறிந்தார்கள் அங்கே. கூடவந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவன் எப்படி இத்தனை துல்லியமாகவும், ஆர்வமாகவும் இதையெல்லாம் அகழ்ந்தெடுக்கிறான் என்று.
அரண்மனைக்கு அருகில் ஓடிய ஒரு சிற்றாற்றின் தடத்தைக் கண்டுபிடித்து, அதனைத் தொடர்ந்ததில், அவர்கள் கண்டுபிடித்தது..
ஒரு கல்லறை.
சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்திருந்த அந்தக் கல்லறையை விடுவித்து, மண்ணை அகற்றியதில் கல்லறையில் உடைந்துபோன ஒரு பெண்ணின் சிற்பம் வெளிப்பட்டது. வெடித்து அழுத பிரதீப் அந்த சிற்பத்தின்மேல் சரிந்தான்.
பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உயிர்கரைய அழுதுகொண்டிருந்தவன் நெடுநேரம் கழித்து எழுந்து புறப்பட்டான்.
*
17 செப்டம்பர் - முன்னிரவின் ஜீவன் ஆய்வுகூடம்.
ஜீவன்...” உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே பிரதீப் உள்ளே வந்தான். அறையிலிருந்து தலை நீட்டிய ஜீவன் ஆர்வமாக ஓடி வந்தான்.
என்ன பிரச்சனை என்று இப்போதாவது சொல்லுவாயா?”
பிரதீப் ஒரு கதிரையில் உட்கார்ந்தான். தலைகுனிந்தான். “ம்...” சொல்லத் தொடங்கினான்.
பாண்டியர் காலத்தில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால் அங்கே போகத்தான் செட் பண்ணினேன். ஆனால் இடம் அத்தனை துல்லியமாகத் தெரியாததால் ஒரு சிறு நாட்டில் இறங்கிவிட்டேன். அது ஒரு சிற்றரசு. அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்து அந்தக் கால ஆடைகளைத் திருடி எடுத்து அணிந்துகொண்டு அலைந்து திரிந்தேன். வேறு வழி இல்லாமல் அன்று மாலை அரசனைச் சந்திக்க முடிவெடுத்து அரண்மனை போன வழியில் ஒரு பெரழகியைக் கண்டேன். முற்றுமுழுதான மனிதப் பேரழகி! இப்போது உள்ளமாதிரி சிலிக்கனை எல்லா இடத்திலும் செருகி, பிளாஸ்டிக் சர்ஜரி, சிந்தடிக் பியூட்டி சர்ஜரி எதுவும் இல்லாத இயற்கை அழகு. அதை முதன்முதலாகப் பார்த்ததால் என்னையே மறந்து அவளைக் காதலிப்பதாகக் கற்பித்துக் கொண்டேனடா.. வந்த காரியத்தை மறந்து அந்த அப்பாவிப் பெண்ணுடன் இரவெல்லாம் ஆற்றங்கரையில் காதல், பகலெல்லாம் சத்திரம் ஒன்றில் தூக்கம் என்று இருந்துவிட்டேனடா..”
கோபம் பீறிட்டது ஜீவனுக்கு.. “உன்னை நம்பி அனுப்பியதே இதுமாதிரி ஏதும் எளிய வேலைகள் நடக்கக் கூடாது என்றுதானே? பார்த்தாயா? யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணை ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறாய்!”
அந்த சோகத்தாலும், அதைச் சொல்லும் தயக்கத்தாலுமே இங்கே வந்தும் உன்னிடம் எதையும் சொல்ல முடியவில்லை. ஓடிவிட்டேன். அப்புறம் அவள் என்ன ஆனாள் என்று ஆராய்வதற்காக அந்த இடத்துக்குச் சென்று பார்த்தேனடா.. அவள் எனக்காகவே காத்திருந்து காத்திருந்து, நான் வராததால் செத்துப் போய்விட்டாளடா..! தற்கொலை.. வரலாற்று ஆதாரங்கள் அப்படித்தான் சொல்லுகின்றன.”
ம்ம்.. சரி விடு, எப்படியோ, வரலாறு அதனால் பெரிதாக மாறவில்லை என்பதால் தப்பித்தோம்.”
ஜீவன்...”
என்ன?”
எனக்கு நீ ஒரு உதவி...”
முடியாது. இனிமேல் உன்னை அங்கே மறுபடி அனுப்ப முடியாது. அவள் இறந்தது இறந்ததுதான்.. நீ காப்பாற்ற முயலவேண்டாம்.”
அது இல்லை.”
பின்னே?”
மனித குலத்தின் நன்மைக்காக, என்போன்ற குழப்பங்களில் இருந்து உலகத்தின் காலத்தின் சமநிலையைக் காப்பாற்றுவதற்காக..”
காப்பாற்றுவதற்காக?”
கால இயந்திரத்தை..”
கால இயந்திரத்தை?”
அழித்துவிடு.. இன்னும் எத்தனையோ தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. நீ வெளியிட்டதும் அரசாங்கங்களோ, இயக்கங்களோ எதற்கெல்லாம் இதைப் பயன்படுத்தலாம் என்று யோசித்துப்பார்.. காலம் கடந்து போயெல்லாம் பெண்களை இப்படி ஏமாற்ற வழி உண்டல்லவா?”
நீ செய்த அயோக்கியத்தனத்துக்காக நான் எனது கண்டுபிடிப்பை அழிக்கவேண்டுமா? போடா!”
சொல்லுவதைக் கேள்!.. உனக்கும் இதுதான் நன்மை..”
அதைச் சொல்ல நீ யாரடா?”
வாதம் தொடர்ந்தது.. கடுமையானது.. கைகலப்பானது.. சண்டையானது.
சற்றைக்கெல்லாம் ஜீவனின் ஆய்வுகூடம் கொஞ்சம் கொஞ்சமாக எரியத் தொடக்கி சற்றைக்கெல்லாம் விண்ணதிர வெடித்துச் சிதறியது.
*
யாழ். தினக்குரல்  - யாழ்ப்பாணம்.
18 செப்டெம்பர் 2190
சற்றுமுன் கிடைத்த செய்தியின்படி பௌதிகவியலாளர் ஜீவன் நேற்று அவரது ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காலமானார். விபத்துக் குறித்த விசாரணைகள் நடந்துவருகின்றன. மின் ஒழுக்கே தீவிபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றபோதும், நேற்றிரவு சந்தேகத்துக்கிடமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்திருப்பது குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. தானியங்கி இலத்திரனியல் பாதுகாப்பு அமைப்புள்ள ஆய்வுகூடத்தின் விடியோ காட்சிகள் அனைத்தும் தீக்கிரையானதால் விசாரணை சிக்கலாக இருக்கும் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார். அதேவேளை இவரது நண்பரும் பிரபல தொல்பொருளியலாலருமான பிரதீப் இவரைச் சந்திக்கப் போனதைக் கண்டதாக தெருவோர வியாபாரியொருவர் கூறியுள்ளார். பிரதீப் காணாமல் போயுள்ளதால், அவரும் அந்த விபத்தில் சிக்கி சாம்பலாகி இருக்கலாம் என்றும் ஆய்வாளர் ஐயம் தெரிவித்தார். மேலும்...
***
என்ன கூத்து இது, அன்பே?” தேனிலினியாளுக்கு அவனின் செய்கைகள் ஒன்றுமே புரியவில்லை. மன்னனிடம் மன்றாடி, உண்ணா விரதமிருந்து, அடம்பிடித்து, தனது மனதுக்கு இசைந்தவனையே - அவன் அநாதை வழிப்போக்கி என்றாலும் -  மணந்துவிட்டாள்.. கெட்டிக்காரி. ஆனால் அந்த இசைந்தவன் செய்வதுதான் இசைவாக இல்லை.
எல்லாம் உன் நன்மைக்குத்தான். நான் இடையில் கொஞ்சகாலம் காணாமல் போனதற்கே இப்படித் துடித்துப் போனாயே, நான் மறுபடி போகாமல் இருக்கவேண்டுமானால் இப்படி என்னை நானே ஏமாற்றும் ஏற்பாட்டைச் செய்யத்தான் வேண்டும்.. உனக்கு அது புரியாது, விடு.” என்றபடி அழகாக அமைக்கப்பட்ட அந்த வெற்றுக் கல்லறையின் மேல் தேனிலினியாளின் அந்த அற்புதமான சிற்பத்தைப் பொருத்தினான்.
*_*_*

No comments:

Post a Comment