Thursday, 31 July 2014

Story 125: ஊழிற் பெருவலி யாவுள!ஊழிற் பெருவலி யாவுள!

"ஏண்டி வேசி நாயே,ராத்திரி முழுக்க படுத்திருந்துப்புட்டு,இப்ப வெறும் முன்னூறு ரூவாயை கொண்டு வந்து நீட்டுற?!மிச்ச பணத்தையெல்லாம் என்னடி பண்ணுன?" வெறியேறிய கண்களுடன் பானுமதியை பார்த்துக்கேட்டான்  மூர்த்தி!

"அவ்ளோதான் குடுத்தான்யா!அவனையும் விட்டுட்டா ராத்திரி பொழப்பு நடக்காம போயிருக்கும்.அதான்யா ஒத்துகிட்டேன்" என்றாள் பானுமதி பாவமாய்.

பொதுவாய் இதுமாதிரியான உடல்கூசும் வார்த்தைகள் எல்லாம் பானுவுக்கு புதிதில்லை என்றாலும்,இந்த முன்னூறு ரூபாயையும் பிடிங்கிக்கொண்டு,நாய்க்கு போடுவது போல் அவன் எவ்வளவு வீசப்போகிறானோ? என்று நினைக்கையில் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

பானுமதியை போல் அங்கு நிறைய பெண்கள் இருந்தனர்.அது ஒரு பெரிய நெட்வொர்க்.மூர்த்தி வெறும் அம்பு மட்டும்தான்.இவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும் அந்த எய்பவன் கணபதிலிங்கம்!ஆனால் அவனை பற்றிய ஒரு விசயமும் வெளிஉலகில் யாருக்கும் தெரியாது.அவ்வளவும் பணம்! 'தொழில்' நடக்கும் இடம் கணபதிலிங்கத்துக்கு சொந்தமானது.போலீஸ் கேஸ் என்று எதுவும் வந்தால் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.அதற்கு பரிகாரமாய் தான் இந்த எச்சில் காசில் முக்கால் அவர்களுக்கு.கால் பங்கு இவளுக்கு!

இருநூறு ரூபாயை தன் சட்டைப்பையில் திணித்துக்கொண்டு..நூறு ரூபாயை அவளிடம் நீட்டினான் மூர்த்தி.உலகில் உள்ள அத்தனை கெட்டவார்த்தைகளாலும் மனதிற்குள் அவனைதிட்டியபடியே அந்த பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள் பானு.

இந்த தொழிலுக்கு வரும் எல்லா பெண்களுக்கு பின்னும் ஏதோ ஒரு கதை இருப்பதைபோல,பானுவிற்கும் ஒரு கதை இருக்கிறது!

பானுவின் இளம் வயதிலேயே அவளின் அப்பா,அம்மா கடன் தொல்லை தாங்காது தற்கொலை செய்து கொண்டுவிட,வாழ்க்கை என்றால் என்னவென்று அறியாத வயதிலேயே அனாதையாகிப் போனாள் பானு.உயிர் பிழைத்திருப்பது வரம் என்று நினைத்திருப்பார்கள் போலும் அவளைப் பெற்றவர்கள்,அது சாபம் என்பதை அறியாமல்!ஆண் பிள்ளையாய் இருந்தால் எங்காவது கடைகண்ணியில் வேலைக்கு சேர்த்துவிட்டால் நாலு காசாவது வரும்,இவளை வச்சிருந்தா நமக்கு செலவுதான் என்றெண்ணி காரியத்திற்கு வந்திருந்த சொந்தக்காரர்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அந்த பொறுப்பை யாரும் ஏற்க மறுத்து,கடைசியில் பானுவின் தாய்வழி பாட்டியே அவளை வளர்க்க ஆரம்பித்தாள்.

கிழவியின் கடைசிக்கால ஆசை என்பது,பானுவுக்கு ஒரு வாழ்கையை அமைத்து கொடுத்துவிட வேண்டுமென்பதாகவே இருந்தது.அந்த நேரத்தில் வந்தவன்தான் வைத்தி!பானுவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு கிழவியை நச்சரிக்க,பெண் விசயத்தில் அவன் ஒரு மாதிரி என்று ஊருக்குள் பேசிக்கொண்டாலும்,அவனை கல்யாணம் செய்து கொண்டால் மூணு வேலை சாப்பாடாவது பானுவுக்கு ஒழுங்காய் கிடைக்குமே என்று சம்மதம் சொன்னாள்.திருமணம் எளிமையாய் நடந்தது.அதன்பின்னான ஒரு நல்லநாளில் கிழவியும் போய் சேர்ந்துவிட்டாள்.

திருமணத்திற்கு முடிந்து வாழ்க்கை சந்தோசமாகவே சென்றது இருவருக்கும்!ஒரு இரவில் "நீ சினிமா நடிகை மாதிரியே இருக்க பானு.உன்னைய பெத்தவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு..அதுனால தான் உனக்கு பானுமதின்னு பேரு வச்சிருக்காங்க"எனச்சொல்லி சாராயநெடி கலந்த சிரிப்பு சிரித்தான் அவளைப்பார்த்து!

பாட்டிக்கு பிறகு வைத்தியை தான் பானு முழுமையாய் நம்பினாள்.நம்பிக்கை வைப்பவர்களுக்கென்றே காத்திருக்கும் ஆகச்சிறந்த பரிசு துரோகம்!எல்லாம் சரியாய் போய்கொண்டிருப்பதாய் நினைத்தவளுக்கு,ஒரு விடியலில் வைத்தியை காணோம்!முதலில் அலட்சியமாய் இருந்தவளுக்கு பிறகுதான் புரிந்தது அவனுக்கு தான் 'அலுத்துவிட்டது' என்ற உண்மை.ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த தருணத்தில் அவள் வயிற்றில் இன்னுமொரு உயிரும் வளர்ந்து நின்றது.

ஊரைவிட்டு வந்தவளுக்கு மிஞ்சியது பசி மட்டுமே.பசி-உலகின் ஆகப்பெரிய ஆசான்!பசி-போதிமரம்! எந்த எல்லைகளும்,எந்த நியாங்களும் பசிக்கு கிடையாது.பசிக்காக இந்த தொழில் இறங்கியவளுக்கு பின் அதுவே நிரந்தரமாகிப்போனது.தனியாய் செய்தபோது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது.அதன்பின் தான் மூர்த்தியிடம் வந்து சேர்ந்தாள்.கிடைக்கும் பணத்தில் முக்கால்வாசியை பிடிங்கிகொண்டாலும் முன் அளவிற்கு,போலிஸ் தொல்லையோ மற்ற பிரச்சனையோ இப்போதில்லை.

நூறு ரூபாயில் இருபது ரூபாயை தனியாக எடுத்து வைத்துக்கொண்டாள்.காலையிலேயே மகள் மீனா சொல்லியிருந்தாள்,ஏதோ நோட்டுபுக்கு வாங்க வேண்டுமென.மீதமிருந்த காசுக்கு அரிசியும்,கொஞ்சம் காய்கறியும் வாங்கியது போக மிஞ்சியது ஒரு அஞ்சு ரூபாய் நோட்டு மட்டுமே.அதற்கும் மீனாவுக்கு பிடித்த ஒரு ஃபைவ்ஸ்டார் சாக்லேட் வாங்கிக்கொண்டாள்.

பானு வீடடைந்த வேளையில்,மீனா நன்றாய் தூங்கிக்கொண்டிருந்தாள்.அவள் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாள்.பானு அழுவதென்பது அரிது.இந்த தொழிலுக்கு வந்தப்பின் மனசு இறுகிப்போயிருந்தது.ஆனாலும் அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கும் நேரங்கள்,இதுப்போல மீனாவை பற்றி கவலைகொள்ளும் தருணத்தில் தான்.எழ எத்தனித்தவளின் முந்தானையை பற்றி பிடித்தாள் மீனா.தூக்கம் கலையாத கண்களுடனேயே "எப்பமா வந்தே?" என்றாள். "இப்பதான் கண்ணு வந்தேன்.உனக்கு பிடிச்ச ஃபைவ் ஸ்டாரு சாக்லேட்டு வாங்கியாந்துருக்கேன்..எந்திரிச்சதும் சாப்பிடலாம்.இப்ப தூங்குங்க" என்றாள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே.

நேரம் ஆகிவிட்டிருந்தது.பேருந்து நிலையத்தில் அவ்வளவாய் கூட்டமில்லை.மனதும்,உடலும் சோர்ந்து போய் காத்திருந்தாள் பானு.நேரம் அதிகம் ஆகிவிடவே,வீட்டிற்கு சென்றுவிடலாம் என்றெண்ணி சாலையில் இறங்க எத்தனித்தவளை,சர்ரென்று வேகமாய் ஒரு போலீஸ் ஜீப் தாண்டி சென்று நின்றது.ஜீப்பிலிருந்து இறங்கிய ஏட்டு ராமலிங்கமும்,முகம் தெரியாத இரண்டு கான்ஸ்டபிள்களும் அவளை நோக்கி வந்தனர்.பானுவுக்கு புரிந்து போயிற்று.

"பானு,கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போ.புது எஸ்.. கேஸூ கொண்டு வான்னு சொல்லி ஒரே ரப்ச்சர்"என அலுத்தபடியே பேசினார்.

"ஐயா,உடம்பு சரியில்லாத பிள்ளையை வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன்யா.இன்னைக்கு விட்ருங்கய்யா" என்றாள் பரிதாபமாக.

"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லம்மா..சும்மா ஒரு கணக்கு காமிக்கதான்.விடியிறதுக்குள்ள வீட்டுக்கு போயிறலாம்"என்றார்.

பொதுவாய் போலீஸ் தொல்லை குடுப்பதில்லை என்றாலும் எப்போதாவது இப்படி ஆகிவிடும்.ஏட்டுவுக்கு தெரியும்,அவள் ஆடம்பரத்திற்காக இந்த தொழில் செய்பவள் அல்ல என்று.பானுவுக்கும் தெரிந்திருந்தது,இதற்கு மேல் பிடிவாதம் செய்தால் அவர்களின் சம்பாஷனை வேறு மாதிரி இருக்குமென்று!எனவே ஒன்றும் பேசாமல் ஜீப்பில் ஏறிக்கொண்டாள்.

"இதுவரைக்கும் பாத்ததுல,இந்தாளு கொஞ்சம் நல்லமாதிரி தான்.ஆனா என்ன,நம்மளை தான் போட்டு படுத்தி எடுக்கிறான் மனுஷன்" என்று எஸ்..யை பற்றி புலம்பியபடியே வந்தார் ஏட்டு.ஜீப் போலிஸ் ஸ்டேஷன் நோக்கி விரைந்தது.

எஸ். யாரோ இரு பளீர் வெள்ளைவேஷ்டி சட்டை போட்ட அரசியல் புள்ளிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.பானுவுக்கு இங்கு வருவது இது முதல்முறை இல்லை எனினும்,வீட்டை விட்டு கிளம்புகையில் மீனாவுக்கு உடம்பு அனலாய் கொதித்தது நினைவுக்கு வந்து வாட்டியது.இன்று தொழிலுக்கு போக வேண்டாம் என்று நினைத்தவள்,மருந்து வாங்கவாவது பணம் வேண்டுமே என நினைத்துதான் வந்தாள்.மீனாவை எண்ணி கண்ணீர் முட்டியது அவளுக்கு.

கரைவேஷ்டிகள் பேசிவிட்டு சென்றதும்,எஸ்.. பானுவிடம் வந்தார்.பாரவையாலே அவளை அளந்தவாறே,
"உன் பேரு என்ன?" என்றார்.அந்த கேள்வியிலேயே ஒருவித எரிச்சலும்,அலட்சியமும் ஒருசேர இருந்தது.

"பானு"

"எத்தனை வருசமா இந்த தொழில்ல இருக்க?கல்யாணம் ஆயிருச்சா?சொந்தக்காரங்க யாரும் இருக்காங்களா?" என கேள்விகளை ஒவ்வொன்றாய் அடுக்க ஆரம்பித்தார்.

"யாரும் இல்லைங்க.நான் ஒரு அனாதை சார்!"

அந்தப்பதில் அவரை என்னவோ செய்திருக்க வேண்டும்.

"இந்தப்பாரும்மா..இந்த வாழ்கையை ஒரு தடவை தான் வாழப்போறோம்.அதை நல்ல மாதிரியா வாழ்ந்துட்டு போவணும். ரோட்ல நீ நடந்து போனா யாரும் கையெடுத்து கும்பிடலைனாலும் பரவாயில்லை.காறி துப்புற மாதிரி வாழக்கூடாது.தினம் ஒருத்தனுக்கு பொண்டாட்டியா இருக்க இந்த வாழ்க்கை வாழறதுக்கு பதிலா பிச்சைஎடுக்கலாம்.அதுவும் இல்லைனா கொஞ்சம் விசத்தை வாங்கி சாப்ட்டுட்டு செத்துறலாம்" என்றார் ஆக்ரோஷமாக!

உன்னை இங்க பாக்குறது இதான் கடைசி தடவையா இருக்கணும்.இப்ப நீ போகலாம் என்று சொல்லிவிட்டு,ஏட்டை பார்த்து "இவுங்க மேல கேஸ் ஏதும் போடவேண்டாம்,அனுப்பிச்சி விடுங்க..உங்களை கேஸ் தான் புடிக்க சொன்னேன்.கணக்கு காமிக்க சொல்லலை"என்றார் கோவமாய்.

பானுவுக்கு தன்மேலேயே ஒருவித வெறுப்பு வந்தது.தன் உடலெங்கும் பிணநாற்றம் எடுப்பது போல் அருவெறுப்பாய் உணர்ந்தாள்.ஒரு தீர்மானத்துடன் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாலும் உள்ளூர ஒரு பயமும் இருக்கத்தான் செய்தது.தனக்கு என்ன வேலை தெரியும்?அப்படியே செய்தாலும் தன்னை நம்பி யார் வேலை தருவார்கள்? என ஓராயிரம் கேள்விகள் குடைய பேருந்து நிலையத்தை அடைந்திருந்தாள்.வழக்கம்போல சரியான நேரத்துக்கு பேருந்து வரவில்லை.பஸ்சுக்காக காத்திருந்தவர்களின் பார்வைகள் அவளை துளைத்தெடுத்தன.அவை வழக்கமான பார்வைகள் தான் என்றாலும் இப்போது அது அருவெறுப்பாய் இருந்தது.

பக்கத்தில் ஒருவன் வந்து ரூபாய் நோட்டுகளை காட்டியவாறு "போலாமா?" என கண்களாலேயே சைகை செய்தான்.
"இல்லைங்க,இனிமேல் நான் தொழிலுக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேங்க" என சொல்லி அங்கிருந்த நகர எத்தனித்தவளை,மறித்து "என்னடி வழக்கமா செய்யிறது தானே?இன்னிக்கு என்ன பத்தினியாட்டம் பேசுற?" என கையை பிடிக்க போனான்.

பானுவுக்கு புரிந்துவிட்டது.தான் மாற நினைத்தாலும்,இந்த உலகம் தன்னை மாற விடாதென்று!இந்த உடல் இருக்கும் வரை இந்த 'விபச்சாரி' என்ற முத்திரையும் கூடவே தான் இருக்கும் என அவளுக்கு தோன்றியது.தீர்க்கமாய் ஏதோமுடிவுக்கு வந்தவள் போல்,தன்னை பிடிக்க வந்த கையை உதறி..அவனை பார்த்து காறி உமிழ்ந்துவிட்டு சாலையில் வெகுவேகமாய் வந்த லாரியின் முன் பாய்ந்துவிட்டாள்.ஒருநொடி, ஒரேநொடி..கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.ஸ்டேஷனில் எஸ்.. பேசியபோதே அவளுக்கு பாதி உயிர் போயிருந்தது.இப்போது மீதி உயிரும் சாலையில் துடிதுடித்து அடங்கியது!

இரண்டு நாட்கள் ஊரில் எல்லோரும் பானுவை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.மூன்றாவது நாள் அதை சுத்தமாய் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.நான்காவது நாள்...பானு வழக்கமாய் கஸ்டமருக்காக காத்திருக்கும் பேருந்து நிறுத்த மூலையில் இப்போது அவள் செல்லமகள் மீனா காத்திருந்தாள்!!!எது இழிவு..எது வேண்டாம் என நினைத்து பானு உயிரை விட்டாளோ,காலம் அதிலேயே அவள் மகளை தள்ளியிருந்தது!

பானுமதிகளும்,மீனாக்களும் உருவாவதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்!
------------------
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள்)

No comments:

Post a Comment