Friday 18 July 2014

Story 74: சுழலும் விண்மீன்களின் இடையே …



சுழலும் விண்மீன்களின் இடையே

கட்டிடங்களின் கடைசி மாடியில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும்.
அபரிமிதமான ஆக்ஸிஜனால் கட்டிடத்தின் மேல்மாடியில் இருப்பவர்கள் மிகவும் உற்சாகமாக வாழ்கின்றனர்.
அதே உற்சாகத்துடன் கீழே குதித்து தற்கொலையும் செய்துகொள்கின்றனர்.
                                                                                                                ***
தான் பெரியவன் என்ற மனப்பிரம்மை கொண்ட, நாக்குநுனி ஆங்கிலம் பேசும், மேனேஜராக இருந்து வேலை இழந்த மோகன் தற்கொலை செய்துகொண்டான். அவன் மொபைலில் ப்ரியா அனுப்பிய எஸ்.எம்.எஸ்களை மட்டும் அழிக்காமல் வைத்திருந்தான்.
தான் அறிவாளி இல்லை என நம்பும் ஆஃபீஸ் பாய் சுதாகர் ப்ளேட் கழுவி, டேபிள் துடைத்து வாழ்ந்துவருகிறார். மேனேஜர்களின் கார் துடைத்து வரும் கூடுதல் காசில் தன் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டி படிக்க  வைத்துக்கொண்டிருக்கிறார்.
                                                                                                                ***
பந்தாவாக பலரையும் தன் பின்னால் சுற்ற வைத்து, அவற்றில் சிலவற்றைப் புணர்ந்து, சிறகடித்துக்கொண்டிருந்த பிரியா இரட்டைக்குழந்தைகள் பிறந்தவுடன் ஞாயிறுதோறும் சர்ச்சுக்கு போகிறாள். ஒரே பக்திமயமாகி பெருமகிழ்ச்சியுடன் இருக்கிறாள், அவ்வப்போது நண்பர்களுக்கு செக்ஸியான எஸ்.எம்.எஸ் கள் அனுப்பிக்கொண்டு.
                                                                                 ***
வெகு நாட்களாக மோகித்துவரும் அந்த பெண் அவனிடம் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினாள்.
சீஎன்றாகிவிட்டது அவனுக்கு.
                                                                ***
ஜீன்ஸ் பேண்டும் சுடிதாரும் உரசியதில் ஊரே பற்றி எரிந்தது. அரசியல்வாதிகள் குளிர்காய்ந்ததை வீடியோ/புகைப்படம்/கட்டுரை ஆக்கியது குப்பை மீடியா.
ஜீன்ஸ் கிழித்தெரிக்கப்பட்டது.
தனியாக கொடியில் காய்ந்துகொண்டிருக்கிறது சுடிதார்.
                                                                                ***
காவி ஜட்டிக்காரன் பெண் எழுத்தாளர்களை குறைகூறுகிறான்.
அவனை எப்போதும் திட்டும் ஜீன்ஸும் ஃபேன்ஸி பனியனும் போட்ட      போஸ்ட்மார்ட்டம்னிஸ்ட் ( எழுத்துப்பிழையெல்லாம் இல்லை) இதை மட்டும் வழி மொழிகிறான்.
இவர்களைத் திட்டும் பல்லவன் , சரியாக ராயல்டி தராத பதிப்பாளனை செருப்பால் அடிக்கிறான்.
பதிப்பாளன் ஊர் உலகில் நடப்பதையெல்லாம் பற்றி டீ.வீ, ஃபேஸ்புக், வார மாத இதழ்கள், சீ.டி., டி.வி.டி, வீ.டி அனைத்திலும் கருத்து கூறிவிட்டு, ஸ்பானிஷ் பெண்ணைரேப்பண்ணினால் இண்டர்போல் தேடுமா என யோசிக்கிறான்.
இதையெல்லாம் எழுதினால் என் இலக்கிய வாழ்வு(?) வீணாகப்போகும் என்று எச்சரிக்கிறான் நண்பன்.
இவை எதையும் பொருட்படுத்தாத அந்த எருமை, போஸ்டரில் உரசிவிட்டு நடிரோட்டில் ஆடி ஆடி நடந்து போய்க்கொண்டிருக்கிறது, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாமல்.
                                                ***
 ஆடி தள்ளுபடியில் வாங்கிய புடவை அழகாக இருக்கிறதாஎன்று பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி.
அவளுடன் அரை நாள் சுற்றி காத்திருந்து வாங்கிக்கொடுத்த கணவன் ஆஃபீஸில் வேறு  ஒரு பெண்ணிடம்சுடிதார் அட்டகாசமாக இருக்குஎன வழிகிறான்.
                                                ***
எங்கள் கல்லூரிபேட்ச்ல் மிகவும் இளையவனும் அப்பாவியுமான சீதாராமனுக்கு முதல் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே வேலை கிடைத்தது. திருநெல்வேலியில் வேலைக்கு சேர்ந்த அடுத்த வாரம், குற்றாலம் சென்றபோது அருவியில் பாறைகளிடையே சிக்கி இறந்துபோனான். அவனுடன் சென்ற பத்து பேரில் அவன் ஒருவன் மட்டுமே மது அருந்தாமல் இருந்தவன்.
மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று வந்து, அந்த பெண்ணின் மார்பழகை மனைவியிடம் விலாவாரியாக விவாதித்துக்கொண்டிருக்கும் வக்ரவேலனின் வயது சுமார் எண்பத்தைந்து இருக்கும். மேலும் பல பெண்களின் மார்புகள் சில வருடங்களாக எப்படி மாறிக்கொண்டிருக்கின்றன என சமத்துவத்துடன் தன் கருத்துக்களையும் திறந்த மனதுடன் கூறும் அவன் மனைவியாருக்கு அவனைவிட ஒரு ஐந்து வயது குறைவாக இருக்கலாம். அவர்களுக்கு மூன்று பெண்கள், நான்கு மருமகள்கள், ஆறு பேத்திகள். 
                                                                                ***
கவிஞர் காஸாவில் குழந்தைகள் கொல்லப்படுவதைப்பற்றி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு போராடிவறுக்கிறார் ( மறுபடியும் சொல்றேன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல). நீங்க வெட்டியா இந்த கதையையெல்லாம் படிச்சுகிட்டு. போய் பேராடுங்க. அவருக்கு ஃபேஸ்புக், உங்களுக்கு ட்விட்டர், எனக்கு சிறுகதை.
ஆக்ஸிஜன், பணம், அன்பு, காமம், அரசியல், கரண்ட் அஃபையர்ஸ்         ( மின்சார கள்ளத்தொடர்புகள் என காவி ஜட்டிக்காரன் மொலிபெயர்க்கிறான்), எப்.பி போஸ்ட்இதில் சிறுகதை எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
எனக்கு வேலை இருக்கிறது. நான் நகுலனுடன் பேசிவிட்டு நேரத்துக்குப் போக வேண்டும். இரவு உணவை உண்ணாமல் ஷோபா காத்துக்கொண்டிருப்பாள்.
                                                                                ***

No comments:

Post a Comment