இப்படியும்
கூட இருக்கலாம்.
- கனவுப் பிரியன்
விடுமுறை
நாள் காலை 10 மணி.
தெரு வெறிச்சோடி கிடந்தது. எல்லா வீட்டின் ஜன்னல்
வழியே டிவி நிகழ்ச்சிகளின் சத்தம்
தெருவை நிரப்பி இருந்தது. கட்டி
இருந்த லுங்கி அரைகுறை ஈரமாக
இருக்க போர்டிகோவில் நின்று கொண்டிருந்தேன்.
வீட்டின்
கோட்டை சுவற்றில் நின்றிருந்த காக்கா முரட்டு குரலில்
கத்த திரும்பி பார்த்த போது தான்
கவனித்தேன். வாசல் கதவு கம்பிகளுக்கு
ஊடே ஒரு பெண் உருவம்.
நீண்ட நெடிய ஒடிசலான தேகம்
சிவப்பு நிற சேலை அணிந்திருந்தாள்.
முகம் வாடி இருந்தது அது
ஏழ்மையை வெளிகாட்டியது ஆனாலும் அதிலும் பளிச்
என ஒரு தூய்மை.
“ இந்த
பொம்பளை வருவா நல்லா கவனிச்சு
அனுப்பு சரியா. உன் பொண்டாட்டிக்கு
உறவு அந்த பெண். “ என்று ஏதோ உள்ளுணர்வு
சொல்ல யார் அந்த பெண்
என மீண்டும் பார்க்க சுதாரிப்பதற்குள் அலாரம்
அடிக்க துவங்கியது.
அலாரம்
நிறுத்தி, வெளிச்சத்தில் நேரம் பார்த்தேன். மணி
4.30. அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் படுக்கையை
விட்டு எழுந்தாலே பாதி வியாதியில் இருந்து
விடுபடலாம் என அம்மா கற்று
தந்தது.
அதிகாலை
கனவு பலிக்கும் என்பார்களே யார் அந்த பெண்
யோசித்து கொண்டே முகம் கழுவ
சென்றேன். பால் இன்னும் வரவில்லை.
புதினா
இலை போட்டு பால் இல்லாத
ஒரு டீ செய்து இரண்டு
பேரிச்சம் பழமும் எடுத்து கொண்டு
மொட்டை மாடி சென்றேன். சூரியன்
சோம்பல் முறித்து கொண்டிருந்தான்.
தெரிந்த
யோகாவை செய்ய துவங்கினேன். இது
ஆரம்பித்து கொஞ்சநாள் ஆயிற்று ஆனாலும் தொப்பை
குறைந்த பாடில்லை.
இப்படியாகத்தான்
ஆரம்பித்தது அன்றைய விடுமுறை ஞாயிறு.
10 மணி
இருக்கும் டிவியின் நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்தேன்.
“ அப்பா
பந்து கிணத்துல விழுந்திருச்சு “ வெளியே போர்டிகோவில் இருந்து
மகனின் சத்தம்.
“ உங்களுக்கு
வேற வேலை இல்லடா “ என்று
திட்டும் மனைவியை கடந்து வெளியே
போர்டிகோ சென்றேன்.
வெளியே
சென்று வெயில் விளையாட கூடாது,
வீட்டிற்கு உள்ளே விளையாட வேண்டும்
என்று சட்டமும் போட்டு குழந்தைகள் உயரமாய்
வளர வேண்டும் என்பதற்காக துள்ளி குதித்து விளையாட
பேஸ்கட் பால் வாங்கி தந்து
கிணற்றை முழுவதுமாய் மூடினால் வாய்வு தங்கும் என
பாதியை மரப்பலைகையில் மூடினாலும் சில சமயம் பந்து
கிணற்றில் விழுந்து விடுகிறது என்ன செய்ய.
போர்டிகொவுக்கு
அருகிலே பின் பக்கம் பெட்
ரூம் ஒட்டி மரப்பலகையில் பாதி
மூடிய கிணறு. மொத்தம் 12 உறை
தான்.
“ அப்பா
சொல்ல சொல்ல கேக்காம அண்ணன்
தான் ஓங்கி அடிச்சான் அது
இங்கே வந்து விழுந்திருச்சு “
“ இல்லப்பா
........நான் வேணுமின்னு செய்யல ...”
“ ஆங்
.............பொய் சொல்லாத ..”
அவர்களுக்கும்
விவாதம். மரப்பலகையை நீக்கி நின்றிருந்த பல்லியை
விரட்டி விட்டு லுங்கியை மடித்து
கொண்டு உறையை பிடித்து கிணற்றில்
மெதுவாய் இறங்கினேன்.
கடைசி உறையில் காலை வைத்து
மகன் மெதுவாய் இறக்கிய வாளியில் பந்தை
எடுத்து போட அவன் மேலிருந்து
மெதுவாய் தூக்கி கொண்டான். கொஞ்சம்
மூச்சடைத்தது. வேகமாக மேலே ஏற
துவங்கினேன். பந்து எடுக்க முயற்சித்ததில்
லுங்கி பாதி நனைந்திருந்தது.
கிணற்று
உறையை பிடித்து மேலே ஏறி மீண்டும்
மரப்பலகையை போட்டு கிணற்றை பாதியாய்
மூடிவிட்டு போர்டிகோ வந்தேன்.
இனி இந்த ஈர உடையுடன்
வீட்டின் உள்ள செல்ல முடியாது.
“ டேய்
உள்ளே போய் துண்டு எடுத்திட்டு
வா .........” மகனிடம் சொல்ல அவன்
உள்ளே சென்று விட்டான்.
வீட்டு
கோட்டை சுவற்றில் இருந்த காகம் கரைய
திரும்பினேன். வாசலில் ஒரு பெண்
சிவப்பு சேலை அணிந்து.
கனவில்
கண்டது நினைவில் வர வேகமாய் சென்று
கதவை திறந்தேன். “ என்ன வேணும்...............யாரை பாக்கணும்
“ பதில் இல்லை
அங்கும்
இங்கும் தெருவை பார்த்துவிட்டு மீண்டும்
மௌனம் அந்த பெண் முகத்தில்.
மனதில்
என்னவோ தோன்ற “ சாப்பிடுறீங்களா
......” என்றேன். தலை அசைத்தாள்.
கதவை திறந்து “ உள்ளே வாங்க “ என்றேன்
மெதுவாக
உள்ளே நுழைந்தாள். பரப்பி கிடந்த செருப்பை
எல்லாம் காலால் விலக்கினேன். வீட்டையே
பார்த்தவண்ணம் உள்ளே வந்து நின்று
கொண்டாள்.
“ பார்வதி
................சாப்பிட ஏதாவது இருந்தா கொண்டா
” கத்தினேன். நிச்சயம் அடுப்படி எட்டி இருக்கும் குரல்.
“ எதுக்குங்க
.............” அங்கிருந்து
மீண்டும் பதில்
“ கொண்டான்னா
கொண்டா ........விளக்கம் கேட்டுகிட்டு “ குரலின் உச்சஸ்தாயியை புரிந்து
கொண்டாள்.
சற்று நேரத்தில் தட்டில் காலை செய்த
டிபன் அடையும் கொத்தமல்லி சட்னியுமாக
வந்து என்னையும் போர்டிகோவில் நின்ற அந்த பெண்ணையும்
பார்த்துவிட்டு சென்றாள்.
அவளுக்கு
தெரியும் இப்படி முகம் தெரியாத
முதியவர், குப்பை பொறுக்கும் சிறு
வேலை செய்யும் ஏழை, சில நேரம்
மனநோயாளியை கூட வீட்டில் ஏற்றி
சாப்பாடு குடு என்று கேட்பதுண்டு.
தரவில்லை
என்றால் பிராண்டி விடுவான் அப்புறம் ரத்தகளறி தான் அன்று வீட்டில்.
சமாதனம் ஆக நேரம் ஆகும்
என தெரியும் அவளுக்கு. அதனால் ஒரு கையில்
தண்ணீர் சொம்பு மற்றொரு கையில்
டீ என மனைவி மீண்டும்
வந்தாள்.
அந்த பெண்மணி சாப்பிட்டு முடித்திருந்தார்.
ஒன்றுமே பேசவில்லை. ஏதோ கட்டுப்பட்ட பொம்மை
போல எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார்.
அவள் சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் அகற்றி விட்டு
“ செலவுக்கு காசு வேணுமா ...’ என்றேன். பதில்
இல்லை. அமைதி
“ பார்வதி
..................மணி பர்ஸ் ல இருக்கிற
காசு எல்லாத்தையும் எடுத்திட்டு வா .” கையில் வைத்து
எண்ணிக்கொண்டு வந்தவளை முறைத்தேன்.
“ இந்தா
................வச்சிகோங்க
“.
வாங்கவில்லை
“ சும்மா
வச்சிகோங்க...............நீங்க யாருக்காவது கொடுங்க
“.
வாங்கிகொண்டாள்.
“ இது என் பொண்டாட்டி.. நல்லா
வச்சிருக்கேனா. சந்தோசமா தான் இருக்காளா. பெரிய
மனுசி நீங்க .......ஆசிர்வாதம் பண்ணுங்க இவளை “
சட் என புரிந்து கொண்டாள்
மனைவி. இவன் இப்படி எல்லாம்
யாரிடமும் பேசமாட்டான். பேசுகிறான் என்றால் வந்திருக்கும் பெண்
யாராக இருக்கும். போர்டிகோவில் நிற்கும் அந்த வயது முதிர்ந்த
பெண்ணை முழுவதுமாக கண்களாலே அளந்தாள் மனைவி. இருப்பினும் அவள்
எதிரில் பவ்யமாக நின்று கொண்டாள்.
தலையில்
கை வைத்த அந்த பெண்மணி
மனைவியையே கண் விலக்காமல் பார்த்துக்கொண்டே
இருந்தாள். ஒரு நிமிடம் சலனமற்ற
அமைதி.
“ சரி
...........கிளம்புறீங்களா
..........” என்றேன்.
கையை அவள் தலையில் இருந்து
விலக்கிவிட்டு என்னையும் அவளையும் குழந்தைகளையும் முழுவதுமாக ஏற இறங்க பார்த்துவிட்டு
ஒன்றுமே சொல்லாமல் கதவை திறந்து வெளியே
இறங்கி நடக்க துவங்கினாள்.
பெருமூச்சு
விட்டுக்கொண்டேன். வாசல் கதவு திறந்தே
கிடந்தது. “ யாருங்க இது ............” என்றாள்
மனைவி ஆச்சர்யமாய்.
கண்ட கனவை சொன்னேன்.
வேக வேகமாக வீட்டின் உள்ளே
சென்ற மனைவி போன் எடுத்து
அவள் தந்தையிடம் பேச துவங்கினாள்.
“ அப்பா................அம்மா எப்படிப்பா இருப்பாங்க
“
“ என்னம்மா
திடிர்ன்னு கேள்வி .........என்ன விசயம்.”
“ சொல்லுங்க
...................ஒல்லியா
இருப்பாங்களா “
“ ஆமா
“
“ செவப்பு
கலர் சேலை பிடிக்குமா .............”
“ ஆமா
............”
“ தல முடி நீளமா இருக்குமா
................”
“ ஆமா
...............”
“ புருவம்
பக்கத்துல மறு இருக்குமா ..................”
“ ஆமா
................”
“ நான்
அப்புறம் போன் பண்ணுறேன்ப்பா..............”
“ ஏம்மா.........கனவு ஏதாச்சும் கண்டியா..”
முடிப்பதற்குள் தொடர்பு துண்டித்தாள்.
வேகமாக
போர்டிகோ மீண்டும் வந்தவள் வாசல் வரை
சென்று வந்தாள். தெருவில் யாரும் இல்லை போலும்.
திரும்பி கதவை அடைத்து விட்டு
அந்த பெண் நின்றிருந்த இடத்தில்
வந்து நின்றுகொண்டாள்.
இரண்டு
வயதில் தாயை இழந்தவளுக்கு மீண்டும்
தாயே இல்லாது கடந்து வந்த
வாழ்வின் பழைய ஞாபகம். அம்மாவின்
நினைவில் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து
கொண்டிருந்தாள்.
குழந்தைகள்
இருப்பதையும் மறந்து அருகில் சென்று
ஒன்றும் சொல்லாமல் அவளை மெதுவாய் அணைத்து
கொண்டேன். நான் தொட்டதும் அடக்கி
வைக்க முடியாமல் விம்மி அழ துவங்கினாள்.
ஒன்றுமே சொல்லவில்லை சிலவற்றை அழுது தீர்த்து விடவேண்டும். சுகமாய் அழட்டும் என விட்டுவிட்டேன்.
No comments:
Post a Comment