Thursday 31 July 2014

Story 118: பதிமூணு



பதிமூணு.

பதிமூணுங்கறது உங்களுக்கு ஒரு நம்பர்.  எனக்கு அது ஒரு கதை.  பதிமூணு வருஷத்துக்கு எத்தனை மாசம், எத்தனை வாரம், எத்தனை நாள் அப்படின்னு கேட்டா நீங்க உடனே ஒரு கால்குலேட்டரை எடுத்து அடிச்சு டக்குனு சொல்லிருவீங்க.
ஆனா நான் அதை செகண்ட் செகண்டா எண்ணிருக்கேன். செகண்ட்ல எண்ணுறப்போ தான் ஒரு செகண்ட் எண்ணி முடிக்குறப்போ அடுத்த செகண்ட் வந்திருக்கும்.
செகண்டுகளால் ஆன பதிமூணு வருஷம் முடிஞ்சு நான் ஜெயில்ல இருந்து வெளிய வந்து ரெண்டு மாசம் ஆச்சு..
அந்த ஜட்ஜ் மூஞ்சி இன்னும் ஞாவமிருக்கு.  கருப்பு.  தொப்பை.  நெத்தில பொட்டு அப்பிருந்தாரு.  என் பேரச் சொல்லி பதினாலு வருஷம் குடுத்தாரு.  எவனுக்கோ பொறந்த நாளுன்னு ஒரு வருஷம் முன்னாடி விட்டாங்க.
மொத மாசம் அப்பா வந்தாரு.  எதும் பேசல.  இனிமே வராதனு மட்டும் சொன்னேன்.  அடுத்த மாசம் அம்மா வந்துச்சு.  டேய், பாப்பாவ கூட்டிட்டு வரட்டாடானு அழுதுட்டே கேட்டுச்சு.  நீயே இனிமே வராதனு அவளையும் போச்சொல்லிட்டேன்.
பதிமூணு வருஷம் யாரையும் பாக்கல.  லெட்டரு கிட்டரு எதுவும் கெடையாது.  நான் என்ன சொன்னாலும் நம்பனும் சரியா.?
இத்தனை வருஷத்துல ஒரு நாளு கூட ஏன் பண்ணேன்னு எதுக்கு பண்ணேன்னு யோசிச்சதில்ல, கவலைப்பட்டதில்ல.
இப்ப சொல்றேன். 
எதிர்பாராத நேரத்துல நான் பாக்க வேண்டியதா போச்சு.  அவளுக்கு ஒரு அடி தான் விட்டேன்.  போ, ஒரு ஓரமா போய் உக்காருன்னு சொன்னேன்.  பேயறைஞ்ச மாதிரி போய் உக்காந்தா.
ஒருத்தனை எப்படி வேணாலும் கொல்லலாம்.,
அவனை அடிச்சே கொன்னேன்.
ஒரு மணி நேரம் அடிச்சு மிதிச்சு கொன்னேன்.  அதைப் பாத்தே அவ போய்ட்டா. மறு நாள் ஸ்டேசன்ல படிச்ச பேப்பரு தான் நான் கடைசியா படிச்சது.  அத்தனை பேப்பர்காரன்கிட்டயும் கேக்கணும், உன் பொண்டாட்டி உன்கூட மட்டும் தான் படுக்குறாளா., நீ உன் பொண்டாட்டி கூட மட்டும் தான் படுத்தியானு. அசிங்கம்னு தெரியுதுல? அதை ஏன் அவ்வளவு பெருசா போடுற.  உன்னால முடியல. இன்னொருத்தி கூட படுக்க முடியலங்கற வயித்தெரிச்சல். இந்த மாதிரி நியூஸ்ல டேய், தப்பு பண்ணது ஒரு ஆளோ ரெண்டு ஆளோ தான்டா.  அந்த அவமானத்த காலா காலத்துக்கும் சுமந்துகிட்டு திரியறது ரெண்டு மூணு குடும்பம் டா.
இவ்வளவு கதையும் ஏன் சொல்றேன், கேட்டியா நீ?
தப்பு பண்ண ரெண்டு பேரு செத்துப் போய்ட்டாங்க.  போட்டுத் தள்ளுனவன் பதிமூணு வருஷம் உள்ள இருந்துட்டு வந்துட்டேன்.
என் பாப்பா.  என் பாப்பாகிட்ட நான் என்ன சொல்றது?
அவளை எப்படி போய் பாக்குறது?
அவகிட்ட என்ன பேசுறது?
உங்கம்மா தப்பு பண்ணினானு சொல்ல முடியுமா?
உங்கப்பனை மன்னிச்சுடுனு கேக்க முடியுமா?
பதிமூணு வருஷம் கழிச்சு நான் போய் என் புள்ளைய பாக்கணுமா?
எனக்கு இப்ப சாவனும் போல இருக்கு.  இப்பனு இல்ல.  இத்தனை வருஷமும் அப்படித்தான் இருக்கு.  இன்னிக்கு சாவறத நான் அன்னிக்கே செத்துருக்கலாம்.  ஆனா நான் சாவல.  என் பாப்பா என்ன தப்பு செஞ்சதுன்னு தெரியாம தெவங்கி கெடந்தேன். என் பாப்பா அப்பன் ஆத்தா இல்லாம வளரணும்னு யாரு விதிச்சது? அவ அம்மா பண்ணின தப்பு, அவ போய்ட்டா.  நான் பண்ணின தப்புக்கு நான் அனுபவிச்சே ஆகணும்னு தான் நான் சாவல.  சாவும் ஒரு செகண்டுல வந்துரும்.  வரக்கூடாதுன்னு தான் இத்தனை காலம் வாழ்ந்து செத்திருக்கேன்.
பாப்பா இப்ப பெருசாயிருக்கும்.  வளர்ந்த புள்ளைய திருப்பி வளர்க்க முடியுமா. அது பேசனும்னு நினைச்சதை எல்லாம் இனிமே ஒன்னொன்னா பேச முடியுமா? பதிமூணு வருஷமா நான் பேசாம விட்டதை, பாப்பா என்கிட்டே கேக்காம விட்டதை இனிமே நான் பேச முடியுமா, பாப்பா கேக்க முடியுமா? அது வயசுக்கு வந்த அன்னிக்கு எவ்வளவு பயந்திருக்கும். பெத்தவங்க இல்லாம எவ்வளவு வாடி இருக்கும்.? இந்த வயசுல ஏதாச்சும் பையன் கூட பழகிட்டு இருக்கா? உலகத்துல இருக்குற அத்தனை பேரு மேலையும் வெறுப்புல இருக்குமா?
பதிமூணு வருஷம் இல்லாமப் போன உறவு, பேச்சு, அன்பு, கோபம், இது எல்லாத்துக்கும் நான் என்ன பண்ணப்போறேன்?
நான் சாவட்டா?  எனக்கு இப்ப என்ன செய்றதுன்னு தெரியல.

அவன் இது வரை சொன்னதை, புலம்பியதை, புரிந்தோ புரியாமலோ கேட்டுக் கொண்டு இருந்த அந்த நாய் என்ன நினைத்தோ விருட்டென்று ஒரு ஊளையிட்டு நகர்ந்து சென்றது.
நாயோடு சேர்ந்து இந்தக்கதை கேட்டுக்கொண்டிருந்த நான் அவனிடம் போய் என்ன சொல்ல வேண்டும்?

No comments:

Post a Comment