விளங்கிடும் விவசாயம்
என்னுடைய
தேர்வு முடிவு வந்ததிலிருந்து எங்க
வீடு கிட்டத்தட்ட ஒரு அகதி முகாம்
மாதிரிதான் இருக்கிறது. வீட்டில் என்னால ஒரே பிரச்சினை,
இதனை விசாரிக்க வீட்டிற்கு
வந்த மாமாவிடம், “பத்தாவுதுல 460 மார்க் எடுத்தான், அதேமாதிரி
பனிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மார்க்
எடுப்பானுதான் நினைச்சோம், ஆனா இப்படி
ஃபேஸ்புக்கு, வாட்ஸப்புனு தடம் மாறி போவான்னு
எதிர்பார்க்கவே இல்ல, எவ்வளவோ எடுத்து
சொன்னோம் கேட்கவே இல்ல, இந்த
தடங்கள் எல்லாம் இல்லன்னா, கண்டிப்பா
இன்னும் 100 மார்க் அதிகமா எடுத்துருப்பான்”
என்று அம்மா விரக்தியும், அழுகையும்
சம அளவில் கலந்து புலம்பிக்
கொண்டிருந்தார்.
நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை, அதுவும்
செல்லப்பிள்ளை. என்னை சமாதானம் செய்ய
பொதுவாக மாமவைத்தான் அழைப்பார்கள்.
“படிக்காத
பசங்கன்னாலும் பரவாயில்லக்கா, நல்லாப் படிக்கிற பசங்க
இப்படி எதாவது விசயத்துல அடிமையாகி
கோட்டவிட்றானுங்க. சரி விடுக்கா, அவன்
எடுத்த 850 மார்க்குக்கு கெடைக்கிற காலேஜ்ல சேத்து விடுங்க,
அப்பறமா, அவன் தெறமைல பொழைச்சுப்
போறான்” என்றார் மாமா அம்மாவிற்கு
ஆதரவாக.
விரக்தியில்
அம்மா, “நம்ம ஈசனூர் காலேஜ்ல
இஞ்சினியரிங் சேத்து விடறோம்ன்னு சொல்றோம்,
ஒத்துக்க மாட்டேங்கிறான். இங்கன்னா,
மூணு லட்சத்துக்குள்ள
மொத்தப் படிப்பும் முடிஞ்சிரும், ஆனா இவன் சென்னைல
இருக்கற ஜே.ஆர்.பி
காலேஜ்லதான் படிப்பேன், இல்லன்னா படிப்பே வேணாம்னு பிடிவாதம்
பிடிக்கிறான், ரெண்டு
நாளா ஒரே ரகளை, சாப்பிடாம
அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்” என்று வெறுப்பை வார்த்தைகளால்
வாரி இறைத்தார்.
“ஏண்டா
அருணு, ஈசனூர் காலேஜுக்கு என்னடா
கொறச்சல்? பக்கத்திலயே இருக்கு, ஊர்லயே இருக்கலாம். நீ
இங்க இருந்தா, அப்பாவுக்கு விவசாய வேலைல கூடமாட
ஒத்தாசையா இருக்கலாம்லியா?’ என்ற மாமா இம்முறை
அப்பாவின் கவனத்தையும் ஈர்த்தார்.
பதில் எதுவும் பேசாமலிருந்த என்னை
சுட்டிக்காட்டி அம்மா, “அதெல்லாம் எவ்வளவோ
சொல்லியாச்சு, கேக்கமாட்டேங்கிறான், ஏன்னா இவன் கூட்டாளி வினோத் அங்கதான் படிக்கப்போறானாம்,
அதனால பெருமைக்கு இவனும் அங்க படிக்கணும்னு
நெனைக்கிறான், நாலு லட்சம் டொனேஷன்,
அப்பறம் வருஷத்துக்கு ரெண்டு லட்சமாவது ஆகும்.
வினோத் வீட்ல சைக்கில் வியாபாரம்
பண்ணி சம்பாதிச்சவங்க, அவங்களால எவ்வளவு வேணும்னாலும் செலவு
பண்ணமுடியும், நம்மால அது முடியுமா?,
சொன்னாப் புரிஞ்சுக்கவே மாட்டேங்றான். அவ்வளவு பணத்துக்கு,
நாம எங்க போறது?” என்று அவரது ஆதங்கத்தை
வெளிப்படுத்தினார்.
இதுவரை
அமைதியாக இருந்த அப்பா, பணம்
இல்லன்னா, இருக்கிற நெலத்த வித்து பணத்த
புரட்டச் சொல்லி பிரச்சனை பண்றான்.
இவனால எனக்கும் இவளுக்கும் எப்பவும் பிரச்சினை வருது’ என்று சொல்லிவிட்டு
என் மீது உள்ள கோபத்தை
அம்மாவின் மீது பார்வையாக வெளிப்படுத்தினார்.
அப்பாவை
சமாதானப்படுத்தும் வகையில் ஆரம்பித்த மாமா,
“இப்பெல்லாம் எப்படி படிக்கிறான்னு யார்
பாக்கறா?, எங்க படிக்கிறாங்கங்கிறதத்தான் உயர்வா நினைக்கிறாங்க.
சின்னப் பையன் இவன் என்ன
பண்ணுவான்? இவன் ஆசைப்படறமாதிரியே செய்யுங்க,
ஒத்தப் புள்ளய பெத்து
வச்சிருக்கீங்க, நல்லாப் படிச்சு சம்பாதிச்சு
ஒன்னுக்கு மூணா நெலத்த வாங்கிட்டுப்
போறான்” என்று வழக்கம்போல எனக்கு
சாதகமாகவே இந்த விஷயத்தையும் ஒரு
முடிவுக்கு கொண்டு வர முயன்றார்.
“எவ்வளவோ
கஷ்டம் இருந்தாலும், இவன் தாத்தா, எங்க
பூர்வீக நெலத்துல ஒரு சென்டு கூட
விக்கல. அதுமாதிரி என்னையும் எந்த சூழ்நெலயிலும்
நெலத்த மட்டும் விக்கக்கூடாது, உனக்கு
அப்புறம் ஓம்பிள்ளைக்கு இருக்கணும்ன்னு
சொல்லிட்டு போய் சேந்திட்டாரு.
ஆனா இவனோ தாத்தா
சொத்து பேரனுக்குத்தானே சொந்தம். அதனால வித்திட்டு பணம்
கொண்டுவாங்கன்னு இப்பவே பாகம் பிரிக்கிறான்”
‘ஆமாம்
நீங்க வேற’ என்று அலுத்துக்கொண்டே
மாமா, “இந்த காலத்துப் புள்ளைங்களுக்கு,
விவசாயத்துல எங்க ஆர்வம் இருக்கு? சென்னை,
வெளிநாடுன்னு வேலைக்கு போகுதுங்க. தீபாவளி. பொங்கல் நாளும் கெழமைலகூட
ஊர் பக்கம் வர்றதுல்ல. டைஃபாய்டு, மலேரியான்னு ஏதாவது சீக்கு வந்தாத்தான்
அம்மா, அப்பா நெனப்பு வந்து
ஊருக்கு வருதுங்க., அதனால இவன் ஆசப்படுறமாதிரி
படிக்கவைங்க. இல்லன்னா, காலாகாலத்துக்கும் உங்கலத்தான் கொற சொல்லிட்டு இருப்பான்”
“சரி போகுது. இனி வருத்தபட்டு
ஒன்னும் ஆகப் போறதில்ல. நெலத்துக்கு
ஆள் பாக்க ப்ரோக்கர்ட்ட சொல்றேன்.
மச்சான், நீங்க இவன்கூட வினோத்
விட்டுக்குப் போய் அவங்க அப்பாட்ட
வெவரம் எல்லாம் என்னான்னு கேட்டுட்டு
வாங்க. அப்படியே போறப்ப இவனுக்கு எதாவது
சாப்பிடறதுக்கு வாங்கிக்கொடுத்து அழைச்சிட்டுப் போங்க. ரெண்டு நாளா
ஒழுங்கா சாப்பிடாம கெடக்கறான்”
நல்ல வசதியான வீட்டைச் சேர்ந்த
வினோத்தும் நானும் சிறுவயது முதலே
நண்பர்கள். டாக்டருக்குத்தான் படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான்.
எவ்வளவு செலவு செய்தும் அவனுடைய
அப்பா அவனை டாக்டருக்கு படிக்கவைத்துவிடுவார்
என்ற நம்பிக்கையோடு இருந்தான். ஆனால் என்ன ஆனதென்று
தெரியவில்லை, சென்னையில் ஜேஆர்பி கல்லூரியில் சேர்ந்துள்ளான்.
நல்ல வசதியான கல்லூரியாம், ஏசி
வசதியுள்ளதாம், விடுதியில் சாப்பாடு நல்லா இருக்குமாம்.
அவன் சொல்வதைப் பார்த்தால், அங்கு படித்தால் நல்ல
மதிப்பு இருப்பதோடு வேலையும் கிடைக்கும். இதை அப்பாவிடம் சொன்னால்
அவருக்கு எங்கே புரிகிறது?. அவருக்குத்
தெரிந்ததெல்லாம் நிலமும் விவாசயமும்தான். வருடாவருடம்
சாகுபடி செய்து கிடைக்கும் பணம்,
விவாசயத்திற்காக அடகுவைத்த நகையை மீட்டது போக
குடும்ப செலவுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும். வேற
ஒரு பெரிய முன்னேற்றமும் இந்த
விவசாயத்தால் எங்களது குடும்பத்தில் இல்லை.
பல வருடங்களுக்கு முன்பு அடித்த வர்ணம்
வெளுத்து, பொலிவிழந்த அகலமான வினோத் வீட்டின்
, காம்பவுண்டு கேட்டை கடந்து உள்ளே
சென்றபோது, பழைய கார் செட்டுக்குத்தான்
என் பார்வை முதலில் சென்றது.
கார் ஒன்றும் அங்கு இல்லை.
பழைய சைக்கிள் உதிரி பாகங்களும், துருப்பிடித்து
எழுத்துக்கள் அழிந்து கிடந்த ‘லிங்கம்
சைக்கில் மார்ட்’ பெயர்பலகையும் அங்குமிங்குமாக
கிடந்தன. சிறு வயதிலிருந்து பார்த்த
இந்தப் பெயர்பலகை என்மனதில் இன்றும் அழியாமல் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு, இது இந்த
மாவட்டத்திலேயே பெயர்போன கடையாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் ஆய்தபூஜையை
பட்டாசுகள் எல்லாம் வெடித்து தீபாவளிபோல்
சிறப்பாக கொண்டாடுவார்கள். வினோத் எங்களையும் கடைக்கு
அழைத்துச் செல்வான். என்ன காரணத்தினாலோ இன்று
அந்தக் கடையே இல்லை. அவர்களுடைய
நிலைமையும் முன்புபோல் இல்லை.
காலிங்
பெல் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த
வினோத்தின் அம்மா, ‘வாங்க, உக்காருங்க.
வினோத் அப்பா வீட்லதான் இருக்காங்க.
நீங்க வர்றதா அருண் அப்பா
ஃபோன் பண்ணிருந்ததா சொல்லிட்டு இருந்தாங்க’ என்று சொல்லிவிட்டு அவரை
அழைக்க உள்ளே சென்றார்.
வெள்ளை
பனியன், கைலி கண்ணாடியோடு வெளியே
வந்த வினோத்தின் அப்பாவை பார்த்ததும் ‘வாங்க’
என்று மாமா சொல்ல அவரும்
‘வாங்க’ என்றார். .
எங்கள்
அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்த வினோத்தின் அப்பா,
மாமாவிடம் “சொல்லுங்க அருண் என்ன சொல்றான்?.
அருண் அப்பா ஃபோன்ல எல்லாம்
சொன்னார்” என்றார்
“ஆமாம்
சார், உங்க பையன் சேர்ந்த
காலேஜ்லதான் சேரணும்னு சொல்றான். எங்க வசதிக்கு அது
கொஞ்சம் செரமம்னு சொல்லி பாத்துட்டோம். ஆனா
ஒரே பிடிவாதமா இருக்கான். பத்தாவதுல நல்ல மார்க் எடுத்தவந்தான்,
இப்போ ஃபேஸ்புக்கு அது இதுன்னு நேரத்த
வீணாக்கி சரியா மார்க் எடுக்கல”
என்று அம்மா மாதிரியே மாமாவும்
ஆரம்பித்தார். நான் உடனே மாமா
என்று அவரை அழுகாத குறையாக
கெஞ்சலுடன் பார்வையாலே வேண்டாம் என்றேன்.
இதைக் கவனித்த வினோத்தின் அப்பா
விரக்தியான சிரிப்புடன், “வீட்டுக்கு வீடு வாசப்படி. எங்க
வீட்டுலயும் இதே பிரச்சனைதான். போனவருஷம்
எங்க சொந்தக்கார பையனுக்கு 50 லட்சம்
கொடுத்து மெடிக்கல் சீட்டு வாங்கிருக்காங்க, அதே
மாதிரி வினோத்தும் இருக்கிற
நெலத்த வித்துட்டு சீட்டு வாங்க சொல்லி
ஒரே பிரச்சினை. மொத்த குடும்பமும் அவனுக்காக
பரிஞ்சு பேசிட்டு ஒத்தக்கால்ல நின்னாங்க. ஆனா நான் ஒத்துக்கல. நாளைக்கு
விவசாயத்துக்கு ஒரு காலம் வரும்
அப்ப நீ விவசாயத்துக்கு வருவடான்னு
சொல்லிட்டு சென்னைல சேத்துட்டு வந்துருக்கேன்.
ஒரு போர், பொருளாதார வீழ்ச்சின்னு
ஊருக்கு திரும்பி வந்தா என்ன பண்ணுவான்.
அவனுக்குப் புரியல, கோவிச்சிட்டு அவங்க
அக்கா வீட்டுல போய் இருக்கான்.
எது எப்படியோ நெலத்த விக்கறது இல்லன்னு
நான் முடிவா இருந்திட்டேன்” என்று
இருக்கமாக சொல்லி முடித்தார்.
“எல்லாம்
கூடி வர்ற நேரத்துல இவர்
குட்டையக் கொழப்புறாரே” என்று என் மனது
படபடத்தது.
நான் பயப்பட்டதுபோலவே மாமாவும் ஆரம்பித்தார், “பாருங்க உங்களுக்கு வருமானத்துக்கு
தொழில் இருக்கு, ஆனாலும் நீங்க நெலத்த
விக்கல. இவங்க விவசாயத்த நம்பித்தான்
இத்தன காலம் குடும்பத்த ஓட்டிருக்காங்க.
இவனப் படிக்க வெச்சும் ஆளாக்கிருக்காங்க.
அந்த நெலத்தைத்தான் விக்கணும்னு சொல்றான்”
“இவனுங்கள
குத்தம் சொல்லி காரியம் இல்ல.
இருவது வருஷத்துக்கு முன்னாடி நானும் நெலத்த வித்து
சைக்கிள் கம்பெனிய விரிவுபடுத்தணும்ன்னு எங்க அப்பாகிட்ட பணம்
கேட்டு பிரச்சனை பண்ணினேன். அவர் சம்மதிக்கல. விவசாயம்தான்
நம்ம குடும்பத்தோட மூலாதாரம். அதனால என் காலத்துக்கு
நான் நெலத்த விக்கமாட்டேன்னு
தீர்மானமா இருந்தார். அதுல எனக்கும் அவருக்கும்
வருத்தம் 10 வருசம் பேச்சுவார்த்த இல்லாம
இருந்தேன். ஒரு காலத்துல ஓஹோன்னு
இருந்த என் சைக்கிள் வியாபாரம்
இன்னைக்கு சுத்தமா இல்லன்னு ஆகிப்போச்சு,
வருமானத்துக்கு ஏதாவது பண்ணணுமேன்னு, அனுபவமே
இல்லாத ரெண்டு மூணு தொழில்
பண்ணி நஷ்டம் ஆனதுதான் மிச்சம். இருவது
வருசம் சம்பாதிச்சதெல்லாம் போய், இன்னைக்கு
ஒன்னும் இல்ல. எங்கப்பா எனக்கு
சின்ன வயசுல கத்துக் கொடுத்த
விவாசயமும் அவர்
வெச்சிட்டுப்போன நிலமும்தான் இப்ப என் குடும்பத்தோட
வாழ்வாதரமே, அவர் மட்டும் இத
செய்யலன்னா இன்னைக்கு என் குடும்பம் இந்த
வீட்ல ஏன் இந்த உலகத்திலேயே
இருந்திருப்போமான்னு சொல்லமுடியாது. அப்பா கால்ல விழுந்து
மன்னிப்பு கேட்டு நன்றி சொல்றதுக்கு
இப்ப அவர் உயிரோட இல்ல’
என்று சொன்னபோது அவர் கண்கள் கலங்கிவிட்டன.
விவரம்
கேட்கப் போன எங்களுக்கு ரொம்ப
கஷ்டமாகப் போய்விட்டது. “விடுங்க சார், அவர்
தெய்வமா இருந்து உங்களுக்கு எப்பவுமே
தொணையா இருப்பார் சார்’ என்று மாமா
சொல்லிமுடிக்க, அருணின் அப்பா அழுகையை
அடக்கமுடியாமல் விம்மி விம்மி அழுக
ஆரம்பித்துவிட்டார்.
இதுவரை
கம்பீரமாகப் பார்த்த அவரை கலங்கிய
நிலையில் கண்டபோது, என் மனதில் இனம்புரியாத
ஒரு அழுத்தம் உருவானது.
அருணின்
அம்மா அவரை ஆறுதல்படுத்தி உள்ளே
அழைத்து செல்ல, நாங்களும் கனத்த
மனதுடன் விடைபெற்றோம்.
வழியில்
மாமாவிடம் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு
சென்றவுடன், அம்மாவிடம் “நான் இங்கயே படிச்சுக்கிறேன்.
அப்பாக்கு விவசாயத்துல உதவியா இருந்துட்டு நம்ம
ஊர்லயே படிக்கறேன். அப்பாட்ட நிலத்தை விக்கவேண்டாம்ன்னு சொல்லிரும்மா”
என்றேன் நிறைந்த மனதோடு.
No comments:
Post a Comment