தமிழுக்கும் அமுதென்று
பேர்
சிகரெட்டின்
புகை நெஞ்சுக் குழிக்குள் ஆழமாக இறங்கியது. மேலும்
மூச்சை உள்ளிழுத்தார் அமுதன்.கண்கள் மூடிக்
கிறங்கியிருந்தன. இந்த மாதிரி கண்களை
மூடிக் கொண்டு யாருமற்ற தனிமையில்
நெஞ்சுக் குழிக்குள் புகையைப் படர விடுவது அவருக்கு
மிகவும் விருப்பமானதாயிருந்தது. இது மாதிரி சந்தர்ப்பங்களில்
சுற்றிப் படர்ந்து கலந்திருக்கும் தனிமை , சிகரெட் புகைக்கு
ஒரு தனி சுகத்தைக் கூடுதலாய்
அளித்து விடுகிறது.
இதற்கு
முந்தைய கடைசி சிகரெட்டை எப்போது
பிடித்தோம் என்று அவருக்கு சரியாக
நினைவிருக்கவில்லை. எப்போதாவது தான் தமிழ் ஓரிரண்டு
நாட்கள் சேர்ந்தாற்போல் வீட்டிலிலாதிருக்கும் சந்தர்ப்பங்கள் அமையும். அவள் உள்ளூரில் இருந்தால்,
வீடு திரும்ப வெகு நேரமானாலும்
அவர் சிகரெட்டைத் தொடுவதில்லை.அந்த மணம் வீட்டை
விட்டகல வெகு நேரமாகும் என்பது
அவர் எண்ணம். தமிழுக்குத் துளி
சிகரெட் வாடை வந்தாலும் பிடிக்காது.
அதற்காக
உக்கிரமாகி விடவும் மாட்டாள் உடனே.
அந்த நாள் தேதி கணம்
எல்லாவற்ரையும் மனதில் பதிய வைத்துக்
கொள்வாள்.பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏதேனும் வாக்குவாதம் வருகையில்
எந்த சமயத்தில் அதைக் கூறினால் அவர்
வாயைப் பட்டென்று அடைக்க முடியுமோ அந்த
சமயம் சரியாக நாள் நேரத்தோடு
அவர் செய்த தப்பை சொல்லிக்
காட்டிக் குத்துவாள்.
"ஏண்டா...
எத்தனை முறை சொல்லிருக்கேன்... மழை
பேஞ்சா எனக்கு கால் பண்ணுனு?
ஏண்டா இப்படி என் உயிரை
வாங்கற?"
...........
"டேய்...
உன்னத் தான். பேசிட்டே இருக்கேனே..
காதுல விழுதா இல்லையா? மழைல
நனைஞ்சு ஜுரம் வந்தா என்னத்துக்காறது?"
..........
"சரி...
சரி... சர்ரீஈ..... என் தப்பு தான்.
ஆசைக்கு ஒண்ணு அதிகமா பிடிக்க
கூடாதா... அந்த உரிமை கூட
எனக்கில்லையா?
.............
சரி டா... படுத்தாத. நான்
அந்த தப்பை இனிமே பண்ண
மாட்டேன்.இனிமே நீயும் மழைல
நனைஞ்சு வராதயேன் ப்ளீஸ்..."
"பாக்க
தானே போறேன்.. நீ என்ன பண்றன்னு"
என்று முடிப்பாள் அந்த உரையாடலை.
நினைத்தவுடன்
மெல்லச் சிரித்துக் கொண்டார் கண்கள் மூடி.புகை
கமறியது.
எங்கிருந்து
வந்தது இதெல்லாம்? அவரிடமிருந்து தான். அவரும் அதையே
தான் செய்வார்.அப்படியே அவளுக்கு வந்திருக்கிறது. பிறப்பாலெல்லாம் வந்தாற் போல் தெரியவில்லை.இவரைப் பார்த்துப் பார்த்து
தான் வந்திருக்க வேண்டும்.
எப்போதும்
அவர்கள் இருவரும் போட்டுக் கொள்ளும் சண்டைகள் சிறு பிள்ளைகள் போட்டுக்
கொள்ளும் சண்டைகள் போலவே இருக்கும். நான்
சொல்லி நீ கேக்கலையே, நீ
சொல்லி நான் ஏன் கேக்கணும்
என்பது தான் பெரும்பாலும் சண்டைகளின்
அடிநாதம். கணவன் மனைவிக்குள் மட்டும்
தான் ஊடல் வர வேண்டும்
என்று யார் வகுத்து வைத்தது?
தமிழ் எல்லாவற்றிலும் எப்போதும் தெளிவு. எல்லாவற்றிலும்.
"என்னப்பா
இங்க உக்காந்து என்ன பண்ற.. மணி
என்னாவுது?தூங்கப் போலியா?"
"டேய்..
நான் ஒண்ணு கேக்கணுமே உன்
கிட்ட?"
" கேக்கறதுக்கு
இப்ப தான் நேரம் பாத்தியா...
ஏம்ப்பா இப்படி... நடுராத்திரில மொக்க போடற... சரி
கேளு"
.....
"கேளேம்ப்பா"
சலிப்புடன்.
"வொய்
டோண்ட் யு ஃபால் இன்
லவ்?"
விரிந்த
கண்கள். அப்பட்டமான ஆச்சரியம். " என்னப்பா பேத்தறே?"
"இல்லடா...
"
"என்ன
சொல்லு.... பேச வர மாட்டேங்குதா?"
"இரு
டா... ட்ரை பண்றேன்ல"
"ம்ம்"
"இல்லடா...
இவ்ளோ நாள் உன்ன பெருசா
வளர்த்ததா எல்லாம் நான் நினைக்கல.
ஜஸ்ட் ரெண்டு பேரும் ஒண்ணா
இருக்கோம். உனக்கு நல்ல பையனா
தேடி கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கெல்லாம்
எனக்கு பொறுப்பிருக்கான்னு தெரில. ஆனா என்னை
விட நீ பொறுப்புன்னு தெரியும்.
அதுனால...."
"அதுனால?"
"அதுனால
நீயே பெட்டரான ஒரு பையனை செலக்ட்
பண்ணினா என்ன?... அதான்....."
"ஏம்ப்பா
ராத்திரில எழுப்பி இப்படி பிராணனை
வாங்கறே?காலையில ஆபீஸ் போகணும்.
போய்ப் படுத்தாம படு". அவள் சுடு சொற்கள்
சொன்னாலும் கூட அதையும் இனிக்கிறாற்
போல் தான் சொல்வாள் அவருக்கு.
இப்படியெல்லாம் அவள் புரட்டி எடுக்கும்
போது அவருக்கு ஆனந்தமாய் இருக்கும்.
எவ்வளவு
சீரியசான விஷயம் பேச முயற்சி
செய்து கொண்டிருக்கையில் சட்டென்று அனாயாசமாக நகைப்புக்குரியதாக்கி விடுகிறாள்...
ஆனால் எல்லா சமயங்களிலும் பள்ளிப்
பிள்ளைகள் போல் தத்துப் பித்தென்று
பேசிக் கொண்டிருப்பதுமில்லை இருவரும்.
"நீ
ஏம்ப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?"...
"அது....
அதெதுக்குடா இப்ப.. விடு..."
"ம்
ஹூம்.. இப்ப நீ சொல்ற...."
"இன்னொரு
கல்யாணம்... திரும்ப ஒரு பொண்ணு
கூட முதல்ல இருந்து....அவ
மேல அபெக்ஷன் இல்லன்னாலும் இருக்கற மாதிரி காட்டணும்.
எது செய்யும் போதும் அவளுக்காக வேற
யோசிக்கணும். தவிரவும் செக்ஸ் ஹாஸ் நெவர்
பீன் மை ப்ரியாரிட்டி.அதைத்
தவிர தேவைன்னு பாத்தா மனசுல இருக்கறத
ஷேர் பண்ணிக்க ஒரு ஆள்.நாம
பேசறத கேக்க. நம்ம கூட
பேச. வீட்டுக்கு வரும் போது நாம
தனியா இல்லைங்கற ஃபீலைத் தர்ற ஒரு
ஜீவன். அந்த மாதிரி ஒரு
கம்பானியன் கொஞ்சம் அதிக புத்திசாலியா
இருந்தா ரொம்ப சந்தோஷம். அந்த
வகையில நான் செம்ம லக்கி.
எனக்கு தான் நீ இருக்கியே"
"ஐயே...வழியுது.. தொடச்சிக்கோ"...
மீண்டும்
சிரித்தார்.
புரை ஏறியது. தலையில் தட்டிக்
கொண்டார்.
தமிழுக்கு
தாடி இருந்தால் சுத்தமாய்ப் பிடிக்காது. தினமும் ஷேவ் செய்து
மழுங்க இருக்க வேண்டும். தினமும்
சோதனை உண்டு.ஏமாற்ற நினைத்தால்
பட்டென்று கன்னத்தில் அடியும் உண்டு. தன்னிச்சையாய்
பச்சை படிந்து போயிருந்த தாடையைத்
தடவிக் கொண்டார். ஒரு நாள் ஷேவ்
பண்ணாமல் விட்டதால் நரைத்த முரட்டு தாடி
லேசாக எட்டிப் பார்த்தது. தமிழ்
வெளியூர் சென்றால் ஷேவ் பண்ண மாட்டார்.
அப்படியே விட்டு விடுவார்." அவள்
வருவதற்குள் செய்து கொண்டு விட
வேண்டும் " மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டார்.
வீட்டின்
பின்பக்கம் ஏதோ சலசலப்பு கேட்டது.
எழுந்து போய் ஜன்னல் வழியாய்ப்
பார்த்தார்.யாரும் தெரியவில்லை. திரும்பி
வந்து ராக்கிங் சேரில் அமர்ந்து கொண்டார்.பக்கத்து வீட்டுக் கரும்பூனை டாலியாயிருக்கும். அதற்கு தான் எப்போது
பார்த்தாலும் தோட்டத்தில் ஆட்டம்.
அவரும்
தமிழும் சேர்ந்து தோட்டம் அமைப்பதே ஒரு
அலாதி அனுபவம். கன்றுகள் வாங்குவது , உரம் வாங்குவது, நிலம்
பதப்படுத்துவது, செடிகளை நட்டு நீரூற்றி
பராமரிப்பது என்று இருவருக்கும் அது
ஒரு தனி உலகம்.எட்டு
வயதில் தானே நட்டு வளர்த்த
செம்பருத்திச் செடியில் முதல் பூ பூத்ததும்
தமிழ் போட்ட ஆட்டம் இருக்கிறதே...
காலத்துக்கும் மறக்க முடியாது.அன்று
தமிழ் அவரை ஓட்டலுக்கு அழைத்துப்
போய் ட்ரீட் கொடுத்தாள். அவர்
செலவில் தான். இருந்தாலும் அது
முக்கியமா என்ன?
சட்டென்று
சுய நினைவுக்கு வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்தார். தமிழ் இல்லாத தனிமை
முகத்தில் அறைந்தது. நினைவுகளில் மூழ்கிக் கிடந்த வரை சுடாத
தனிமை இப்போது சுட்டது.
பார்க்கவே
கூடாதென்று நினைத்து முகத்தை வேறு பக்கம்
திருப்பி மனதை வேறு நினைவுகளுக்குத்
திருப்பிய விஷயத்தை வேறு வழி இல்லாமல்
பார்த்தார்.அவர் அமர்ந்திருந்த சேருக்குக்
கொஞ்சம் தள்ளிக் கீழே... வேட்டி
கலைந்து கிடக்க கண்கள் அரை
செருகலாகக் கிடக்க வாய் லேசாகத்
திறந்து கிடக்க, கைகள் பரந்து
கிடக்க, கீழே கிடந்தது.... அவர்
உடல்.
யார் வந்து கதவைத் தட்டப்
போகிறார்கள்? யார் வந்து முதலில்
பார்க்கப் போகிறார்கள் தன் உடலை? யார்
தமிழுக்குத் தகவல் கொடுக்கப் போகிறார்கள்?
தமிழ் வர எவ்வளவு நேரமாகும்?
அல்லது நாளாகுமா? கேள்விகளுக்கெல்லாம் அவரிடம் பதிலில்லை.
ஆனால் எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை. வாசலைப்
பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினார். எப்படியும் தமிழ் வந்து விடுவாள்.
கடைசியில் உலுக்கியது என்னவோ நிஜம் !
ReplyDelete