Saturday 26 July 2014

Story 89:பந்தம்



பந்தம்
அஸ்தமன சூரியன், கடற்கரை, சனக்கூட்டம், ஒரு இடத்தில் சந்தடி.
அம்மாவை மடியில் கிடத்தி அழுதுகொண்டிருந்தான் அவன். ..னுக்கு எட்டோ பத்தோ வயது இருக்கலாம். சுற்றிலும் மனிதர்கள்.. தமிழர்களின் பாரம்பரியக் கடமையான வேடிக்கை பார்த்தலை செய்துகொண்டிருந்தனர். அம்மா மூச்செடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். விக்கினாள், வியர்த்திருந்தாள்.
விலகி வாங்க... கொஞ்சம் காத்து வரட்டும்..”
என்னாச்சு?”
தெரியல.. சும்மா உட்கார்ந்துட்டிருந்தாங்க, பையன் பந்து விளையாடிட்டிருந்தான். திடீர்னு இப்பிடி விழுந்துட்டாங்க.... என்ன பிராப்ளமோ தெரியல..”
அம்மாவா அது?”
இருக்கணும்.”
அம்புலன்சுக்கு சொல்லியாச்சா?”
சொல்லியாச்சு.. லேட்டாகுது.”
கார்ல ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகலாமே சார்..”
ஏன், உங்க கார்ல கொண்டுபோக முடியாதா?”
தள்ளுய்யா, ஒரு போட்டோ எடுப்போம்...”
மனுசனாய்யா நீ?”
அம்மா மகனைப் பார்த்தாள். அழுது முடித்திருந்தான். ஏதொ சொல்ல முயன்றாள். முடியவில்லை.
சூரியன் கடலில் இறங்கிக்கொண்டிருந்தது.
இன்னுமா வரல அம்புலன்சு?”
அம்மா மூச்செடுக்க சிரமப்படுகிறாள். என்ன செய்யவேண்டும், முகத்தை எப்படி வைத்திருக்க வேண்டும்.. எதுவுமே சரிவரத் தெரியாமல் அழுது முடித்துக் கண்ணீர் தீர்ந்த களையில் காத்திருந்தான்.
அம்மா விக்கினாள். என்ன வியாதியோ, என்ன பிரச்சனையோ.. அம்மாக்குத்தான் தெரிந்திருக்கும். அப்பா இல்லாத பிள்ளைகளை வளர்க்கும் அம்மாக்கள் தங்கள் உடலை மதிப்பதில்லை. பொதுவாக அம்மாக்களே.
சூரியன் ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் பாதி போய்விட்டது.
அம்மா இப்போது மூச்செடுக்கும் சிரமத்திலிருந்து மீண்டுவிட்டாள் போலும்.. நெஞ்சின் ஆழத்திலிருந்து மூச்சு சுவர்களை உரசிவரும் சத்தம் மட்டும் லேசாக வந்தது.
இப்பிடியே பார்த்துட்டிருக்கீங்களே, வெக்கமா இல்ல?”
நாங்க என்ன, டாக்டரா?”
அம்மாவின் கண்ணுக்குள் கண்ணீரின் அடிவாரத்தில் ஏதொ ஒரு ஏக்கம் தெரிந்தது. மகனை விட்டுப் போகிறோமே, எப்படி இந்த உலகத்தில் பிழைக்கப்  போகிறானோ என்கிற ஏக்கமாக இருக்கலாம். அம்மாக்களின் ஏக்கங்கள் அப்படித்தானே இருக்கும்.
தாயின் தலையை தடவிக் கொடுத்தான். கண்ணை மெதுவாக மூடித் திறந்தாள்.. கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் மடை உடைந்ததாய் விழுந்தது. அப்பா செத்தபோது அழுதது, பிறகு அழுவதை விட முக்கியமான வேலையாக மகன் முன்னால் இருந்தான். இப்போது வெறுமையாக இருக்கிறது எல்லாம்.
தினமும் எத்தனையோ அம்மாக்களின் இறப்புக்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட சூரியன் சலனமே இல்லாமல் நிதானமாக, அமைதியாக, முற்றாக அஸ்தமித்தது. இருளின் வெறுமை இடத்தை நிரவியது.
அம்புலன்ஸ் வந்துடுச்சு.. விலகுங்க.”
வெள்ளை உடையும் அவசரமே இல்லாத அலுப்புமாய் இரண்டு பேர் இறங்கி வந்தார்கள். அம்மாவின் கண்ணைத் திறந்து பார்த்தார்கள்.
ஆள் முடிஞ்சுது போல..”
எந்தவித சலனமுமில்லாமல் எடுத்து ஸ்ட்ரெச்சரில் போட்டு வண்டியில் தள்ளினார்கள்.
கூட  யாரும் வரலையா?”
பையா, ஏறு வண்டில...”

அப்பா செத்தபிறகு பகலெல்லாம் தன்னைக் கவனித்து, இரவெல்லாம் அண்டை அயலவர்களுக்கு தையல்வேலை செய்வதற்காய் கண்விழித்து, இவள் கண்மூடித் தூங்கத்தான் செய்கிறாளா என்று பலகாலம் ஐயப்பட வைத்த அம்மா, மொத்தமாகக் கண்மூடிவிட்டாள்.
அம்புலன்சினுள் வண்டியின் நகர்த்தலுக்கு ஏற்றவாறு முகத்தை பக்கங்களுக்கு அசைக்கும் அம்மாவை பார்த்தபடி வந்தான். இனி யாருடன் சாப்பிடுவது, யாருடன் பள்ளிக்குப் போவது, யாருடன் பீச்சுக்குப் போய் பந்து விளை...
தலையிலடித்துக்கொண்டான்.
அடச் சே.. அம்புலன்சில் ஏறும் அவசரத்தில் பந்தை பீச்சிலே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.’

No comments:

Post a Comment