Friday, 18 July 2014

Story 70: அறை எண் 8அறை எண் 8
காலைச் சோம்பலை முறித்துப் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அரவிந்தின் கண்கள் நேரே நாளிதழ்களைத் தேடிச்செல்வது வழக்கம். அன்றும் அப்படியே எழுந்து நேரே வாசல் வந்து அன்றைய நாளிதழை கையில் எடுத்தான். பின் நேரே அடுப்பங்கரை சென்று ஒரு கோப்பை தேநீரை ஃப்ளாஸ்கிலிருந்து ஊற்றிக்கொண்டு ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்தான். இவையனைத்தையும் சோபாவின் மறுமுனையில் அமர்ந்திருந்தவாரு தனக்கொரு கோப்பை கொண்டுவந்தால் அவன் குறைந்தா போய்விடுவான் என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தால் அவந்திகா. ஒரே வீட்டில் இருந்தாலும் அவந்திகா அவனிடம் பேசிக்கொள்வதில்லை. 
நாழிதழின் முன்பக்கத்தை மேய்ந்தபிறகு அடுத்த பக்கங்களை பார்க்க பிரித்தவனின் மடியிலே அந்தத் துண்டுப்பிரசுரம் விழுந்தது. அதை என்னவென்று பார்க்க அவந்திகா எத்தனிக்கையில் அதை விரும்பாதவன்போல் உடனே கையிலெடுத்து படிக்கலானான் அரவிந்த். படிக்கத்தொடங்கியவனின் முகம் இறுக்கமாவதை உணர்ந்த அவந்திகா எழுந்து அவன் முதுகுப்பக்கம் வந்து நின்று அதை தானும் படிக்கலானாள். அந்தத் துண்டுப்பிரசுரத்தில்
“Mr. Arvindh – Secrets Revealed - Meet me at 9 PM – Tree Park Hotel“என்று எழுதியிருந்தது.
துண்டுப்பிரசுரத்தை படித்தபின் குழப்பத்துடன் எழுந்து வாசல்வந்து ஒரு மால்ப்ரோ சிகரெட்டைப் பற்றவைத்து சிந்திக்கலானான் அரவிந்த். யார் எழுதியிருப்பார் எதற்க்காக அழைத்திருப்பார் இது தன் நண்பர்கள் யாரேனும் செய்யும் குறும்பாக இருக்குமோ, இல்லை தன் அலுவலகத்தில் தான் செய்த பண மோசடிகளை அறிந்தவர்களில் யாராவதாக இருக்குமோ என்று எண்ணினான், ஆனால் தான் அவர்களுக்கும் பங்குகொடுத்து வாயாடைத்து வைத்திருக்கிறோமே என்றும் பலவகையில் குழம்பிக்கொண்டிருந்தான். சிகரெட்டை புகைக்காமல் அதிலிருந்து வரும் மெல்லிய வெண்புகையை உற்று நோக்கியபடி சிந்தித்தவன் எதையோ உணர்ந்தவன் போல் சட்டென்று உடல் தளர்ந்து வியர்த்துக்கொட்டத் தொடங்கியிருந்தான்.
வீட்டில் ஒரு பித்தன்போல் அமர்ந்திருந்தான் அரவிந்த். தான் இன்று அலுவலகம் வர இயலாது என்றும் தன்னுடைய அனைத்து சந்திப்புகளையும் தவிர்த்துவிடுமாறும் தன் உதவியாளருக்கு ஆணையிட்டிருந்தான். அவனிடம் நெருங்கவோ பேசவோ விருப்பமின்றி ஆனால் விலகிச் செல்லவும் மனமின்றி அவனை உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தாள் அவந்திகா. ஒரு நிறுவனத்தின் பொது மேலாளர் என்பதால் கொடுக்கப்பட்டிருந்த முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த பங்களாவிலும் வியர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தது அவனுக்கு. பொறுமையிழந்தவனாய் தனக்கு தினமும் நாழிதழ் போடும் சிறுவன் முருகனுக்கு கைபேசியில் அழைப்புவிடுத்தான்.
முருகன் குடும்பசூழ்நிலையின் காரணமாக படிப்பை பத்தாவதுடன் பகைத்துக்கொண்டவன். பள்ளி நண்பர்களின் வட்டத்தில் அவன் மதிப்பெண் மேலே இருந்தாலும் அவன் குடும்பம் வறுமைகோட்டுக்கு கீழே இருப்பதால் பேப்பர் போடுவது, பால் போடுவது, தண்ணீர் கேன் போடுவது என்று உழைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கைப்பேசி பொழுதுபோக்கிற்க்காக இல்லாமல் ஒரு துணையாகவும் அவசியமாகவும் இருந்தது. மற்றும் அவ்வப்போது வீட்டின் அருகே குடியிருக்கும் காரணத்தினால் அரவிந்துக்கு மதுபானம் வாங்கித் தருவதற்க்காக அவனின் கைப்பேசி எண்ணை அரவிந்தும் வாங்கி வைத்திருந்தான்.
அழைத்த முதல் அழைப்பு துண்டாகி இரண்டாம் அழைப்பில் முருகன்
ஹலோ அண்ணே’.
டேய் முருகா... யார்ரா அந்த துண்டு பேப்பர இன்னைக்கு பேப்பருக்கு நடுவுல வச்சது ?’ என்று எடுத்த எடுப்பில் கடுகைப் போல் பொரிந்து தள்ளினான் அரவிந்த்.
அண்ணே, எனக்கு உடம்பு சரியில்லணே. இராத்திரில இருந்து ஒரே காய்ச்சல் சளி. இன்னைக்கு உங்களுக்கு நான் பேப்பரே போடல அண்ணேஎன்று முருகன் இருமி முடித்தான்.
வாலியை எதிர்த்து நின்ற சுக்ரீவன் போலே அந்தத் துண்டுக் காகித்த்தின் முன் பலமிழந்து அமர்ந்திருந்தான் அரவிந்த். எந்தச் சலனமுமின்றி ஒரு திரைச்சீலையின் அசைவை வேடிக்கை பார்க்கும் குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டிருந்தால் அவந்திகா. சற்று நேர மெளன யுத்தத்திற்க்குப்பிறகு, யார் என்ன என்று யோசிப்பதில் அர்த்தமில்லை 9 மணிக்கு அவனை சந்தித்து விடுவதென தீர்மானித்தான் அரவிந்த். தன்னுடைய பேச்சு சாதுர்யத்தாலும், சதி வலைகளாளும் அவன் எத்தனையோ காரியங்களை சாதித்தவன் என்பதால் இந்த மர்ம மனிதனை தைரியமாக எதிர்கொள்வது என்று முடிவெடுத்தான்.
ட்ரீ பார்க் என்பது ஒரு பிரபலமான ஐந்து நட்சத்திர கேளிக்கை விடுதி. முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மண்ணுலக சொர்க்கம் போல் காட்சியளித்தது. இங்கே பல அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் ரகசியமாய் வந்து செல்வது வாடிக்கை என்பதால் இரண்டு வாயில்களிலும் உள்ள பாதுகாவலர்கள் அனைவரையும் பரிசோதித்து அனுப்புவதே வழக்கம். அரவிந்த் சமீபத்தில் வாங்கியிருந்த அவனுடைய பென்ஸ்ஸில் வந்து இறங்கியதும், அவனை பரிசோதித்து உள்ளே நுழைய அனுமதித்தனர் பாதுகாவலர்கள்.
பலமுறை வந்திருந்தாலும் இப்போது முதல் முறை வருவதுபோன்ற கலக்கத்துடன் நடந்தான் அரவிந்த். உடன் அவந்திகா. பேசிக்கொள்வதில்லை என்றாலும் அவனைப் பிரிந்து அவந்திகா இருந்ததில்லை. யாருக்காக காத்திருப்பது எங்கே காத்திருப்பது என்று எதுவும் புரியாமல் விடுதியின் மையத்தில் உள்ள நடன அரங்கை அடைந்தான் அரவிந்த். ஏதோ ஆங்கிலப்பாடல் அலறிக் கொண்டிருந்தது. சில யுவதிகள் ஆடிக்கொண்டிருந்தனர். ஆடும் யுவதிகளின் அழகை கண்கள் பார்த்தாலும் மூளை எதையும் அங்கீகரிக்கவில்லை.
காலையில் அந்தப்பிரசுரத்தை பார்த்ததிலிருந்து எந்த உணவும் உண்ணாமல் சதா அதையே நினைத்து குழம்பியிருந்ததால் சோர்ந்துபோய் அங்கிருந்த நாற்காலியில் அமரச் சென்றவனை குறுக்கிட்டுசார், குட் ஈவ்னிங்க். உங்களுக்கு கேபின் 8 புக் பண்ணியிருக்கேன்என்று சொன்னான் ஒரு வெடலை வெய்ட்டர். அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துஎனக்கா ? யாரு கேபின் புக் பண்ணா ?’ என்றான் அரவிந்த். ‘சார் நீங்க 9 மணி போல வருவீங்க உங்களுக்குக் கேபின் புக் பண்ணிக் கொடுக்கனும்னு சொல்லி ஒருத்தர் ஆறுமணிக்கே வந்து எனக்கு டிப்ஸ் கொடுத்துட்டு போனார் சார்என்று அவசரகதியில் சொல்லிச்சென்றான் வெய்ட்டர்.
எல்லாமே குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது அரவிந்துக்கு. அவனுடன் வந்த அவந்திக்காவுக்கு இது ஆச்சரியமாகவும் இல்லை அதிர்ச்சியாகவும் இல்லை. அவனுக்கு முன் கேபின் 8ல் சென்று அமர்ந்துகொண்டாள். அவளுக்குப் பின் அவனும் வந்து கேபின் 8ல் அமர்ந்தான். அது ஒரு குட்டி அறை. சிகப்பு நிற சோபாக்கள் இரண்டும் அதன் நடுவில் கருப்பு நிற கண்ணாடியினால் செய்த வட்ட மேசையும் மஞ்சள் நிற மின் தொங்கு விளக்கும் அறையை அழகாக்கியிருந்தது. அங்கு முன்பே அவனுக்குப் பிடித்த மதுவும் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கோலமயில் அருகிருக்கையில் ஒரு கோப்பையில் அந்த மதுவை நிரப்பி பதட்டத்தை விழுங்கத் தொடங்கினான் அரவிந்த். அவந்திகா மது அருந்துவதில்லை என்பதாலோ அங்கு மதுவைத் தவிர வேறேதும் இல்லை என்பதாலோ அமைதியாக அமர்ந்திருந்தாள். அரவிந்த் தன் வலது மணிக்கட்டை திருப்பி கைக்கடிகாரத்தை பார்க்கையில் அது சரியாக 9 என்று காண்பித்தது. அறைக் கதவைத் திறந்துகொண்டு அந்த மனிதன் உள்ளே நுழைந்தான்.
அந்த மனிதன் வடமாநிலத்தவன் போல் தோற்றமளித்தான். ஐம்பது வயதை நெருங்கியிருப்பான். வெள்ளை நிற ஜிப்பாவும் தங்க வர்ண சட்டத்தில் மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தான். கையில் சிறு கருப்பு நிற பெட்டியும் இருந்தது. எதிர்பார்த்த தருணம் வந்துவிட்ட்து இனி என்ன நடக்கும் என்ற படபடப்பில் அந்த மர்ம மனிதனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்த். அவந்திகா அவனை பார்த்தும் பார்க்காதது போல் முகத்தை அரவிந்த் பக்கம் திருப்பிக்கொண்டாள். அவளை சட்டைசெய்யாது மர்ம மனிதனும் அரவிந்தின் எதிரில் வந்தமர்ந்தான்.
முதலில் தான் தான் தொடங்கவேண்டும் என்றறிந்த மர்ம மனிதன்
ஹலோ அரவிந்த். எப்படியிருக்கீங்க ?’
நீங்க யாரு ?’ என்றான் கோமாவிலிருந்து மீண்டவன் போல் அரவிந்த்.
என் பெயர் முக்கியமில்லை. என்னை உங்களுக்குத் தெரியாது, ஆனால் உங்களை எனக்கு நல்லாத் தெரியும்என்றவாரு மேசை மீது வைத்த தன் பெட்டியை தடவிக்கொண்டான் அவன்.
என்ன விசயமா என்ன பார்க்கனும்னு வரச் சொன்னீங்க. அதையாவது சொல்லுங்க ?’ என்றான் பெட்டியை பார்த்தவாரு வெறுப்பும் கோபமுமாய் அரவிந்த்.
கோப்ப்படாதீங்க அரவிந்த் அது உங்களுக்கு நல்லதில்லை. நாம பேசவேண்டியது நிறைய இருக்குஎன்றபடி தானும் ஒரு கோப்பை மதுவை ஊற்றி ருசிக்கத் தொடங்கினான் அவன்.
நடக்கும் உரையாடல்களை தன் வேலைப்பழுவிற்க்கு நடுவே அவ்வப்போது அறைக்கு வெளியே காதுபொதித்து ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தான் வெய்ட்டர். அவனுக்கு அது புதிதல்ல என்பது அவன் உடல்மொழியிலும், நிதானமான முகபாவத்திலும் நன்றாகவே தெரிந்தது. இப்படியாக பல தின வாரப் பத்திரிக்கைகளுக்கு கிசுகிசு சேர்ப்பதிலும் லாபமிருக்கலாம் அவனுக்கு. சிறிது நேரம் புரிந்தும் புரியாமலும் உறையாடலை உரிந்து கொண்டிருந்தவன் 5ம் எண் அறைக்கு உணவு கொடுக்கவேண்டியது நினைவுக்கு வரவே, சென்று கொடுத்துவிட்டு பத்து நிமிடம் கழித்து வந்து மீண்டும் தொடர்ந்தான். சில வினாடிகள் அமைதியாய் இருந்த அறையில் அந்த அலறல் சத்தத்தை கேட்டவுடன் அரண்டுபோய் மெதுவாக அறைக்கதவை திறந்தான். அங்கே இரத்தவெள்ளத்தில் மர்ம மனிதன் இறந்துகிடந்தான். அரவிந்தன் மயங்கிக் கிடந்தான்.
முகத்தில் சுரீரென்று அடித்த நீரின் தாக்கத்தில் மயக்கம் களைந்து கண்விழித்தான் அரவிந்த். தான் இன்னும் 8ம் எண் அறையில் தான் இருக்கிறோம் என்பது அவன் முன் இருந்த அந்த மேசையையும் மதுவையும் பார்த்ததும் தெரிந்துபோனது. ஆனால் அவன் முன் இப்போது அந்த மர்ம மனிதனுக்கு பதிலாக ஒரு இரும்பு மனிதன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அந்த இரும்பு மனிதன் காக்கிச் சட்டையணிந்து கையில் லத்தியுடன் அரவிந்தை பார்த்தவாரு தொடங்கினார்
உங்க பேர் என்ன ?’,
அரவிந்த்
எந்த ஊரு
இதே ஊர் தான் சார்
உங்க கூட வந்த பொண்ணு எங்க ?’
என் கூட எந்தப் பொண்ணும் இல்லை சார், நான் மட்டும்தான் சார் வந்தேன்
சார்... பொய் சொல்றாரு சார். இவர்கூட ஒரு பொண்ணு வந்தாங்க சார். நான் பார்த்தேன் சார். 5ம் நம்பர் ரூமுக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள அவுங்கள காணோம் சார்என்று படபடப்பாய் சொல்லி முடித்தான் அருகே நின்றிருந்த வெய்ட்டர்.
கோபமாக வெய்ட்டரை பார்த்துப் பாய்ந்தான் அரவிந்த்.
அவனை அழுத்தி அமர வைத்த இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்
நீங்களும் அந்தப் பொண்ணும் வந்தத நிறைய பேர் பார்த்திருக்காங்க. பொய் சொல்றத நிறுத்திட்டு அந்தப் பொண்ணு எங்கன்னு சொல்லுங்க. மயக்கம் போட்டு விழுந்தது தற்செயலா, இல்லை உங்க பார்ட் ஆஃப் ப்ளானா ? இந்தக் கொலைய யாரு செய்தீங்கன்னு சொல்லுங்க
மிரண்டு போனவனாய்கொலையா.. யாரை சார் ? சத்தியமா நான் எந்தக் கொலையும் பண்ணல சார். நான் ஒரு வடநாட்டுக்காரரோட பேசிட்டு இருந்தது தான் சார் கடைசியா எனக்கு நியாபகம் இருக்கு. சத்தியமா எனக்கு வேற எதுவும் தெரியாது சார்என்றான்.
மறுபடி மறுபடி பொய் சொல்றதுனால, பொய் உண்மையாயிடாது மிஸ்டர் அரவிந்த். நீங்க கொலை பண்ணியிருக்கது யாரோ ஒரு மனுசன இல்லை. ஆளுங்கட்சியின் ஒரு முன்னாள் மத்திய மந்திரியஎன்று இன்ஸ்பெக்டர் சொன்ன மறுநொடி இடி இறங்கியதைப் போல் உடைந்துபோனான் அரவிந்த். அந்த வடமாநிலத்தவர் தான் முன்னாள் மந்திரியோ என்று சிந்தித்தான். இந்த வெய்ட்டர் தன்னை இங்கே உட்கார வைத்து ஒரு கொலையில் திட்டமிட்டு சிக்கவைத்ததாக புரிந்தது.
சொல்லுங்க அரவிந்த். இந்தக் கொலையில உங்க பார்ட் என்ன ? உங்க பின்னாடி யார் இருக்கா ? அந்தப் பொண்ணு யாரு ? எங்க இருக்கா ?’ என்று கேள்விகளை பாராங்கல்லைப் போல அவன் தலையில் அடுக்கிக் கொண்டே போனார் இன்ஸ்பெக்டர்.
சார்... சத்தியமா அப்படி எந்தப் பொண்ணும் இல்லை சார்
அப்ப இந்தப் படத்தில இருக்க பொண்ணு யாருஎன்று அரங்கத்தின் காமிராவில் பதிவாகியிருந்த அவந்திகாவும் அவனும் அடங்கிய புகைப்படத்தை இன்ஸ்பெக்டர் காண்பித்தார். இடி மீது இடி விழுந்து மேலும் பூமியின் ஆழத்திற்க்கு புதையுண்டு போகிறவனாக அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் அரவிந்த்.
சார்.. இவுங்கதான் சார் இவர் கூடு வந்தவுங்கஎன்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்து எரியும் தீயில் எண்ணையை விட்டான் வெய்ட்டர்.
அரவிந்த் சற்று நிதானித்துசார்... அது என் மனைவி. அவ எங்கூட வரலை. அவள் காணாமல் போய் பல மாதம் ஆகுது சார். அவள் காணாமல் போய்ட்டான்னு ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட் கூட குடுத்திருக்கேன் சார். அப்புறம் எப்படி அவ எங்கூட வரமுடியும். இது ஏதோ ஜோடிக்கப்பட்ட படம் சார்.’ என்றான்.
ஜோடிக்கப்பட்ட படமா ? அப்ப இந்த வெய்ட்டர் சொல்றதும் பொய்யா ? அதாவது நீங்க சொல்றது மட்டும் உண்மை மற்ற எல்லாம் பொய்யா ? அவ காணாமல் போய்ட்டான்னு ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தா அது உண்மைனு ஆயிடுமாஎன்றவாறே அவனை நெருங்கிநீயும் அந்தப் பொண்ணும் திட்டம் போட்டுதான் இந்தக் கொலைய செய்தீங்கன்னு நல்லாத் தெரியும். வெய்ட்டர் வந்திட்டதால மயக்கம் போட்டு விழுந்தமாதிரி நடிச்சு உங்களை காப்பாத்திக்கலாம்னு நினைக்காதீங்க. இன்னும் கால் மணி நேரத்தில் சிபிஐ வரும். அப்பத் தெரியும் சேதிஎன்று முடித்தார் இன்ஸ்பெக்டர்.
கருநாகத்தின் விஷம் போல் மரணபயம் உடம்பெல்லாம் ஏறி தற்சமயம் இதயத்தை பலமாக தாக்கியிருந்தது அரவிந்துக்கு. மரமென மரத்து ஆழ்ந்த சிந்தனையில் விழுந்தான். கொலை செய்யப்பட்டது முன்னாள் மந்திரி என்பதால் தன் காலுக்கு கீழே சவக்குழி தோண்டப்பட்டுக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். தான் இதிலிருந்து விடுபடும் வழி அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்தது. தன்னை திட்டமிட்டு இங்கே வரவைத்து யாரோ இந்தக் கொலையை செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது. என்ன செய்வது என்று சிந்திக்கும் திறனை மூளை இழந்திருந்தது. தன்னை சிக்க வைக்க பயன்படுத்திய படம் தான் தன்னை இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இருக்கும் ஒரே வழி என்று மனம் முடிவு சொல்லியது.
சார்... உண்மையச் சொல்றேன். இவுங்க எல்லாம் என்னை மாட்டிவிடுறதுக்கு பொய் சொல்றாங்க. இந்த புகைப்படம் நானும் என் மனைவியும் பெங்களூர் போயிருந்தபோது எடுத்தது. அதை எடிட் செய்திருக்காங்க. ஒரிஜினல் படத்தை நான் வேணும்னா உங்களுக்கு காட்டுறேன். அவள் என் கூட வர வாய்ப்பேயில்லை சார்
ஏன்... அதான் எல்லாரும் பார்த்திருக்காங்களே நீங்க இரண்டும் பேரும் வந்தத’.
ஏன்னா அவளை 8 மாதத்துக்கு முன்னாடி யாருக்கும் தெரியாம பெங்களூர் கூட்டி போய் கொலைசெய்தவனே நான் தான் சார்என்றுக் கதறி உயிரைக்காப்பாற்ற தான் மறைத்துவைத்த உண்மையை உடைத்து உதிர்த்தான் அரவிந்த்.
கைதட்டிக் கொண்டே அறைக்கதவின் பின்னாலிருந்து ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. அது சத்யா. அசிஸ்டெண்ட் கமிஷனர். அவரைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றான் அரவிந்த்.
அவந்திகா அப்பா எங்கிட்ட கொடுத்த கம்ப்ளைண்ட வச்சு நான் செய்த என்கொய்ரில என் முழு சந்தேகமும் உன்மேல தான் வந்துச்சு. நீ அவளை காணம்னு பெங்களூர்ல ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடுத்துட்டு அதைப்பற்றி கவலையில்லாம இருந்தது என் சந்தேகத்தை இன்னும் பலமாக்குச்சு. ஆனால் உங்கிட்ட பேசும்போதெல்லாம் ரொம்ப புத்திசாலித்தனமா பதில் சொல்லி தப்பிச்ச. அதான் உன் வாயால உண்மைய வரவைக்க நான் போட்ட மாஸ்டர் ப்ளான் இது. ப்ளடி பாஸ்டர்ட்என்று சொல்லியபடி அவன் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார் அசிஸ்டெண்ட் கமிஷனர்.
அவரை தடுத்து நிறுத்திசார், அதான் உங்க ப்ளான் படி எல்லாத்தையும் செட்டப் பண்ணி உண்மைய வரவச்சாச்சே. எதுக்கு கோபப்படுறீங்க. இவன இனி நான் பார்த்துக்கிறேன்என்று சொல்லி பையிலிருந்த கைவிளங்கை எடுத்து அவன் கையில் பூட்டினார் இன்ஸ்பெக்டர்.
தான் வேறு கொலையில் திட்டமிடப்பட்டு சிக்கவைக்கப்படவில்லை, தான் செய்த கொலையில் சிக்கவைக்கப்பதற்க்காக திட்டமிடப்பட்டுள்ளது என்று உணர்ந்து உயிரற்ற சடலமாய் நின்றிருந்தான் அரவிந்த்.
கைவிளங்கிடப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட அரவிந்தை அறைவாயிலின் அருகில் நின்று ஒரு புன்னகையுடன் பார்த்தபடி காற்றில் கரைந்து மறைந்துபோனாள் அவந்திகா.

No comments:

Post a Comment