Thursday 17 July 2014

Story 64: இனி இந்த காதல்



" இனி இந்த காதல்  ........... "
-கனவுப் பிரியன்
 
எப்பொழுதும் போலத்தான் அன்றைய தினமும் விடிந்து கொண்டிருந்தது.

நோன்பு வைத்த அசதியில் பாருக் சற்று அதிகமாகவே உறங்கி போனான். சரி .....படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு வீட்டில் சும்மா இருக்கும் அவன் சற்று அதிகம் உறங்கினால் தான் என்ன.

நிதானமாக எழுந்து முகம் கழுவி சோம்பல் முறித்தவண்ணம் வாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்து கொண்டான்.  வேப்பமர காற்று சில் என்று வீசியது. கூடவே காகமும் கரைந்தது. நோன்பு என்பதால் வேலை தேடுகிறேன் என்று எந்த மெனக்கெடலும் இல்லை அவனிடம்.

சற்று நேரத்தில் வாழ்வின் மறக்க இயலாத சம்பவம் நடைபெறப்போவது அறியாமலே கால் மணி நேரம் அமைதியாய் கழிந்தது அவனுக்கு.

பின் வீட்டின் உள்ளே இருந்து பதட்டமாய் அப்பாவின் ' பாருக் .......பாரு ...க்க் ......பாருக்க்க்  " என்று சத்தம் வர வேகமாக உள்ளே சென்றான்.  

சற்று முன் வரை அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்த அம்மா கட்டிலில் வேர்க்க விருவிருக்க சாய்ந்து கிடந்தாள் அருகில் என்ன செய்ய என தெரியாமல் அப்பா.

" என்னப்பா................... என்ன ஆச்சு அம்மாவுக்கு "

" தெரியல .......போய் பழையது (பழங்கஞ்சி ) கொஞ்சம் ஜாஸ்தி உப்பு போட்டு தண்ணி கலந்து எடுத்திட்டு வா "

வேக வேகமாக அடுப்படி சென்றான். அம்மாவுக்கு " லோ BP கூடவே தைராயிட் பிரச்சனை '. சில நேரம் இப்படி ஆகிவிடுவதுண்டு.

இருந்ததை எல்லாம் உருட்டி புரட்டி கொண்டு வந்த கஞ்சி கரைசலை அப்பாவிடம் கொடுக்க கொஞ்சம் கொஞ்சமாக வாயை திறந்து ஊற்றினார்.  பின் பாருக் கேட்டும் தராமல் அவராகவே ( F )பேன் சுற்றுவதையும் மீறி விசிறி எடுத்து வீசிக்கொண்டிருந்தார்.

குடித்த கஞ்சி வேலை செய்ய சற்று நேரத்தில் கொஞ்சம் தெம்பு வந்தவளாய் கையை ஊன்றி சற்று உடலை மேலே ஏற்றி கட்டிலில் சாய்ந்து கொண்டு விசிறி வீச வேண்டாம் என சைகை காட்டினாள் அம்மா.

" என்னடி செய்யுது "

" ஒன்னுமில்லங்க " என்று கேட்டது மெதுவான குரலில்.

" ஒன்னுமில்லையா ..........கொஞ்ச நேரத்துல மனுசனை பயங்காட்டிடு ....ஒன்னுமில்லையாம்ல ....ஆளப்பாரு. எந்தி ஆஸ்பத்திரிக்கு போவோம் "

" அதெல்லாம் வேண்டாம் "

" நீ இப்படித்தான் சொல்லுவ ....."

" இல்ல......ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம். நான் இருக்கமாட்டேன். என்னமோ செய்யுது .....கிளம்புறேங்க "

"  எங்க கிளம்புற ......லூசு மாதிரி பேசிகிட்டு. இரு நான் போய் வண்டி புடிச்சிட்டு வாரேன். டேய் பாருக் நீ பக்கத்துல உக்காந்து பார்த்துக்கோ "
வேக வேகமாக சட்டையை போட்டு கொண்டு வெளியே கிளம்பிவிட்டார்.

அது ஒன்றும் போன் / மொபைல் காலம் அல்ல. நடந்து பஸ் ஸ்டாப் வரை சென்று ஆட்டோ ரிக்ஸா அழைத்து வரவேண்டும். அவர் வெளியே சென்று விட்டார்.

" டேய் பாருக் .........பக்கத்துல வா. "

" என்னம்மா ..."

" அந்த பொண்ணை ரொம்ப புடிச்சிருக்காடா ...."

எந்த பெண்ணை, இந்த நேரத்தில் அம்மா ஏன் இதை பேசுகிறாள். அப்படியானால் அம்மாவுக்கும் தெரியுமா நான் அவளை காதலிப்பது. உறவுக்கார பெண் தான் என்றாலும் அம்மாவரை எட்டிவிட்டதா இந்த செய்தி. ஏன் என்றுமில்லாமல் இன்று அதை பற்றி பேசுகிறாள். " எந்த பொண்ணுமா...."

" அவங்க அப்பாவை கூப்பிடு ..........நான் கேட்டா மாட்டேன்னு சொல்லமாட்டார். கையை புடிச்சி குடுத்திடுறேன்......."

' நீ ஏம்மா இப்போ போய் அதை பத்தி யோசிச்சுக்கிட்டு "

" இல்லடா ...........நான் போறேன் "

" உளறாத.......அமைதியா இரு "

சற்று நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது. வேண்டாம் வேண்டாம் என்று அம்மா சொன்னதையும் கேளாமல் பாருக்கும் அவனது அப்பாவும் கிளம்பிவிட்டார்கள் அரசு மருத்துவமனை நோக்கி.

அரசு மருத்துவமனையில் அப்பாவுக்கு மிகவும் நெருங்கியவர் நல்ல உத்தியோகத்தில் இருப்பதால் அவரை தேடி அவன் அப்பா சென்று விட்டார். 

பாருக் அம்மாவை தாங்கிய வண்ணம் போர்டிகோ பெஞ்சில் காத்திருந்தான்.

சற்று நேரத்தில் இருவரும் வந்து சேர்ந்தனர். வந்தவர் அம்மாவை பார்த்துவிட்டு " சொன்னா கேட்டா தானே. மாத்திரை வாங்குனா சாப்பிடனும். இல்லைன்னா இது தான் கதி. ' என்று சுள் என பேசியது அப்பாவுக்கு மட்டுமல்ல அவனுக்கும் பிடிக்கவில்லை.

" சரி இருங்க ...........நான் போய் டூட்டி டாக்டரை பார்த்திட்டு வாரேன் " என கிளம்பி சென்றவர் யாரிடமோ பேசி கடைசியில் அம்மா ICU வார்டில் சேர்க்கப்பட்டாள்.

மூச்சு முட்டுகிறது என ஆக்ஸிஜன் குழாய் மூக்கில் ஏற்றப்பட்டது அம்மாவுக்கு. அப்பாவும் அவருக்கு நெருங்கியவரும் யாரையோ காண சென்று விட பாருக் பயத்துடன் ICU கண்ணாடி வழியே பார்த்தவண்ணம் காத்திருந்தான்.

5 நிமிடம் கழிந்திருக்கும் ICU அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ் " உங்களை கூப்பிடுறாங்க " என்று சொல்ல வேகமாக அம்மா அருகில்  சென்றான் பாருக்.

அம்மா ஏதோ சொல்வது போல இருந்தது. நன்கு முகம் அருகில் சென்று அம்மாவின் வாயை கவனித்தான். " ஓது......ஓது " என்று சன்னமான குரலில் சொல்வது கேட்டது. குளிர்ந்த்திருந்த அம்மாவின் கையை இருக்க பற்றி கொண்டு மனனமாக தெரியும் ' யாசின் சூராவை ஓத துவங்கினான் பாருக். பின் தெரிந்ததை எல்லாம் ஓதினான் லேசான சத்தத்துடன்.  அதில் அவன் பயமும் கலந்திருந்தது.

20 நிமிடம் கடந்திருக்கும் டாக்டர் கண்ணில் தென்பட்டார்.

" தம்பி .......இவங்க உனக்கு என்ன முறை வேணும் "

' அம்மா சார் "

" அவங்க போயிட்டாங்க தம்பி. நீ வீட்டுல இருந்து யாரையாவது பெரியவங்களை வர சொல்லு "

டாக்டர் என்ன சொல்லுகிறார் என பாதி உள்வாங்கியும் பாதி உள்வாங்காமலும் அவன் கண்ணில் நீர் கோர்க்க துவங்கியது. பிடித்திருந்த அம்மாவின் கையை மெதுவாக கீழே வைத்தான். அறையை விட்டு வெளியே வந்தான். அப்பா எங்கே என தெரியவில்லை. அறைக்கு வெளிய பலரும் இருந்ததால் வந்த அழுகையை அடக்க முயற்ச்சித்து தோற்று போனான்.

சற்று நேரத்தில் அப்பா வந்து செய்தி அறிந்து நிலைகுலைந்து தள்ளாடிய படியே வெளியே சென்று " டெட் பாடியா .........ஜாஸ்தி வேணும் சார் " என பேரம் பேசிய மருத்துவமனை ஸ்டாண்ட் கார் டிரைவரை அழைத்து கொண்டு அம்மாவை மடியில் கிடத்தி வீடு வந்து சேர்ந்து வீட்டின் நடு அறையில் அம்மாவை கிடத்தி பலரும் செய்தி அறிந்து நெருங்கிய உறவுகள் வந்து அப்பாவை நெருங்கி அவரின் தோளை தொட்டது தான் தாமதம் .வென கதறி அழத்துவங்கினார். அவர் இப்படி அழுது அவன் பார்த்ததில்லை. வாழ்வில் முதல் முறை.

இதோ அதோ என்று செய்தி பல இடங்களுக்கும் பரவியது. அம்மா ரொம்ப நல்ல மனுசி. அதனால் மத பாகுபாடின்றி கூட்டம் கூடியது.
அடக்கத்திற்கு மறுநாள் எடுப்பதாக செய்தி.

மறுநாள் உறவு என்பதால் அவளும் .........ஆம் அம்மாவால் பாருக்கிடம் ரொம்ப புடிச்சிருக்காடா என கேட்கப்பட்ட அவளும் வந்திருந்தாள்.

உறவுகள் பலரும் வந்திருக்க கூட்டத்தில் வந்த உறவுக்கார சிறு குழந்தையை அவள் எடுத்து விளையாடி சந்தோசமாக கொஞ்சி குலாவி கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பெருத்த சந்தோசம் நீண்ட நாட்கள் கழித்து நிறைய பழைய உறவுகளை சந்தித்ததில். எதையோ எடுக்க வீட்டின் உள்ளே சென்றவன் தற்செயலாகத்தான் கவனித்தான் துளியும் வருத்தம் இல்லாத அவள் முகத்தை.

அவளை காதலியாக நோக்கும் எண்ணம் இருக்கும் நிலையில் இல்லை அவன். வாழ்வின் மிகப்பெரிய ஒரு இழப்பு நேர்ந்துவிட்டது அவனுக்கு. இதுவரை வளர்த்து ஆளாக்கிய வாழ்வின் ஆதார சுருதி தொலைந்து விட்டது. இனி வீட்டில் உரிமையாய் கோபப்பட ஆள் இல்லை. எத்தனை முரண்டு பிடித்தாலும் தானாக வந்து " சாப்ப்பிட வா " என கூப்பிட ஆள் இல்லை. அம்மா இல்லாத உலகம் எப்படி இருக்கும் என இனி தான் அறியப்போகிறான் அவன்.

இத்தனை இருந்தாலும் அவனுள் ஒரு கேள்வி. என்னுடைய பெரிய இழப்பு இவளை பாதிக்கவில்லையா. என்னுடைய வருத்தம் இவளுக்கு வருத்தமாக அல்லவா இருந்திருக்க வேண்டும். இதை விட பெரிய சோகம் என்ன வந்துவிட போகிறது ஒருவனுக்கு. இதுவே அவளை பாதிக்கவில்லை என்றால் இவளை இத்தனை நாள் காதலித்து என்ன பயன்.    

மகனின் இத்தனை நாள் முழு அசைவையும் அறிந்தும் ஒன்றுமே இதுவரை சொல்லாது சற்று நேரம் முன் இறக்கும் தருவாயில் " அவளை புடிச்சிருக்காடா " என்று கேட்ட அம்மா எங்கே. இவள் எங்கே.

நிறைய எண்ணம் சில நிமிடம் தோன்றி மறைந்தது. நான்கு வருட காதல் மரம் வேரோடு ஆட்டம் கண்ட நொடி அது.

அருகில் வந்து ஆறுதல் தர முடியவில்லை என்றாலும் தூர நின்று வருத்தப்படாதே என ஒரு பார்வையால் கூட அவள் சொல்லாதது முள்ளாய் குத்தி கிழித்தது.

அடக்கம் எல்லாம் முடிந்து வீடே அமைதியானது. சில உறவுகள் மட்டும் பதினைந்து நாட்களுக்கு மேல் வீட்டிலே இருந்தார்கள். அப்பா துவண்டு போனார். இந்த நிலையில் அவரை இதுவரை பார்த்ததில்லை அவன்.

அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் வாதம் செய்து தான் அவன் பார்த்துப்பழக்கம்.

அம்மா வலம் வந்த வீடு. அம்மா சமைத்த சாப்பாடு. அம்மா எதிர்வீட்டு பெண்களுடன் கதை பேசும் திண்ணை. அம்மா வேகாத வெயிலில் துணி காயப்போடும் கொடி. அவள் வளர்த்த செடிகள். கடைசியாய் அவள் வாங்கிய ஆட்டுக்குட்டி என அனைத்துமே பாருக்கை போல அனாதையாய் காட்சி அளித்தன.
இந்த சூழலில் இனி எங்கே அவள் வீடு போய் அவளை சந்திக்க. இல்லை இந்த சந்திப்பு அவசியமா என மனதில் தோன்றியது.

ரெண்டு மாதம் கழிந்திருந்தது. இத்தனை நாள் எந்த காதலிக்காக இந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என நினைத்திருந்தானோ அந்த காதலியையும் காதலையும் மறந்து வேலை தேடி சென்னை நோக்கி பயணித்து கொண்டிருந்தான் பாருக். அவன் உள்ளுக்குள் வளர்த்த காதல் மௌனமாய் அழுது கொண்டிருந்தது.
அவனாக வளர்த்த காதல் அவனாக நிறுத்தி கொள்ளுவோம் என முடிவு செய்துவிட்ட காதல். இனி இந்த காதல் நினைத்து பார்க்க மட்டுமே.
அம்மா இறக்கும் தருவாயிலும் அறிவூட்டி சென்றாள் என எண்ணிக்கொண்டான். சென்னை நோக்கி ஆம்னி பஸ் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது இருட்டை கிழித்து கொண்டு.

No comments:

Post a Comment