இரண்டு
ஒரு லட்சங்கள்
முகம்மது
ஷாஹித் ஆலமை நான் நேற்று சந்தித்தபோது
அவன் வலது கையில் கட்டுப்போட்டிருந்தான்.
காரணம் தெரியவில்லை. நான் கேட்கவுமில்லை. அவனுக்கு
இதெல்லாம் புதிதில்லை. வருடத்தின் பன்னிரண்டு மாதங்களில் குறைந்தது ஒன்பது மாதங்கள் அவனுக்கு
இப்படி கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கும் என்பதை கடந்த இரண்டு
வருடங்களில் மிக நன்றாகவே உணர்ந்திருந்தேன்.எங்கேனும் புல் தடுக்கி விழுந்ததால்
இப்படி ஆகிவிட்டது
என்று அவன் சொன்னால் நான்
மறுபேச்சில்லாமல் நம்பிவிடுவேன். ஏனெனில் அதுதான் நடந்திருக்கும்.
என் மொபைல் போனை பட்னா
ரயில் நிலையத்தில் தொலைத்த நாளில்தான் முதன்முறையாக
அவனிடம் நான்கு மணி நேரத்திற்கும்
மேலாக பேசிக்கொண்டிருந்தேன். அவன் ரோடு ரோலர்
இயந்திரத்தின் ஓட்டுனன். நான் அதன் பொறியாளன்.
மொபைல் தொலைந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்த
என்னை அவன் தேற்ற தொடங்கிய
பொழுதில் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு துன்பங்களை வரிசையாய்
அடுக்கிவைத்துகொண்டு நாம் அயர்ந்த நேரம் பார்த்து நம்மிடம்
தள்ளிவிடுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
"என்ன
சார் நீங்க.. மொபைல் தொலஞ்சதுக்கெல்லாமா
இப்படி உக்காந்திருப்பாங்க?"
" போனு
போனது கூட பிரச்சினை இல்லைய்யா..
எவ்வளவு கான்டாக்ட் நம்பர் இருந்தது தெரியுமா?"
'விடுங்க
சார்... இதே ஒரு
நாளு நீங்க அந்த கான்டாக்ட்
எல்லாம் மிஸ் ஆனதுக்கு சந்தோசப்படுவீங்க
பாருங்க.." என்றவனை நான் டக்கென
கூர்ந்து கவனித்தேன். அவன் சொன்னதில் அற்புதமான
உண்மை இருந்தது. நாம் ஒருவரின் தொடர்பை இழந்ததற்காக சந்தோஷம்
அடையும் தருணமும் கூட வாழ்க்கையில் உண்டுதான்
என்பதை எளிமையாக சொல்லிவிட்டான்.
"பதினஞ்சி
வருஷத்துக்கு முன்னால யஸ்வந்த்பூர்ல இருந்து
பட்னா வர்ற ட்ரெயின்ல மூஞ்சியில
கர்சீப்ப போட்டு நான் வச்சிருந்த
ஒரு லட்ச ரூபாய நாலு
பேரு தூக்கிட்டு போயிட்டாங்க.." - உள்ளங்கையில் தம்பாக்கு என்னும் புகையிலையை கொட்டி அதோடு கொஞ்சம்
சுண்ணாம்பை சேர்த்து கசக்கியவாறே
அவன் இதை சொன்னபோது அவன்
முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை.
அவனே தொடர்ந்தான்.
"அப்பாவுக்கு
உடம்பு ரொம்ப மோசமா இருந்த
நேரம் அது. வீட்டுல கஞ்சிக்கே
ரொம்ப கஷ்டம். நானும் ஆறாப்புக்கு
மேல படிக்கலை.. வெட்டியாதான் சுத்திக்கிட்டு இருந்தேன். அப்பப்போ மதராஸ்-ல அவங்களே
கூப்புட்டு எதாவது வேலை கொடுத்து
கையில காசும் கொடுப்பாங்க. தம்பி
ஒருத்தன் இருந்தான். அவன்தான் உள்ளூர்ல இருந்தா ஒரு மயிரும்
புடுங்கமுடியாதுன்னு பெங்களூர்ல மடிவாளா பக்கத்துல ஒரு
ஓட்டல்ல வேலை பார்த்தான். அவனுக்கு
போக மிச்சத்த வீட்டுக்கு அனுப்புவான். அப்பாவுக்கு இதயத்துல ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு
சொல்லிட்டாங்க. ஒன்றை லட்சம் ஆகும்னு
சொன்னாங்க. எங்கிருந்து அவ்வளவு காசுக்கு ஏற்பாடு
பண்ண? தம்பி வேலை பார்த்த
கடை ஓனர்,'நான் வேணும்னா
ஒரு லட்சம் தாறேன்.. ஆனா
உங்கண்ணனும் இங்கயே வந்து என்கிட்டே
வேலை பார்க்கனும், ரெண்டு
பெரும் சேர்ந்து கடனை அடைங்கன்னு' சொன்னாரு.
தம்பி என்னை பெங்களூருக்கு கூப்டான்."
கதை நீளும் என்பதை புரிந்துகொண்டேன்.
அந்த நேரத்தில் யார் என்ன பேசினாலும்
கேட்கிற நிலையில்தான் இருந்தேன். ஒரு சிகரெட்டை எடுத்து
பற்றவைத்துக்கொண்டேன். சிகரெட் பாக்கெட் இப்போது
குடியிருக்கும் அதே பாக்கெட்டில்தான் போனும்
இருந்தது. இப்போது சிகரெட்டும், தீப்பெட்டியும்
மட்டுமே இருக்கிறது.
"ஜெனரல்
கோச்லதான் போனேன். ரெண்டு நாள்
இருந்தேன். மூனாவது நாள் கையில
காசு கொடுத்தாரு. எல்லாமே ஆயிரம் ரூபாய்
நோட்டு. அவ்வளவு பணத்தை மொத்தமா
அன்னக்கிதான் முதல்முறையா பார்த்தேன். ஆயிரம் தடவ தம்பி
பத்தரமா போ..பத்தரமா போன்னு
சொல்லிக்கிட்டே இருந்தான். கருப்பு கலர் பேன்ட்
போட்டிருந்தேன். ஒரு புது கர்சீப்
வாங்கி பணத்தை நல்லா அதுக்குள்ள
வச்சி சுருட்டி வலதுபக்கம் பேன்ட் பாக்கெட்டுல வச்சிக்கிட்டேன்.
யஷ்வந்த்பூர்-ல இருந்துதான் ட்ரைன்
கிளம்புங்கிரதால அங்கேயே போயிட்டேன். எப்பவும்
போல செம்ம கூட்டம். ட்ரெஸ்
எதுவும் கொண்டுபோகல.. சட்டை மட்டும் தம்பியோடது
வாங்கிப் போட்டுக்கிட்டேன். வலது கை எப்பவமே
பேன்ட் பாக்கட்டுக்குள்ளதான் இருந்துச்சி. கர்சீப்ப கையில தொட்டுக்கிட்டேதான் இருந்தேன்.
குறிப்பா டிரைனுக்குள்ள ஏறுறப்போ! அடிச்சி பிடிச்சி ஏறி
உள்ள போனா எல்லா சீட்டுலயும்
ஏற்கனவே ஆள் உக்காந்துட்டாங்க.அதுல
நாலு பேரு
ஒரே சீட்டுல இருந்தவங்க நடுவுல
கொஞ்சம் வெலகி உக்காந்துக்கிட்டு,'வா
தம்பி இங்க உக்காருன்னு' சொன்னாங்க.
நானும் அப்பாடா எடம் கெடச்சதேன்னு உக்காந்தேன்.
காலையில
பத்து மணிக்கு ட்ரைன் கிளம்பிச்சி.
நான் தடவி தடவி பார்த்துக்கிட்டே
உக்கார்ந்திருந்தேன். நல்ல வெயில் காலம்.
அவங்க நாலு பேரும் ப்ரெண்ட்-சா இல்ல சொந்தக்காரங்களான்னு
தெரியல. கன்னடத்துலதான் பேசிக்கிட்டாங்க. என்னைப் பத்தியும் விசாரிச்சாங்க. நான்
ரொம்ப பேசுனா சரியிருக்காதுன்னு சுருக்கமாதான்
பதில் சொன்னேன். ராத்திரி ஆச்சி. கிட்டத்தட்ட எல்லாரும்
தூங்கிட்டாங்க. நான் அதுவரைக்கும் ஒன்னுக்கு
இருக்கக்கூட எந்திரிச்சி போகல. பக்கத்துல இருந்தவங்களும்
தூங்கிட்டாங்க. தூங்கிரக்கூடாதுன்னு முதல்லையே முடிவு பண்ணியிருந்தேன். ஆனா
எப்போ கண்ணசந்தேன்னு எனக்கே தெரியல. இதுவரைக்கும்
தெரியல. முழிச்சிப் பார்த்தப்போ மூஞ்சி மேல ஒரு
ப்ளூ கலர் கர்ச்சீப் இருந்தது.
ஒருமாதிரி வாசம் அடிச்சது. ட்ரெயின்
ஆரா ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு இருந்தது"
ஆராவா?
அப்படியானால் கிட்டத்தட்ட அவன் 40 மணி நேரம் மயக்கத்தில் இருந்திருக்கிறான்.
"வீட்ல
செம்ம அடி.. மறக்கவே முடியாத
அடி. அம்மா ஒரே அழுகை.
எனக்கு அடுத்த பத்து நாளுக்கு
காய்ச்சல். செத்துருவோம்னு நெனச்சேன். வர்ற கனவு எல்லாமே
கர்ச்சீப் பத்தியே வருது. அந்த
வாசனை அப்படியே நெஞ்சுல தங்கிருச்சி. இப்பக்கூட
நாறுது சார்"
ஒரு லட்சம்! அந்த கர்ச்சீப்
நாற்றத்தை நானும்கூட உணர்ந்தேன்.
"சரி
அப்புறம் என்னாச்சி?"
"அப்புறம்
ரெண்டு மாசத்துல ஓரளவுக்கு நிலைமை சரியாயிருச்சி.. அந்த
ஓனர் ரொம்ப வருத்தப்பட்டாராம். அம்பதாயிரம்
மட்டும் திருப்பிக்கொடுத்தா போதும்னு சொன்னாராம். இதையே நெனச்சிக்கிட்டு உக்கார்ந்துட்டு
இருக்காம உடனே என்னை கிளம்பி
வரச்சொன்னாரு.. நானும் கெளம்ப ரெடியானேன்.
நான் கிளம்புற அன்னக்கி அப்பா இறந்துட்டாரு"
நான் வேறு வழியே இல்லாமல்
இன்னொரு சிகரெட் பற்றவைத்தேன். சம்பவத்தை
சொல்ல சொல்ல அவன் கண்களில்
முதல்முறையாக கலவையான சில உணர்ச்சிகள்
மாறி மாறி வந்துபோனதை கவனித்துக்கொண்டே
இருந்தேன். மிக எதார்த்தமாய் சொல்ல
தொடங்கிய அவன் முடிவில் உள்ளுக்குள்
அழுகிறான் என்பதை தெளிவாக புரிய
வைத்தது. . ஆறுதல் என்கிற பெயரில்
எதையும் உளறிக்கொட்டிவிடாமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.
"அப்புறம் மூணு
மாசம் கழிச்சி எனக்கு கல்யாணம்
பண்ண ஏற்பாடு பண்ணுனாங்க" - என
உடனே அவன் தொடர ஆரம்பித்தான். அய்யய்யோ..
அந்த பெண்ணுக்கு ஏதேனும் ஆகிவிட்டதா என
கேட்க வந்த கேள்வியை உடனடியாய்
உள்ளேயே புதைத்தேன்.
" கல்யாண
செலவெல்லாம் எங்களோடதுதான்னு சொல்லிட்டாங்க. அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க. இப்போ
காசுக்கு எங்க போக? அதுக்கும்
அம்மா ஒரு ஏற்பாடு பண்ணுனாங்க.
அம்மாவோட அண்ணன் கல்கத்தாவுல கொஞ்சம்
நல்ல நிலைமையில இருந்தாரு. அவர்கிட்ட கடன் கேட்டாங்க. அவரும்
தர்றேன்னு சொன்னாரு. ஒரு லட்சம்."
மறுபடியும்
ஒரு லட்சமா?
" யாராவது
ஒருத்தர் போயி அந்த காசை
வாங்கிட்டு வரணும்னு முடிவு பண்ணாங்க.."
ஆம்! அவன்தான் போனான்.
"கல்கத்தா
போறப்போ நான் ஜெனரல் கோச்லதான் போனேன்.
ஆனா வர்றப்போ ஏ.சி கோச்-ல வர்றதுக்கு டிக்கெட்
புக் பண்ணிட்டுதான் போனேன். ஏ.சி
கோச் சார்!"
சம்பந்தமே
இல்லாமல் இப்போது அவன் கண்கள்
ஒளிர்ந்தன. ஒரு க்ரைம் நாவலில் கொலைகாரன்
யாராக இருக்கும் என்கிற குழப்பத்தினால் பாதியிலேயே
கடைசி பக்கத்தை படிப்பது போல அவன் பணத்தை
நல்லபடியாக வீட்டில்
கொண்டு போய் சேர்த்தேன் என்று
முதலிலேயே சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் என்று
யோசித்தேன். ஆனால் கேட்கவில்லை.
"நைட்டு
எட்டு மணிக்கு ட்ரைன். நான்
ஏழரைக்கு போனேன். ஒரு சின்ன
பேக் வாங்கியிருந்தேன். எல்லாமே ஐநூறு ரூபாய்
நோட்டு. தோள்ல மாட்டியிருந்தேன். அடிக்கடி
தொட்டுப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
அப்படியே தோணுனாலும் பேக் தோள்ல இருக்கான்னு
மட்டும் பார்த்துக்கிட்டேன். இருந்தது. வேற எங்க போகும்?
நிதானமா கோச்சுக்குள்ள போனேன். B 3 -ன்னு நெனைக்குறேன். கதவெல்லாம்
இருக்குறத பார்த்து ஆச்சரியமா இருந்துச்சி. உள்ள நுழைஞ்சதும் அவ்வளவு
சந்தோசமா இருந்திச்சி. அன்னக்கித்தான் கடைசி நாள்.. அதுக்கப்புறம்
நான் ஏ.சி கோச்-ல போனதே இல்லை.. சைட் லோயர்
பெர்த். வசதியா உக்காந்துக்கிட்டேன். எனக்கு மேல
இருந்த பெர்த்-ல ட்ரைன்
கிளம்புற வரைக்கும் யாருமே வரலை. எதுத்தாப்ல
ஒரு பேமிலி. அஞ்சி பேரு.
நல்லவங்களா தெரிஞ்சாங்க. அப்படி இல்லன்னாலும் பிரச்சினையே
இல்ல. ஏன்னா நாந்தான் பகல்லயே
நல்லா தூங்கிட்டனே! நைட்டு தூங்கவே மாட்டேன்னு
எனக்கு நல்லா தெரியும். விடிஞ்சா
பட்னா. பிரச்சினையே இல்ல"
டேய் சீக்கிரம் சொல்றா.. என்னடா ஆச்சி என
கதறிக்கொண்டிருந்தேன் மனசுக்குள்!
"ட்ரைன்
கரெக்டா எட்டு மணிக்கு கிளம்பிச்சி.
எதுத்தாப்ல இருந்த பேமிலி சாப்பிட
ஆரம்பிச்சாங்க. நான் ஏற்கனவே
சாப்பிட்டுட்டுதான் வண்டியே ஏறுனேன்.கொஞ்ச
நேரம் வேடிக்கை பார்த்துட்டே இருந்தப்போ அட்டெண்டர் வந்து போர்வை, பெட்ஷீட்,
தலையணை எல்லாம் கொடுத்தான். எனக்கு இதெல்லாம்
கொடுப்பாங்கன்னே தெரியாது. அதுவரைக்கும் குளுராவே இல்லை. ஆனா போர்வையை பார்த்ததும் லைட்டா குளிர்ற மாதிரி
இருந்திச்சி. ட்ரைன் நிக்குதா இல்லை
போகுதான்னே தெரியல.. ரொம்ப நல்லா இருந்துச்சி.
கிளம்பி ஒரு முக்காமணி நேரம்
இருக்கும். எல்லாரும் பெட்ஷீட் விரிச்சி தூங்க ரெடியாயிட்டு இருந்தாங்க.
எனக்கு ட்ரைன் கொஞ்ச நேரமா
நின்னுக்கிட்டே இருக்குற மாதிரி ஒரு பீலிங்.கண்ணாடி வழியா வெளியப்பார்த்தா
ஒண்ணுமே தெரியல. ஒரு லைட்டு
வெளிச்சம் கூட இல்லை. சரி
ஒன்னுக்கு இருந்துட்டு வந்துறலாம்னு போனேன். ஒருத்தன் கதவோரம்
நின்னு தம்மடிச்சிக்கிட்டு இருந்தான். ட்ரைன் நின்னுக்கிட்டுதான் இருந்துச்சி.
ஆனா வெளியில சுத்தமா வெளிச்சமே
இல்லை.நான் எதிர்ல இருந்த கதவைத் திறந்து
கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்தேன்.பேக் என் தோள்ல
சொகம்மா தூங்கிக்கிட்டு இருந்தது. அந்த இன்னொருத்தன் தம்மடிச்சிட்டு
உள்ள போனான். தனியா நிக்குறது
பாதுகாப்பு இல்லைன்னு நானும் உள்ள போயிட்டேன்.
ஒரு அஞ்சி நிமிஷம் ஆயிருக்கும்.
நான் இருந்த கோச்சுல இருக்குற
ஏ.சி ரூம்
கதவைத் திறந்துக்கிட்டு முகமூடி போட்ட ஒருத்தன்
ஒரு துப்பாக்கியோட உள்ள நுழைஞ்சான். அதே
நேரத்துல இன்னொரு பக்கம் அதே
மாதிரி இன்னொருத்தன் நுழைஞ்சான்"
எனக்கு
புரிந்துவிட்டது. ஆயினும் அடுத்த பத்து
நிமிடங்களுக்கு அவன் அன்று இரவு
நடந்த அந்த சம்பவத்தை ஒவ்வொரு
அங்குலமாக விவரிக்க ஆரம்பித்தான், அடுத்த ஒருமணி நேரமும்
அந்த ஹவுரா- பட்னா ரயில்
முழுக்க அந்த கொள்ளைக்காரர்கள் கட்டுப்பாட்டில்தான்
இருந்ததாம். எல்லா கோச்சிலும் துப்பாக்கி
ஏந்திய, முகமூடி அணிந்த அவர்கள்
உள்நுழைந்து கைக்கடிகாரத்தில் தொடங்கி, சின்ன மூக்குத்தி வரைக்கும்
எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு அந்த இருட்டில் காணாமல்
போனார்களாம். இவனின் பையினுள் எவ்வளவு
பணம் இருக்கிறதென்று கூட அவன் கவனிக்கவில்லையாம்!
திறந்தான். பணம் இருப்பதைக் கண்டான்.
தான் வைத்திருந்த ஒரு பச்சை நிற
பெரிய பையினுள் அப்படியே உள்ளே போட்டுவிட்டு அடுத்த
ஆளிடம் நகர்ந்தான்.அவ்வளவுதான்!
சம்பவம்
முடிந்த அரைமணி நேரத்திற்கு பிறகு
காவலர்கள் வந்ததும், எல்லாரும் கதறி அழுததும் அவன்
போகிறபோக்கில் சொன்னான். இந்தமுறை அவன் முகத்தில் முதல்
லட்ச ரூபாயை பறிகொடுத்த கதையை
சொன்னபோது இருந்த அந்த சோகம்
இல்லை. சொல்லப்போனால் கொஞ்சம் சிரித்துக்கொண்டே இருந்தான்
என்று கூட சொல்லலாம்.
"சரி
அப்புறம் என்ன ஆச்சி?"
"மறுநாள்
பேப்பர்ல எல்லாம் நியூஸ் வந்துச்சி.
ஒரு மொத்த டிரெயினையும் கொள்ளையடிக்கிரதுன்னா
சும்மாவா? ஒரு அம்பது, அறுபது
பேர் வந்தாங்களாம்"
"அதெல்லாம்
சரி.. வீட்டுல உன்ன என்ன
சொன்னாங்க?"
"அதெல்லாம்
ஒண்ணுமே சொல்லல.. என் காசு மட்டும்
காணாம போயிருந்தாதான பிரச்சின.. அவ்வளவு பேர்ல
நானும் ஒருத்தன்.. அதுல என் தப்பு
என்ன இருக்கு? சொல்லப்போனா உயிரோட வீட்டுக்கு வந்தேனேன்னு
சந்தோசந்தான் பட்டாங்க.. கல்யாணம் நின்னுருச்சி. ஆனா அது ஒரு
பிரச்சினையா என்ன?"
ஆம்! பிரச்சினை இல்லைதான்! என் மொபைல் தொலைந்தது
கூட பிரச்சினையே இல்லை.
பின் முன் நடுக் குறிப்பு
: இந்த கதையில் வரும் பெயர்கள்,
சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே!
No comments:
Post a Comment