Thursday 31 July 2014

Story 120: ஆநியூரிஸம்




ஆநியூரிஸம்
கிட்டாரின் ஸ்டிரிங் அதிரந்தது. தொடர்ந்து தொடர் அதிர்வுகள். ஆச்சர்யம்!.... வெறும் அதிர்வுகள்.... ஆச்சர்யம்....
மெட்டு பிடிபட மறுத்தது.... லா லா லா     லாலாலா  லால்லா லாலா லாலாலா.... எப்படி தோன்றியது இது.... வாயால் மீண்டும் லாலாலா முனுமுனுப்பு... மீண்டும் கிட்டார்... ஒரு வழியாக வழிக்கு வந்தது... அதுவாக வந்தால்தான் உண்டு... நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ப்ரீலூட்,பல்லவி,சரணம்,இன்டர்லூட்,பல்லவி மீண்டும் தனிமையில் ப்ரீலூட் விம்மி அமிழ்ந்தது. தனிமையில் ஒலிக்கும் இசையினோடு அதைத் தொடரும் அமைதி தன்னை எப்படியோ இசையின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்கிறது. இதோ இந்நொடியின் மனநிலை மட்டும் தொடர்ந்தால், இம்மனநிலை மட்டும் மாறாத ஒன்றாக நிலைத்து விட்டால் இந்த ஒரு வாழ்வுக்கு இது போதும் எனப்பட்டது.
கண்களை மெதுவாகத் திறந்தான். காற்றுக்கு சுமந்து திரிய இசையலை ஏதுமில்லாத போதும், அதன் அதிர்வுகளை இன்னும் முனுமுனுத்துக் கொண்டிருந்தது. கிட்டாரை மார்போடு அணைத்து, ஒவ்வொரு ப்ரெட்டாக வருடிடான். மனம் இசையை விட்டு மெதுவாக விலகிச் சென்றது.இசை போகிற போக்கில், கண்ணிலிருந்து மறையும் முன்பு, தன் வாலால் லேசாக ஒரு சொடுக்கு. நினைவுகள் உதிரத் தொடங்கின.
அவளுக்குப் பிடித்த பாடல் இது. ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் , திடீர் துணுக்குறலுடன் சொன்னாள் "டேய்! நீ என்னுள்ளே என்னுள்ளே ஸாங் கேற்றுக்கியா"
" கேட்ருக்கனே"
"எங்க பாடு பாப்போம்"
பாடும் போது ஒன்னும் சொல்ல மாட்டாள். பாடி முடித்த பிறகும் ஒன்னும் சொல்ல மாட்டாள். என்றாவது ஒருநாள் நள்ளிரவில், தூக்கம் கண்ணைச் சுழற்ற, செல்போன் காதை எறிக்க கடைசி முத்தங்களைப் பொழிந்து முடித்து, லவ் யூ பை.... லவ் யூ டூ டி பை... டேய் டேய் ஒரு நிமிஷம் அன்னக்கி நீ பாரின தெரியுமா.... தயவு செய்து கிட்டார் வாசிக்றதோட நிறித்திக்க....
"தேவையில்ல... என்ன பாட்டுன்னு நீயே பாடி காமிடிம்மமா... "
பாடினாள்.
"நான் கேட்டதில்லடி... யாரு ம்யூஸிக் டைரக்டர்"
"அடப்பாவி... இளையராஜாடா"
"நான் ரஹ்மானோட என்னுள்ளே என்னுள்ளே தான் கேட்ருக்கேன்"
"உடனே எந்திரி.... லாப்டாப்ப ஆன் பண்ணு, இப்பவே டவுன்லோட் பண்ணி கேளு"
"சரி சரி கேக்குறேன்"
"இப்பவே கேளுடா... அந்த பாட்ட கேக்குறப்ப எல்லாம் உன் நினப்புதான்டா வரும்.... காலமெனும் தேறே ஆடிடாது நில்லு... இக்கனத்தை போலே வேறு ஏது சொல்லு... ... ஸம் டே வென் வீ மேக் லவ் டு ஈச் அதர், அம் ஷூர் ஆம் கோனா ரிமெம்பர் திஸ் ஸாங்...லவ் யூடா மாடு"
சொல்ல முடியாத அந்த துயரம். ம்ஹூம் துயரம் அல்ல. துயரமெல்லாம் காதல் முறிந்து கொஞ்ச நாட்களுக்குத்தான். இப்பொழுது அது  துயரத்தைப் போலிருக்கும் ஒரு மன நெகிழ்வு. அவ்வளவுதான். சில சமயம் இன்பத்தையும் துயரத்தையும் பிரிக்கும் மெலிதான அமைதியின் கணங்களில் நம்மை உரையச் செய்துவிடும்.அப்படி ஒரு கணம் தான் இது.
தூரப் போய்விட்டாள். இப்பொழுது வேறு யாரிடமாவது இதே வரிகளை சொல்லிக்கொண்டிருப்பாள் என அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணம்  மனம் தன்னைத்தானே இந்நினைப்புக்காக நொந்துகொண்டது. ஆனால் மனதின் ஏதோ ஒரு மூலை நீ நம்ப மறுத்தாலும் உண்மை  உண்மைதான் என்றது. போதும் இந்த மானங்கெட்ட மனம். மண்ணாங்கட்டி மனம். காங்கீரீட் மெஷினுக்குள் உன்னத்தத்தையும் குப்பைகளையும் கொட்டி விடுவோம். உன்னதங்களையும் குப்பைகளையும் அள்ளிச் சுழற்றிக்கொண்டு, சில சமயங்களில் இரண்டையும் கலந்து, ஓயாது பெருங்கூச்சலுடன் கதறும் அதுவே மனம்.
மண்டக்குள் காங்கிரீட் மெஷின் ஓடத்துவங்கியது. கட முட கடமுடவென. கிட்டாரை மெத்தையில் வைத்தான். எழுந்து வீட்டுக்குள் நடந்தான். பிரிட்ஜை த் திறந்தான்,உள்ளே திண்பண்டம் ஏதுமில்லை எனத் தெரிந்திருந்த போதும்.  மீண்டும் அறைக்குள் வந்தான். என்ன செய்வது.... மெத்தையைப் பார்த்தான்... சுயமைதுனம் செய்யலாம் என்று வசதியாக மெத்தையில் சரிந்த போது காலிங்க் பெல். அப்பா!
அப்பா ஏதோ ஒரு பதட்டத்துடன் காணப்பட்டார். கதவைத் திறந்து விட்டான்.
"என்னப்பா"
"நம்ம சின்னசாமி இல்லடா... அவர் பயனோட கல்யாணத்துக்குக் கூட போய்ட்டு வந்தோமே... அந்த பொண்ணு டெலிவரிக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்காடா தம்பி.... யாராவது ஒரு உயிரத்தான் காப்பாத்த முடியுமாம்"
"அச்சோ... திருச்சி காலேஜ்ல ப்ரொபஸர்தான அந்த அண்ணன்... என்ன ப்ராப்ளம்?"
"அந்த பொண்ணு பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு போயிருக்கு. ஒருநாள் பயங்கர தல வலின்னு டாக்டர்ட்ட போயிருக்காங்க. டாக்டர் பாத்துட்டு.. உடனே தஞ்சவூர் போயிடுங்கன்னு சொல்லிட்டாராம்.... இங்க டெஸ்ட் பண்ணா ஏதோ ஆநியூரிஸமாம்.... பொண்ண காப்பாத்த முடியாது... குழந்தைய வேணா காப்பாத்த ட்ரை பண்ரோம்னு சொல்றாங்க"
அப்பாவின் கண் லேசாக சிவந்திருந்தது. மூக்கை இழுத்துக்கொண்டார். இதுதான் அவர் அழுகை. இதற்கு மேலாக அவர் துக்கத்தை வெளிப்படுத்தி அவன் பார்த்ததில்லை.
"செல்போன் சார்ஜர் கேட்டாங்க... எடுத்துக்கு போலாம்ணு வந்தேன்... போய்ட்டு வறேன்... கதவ சாத்திக்க"
"இங்க தான் அட்மிட் பண்ணிருக்கங்களா"
"ஆமாண்டா தம்பி... தெரு மொன திரும்பி ரோட்ட க்ராஸ் பண்ணா வருமே.. அந்த ஹாஸ்பிட்டல்தான்... பேரு மறந்திருச்சு"
சொல்லிக்கோண்டே கீழிறங்கி போய்விட்டார்.
ஆநியூரிஸமா... தல வலியாம்... ஹாஸ்பிட்டல் போவதற்கு முன் ப்ரொபஸர் அண்ணனிடம் பேசியிருப்பாளா?.... எரிந்து விழுந்திருப்பளோ... அண்ணனும் வெடுக்கென போனை வைத்திருப்பாரோ... அவர்கள் யாருக்குமே இப்படி நடக்குமென தெரிந்திருக்க நியாயமில்லை... ஆம் நியாயமேயில்லை.
கூகிளில் ஆநியூரிஸம் என டைப் செய்தான். விக்கி பீடியவிற்குள் சென்று படித்ததில் அது ஏதொ மூளையிலுள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் ஓர் அடைப்பு. ஏதோ பாலூன் என்றேல்லாம் வந்தது. தொடர்ந்து படிக்க முடியவில்லை.மனம் ஏனோ அந்த பெண்ணுக்காக ப்ராதித்தது. காலிங்க் பெல். ஸித்தி ஏதோ மாரியம்மன் குங்குமத்துடன் மங்களகரமாக நின்றிருந்தாள்.
"ஸாப்ட்டியா வஸந்த் குட்டி... கேட்டியா... சின்னசாமி மருமக இல்ல அவ ஸீரியஸா இருக்காளாம்.."
"தெரியும் அப்பா சொன்னாங்க"
"பாத்தியா என்னென்ன நடக்குதுன்னு... அந்த கமலாம்பா மனசுல கொஞ்சமேனும் ஈரமிருந்தா அந்த பொண்ண காப்பத்திடனும்...."
கட்டற்று புலம்புவாள் சித்தி. வஸந்த், சித்தி என்றே சொல்லிப் பழகிவிட்டான். அவனால் அம்மாவைத்தவிர வேறு யாரையும் அம்மா என்று கூப்பிட முடிந்ததில்லை. இவனுக்கு ஆறு வயதிருந்த போது வீட்டுக்கு வந்தாள் சித்தி. நேராக அம்மா படத்தின் முன் விழுந்து வணங்கினாள். அம்மா இடத்தை பிடிக்க வந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவெலலாம் வஸந்தால் அவளை வெறுத்துவிட முடியாது. ஏனெனில் அவள் குணம் அப்படி. பெயரும் குணவதி. அவன் மனம்தான் கட்டற்றது. இன்னாரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை. கையில் விழுந்த முந்தானையோடு கதைவை சாத்திவிட்டு உடை மாற்றலை தொடர்ந்தாள். அவளுக்கும் தெரியும்!
யூடியூபில் ஆநியூரிஸம் குறித்து பல வீடியோக்கள் இருந்தன. ஏதொ ஒரு வெளிநாட்டுக்காரர், வெள்ளைத்தோலுடன், கறுப்பு டையுடன்..... சித்தி நைட்டியுடன் வெளி வந்தாள்.
"இவங்க எப்டி முடிவெடுக்குறாங்கன்னே தெரிலடா தங்கம்... பெரிய உசுரா ? சின்ன உசிரா?  இவங்க முடிவெடுக்குறாங்க... எப்டியோ.... முடிவெடுக்க வக்கிறதும் அந்த ஆண்டவன்தான் போல"
சித்தி இன்று முழுவதும் இது பற்றிதான் பேசுவாள். ஆனால் இவன் அருகில் வந்து உட்கர்ந்து கதைப்பதெல்லாம் அப்பா இருக்கும் போது மட்டும்தான். அவர் இல்லையெனில் போகிற போக்கில் தான் எல்லாம். தேவையான,இருவரும் விரும்பி ஏற்றுக்கொண்ட ஓர் வேலி. மதிய சாப்பட்டுச்சத்தம் கேட்கத்துவங்கியது. இவன் ஏனோ அந்த ஆநியூரிஸப் பெண்ணையே நினைத்தவாரிருந்தான். சித்தியும் அதேதான் நினைத்திருப்பாள். அப்பாவும்தான்.
............
முதுகில் கிட்டர் பையுடன் வண்டியை கிக்கடித்த போது, அது கொஞ்சம் கொஞ்சமாக குளிரை துப்பியது. அப்பா எதிரில் வந்துகொண்டிருந்தார். அதே வாட்டம். சித்தி அப்பாவின் வண்டி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்துவிட்டாள்.
"என்னப்பா ஆச்சு"
"குழந்த ஸேப்டா தம்பி... அந்த போண்ணுதான் சந்தேகம்னு சொல்றாங்க"
"அந்த அண்ணன் கூட இருக்காராப்பா"
"இல்லடா தம்பி... யரையும் கிட்ட உடல.... ஐசியூ... அந்த பொண்ணு அன்கான்ஷியஸ்... ஏதோ ப்ரீத்திங்க எக்ஸ்டென்ட் பண்ண ட்ரை பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்"
"அச்சொ கமலாம்பா" சித்தி குரல் நெலிந்திருந்தது
"குணா எங்க ஏடியம் கார்டு எடுத்து வச்சியா"
"தோ வந்துட்டேன்" சித்தி உள்ளே ஓடினாள்.
அப்பா ஏடிஎம் கார்டுடன் ஹாஸ்பிட்டலுக்குத் திரும்பினார். இவன் முதுகில் கிட்டாருடன் தெருவை வெறித்து நின்றிருந்தான்.
"கண்ணா நீ போடா... போய் பாருடா... ஏதாவது உதவி கேட்டங்கன்ன செய்யிடா"
வஸந்த்திற்குள் கண நேர நெகிழ்வொன்று வந்து போனது. இவள் தான் எப்படியெல்லாம் கூப்பிடுகிறாள் தன்னை. தங்கம், கண்ணா, வஸந்த் குட்டி....
"பாக்குறேன்" என்றுவிட்டு நகர்ந்தான்.
ஹாஸ்பிட்டல் அடைந்து. அந்த வாடைக்கு புரளும் வயிறுடன், விசாரித்து, அறையை அடைந்த போது... பொதுவாக அங்கு அழுகை பரவியிருந்தது. ப்ரொபஸர் அண்ணன் வீரிட்டலறினார். சின்னசாமி அங்கிள் மகனை தேற்ற வழியில்லாமல் நின்றிருந்தார். இவனால் அங்கு நிற்க இயலவில்லை. விட்டு நீங்கி படி இறங்கும் போது, விட்டு விட்டு நீண்ட மூக்கிழுப்பு ஒன்று கேட்டது. அப்பாதான். எங்கு இருக்கிறார் என்று கூட இவன் தேட முற்படவில்லை. அவ்விடத்தின் வாடையே அவனுக்கு பிடிக்கவில்லை.
.................
அப்பா, சித்தி யாவரும் சின்னசாமி அங்கிள் வீட்டில். இவன் போக மறுத்துவிட்டான். மாடியிலிருந்து இரங்கி வீட்டுக்குள் நுழைந்தான். கிட்டார் வாசித்தால் தேவலை எனத்தோன்றியது. ஹாலைக் கடக்கையில் அம்மாவின் போட்டோ. அம்மாவின் முகம் இந்த போட்டோ மட்டும்தான் அவனுக்கு. அதுவும் சித்தி விழுந்த வணங்கிய அந்த கணத்தின் போட்டோதான் அம்மா என்றாலே நினைவுக்கு வருவது. அம்மா தலையில் பூவுடன், அரக்கு நிற பட்டுப்புடவையில். உதட்டுக்கு மேல் மருவைப்போலொரு மச்சம்.
ரூமுக்குள் கிட்டரை அணைத்தபடி அமர்ந்து கொண்டான். இதுவரை பார்த்தே அறிந்திராத அந்த ஆநியூரிஸப்பெண் ஏதோ ஒரு முகமாக உள்ளுக்குள் தோற்றமளித்தாள். அவள் பேர்கூட தெரியாது. ஆநியூரிஸப்பெண். அவ்வளவுதான்.
வலது கைவிரல் ஸ்ட்றிங்குகளை வருடியது. இடது கை விரல்கள் தன்னிச்சையாக ஒவ்வொரு ப்ரெட்டாகத்தாவியது. ஏதொ ஓர் இசை. இது வரை மானிடர் யாரும் கேட்டறிந்திராத ஓர் இசை, தக்க தருணம் பார்த்து காத்திருந்தது, நேரம் கூடியதும், தனக்கேற்ற சூழலும், மனதின் அலைவரிசையும் அமைந்ததும், அவன் மூலம் தன்னைத்தனே நிக்ழ்த்திக்கொண்டிருந்தது.எது இந்த இசை.... அவளா? சித்தியா? அம்மாவா? அப்பாவின் மூக்கிழுப்பா? ஆநியூரிஸப் பெண்ணா? இல்லை இவ்வளவுமா? காலம் வெளி என யாவும் இசையாகிக் கொண்டிருந்தது.  இதற்கப்புறம்  இவ்விசையை ஒருமுறைகூட அவனால் மீளுருவாக்கம் செய்ய இயலாது. ஏனெனில் அவனுக்கும் அது எங்கிருந்து வந்ததென  தெரிந்திருக்க நியாயமில்லை.நியாயமேயில்லை.
...............



No comments:

Post a Comment